அய்யாவின் அடிச்சுவட்டில் . .

டிசம்பர் 16-31

தி.க.தலைமையின் மெச்சத்தகுந்த தீர்மானம்

இங்கிலாந்து நாட்டின் தலைநகரமான லண்டன் வாழ் திராவிடர்கள் சிறப்பாகக் கூடி, அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு தீர்மானம் போட்டு, அன்னையாருக்கும் விடுதலைக்கும் அனுப்பி வைத்தனர்.

 

அந்த இரங்கல் தொண்டு செய்து பழுத்த பழத்தின் மண்டைச் சுரப்பை எப்படி உலகு தொழுகிறது என்பதற்கு  இது ஓர் எடுத்துக்காட்டு.

அது மட்டுமா? உலக நாடுகள் பலவற்றிற்கும் சுற்றுலா மய்யமான சிங்கப்பூர் நாட்டினரும் அய்யாவின் மறைவுக்கு வருந்தினர். அவர்களுக்குப் பிறகும் கழகம் ஏறுநடைபோட வேண்டும் என்று கவலையோடு நோக்கினர்.

தந்தை பெரியார் அவர்கள் மறைவுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சோபலட்சம் தமிழர்களும் ஆறாத்துயரில் மூழ்கியுள்ள செய்திகள் பல வந்துகொண்டே இருந்தன. லண்டனில் 57 மில்டன் ரோடு, கிராய்ட்டன்சரி கட்டிடத்தில் உள்ள திராவிடர் ஆராய்ச்சி மன்றம் தந்தை பெரியார் மறைவுக்கு இரங்கற்கூட்டம் நடத்தி, தானைத் தலைவருக்கு தனது மரியாதையை செலுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு:

கடந்த 12_1_1974 மாலை 4 மணி அளவில் தென்னகத்தின் சாக்ரடீசு பெரியார் ஈ.வெ. இராமசாமி அவர்கட்கு இரங்கற் கூட்டம் கிராய்டன், இலண்டனில் நடைபெற்றது.

முதன்முதலில், இரண்டு நிமிடம் மவுனம் அனுசரித்து கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு வரவேற்பு உரையாற்றிய மன்றச் செயலாளர் சு. சேகர், பெரியாரின் மறைவு திராவிடப் பெருங்குடி மக்களுக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பு என்று கூறினார்.

கூட்டத்திற்கு தலைமைத் தாங்கிய மன்றத் தலைவர் சடையன் முகைய்தீன் (சட்டக் கல்லூரி மாணவர்) பெரியாரின் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு எனவும் பெரியாரின் கொள்கையினைத் தொடர்ந்து செயலுக்கு கொண்டுவர திராவிடப் பெருமக்களை விழைந்தார். அடுத்து சொற்பொழிவாற்றிய வே. நாராயணசாமி அவர்கள் (முன்னாள் செயலாளர், திராவிடர் கழகம், செம்பாவாங், சிங்கப்பூர்) பெரியாரின் அருந்தொண்டினை விளக்கிப் பேசி, பெரியார் ஈ.வெ.ரா. பெரியாருக்கெல்லாம் பெரியார் என்றார். கிழக்கு இலண்டன் தமிழர் சார்பில் உரையாற்றிய எம். தேவதாசு அவர்கள், தமிழர் பெருமையினை உலகிற்கு எடுத்துக் கூறியவர் பெரியார் என்றார். கெனிங்ட்டன் தமிழர் சார்பில் உரையாற்றிய திரு எஸ். வையாபுரி (டார்பிடோ) பெரியாரின் அரிமா உள்ளத்தையும் கொள்கை பிறழா பண்பினையும் விரிந்துரைத்தார்.

இறுதிப் பேச்சாளரான எம். இராமசாமி அவர்கள் (கிராய்டன்) பெரியாரின் தீரத்தையும் தியாகத்தையும் விவரித்து உணர்ச்சி பொங்கப் பேசினார்.

அது மட்டுமா? ……….

சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் ஒரே தமிழ் நாளேடு தமிழ் முரசு; தமிழவேள் என்று அன்போடு மதிக்கப்படும் சீரிய தமிழ் தொண்டறச் செம்மல் கோ. சாரங்கபாணி அவர்களால் துவக்கி நடத்தப்பட்ட ஏடு.
திருவாரூரில் பிறந்த தமிழவேள் கோ. சாரங்கபாணி பல ஆண்டுகளுக்கு முன்பே அங்கே குடியேறியவர். 1925வாக்கில் குடிஅரசு துவக்கப்பட்ட காலகட்டத்திலேயே தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தாலே ஈர்க்கப்பட்டு பெரியார் தொண்டராக தன்னை அக்காலத்தில் இணைத்துக் கொண்டவர். சிங்கப்பூர் தனிநாடாக ஆகாமல் மலாயா என்ற பெயரில் பிரிட்டிஷ் நிர்வாகத்தின்கீழ் இருந்த காலத்தில் அவர் தமிழ் முரசு நாளேட்டைத் துவக்கி நடத்தினார். பச்சை அட்டை குடிஅரசு வார ஏட்டினை அங்கு பரவச் செய்தார்.

தந்தை பெரியார் அவர்கள் இருமுறை சிங்கப்பூர், மலாயா நாடுகளுக்குச் சென்றபோதெல்லாம் நல்வரவேற்பு தந்தவர்; அறிஞர் அண்ணா, தமிழ் அறிஞர்கள், எங்களைப் போன்ற பெரியார் தொண்டர்கள் சென்றபோதும் வரவேற்பு நல்கிய பெருந்தகை. அவரது நாளேட்டில் (சிங்கப்பூர் தனிநாடான நிலையில்) ஞாயிறுதோறும் -_ சென்னையிலிருக்கும் இங்குள்ள அரசியல், சமூக, கலை, இலக்கிய, பொருளாதார, பண்பாடுகள் குறித்து சென்னைக் கடிதம் என்று ஒரு முழுபக்கக் கட்டுரை வெளிவரும்; அது வாசகர்களைக் கவர்ந்து இழுத்ததினால், ஞாயிறு இதழ் மட்டுமே கூடுதலாக பல ஆயிரங்கள் விற்பனையாகும்.

தமிழ்நாடு, இந்திய அரசியல் சமூக நிலைகளை அக்குவேறு, ஆணிவேறாக அலசி ஆராய்ந்து சுவை ததும்பும் அவ்வெழுத்துகளின் உயிரோட்டம் படிப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும். அதனை எழுதுபவர் தான்தான் என்று சிலர் மார்தட்டி இங்குள்ளவர்களை ஏமாற்றியதும் உண்டு. அது ஒரு காக்கப்பட்ட ரகசியமாகவே இருந்தது பல ஆண்டுகளாக!

சிங்கப்பூர் தமிழ் முரசு ஞாயிறு இதழில் அய்யா மறைந்து அன்னையார் கழகத்திற்குத் தலைமை ஏற்றது குறித்து வெளிவந்த சென்னைக் கடிதம் கட்டுரை மிகப் பெரிய சிறப்புடன் விளங்கிய தனித்ததோர் ஆவணம் என்றே பலராலும் கருதப்பட்டது!

எதனையும் எக்ஸ்ரே எடுப்பதுபோல் மிகை இல்லாமல் உள்ளது உள்ளபடியே — எவர் எப்படிக் கருதினாலும் நான் கவலைப்பட போவதில்லை என்ற பாணியில் உண்மை விளக்க படப்பிடிப்பாகவே அந்த விமர்சனக் கட்டுரை வாரத்தில் ஞாயிறுதோறும் வரும் நிலையில், அந்த வாரம் (3.2.1974) பெரியாருக்குப்பின் திராவிடர் கழகம் இனி எப்படி நடைபோடும் _ போடவேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் உள்ளடக்கியதாகவே இருந்தது! அந்தக் கட்டுரையை அப்படியே இதோ தருகிறோம்; படியுங்கள்.

இந்தியா பலவிதங்களில் அதிசயமான அலாதியான நாடு! உலக அதிசயமான சாதிமுறை என்பது இந்தியாவில்தான் உண்டு. உலகத்திலேயே காட்டுமிராண்டித்தனமான கும்பமேளாவும் _ மகாமகம் விழாவும் இந்தியாவில்தான் உண்டு. இது தீர்த்தம் -_ இதில் மூழ்கினால் புண்ணியம் என்று ஒரு தல புராணம் கூறினால் போதும். இந்தக் குட்டையில்  மூழ்கினால் நாம் செய்த பாவம் எப்படி எந்தவிதத்தில் போகமுடியும்? என்பதைப்பற்றி சிந்திக்க முற்படாமலே குளத்தில் நீராட க்யூவில் நிற்கும் மனோபாவம் _ இந்திய சமுதாயத்தின் _ குறிப்பாக இந்து சமுதாயத்தின் சாபக்கேடு. எதையும் கவனமாக திட்டமிட்டுப் பிரசாரம் செய்தால் அது ஒரு மகோன்னதமாகி விடமுடியும் இந்தியாவில்! இந்த மனோபாவம் இந்தியாவில் பல துறைகளில் நிழலாடாமல் போக முடியுமா?

பண்டித நேரு வாழ்ந்தபோது இந்தியாவெங்கும் எழுந்த _ ஏன் சர்வதேச அரங்கில் எழுந்த பெரிய கேள்வி என்ன தெரியுமோ?

நேருவுக்குப் பிறகு யார் என்பதுதான். இந்தியப் பொதுவாழ்வின் பூஜா மனோபாவத்துக்கு இக்கேள்வியைவிட வேறு சாட்சியே தேவையில்லை. ஒரு நாட்டின் _ அரசியலின் எதிர்காலம் ஒரு தனிநபரைப் பொறுத்தா இருப்பது _ அந்தத் தனி நபர் எவ்வளவு பெரியவராக இருப்பினும்? ரூஸ்வெல்டுக்குப் பிறகு யார்? என்ற கேள்வி அமெரிக்காவில் எழுந்ததுண்டா? உலக அரசியல் வரலாறு கண்ட அதிசயத் தலைவர் _ அபூர்வ தலைவரான சர்ச்சிலுக்குப் பிறகு யார்? என்ற கேள்வி பிரிட்டனில் எழுந்தது உண்டா? அரசியல் ஜனநாயகம் அந்த நாடுகளில் எல்லாம் பரிணாமம் அடைந்து பொது வாழ்வு விஞ்ஞான ரீதியாக திட்டவட்டமான நெறிமுறைகளின் அடிப்படையில் இயங்கி வருகிறது. அங்கு தலைவர்கள்தானே மலர்கிறார்கள். அந்த நாடுகளின் பொதுவாழ்வு அத்தன்மையது.

ஆனால் இந்தியாவிலோ நேர்மாறான நிலைமை; இங்கு தலைவர்கள் தங்களைப் பூதாகாரமான உருவமாக ஆக்கிக் கொண்டு அந்த அடிப்படையில் அந்தப் பலத்தைக்  கொண்டு அரசியல் போக்குகளை நிர்ணயிக்கிறார்கள். மக்களின் மனதில் காலாகாலமாக ஊறிப் போயுள்ள மவுடீகமான பூஜா மனோபாவத்தை வைத்தே இந்தத் தலைவர்கள் தங்களைப் பீமசேனர்கள் போலவும்,  பத்மாசூரர்கள் போலவும் ஆக்கிக் கொள்கிறார்கள்! அப்படி ஆக்கிக் கொண்ட பிறகு நாட்டின் அரசியல் பொருளாதாரக் கருத்தோட்டங்களை நிர்ணயிக்கிறார்கள்! அறிவு பூர்வமான அரசியல் கருத்து சட்ட திட்டங்கள், புத்தம் புதிய சிந்தனைகள், தத்துவங்கள் தலைவர்களை புஷ்பிப்பதற்குப்பதில் தலைவர்கள் அரசியலை சமுதாயக் கட்டுக்கோப்பைத் தீர்மானிக்கிறார்கள். இந்திய அரசியலின் அவலம் இது? அதிசயமும் இதுதான். இதை மறைத்து வைக்கத் தேவையில்லை.

இதனால்தான் நேருவுக்குப் பிறகு யார்? என்ற பெரிய கேள்வி 1963 வரை எழுந்து நின்றது சர்வதேச அரங்கிலேயே. ஆனால் நேருக்குப் பிறகு ஒன்றும் முழுகி விடவில்லை. நேருவையும் சில அம்சங்களில் மிஞ்சக் கூடிய லால்பகதூர் பிரதமரானார். லால்பகதூருக்-குப் பிறகு சாதாரணமாக இருந்து வந்த இந்திராகாந்தி இந்திய அரசின் உச்சபீடம் ஏறினார்.

ஆனால் பெரியாரைப் பொறுத்த அளவில் நிலைமை அப்படி அல்ல. அவர்தான் திராவிடர் கழகம். அவருடைய நினைவே கழகத்தின் உயிர். அவருடைய நாவே கழகத்தின் பலம். பெரியாருக்குப் பிறகு திராவிடர் கழகம் இருக்க முடியுமா? என்ற பெரிய சந்தேகம் இருந்து வந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால் ஆச்சரியம் என்னவெனில் பெரியாருக்குப் பிறகும் திராவிடர் கழகம் நீடிக்கிறது மணியம்மையாரின் தலைமையில்! பெரியார் மறைந்து ஒரு மாதம் கூட இன்னும் ஆகாத நிலையில் இப்படி ஒரு பெரிய முடிவை திராவிடர் கழகம் ஒருமனதாக மேற்கொண்டது இருக்கிறதே _ அதுவே இவ்வளவு காலம் அவர்கள் பயிற்சி பெற்ற தலைமை எத்தகையது என்பதைக் காட்டிவிட்டது. அது மட்டுமல்ல. பெரியார் எந்த இடத்தில் விட்டு விட்டுச் சென்றாரோ அதே இடத்தில் தொட்டுக் கொண்டு காரியங்களைச் செய்வது என்ற தீர்மானம் சாதாரணமானதல்ல _ மனோரீதியாக! பெரியாருக்குப் பிறகும் திராவிடர் கழகம் நீடிக்கிறது. பெரியாரின் கொள்கைகளை உயிராகக் கொண்டு, ஆயினும் பெரியாரை உயிராகக் கொண்டிருந்த அந்தத் திராவிடர் கழகம் இனி வரமுடியாது. எனினும் அவருடைய கொள்கைகளை உயிராகக் கொண்டு பயணத்தைத் தொடருவதென்று தி.க. தலைமை செய்துள்ள தீர்மானமே மெச்சத் தகுந்தது.

இதிலே ஒரு வேடிக்கை! பெரியாருடைய உடல் அடக்கம் செய்யப்படாமல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தபோது _ அந்தச் சூழ்நிலையிலேயே ஒரு நிருபர் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீரமணியிடம் போய், திராவிடர் கழகம் நீடிக்குமா? என்று கேட்க வேண்டுமா?

பெரியாரின் மரணத்தினால் தமிழ் இனமே கதிகலங்கி மருண்டு, இனி நமக்கு யார் கதி? என்று தத்தளித்துக் கொண்டிருந்தது என்றால் திராவிடர் கழகத்தினரின் மனோநிலை எப்படி இருந்திருக்க வேண்டுமென்பதை விவரிக்க வேண்டுமா? அதிலும் வீரமணி உருவமும் நிழலும்போல பெரியாருடன் கூடவே இருந்தவர். எந்தப் பிரச்னையானாலும் சரி _ பெரியாரின் நினைப்பு எப்படி இருக்கமுடியும் என்பதை நினைத்துப் பார்த்து அந்த அடிப்படையிலே பேசவும் எழுதவும் தெரிந்தவர். பெரியார் ஒரு பிரச்னையில் ஒரு முடிவைக் கூறிவிட்டால் அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகியவர் _ மனோரீதியாக _ எதிலும் எப்பொழுதும் பெரியாரைவிட தீர்க்கமாக துல்லியமாக சிந்திக்க முடியாது என்ற முடிவு கொண்டவர்.

அவருக்கென்று தனி நினைப்போ சுதந்திர சிந்தனையோ இருந்திருப்பதாகக் கூடக் கூறமுடியாது. பெரியாரின் நினைப்பு என்னவோ அதுவே அவர் நினைப்பு. அவரே ஒருதடவை கூறியிருப்பதைப்போல நான் பெரியாரின் தொண்டன் முதலிலும் கடைசியிலும் அதைவிட ஒரு பெரிய பட்டம் அந்தஸ்து பெருமை இருப்பதாக நான் நினைக்கவில்லை. திராவிடர் கழகத்தில் நான் ஒரு சிப்பாய். பெரியார் எந்தத் திசை நோக்கி சுடு என்று ஆணையிடுகிறாரோ அந்தத் திசை நோக்கி சுட்டு விட்டு நின்று கொள்வேன். அதற்குமேல் நினைக்கவே மாட்டேன். பெரியார் உத்தரவு போட்டுவிட்ட பிறகு அதில் சிந்தனை செய்வதற்கு அவசியம் ஏது?

வீரமணியைப் பற்றி சுருக்கமாகச் சொல்லவேண்டு-மானால் பெரியாரின் நினைவுக்கு அவர் வேன் போல இருந்தார்.

பெரியாரின் உடலைத் தாங்கிச் செல்ல பொதுமக்களிடமிருந்து நிதி ஒன்றைத் திரட்டி நவீன வசதிகளுடன் கூடிய வேன் ஒன்றைப் பெரியாருக்கு அமைத்துத் தந்தார் வீரமணி. திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் வீரமணியின் இந்தத் தளரா முயற்சியைப் பாராட்டி வேன் பரிசளிப்பு விழாவில் தஞ்சையில் ஒரு தங்க மோதிரம் போட்டுப் பூரித்தார் பெரியார். மேடையில் பெரியாருக்கு கைத்தடி போலவும், காதுபோலவும் பயன்பட்டு வந்த வீரமணி, பெரியாரின் அந்திமக் கட்டத்தில் அவருக்கு நினைவைத் தாங்கக்கூடிய வேன்போலவே விளங்கி வந்தார்.

பெரியாரின் தளபதிகளில் கடைக்கோடி வீரமணி ஆனாலும் ஒருவிதத்தில் கொடுத்து-வைத்தவர். எப்படி என்கிறீர்களா? பெரியாருடன் கடைசிவரை தளபதியாக இருந்தவர் இவர் ஒருவரே. இதற்கு காரணம், எந்த நேரத்திலும் இவர் தன்னைத் தளபதி என்று கருதியதில்லை. இதற்கு வயது இடைவெளியும் ஒரு முக்கிய காரணம். வயதில் பெரியாருக்குப் பேரப் பிள்ளைபோல வீரமணி. தமிழகப் பொதுவாழ்வின் இருசுபோன்ற கேந்திர நிலையை பிரம்மாண்ட வடிவத்தைப் பெரியார் பெற்றுவிட்ட பிறகு வீரமணி பெரியாரின் தளபதி ஆனார். அதோடு வினயமும் அடக்கமும் மிகுந்த வீரமணி எந்த நாளிலும் தன்னை பெரியாருடன் ஒப்பிட்டு பார்க்கவே நினைத்து இருக்க வழி இல்லை. அதனால்தான் இறுதிவரை பெரியாரின் நம்பிக்கையைப் பெற்றிருந்தார்!

பெரியாரின் தளபதிகள் வரிசை கொஞ்சமா? எஸ்.இராமநாதன், பி.ஜீவானந்தம், எஸ்.வி.லிங்கம், பூவாளூர் பொன்னம்பலனார், பட்டுக்கோட்டை அழகிரிசாமி, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம், மணவை திருமலைசாமி, கோவை அய்யாமுத்து, திருச்சி தி.பொ.வேதாசலம், சி.என்.அண்ணாதுரை, குத்தூசி குருசாமி இப்படி எத்தனையோ பேர்கள்! இவர்களில் ஒருவராலும் (அழகிரி ஒருவரைத்தவிர) கடைசி-வரையில் பெரியாரின் தளபதியாக நிற்க முடியவில்லை. அண்ணா மட்டுமே விதிவிலக்கு. பெரியாரை விட்டுப் பிரிந்த போதிலும் (தி.மு.க.வைக் காண்பதற்காக) பெரியார் ஒருவரே என் தலைவர் என்று பகிரங்கச் சூளுரை செய்த பெருமை அண்ணாவுக்கு மட்டுமே உண்டு.

எனினும் மறைந்தபோது பெரியாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாயிருந்தவர்களில் முக்கியமான-வர்கள் ஆறேழு பேர்கள். இவர்களில் முதலிடம் முக்கிய இடம் மணியம்மையாருக்கே. இந்த அம்மையார் பெரியாருக்குச் செய்த தொண்டு வரலாறு ஆகிவிட்டது. பொதுவாழ்வில் பெரியாரின் தொண்டு 95 ஆண்டு நீடித்தது. நீடிக்க முடிந்தது என்றால் அதற்கு முக்கிய காரணம் பெரியாருக்கு மணியம்மையார் செய்த பணிவிடையே _ தொண்டே. ஒரு குழந்தையை ஈ, எறும்பு மொய்க்காது வேளாவேளைக்கு உணவும் உரிய மருந்தும் தந்து பேணிக் காக்கின்ற தாயைப் போலவே பெரியாரைப் பராமரித்து வந்தார் மணியம்மையார். பெரியாரின் உடல் நலனைக் காப்பதில் பெரியாருடனேயே தகராறு செய்யவும் தயங்கமாட்டார் மணியம்மை. தனக்கு இருதயநோய் வந்துவிட்ட போதுங்கூட தன்னைப்பற்றி கவலைப்படாமல், அய்யோ நான் நோய் வாய்ப்பட்டு விட்டேனே அய்யாவை கவனிப்பது யார்? என்று இதயம் துடித்தவர் மணியம்மை. எமனையாவது ஏமாற்றி விடலாம். ஆனால் அவனுடைய கணக்குப் பிள்ளையாகிய சித்திரகுப்தனை ஏமாற்ற முடியாது.

பெரியார் சித்திரகுப்தன்! உண்மையிலேயே!! அந்த நாள் குடிஅரசில் சூட்டுக்கோல் போடும் கனல் கட்டுரைகளைச் சித்திரகுப்தன் என்ற புனைப்பெயரில் பெரியார் எழுதுவது வழக்கம். பொதுவாழ்விலும் அவர் ஒரு சித்திரகுப்தனே. ஒரு அய்ம்பதாண்டுப் பொதுவாழ்வின் ரிக்கார்டை கையில் வைத்துக் கொண்டு முழங்கி வந்தவர். பெரியாரை யாராலும் ஏமாற்ற முடியாது. அவரே ஏமாந்து விடத்தயாராய் இருந்தாலொழிய! பாசங்கு செய்தோ நடித்தோ பெரியாரை ஏமாற்றவே முடியாது. அப்படிச் செய்தால் அவரை உசார்ப்படுத்தியதுபோல் ஆகிவிடும். அப்படியிருக்க பெரியார் மீது மணியம்மையார் உயிரையே வைத்திருந்தார் என்பது பெரியாருக்குத் தெரியும். மணியம்மையார் சுயமரியாதைக் குடும்பத்தில் பிறந்தவர். பெரியாரை அவர் நேசித்தது கொள்கைத் தலைவர் என்ற முறையில். மணியம்மையாரின் விசுவாசமும் அன்பும் பெரியாரின் கூர்மையான சோதனைகளை மிஞ்சி நின்றன. பரிசு தமிழகத்துப் பெண்குலத்தில் எவருமே பெறாத, பெறமுடியாத கவுரவத்தை மணியம்மையாருக்கு பெரியார் தந்தார் 1949_ல்! திராவிடர் கழகத்தில் பூகம்பம் எழுந்தது. ஆனாலும் மணியம்மையாருக்காக கழகம் பிளவுபட்டதைப்பற்றிக்கூட பெரியார் கவலைப்படவில்லை. ஈ.வெ.ரா. மணியம்மை ஆனார். இங்குச் சில வார்த்தைகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *