தமிழ்நாடு கல்வித்துறையில் மாபெரும் சாதனை: ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கையில் வெளியான தகவல்!– வை.கலையரசன்

2025 கட்டுரைகள் ஜனவரி-16-30-2025

அனைவருக்கும் எட்டாமல் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திற்கு மட்டுமே கிடைத்து வந்த கல்வியை அனைத்துத் தரப்பிற்கும் கொண்டு போய்ச் சேர்த்த பெருமை திராவிட இயக்கத்திற்கு உண்டு.

நீதிக் கட்சி காலம் தொடங்கி இந்தப் பணி நடைபெற்று வருகிறது. ராஜகோபாலாச்சாரியார் இரண்டு முறை ஆட்சிக்கு வந்த போதும் மாணவர்களின் கல்விக் கண்ணைப் பறிக்கும் வேலையைச் செய்தார்.

முதல் முறை தந்தை பெரியாரின் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தால் ஏற்பட்ட எழுச்சியின் காரணமாக முதலமைச்சர் பதவியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார். இரண்டாவது முறை 1952இல் வந்த போது அவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து தந்தை பெரியார் நடத்திய எழுச்சிப் போராட்டத்தின் காரணமாக பதவி விலகியபின் கல்வி வள்ளல் காமராசர் ஆட்சிப் பொறுப்பு ஏற்றார். குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து ஏராளமான பள்ளிகளைத் திறந்தார். அதன் மூலம் கல்வி நீரோடை ஓரளவிற்கு தமிழ்நாடெங்கும் பெருகி ஓடத் தொடங்கியது. தொடர்ந்து வந்த திராவிட இயக்கக் கட்சிகள் முழுமூச்சாக கல்வியை எளிய மக்களிடம் சேர்ப்பதையே முதன்மைப் பணியாகக் கொண்டு செயல்பட்டன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் அவர் தலைமையிலான திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டுக் குழந்தைகள் ஒவ்வொருவரும் தரமான உயர்ந்த கல்வி பெறவேண்டும் எனப் பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் :

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும். தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழாவைப் போற்றும் வண்ணம் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்கென ரூ.7,500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற மாபெரும் திட்டத்தை அய்ந்து ஆண்டுகளில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக வகுப்பறைகள். ஆய்வகங்கள். கழிவறைகள், சுற்றுச்சுவர்கள், மாணவ/மாணவிகளுக்குத் தங்கும் விடுதிகள் அமைக்க பள்ளிக் கல்வி இயக்ககம் மூலம் 2022-2023ஆம் நிதியாண்டில் நபார்டு கடனுதவித் திட்டம் RIDF XXVIIIஇன் கீழ் ரூ.813 கோடி செலவில் 418 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2394 கூடுதல் வகுப்பறைகள், 57 ஆய்வகங்கள், 10 மாணவ/மாணவிகள் தங்கும் விடுதிகள் ஏற்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் காலை
உணவுத் திட்டம்:-

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 15.9.2022 அன்று மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டு, 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பிறந்த ஊராகிய திருக்குவளையில் 25.8.2023 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, 30 ஆயிரத்து 992 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 18 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 15.7.2024 அன்று பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழ்நாடு அரசின் சார்பில் தொடங்கி வைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.

காலை உணவுத் திட்டத்தின் மூலம் தற்போது தமிழ்நாடு முழுவதிலும் மொத்தம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் காலை உணவைச் சூடாகவும் சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்தினர்.
அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தினை மேம்படுத்த ரூ.1,086 கோடியில் 614 பள்ளிகளில் 3,238 வகுப்பறைகள் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. 21 அறிவியல் ஆய்வகங்கள், உட்கட்டமைப்புகள் மேம்பாடு செய்யப்பட்டுள்ளன. ரூ.551.411 கோடியில் 28,794 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள். ரூ.436.746 கோடியில் 8,863 பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளன.

இப்பணிகளுக்குக் கிடைத்த பலனாக தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அண்மையில் வெளியான ஒன்றிய அரசின் கல்வி அமைச்சக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும், 2019 ஆம் ஆண்டை விட, 2024 ஆம் ஆண்டில், பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தாமல், நடுநிலை-உயர்நிலைப் பள்ளிகளில் தொடர்ந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு மாபெரும் சாதனை படைத்துள்ளது.
ஒன்றிய அரசின் கல்வி அமைச்சக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம் வருமாறு:-

தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பில் குழந்தைகளின் சாதனைகள்

தமிழ்நாட்டில் பள்ளிப்படிப்பைத் தொடங்கிய 100 சிறுவர்களில் நடுநிலைப்பள்ளி முடிப்பை முடித்தவர்கள் 2019இல் 99 பேர் என்பது 2024இல் 100 பேர் என உயர்ந்துள்ளது. அதேபோல, சிறுமியர் எண்ணிக்கை, 97.5இல் இருந்து 100 ஆக 2024இல் அதிகரித்து இடையில் படிப்பை விடுவோர் தமிழ்நாட்டில் இல்லை என்பது புலனாகியுள்ளது.

அதேபோல, தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் 2019இல் 81.3 என இருந்தது 2024இல் 89.2 ஆக உயர்ந்துள்ளது. மாணவிகளைப் பொறுத்தவரை 2019இல் 89.4 சதவிகிதமாக இருந்தது 2024இல் 95.6 சதவிகிதமாக அதிகரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் பள்ளிப் படிப்பை இடையில் விட்டோர்

அதேநேரத்தில், பீகார் மாநிலத்தில் பள்ளிப் படிப்பைத் தொடங்கிய 100 மாணவர்களில் நடுநிலைப்பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் 2019ஆம் ஆண்டில் 78.6 சதவிகிதமாக இருந்தது 2024இல் 65 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. மாணவிகளைப் பொறுத்தவரை 2019இல் 81.1 சதவிகிதமாக இருந்தது 2024இல் 65.4 சதவிகிதமாகக் குறைந்து பள்ளிப் படிப்பை விட்டவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாயிற்று.
பீகாரில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் எண்ணிக்கை 51.2 சதவிகிதம் என்பது 38.8 சதவிகிதம் என 12.4 சதவிகிதம் குறைந்து இடையில் விடுபவர்கள் எண்ணிக்கை மிக மிக அதிகம் என்பதை வெளிப்படுத்துகிறது. அதேபோல மாணவிகளைப் பொறுத்தவரையிலும், மேல்நிலைப்பள்ளிப் படிப்பில் 2019இல் 51.6 சதவிகிதமாக இருந்தது 2024இல் 9.3 சதவிகிதம் குறைந்து அதாவது 42.3 சதவிகிதமாகக் குறைந்து பள்ளிப் படிப்பை இடையில் விடுபவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.

அசாம் மாநிலத்தில் பள்ளிப் படிப்பை இடையில் விட்டோர்

அசாம் மாநிலத்தைப் பொறுத்தவரை, பள்ளிப் படிப்பைத் தொடங்கிய 100 மாணவர்களில் நடுநிலைப்பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் 2019ஆம் ஆண்டில் 93.4 சதவிகிதமாக இருந்தது 2024இல் 82.6 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. மாணவிகளைப் பொறுத்தவரை 2019இல் 96.7 சதவிகிதமாக இருந்தது 2024இல் 88.7 சதவிகிதமாகக் குறைந்து பள்ளிப் படிப்பைவிட்டவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாயிற்று.

மேல்நிலைப்பள்ளிப் படிப்பைப் பொறுத்தவரை 2019இல் மாணவர்கள் எண்ணிக்கை 62.6 என்பது 2024இல் 57.4 சதவிகிதமாகவும்; மாணவிகள் எண்ணிக்கை 64.6 சதவிகிதம் என்பது 63.7 சதவிகிதமாகவும் குறைந்துவிட்டது.

அரியானா மாநிலத்தில் பள்ளிப் படிப்பை இடையில் விட்டோர்

அரியானா மாநிலத்தைப் பொறுத்தவரை, பள்ளிப் படிப்பைத் தொடங்கிய 100 மாணவர்களில் நடுநிலைப்பள்ளி படிப்பை முடித்தவர்கள் 2019ஆம் ஆண்டில் 98.3 சதவிகிதம் என்பது 2024இல் 93 சதவிகிதமாகவும்; மாணவிகளைப் பொறுத்தவரை 2019இல் 97.7 சதவிகிதம் என்பது 2024இல் 95.6 சதவிகிதமாகவும் குறைந்து பள்ளிப் படிப்பைவிட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேல்நிலைப்பள்ளி படிப்பைப் பொறுத்தவரை 2019இல் மாணவர்கள் எண்ணிக்கை 82.6 என்பது 2024இல் 77.3 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில்
பள்ளிப் படிப்பை இடையில் விட்டோர்

ராஜஸ்தான் மாநிலத்தில், பள்ளிப் படிப்பைத் தொடங்கிய 100 மாணவர்களில் நடுநிலைப்பள்ளி படிப்பை முடித்தவர்கள் 2019ஆம் ஆண்டில் 91.2 சதவிகிதம் என்பது 2024இல் 84.8 சதவிகிதமாகவும்; மாணவிகளைப் பொறுத்தவரை 2019இல் 90.8 சதவிகிதம் என்பது 2024இல் 86.6 சதவிகிதமாகவும் குறைந்து பள்ளிப் படிப்பை விட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதேபோல, மேல்நிலைப்பள்ளி படிப்பை பொறுத்தவரை 2019இல் மாணவர்கள் எண்ணிக்கை 78.6 என்பது 2024இல் 72.6 சதவிகிதமாகவும்; மாணவிகள் எண்ணிக்கை 78 சதவிகிதம் என்பது 76.9 சதவிகிதமாகவும் குறைந்துவிட்டது.
பீகார், அசாம், அரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பள்ளிப் படிப்பை இடையில் விடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பில் சேரும் குழந்தைகள் அனைவரும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காகச் செயல்படுத்தி வரும் காலை உணவுத் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள் திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் திட்டம் மாற்றுத் திறனாளி மாணவர்கள் மீது தனிக் கவனம் செலுத்தும் திட்டம், முதலிய திட்டங்களால்தான் குழந்தைகள் பள்ளிக் கல்வியில் இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து ஆர்வத்துடன் படிப்பதில் ஊக்கமும் உற்சாகமும் அடைகிறார்கள் என்பது ஒன்றிய அரசின் கல்வி அமைச்சக (UDISE+) ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.