அய்யாவின் அடிச்சுவட்டில் . . .

டிசம்பர் 01-15

அம்மாவின் பயணம் தொடங்கியது

புறப்பட்டு விட்டேன் என்று அறிவு ஆசானின் வாரிசான அன்னையார் என்ற நமது புறநானூற்றுத்தாய் அறிக்கை எழுதி, புயலெனக் கிளம்பி, பெரியாரின் சுற்றுப்பயணம் நிற்காது; காரணம் பெரியார் என்பவர் தனி மனிதரல்ல, தத்துவம் என்பதாய் அதை முழங்கிட ஆயத்தமாகி விட்டார்.

பொதுச் செயலாளரான நானும் அய்யாவின் அடிச்சுவட்டில் நடைபோட்டு, அம்மாவின் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டேன். சுற்றுப் பயணத்தில்  இருந்தவாறே விடுதலை நாளேட்டிற்கு நாளும் தலையங்கம் எழுதியும், கழகத் தலைவர் அன்னையார் எழுதித் தந்த அறிக்கைகளையும் அனுப்பி வெளியிடும் ஆசிரியர் பணியையும் இணைத்தே செய்தேன் – உற்சாகக் குறைவின்றி!

ஏற்கனவே தந்தை பெரியார் சுற்றுப் பயணத் திட்டப்படி, திருவண்ணாமலை நகருக்குச் சென்று கூட்டத்தில் கலந்துகொண்டபடி அன்னையாரும் நாங்களும் அந்த நகரிலிருந்தே உறுதி ஏற்பு நாள் தொடர் கூட்டங்களைத் துவக்கினோம்;
16-.-1.-1974 அன்று திருவண்ணாமலையில் _ கழகப்பணி அன்னையார் தலைமையில் மீண்டும் தக்கதோர் அர்ப்பணிப்போடு தொடர்ந்தது!

1974 ஜனவரி 16 திருவண்ணாமலை (வடஆற்காடு மாவட்டம்) அதே ஜனவரி 17 சிதம்பரம் (தென்னாற்காடு மாவட்டம்) 19ல் சென்னை, 20 காஞ்சிபுரம் செங்கற்பட்டு மாவட்டம், 21 தர்மபுரி (தர்மபுரி மாவட்டம்), 22 சேலம், 23 தஞ்சாவூர் (தஞ்சை மாவட்டம்), 24 காரைக்குடி (கிழக்கு இராமநாதபுரம் மாவட்டம்), 25 மதுரை (மதுரை மாவட்டம்), 27 ராஜபாளையம் ( மேற்கு இராமநாதபுரம் மாவட்டம்), 28 நாகர்கோயில் (குமரி மாவட்டம்), 29 திருநெல்வேலி (நெல்லை மாவட்டம்), 31 திருச்சி (திருச்சி மாவட்டம்).

1974 பிப்ரவரி 1 -நாகப்பட்டினம் (கீழத் தஞ்சை மாவட்டம்), பிப்ரவரி 2 புதுக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்), பிப்ரவரி 3 ஈரோடு (கோவை மாவட்டம்), பிப்ரவரி 4 பாண்டிச்சேரி இப்படி உறுதிமொழிக் கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன!

உடல் தளர்ந்த நிலையிலும் உள்ளஉறுதி குன்றாத நமது அன்னையார் அவர்கள் காலை மாவட்டக் கழகக் கலந்துரையாடல்கள், மாலையில் மக்களைச் சந்தித்த பொதுக்கூட்டங்கள், இரவு வேனில் (கூட்டம் முடிந்தவுடன்) அய்யா பயணித் ததைப் போலவே பயணம் செய்தார்கள்! பெரியாரைச் சுமந்து ஓடிய அந்த சுற்றுப்பயண வேன், பெரியாரை 95 ஆண்டுகாலம் பாதுகாத்து அதற்கடுத்து அவர் தந்த இயக்கத்தினையும் லட்சியங்களையும் கொள்கைகளையும் சுமந்து அதுவும்  ஆர்வத்துடன் ஓய்வின்றி ஓடியது. காரணம் பெரியார் என்ற தத்துவம் ஓர் ஜீவநதியல்லவா?

திருவண்ணாமலை வடஆற்காடு மாவட்டத்தில் தான் அப்போது இருந்தது. தனி மாவட்டமாக பிற்காலத்தில்தான் பிரிந்தது. வேலூர் வடஆற்காடு மாவட்டத்தின் தலைநகர். அந்த வேலூர் தந்த வேங்கைதான் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார்.

தனது சொத்து, சுகம், கல்வி, குடும்பம் _ எல்லாற்றிற்கும் மேலாக தனது இளமை எல்லாவற் றையும் தியாகம் செய்துவிட்டு, பெரியாரைப் பேணுவதே என் கடன் என்று 1943 வாக்கிலே புறப்பட்ட அன்னையார், அய்யாவின் தொண்டர் களை வழிநடத்தும் ஆற்றல்மிக்க தலைவராகி, அப்பொறுப்பினை ஏற்று, இயக்கப் பிரச்சாரம் சிறிதும் தொய்வின்றி நடந்திடும் வண்ணம் தானே முன்னின்று தளர்ந்த உடல் நிலையிலும் கடமையாற்றிடத் தவறவில்லை!

அது மட்டுமா? ஒவ்வொரு மாவட்டத்திலும் இயக்கச் செயல்வீரர்களாக, வீராங்கனைகளாக இருந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள், பெரியாரின் போர்ப்படைத் தளபதிகளாக இருந்தவர்களின் ஏகோபித்த ஒத்துழைப்புடன் பீடுநடைபோட்டார்; தமிழக மக்கள் பெரியார் மறையவில்லை; எங்கும் பெரியார் முழக்கம் கேட்கத் தொடங்கிவிட்டது என்று மகிழ்ந்தனர்! பெரியாரை இழந்த மானுடம் ஆறுதல் பெற்றது இவரிடம்! 1949ல் அன்னையாரின் திருமணம் என்பது என்னைப் பொறுத்தவரை இயக்கத்தின் பாதுகாப்புக்காக நான் செய்யும் ஏற்பாடு என்று அறிக்கை விடுத்தார்களே நம் அறிவு ஆசான் அய்யா. அதன் முழுப்பொருள் உலகத்தாருக்கு உரிய முறையில் இப்போதுதான் விளங்கத் தொடங்கியது!

மாவட்டங்களில் எல்லாம் பெரியார்தம் போர் படைத் தளபதிகள் அன்னையாரின் ஆணைகளைச் செயல்படுத்த ஆயத்தமாகி களம் காணத் துடித்தார்கள். இது மிகை அல்ல.

இதனை ஒவ்வொரு ஊரிலும் காலையில் நடைபெற்ற கலந்துரையாடல்கள் நிரூபித்தன. பெரியார் மறையவில்லை எங்களில் நிறைந்துள்ளார் என்றது ஒவ்வொரு ஊரிலும் கூடிய மக்கள் கூட்டம்.

கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள் கருஞ்சட்டைக் குடும்பங்களின் சங்கமமாக இருந்தன! கண்ணீர்க் குரல்கள், சோர்வறியாத முழக்கங்கள், அய்யா விட்ட பணி முடிக்க என்றும் தயார் என்ற ஆவேச உறுதிகள் என்று பல்வேறு வகை உணர்ச்சி பிரவாகங்களாக அக்கமிட்டிக் கூட்டங்கள் அமைந்தன.

பாடி வீட்டுப் பாசறை முழக்கமோ புறப்பட்டுவிட்ட போர்வீரர்களின் போர்ப் பரணியோ என்றே எவரும் எண்ணும் வண்ணம் இளைய தலைமுறை முதல் மூத்த முதியவர்கள் வரை  வேறுபாடு இன்றி ஆதரவு தெரிவித்தார்கள்!

தமிழ்நாடு முழுவதிலுமுள்ள மாவட்டங்களின் கழகக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு அன்னையாரின் தலைமைக்கு வலிமை சேர்த்த பெரியார் பெருந்தொண்டர்கள் -_ இவர்களில் பலர் மறைந்து நம் நெஞ்சங்களில் நிறைந்துவிட்ட சுயமரியாதைச் சுடரொளிகளாகிவிட்டனர்!

நல்வாய்ப்பாக சிலர் இன்றும் சீரிளமை உணர்வோடு கட்டுப்பாடு காத்து பெரியாரின் இராணுவத் தளபதிகளாக நின்று களம் காணத் துடிக்கும் கடமை வீரர்களாகவும் இருக்கிறார்கள்!

வயது ஏற ஏற, அவர்களைப் பொறுத்தவரை வைராக்கியம் மேலும் இறுகிய நிலையில் உள்ள எஃகு தொண்டர்கள்; இரும்பு நெஞ்சர்கள்.  மறைந்தவர்கள் நம் வீர வணக்கத்திற்குரிய தளபதிகள் என்பதால் அவர்களை நினைவூட்டுவது சக போர்ப் படையினர் கடமை என்பதால் இந்த நீண்ட பட்டியல் இதோ:_ (மாவட்ட வாரியாக)

சுயமரியாதைச் சுடரொளிகளாகிவிட்ட வடஆற்காடு மாவட்ட தலைவர் ஆம்பூர் ஏ. பெருமாள், மாவட்டத் தலைவர் திருப்பத்தூர் ஏ.டி. கோபால், ஆம்பூர் மணிவாசகம், குடியேற்றம் கோவிந்தராஜன், ஜோலார்பேட்டை கே.கே. சின்னராஜு, வாணியம்பாடி ஏ.எம். முத்து, ஆற்காடு இளங்குப்பன், திருவண்ணாமலை இராமசாமி, சா.கண்ணன், நீலகண்டன், மண்மலை அயோத்தி, திருப்பத்தூர் டி.கே.கோவிந்தசாமி, அரக்கோணம் சுந்தரம், இன்றும் நம்முடன் வாழும் செய்யாறு வேல்.சோமசுந்தரம், பா. அருணாசலம் போன்றவர்கள் கலந்துகொண்டவர்களில் முக்கியமானவர்கள்.

தஞ்சை மாவட்ட தி.க. தலைவர் தோலி. ஆர்.சுப்பிரமணியம், மாவட்ட தி.க.செயலாளர் தஞ்சை கா.மா.குப்புசாமி, தஞ்சை வட்ட தி.க. செயலாளர் இரா.இராசகோபால், தஞ்சை வட்ட செயலாளர் இலட்சுமணன், பாபநாசம் வட்ட தலைவர் அய்யாறு, குடந்தை வட்டத் தலைவர் டி.மாரிமுத்து, குடந்தை செயலாளர் ஜி.என்.சாமி, மாயவரம் வட்ட தி.க. தலைவர் எஸ்.பி. கோதண்டபாணி, மாயவரம் வட்ட செயலாளர் என்.வடிவேல், நன்னிலம் வட்டத் தலைவர் வே.வாசுதேவன், நன்னிலம் வட்ட துணைச் செயலாளர் வி.எம்.ஆர்.பதி, வட்ட செயலாளர் சு. சாந்தன், நாகை வட்டத் துணைத் தலைவர் சுப்பிரமணியம், நாகை வட்டச் செயலாளர் எஸ்.எஸ்.பாட்சா, மன்னை வட்டத் தலைவர் நீடாமங்கலம் அ.ஆறுமுகம், மன்னை வட்ட தி.க. செயலாளர் அழகிரிசாமி, ஒரத்தநாடு வட்டத் தலைவர் ஆறுமுகம், ஒரத்தநாடு வட்டச் செயலாளர் சுப்பிரமணியம், பட்டுக்கோட்டை வட்டத் தலைவர் செல்லத்துரை, பட்டுக்கோட்டை வட்டச் செயலாளர் செயராமன், குடந்தை மகளிர் கழகத் தலைவர் பத்மாவதி, நாகை என்.பி.காளியப்பன், பட்டுக்கோட்டை சி.நா.விசுவநாதன், பட்டுக்கோட்டை இரா.இளவரி, மாயூரம் நகர மாணவர் கழகத் தலைவர் நா.இரகுபதி, தென்பகுதி இரயில்வே மென்யூனியன் தஞ்சை இராதாகிருட்டிணன் ஆகியோரும் கலந்துகொண்டனர். (85 வயது இராசகிரி கோ.தங்கராசு, 100 ஆண்டு தாண்டி வாழும் ஆயக்காரன்புலம் க.சுந்தரம் ஆகியோர் இன்னும் வாழ்கிறார்கள்.) காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக உறுதிநாள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்: மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சி.பி.இராசமாணிக்கம், செயலாளர் ஆர்-.ஜானகிராமன், பொருளாளர் டி.ஏ.கோபால், எ.அய்யம்பெருமாள், ஏ.ஆர்.வெங்கட்ராமன், கே.ஜி.பொன்னுசாமி, டாக்டர் கே.நாகரத்தினம், செங்கற்பட்டு கெங்காதரன், உத்திரமேரூர் யு.டி.சிங்காரம், மதுராந்தகம் ஏழுமலை, செய்யார் அருணாசலம், செங்கற்பட்டு சாரங்கபாணி, சி.கே.மதுரமுத்து, மு.ரங்கநாதன், ஏ.இராவணன், டி.சுந்தர், இ.சந்திரன் இன்னும் ஏராளமான கழகத் தோழியர்கள், தோழர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

சேலம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் தலைமையில், நாமக்கல் வட்ட தி.க. தலைவர் கருப்பண்ணன், சேலம் ஒந்தாட்சி, மேட்டூர் இராமச்சந்திரன், ஆட்டையம்பட்டி ஏ.கே.திருமலை, ஆத்தூர் வட்ட தலைவர் பொன்னையா, கரூர் வட்ட தி.க. செயலாளர் பொன்னப்பா, சேலம் மாவட்டச் செயலாளர் சொ.வெங்கிடாசலம் பி.எஸ்.சி., பி.டி., சேலம் நகர தி.க. தலைவர் எஸ்.-டி.அழகரசன், ஈரோடு நகரத்தலைவர் சுப்பையா. கிழக்கு ராமநாதபுர மாவட்டம் கல்லலில் நடைபெற்ற உறுதிநாள் பொதுக்கூட்டம் டி.டீ.வீரப்பா தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் என்.ஆர்.சாமி, இரா.சி.சதாசிவம், காதர் மொகைதீன், முடியப்பன், மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் சண்முகநாதன்.

திருநெல்வேலி காந்தி சதுக்கத்தில், நெல்லை மாவட்டக் கழகத் தலைவர் எஸ்.நட்சேத்திரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் டி.ஏ.தியாகஅரசன், சாத்தான்குளம் பெரியபால்அரசு, நெல்லை இரா.காசி, பெரியசாமி, பாளையங்கோட்டை மாடசாமி, நெல்லை நகர தலைவர் டி.வி.இலக்குமணன், திராவிட மாணவர் கழகத் தோழர் கி. அறிவுடைநம்பி, மாவட்டக் கழக துணைச் செயலாளர், எம்.சங்கரலிங்கம், அம்பை திராவிடர் கழகச் செயலாளர் நடராசன்,  நெல்லை நகர கழகத் துணைச் செயலாளர் டி.ஏ.திருமலை சுந்தரம், நெல்லை எஸ்.காதர், நெல்லை மாவட்ட மகளிர் கழக அமைப்பாளர் திருமதி ஜெயாகோபால், நெல்லை மாவட்ட திராவிடர் கழக இணைச் செய லாளர் அம்பை வழக்கறிஞர் சண்முகம் நாகர்கோயில் சி.எம். பெருமாள், ஆரல்வாய் சு. தமிழ்மறை.

தருமபுரி மாவட்ட தி.க. தலைவர் எம்.என்.நஞ்சையா, தேசாய் வேணுகோபால், கிருட்டினகிரி ஜி.எச். கோதண்டராமன், அரூர் வீ.ஆர்.வேங்கன், சின்ன வெள்ளை, பையூர் இளங்கோ, சந்தப்பட்டி எஸ்.கே.சின்னப்பன், அரூர் எம்.டி. செல்லன், மூக்கனூர்பட்டி இராமசாமி, தருமபுரி பச்சையப்பன், தருமபுரி முனுசாமி, பாபிரெட்டிப்பட்டி முத்து, அதிகாரப்பட்டி குப்புசாமி, தருமபுரி டி-ஏ.கோவிந்தன், பொம்மிடி வெங்கடாசலம், அரூர் வீராசாமி.

இராசபாளையத்தில் உறுதிநாள் கூட்டத்தில் ஏ.எஸ்.ஆர்.தங்கராசா, சூ.ஆ.மு..முத்துமுருகன், ஏ.வெங்கிடசாலபதி பி.ஏ., வா.பொன்னுசாமி, கே.சி.பி.சிதம்பரம், டாக்டர் ஓ.எம்.பாலன், அ.பன்னீர்செல்வம், கே.ஆர்.ராமசாமி (மலேசியா தி.க. தலைவர்), மதுரை ஓ.வி.கே.நீர்க்காத்தலிங்கம், அருப்புக்கோட்டை எஸ்.எஸ்.கருப்பையா மற்றும் ஏராளமான கழகத் தோழியர்கள், தோழர்கள் கலந்துகொண்ட கூட்டம் எழுச்சியும் உணர்ச்சியும் எடுத்துக்காட்டும் வண்ணம் அமைந்தன.

–     நினைவுகள் நீளும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *