Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அய்யாவின் பாதையிலே

அய்யாவின் பாதையிலே

அடியொற்றும் தலை மகனே

பொய்யர்களின் வேரறுக்க

புறப்பட்ட கதிரவனே

கண் தூங்க நினைத்திடாது

காரியங்கள் புரிபவனே

பெண் வாழ்வு செழித்து ஓங்க

போராடும் முதல் மகனே

கருஞ்சட்டைக் காவலனே

கண்ணீரைத் துடைப்பவனே

பெரும்படை நடத்துகின்ற

பேராண்மை படைத்தவனே…!

நீ போர்ப் பரணி, பெண்ணினம் லட்சியம் வென்றிட நித்தமும் முழங்கிடும் போர்ப் பரணி.

நீ வீரத்துணி, பெண் மகள் சிந்திடும் கண்ணீரை முழுதாய் துடைத்திடும் வீரத் துணி.

நாங்கள் எங்கெங்கும் வெற்றியை என்றென்றும் பெற்றிட நித்தமும் உழைத்திடும் நெடு நிழலே!

நீங்கள் கண்டங்கள் யாவையும் காணுங்கள் கல்வியால் என்றெம்மை

நிமிர்த்திடும் புதுப் பகலே!

தடம் மாறிப் பொழியாத தொடர் மழையே!

பெண் வென்றிட வழி சொல்லும் கலங்கரையே!

பெண் பழுதில்லை என்ற எங்கள் பேதத்தை போக்கிட எழுகின்ற அய்யாவின் ஆவேசம்!

பெண் சிலையில்லை என்றெம்மை சிந்திக்க தூண்டிட வருகின்ற வரலாறு உனைப் பேசும் நாங்கள் பட்டங்கள் வாங்கவும்,

பாரினை தாங்கவும், திட்டங்கள் தீட்டிடும் தீ பிழம்பு

நீங்கள் எட்டுங்கள் வானினை என்ற எங்கள் தேம்பலை சட்டென்று நீக்கிடும் ஆண் சிலம்பு சமநீதி காக்கின்ற சர வெடி!

பெண் சமத்துவம் கேட்கின்ற முகவரி!

– யுகபாரதி