தந்தை பெரியார் நினைவு நாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை!

2025 கட்டுரைகள் ஜனவரி-16-30-2025

(சென்ற இதழ் தொடர்ச்சி….)

திராவிடம் என்பது மானிடப் பரப்பு!

திராவிடம் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லையைச் சார்ந்தது அல்ல, சிலர் நினைப்பதைப்போல.
திராவிடம் என்பது மானிடப் பரப்பு. யாருக்கெல்லாம் சுயமரியாதை தேவையோ, அத்தனை பேருக்கும் சுயமரியாதையைச் சொல்லிக் கொடுக்கின்ற தத்துவத்திற்குப் பெயர்தான் திராவிடம்.

அந்தத் திராவிடத்தைக் கட்டிக் காக்கின்ற எங்கள் ஆற்றல்மிகு முதலமைச்சர், ஒப்பற்ற முதலமைச்சர் அவர்களே! அமைச்சர் பெருமக்களே! தோழர்களே! வணக்கம்

காணொலியில் கண்ட காட்சிகள்!

இங்கே நீங்களெல்லாம் பார்த்திருப்பீர்கள், ஏழு நிமிடக் காணொலி நிகழ்வை. அதைக்கூட எந்த நெருக்கடியாக இருந்தாலும், இதை ஏற்பாடு செய்தவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒளிபரப்பினார்கள். நெருக்கடி காரணமாக, அதை நான் நிறுத்திவிட்டேன். மெதுவாக முதலமைச்சர் அவர்களிடம் சொன்னேன் – ‘‘அவசரத்தைக் கருதி நிறுத்தினேன்’’ என்று.
‘‘இல்லை, இல்லை, போடுங்கள்’’ என்று சொன்னார். அவர்தான் முதலமைச்சர் ஸ்டாலின் – முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!
அந்தச் செயல்திறனுக்கு எவ்வளவு சோதனைகள் இருந்தாலும், சாதனைகள் தொடரவேண்டும் என்பது தான் அதனுடைய தத்துவம்!
தந்தை பெரியார் நினைவு நாளில் பங்கேற்க வந்துள்ள முதலமைச்சர் அவர்களே, இயக்கப் பெரியோர்களே, கழகக் குடும்பத்தவர்களே, ஏனைய நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தந்தை பெரியார் உடலால் மறைந்து 51 ஆண்டுகள் ஓடிவிட்டன! இனிமேல் இந்த இயக்கம் இல்லை என்று நினைத்தார்கள். அண்ணா மறைந்தபொழுது சொன்னார்கள், அய்யா காப்பாற்றினார். கலைஞரைப் பொறுப்பேற்கச் சொன்னார்; கலைஞர் பொறுப்பேற்று வரலாற்றைப் படைத்தார்.

வெற்றிடமல்ல – கற்றிடம்!

அதற்கடுத்து, கலைஞர் மறைந்தபொழுது, வெற்றிடம் என்று சொன்னார்கள். அடப் புரியாதவர்களே, வெற்றிடமல்ல, இதோ கற்றிடம் என்று உலகத்திற்குச் சொல்லிக் கொடுக்கக் கூடிய ஒருவர் தயாராக இருக்கிறார் என்று சொன்ன இடம், இந்தத் தாய்வீடு. அந்தத் தாய்வீட்டிற்கு வந்திருக்கிறார் நமது முதலமைச்சர்.

தோளோடு தோள் நின்று என்றைக்கும் இருக்கக்கூடியவர்கள், பதவி இருந்தாலும், பதவி இல்லாவிட்டாலும், அவருடைய மக்களின் இதய சிம்மாசனம் இருக்கிறதே, அதை யாராலும் பறிக்க முடியாது.
மன்னர் ஆட்சி என்கிறார்கள் சிலர்! ஆம், மன்னர்தான்! அவருடைய ஆட்சி மன்னர் ஆட்சிதான்! ஒரே ஒரு சிறிய வித்தியாசம். என்ன வித்தியாசம் தெரியுமா?

பெரியாரின் கைத்தடியை ஆசிரியரிடமிருந்து பெற்றுக்கொள்கிறார் முதலமைச்சர்

மாதம் மும்மாரி பொழிகிறதா? என்று கேட்ட மன்னராட்சி அல்ல. மும்மாரி பொழிவதற்கு முன்பாகவே, எம்மாதிரி வேலை செய்யவேண்டும் என்று சொல்லக்கூடிய, ஆயத்தப்படுத்தக் கூடிய முதலமைச்சர் எங்கள் முதலமைச்சர்!
அதுபோலவே, மநுமுறை தவறாமல் ஆட்சி நடக்கிறதா? என்று தெருக்கூத்தில்கூட வசனம் பேசினார்கள். மநுநீதிக்கு இங்கே இடமே இல்லை என்று காட்டக்கூடிய இந்த மண்ணுக்குரிய மன்னர்!

‘‘விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு இங்கே இடமில்லை. ஒன்றிய அரசே, படிப்பிலும், கல்வியிலும் கை வைக்காதே, நாங்கள் ஒரு கை பார்ப்பதற்கு ஆயத்தமாக இருக்கிறோம்’’ என்று சொல்லக்கூடிய முதுகெலும்பு உள்ள முதலமைச்சர், இந்தியாவிற்கே சுயமரியாதையைச் சொல்லிக் கொடுக்கக்கூடிய தமிழ்நாட்டு முதலமைச்சர் இவர்தான்!

அப்படிப்பட்ட நீங்கள் இங்கே வந்திருப்பது, ஒரு பக்கம் ஆறுதல்; இன்னொரு பக்கம் மிகப்பெரிய ஒரு வாய்ப்பு.
அதிக நேரத்தை எடுத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. எல்லோருடைய உள்ளங்களிலும் துணை இருக்கிறது. இந்த ஆட்சிக்கு, கொள்கைக்கு! நாங்கள் உங்களுக்குத் துணை; எங்களுக்கு நீங்கள் துணை.

நாங்கள் முன்னணிப் படையினர்!

நாங்கள் பாதை போட்டுக் கொண்டு போவோம், அண்ணா ‘‘சேப்பர்ஸ் அண்ட் மைனர்ஸ்’’ என்று சொன்னார்கள். அதைச் செய்வதற்குத்தான் இந்தக் கருஞ்சட்டைப் பட்டாளமும். இரட்டைக் குழல் துப்பாக்கி வெடிப்பதற்கு என்றைக்கும் தயாராக இருக்கிறது என்பதைப் பார்த்தீர்கள்.

நீங்கள் இங்கே வந்திருப்பது, உங்களை வரவேற்பது – இது வெறும் அமைப்பல்ல – சம்பிரதாயம் அல்ல – பெரியார் திடல் அல்ல. மூலிகைப் பண்ணைக்கு வந்திருக்கிறீர்கள்.

கலைஞர் சொன்னார், ‘‘பாம்பு கடித்த நேரத்தில் எல்லாம், பச்சிலை மூலிகை பெரியார் திடலில்தான் கிடைக்கும் என்பதால், நான் அங்கே சென்று புரண்டு, புரண்டு திரும்புவேன்’’ என்று.

அவர் சொன்னதுபோல், பெரியார்திடல் ஒரு மூலிகைப் பண்ணை!

அதிகம் சொல்லவேண்டிய அவசியமில்லை. நெஞ்சம் நிறைந்திருக்கிறது. திட்டங்கள் வேகமாக நிறைவேறுகின்றன.
ஒரு நூற்றாண்டு – அதில் 25 ஆண்டுகாலம் தி.மு.க. ஆட்சியைப் பெற்றிருக்கிறது.

சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழுக் கூட்டத்தில் நீங்கள் ஆற்றிய உரையைக் கேட்டு, நாங்கள் மகிழ்ந்தோம். ஒரு புதிய நம்பிக்கை பிறந்தது!

எதையெல்லாம் பாடமாகச் சொல்லிக் கொடுக்க முடியுமோ, அவற்றையெல்லாம் இயக்கத்தின் தலைவர், தன்னுடைய இயக்கத் தோழர்களுக்குப் பாடமாகச் சொல்லிக் கொடுத்தீர்கள்.

தி.மு.க.தான் ஆட்சியில்
தொடர்ந்து இருக்கும்!

அதில் நீங்கள் சொன்னீர்கள், ‘‘நூறாண்டு காணுகின்ற நேரத்திலும் தி.மு.க. பதவியில் இருக்கவேண்டும்’’ என்று சொன்னீர்கள்.
தி.மு.க.தான் ஆட்சியில் இருக்கும், நீடிக்கும்! மக்களைத் தயாரிப்பதற்காகத்தான் நாங்கள் இருக்கிறோம். அது தனி மனிதர்களுடைய பதவிக்காக அல்ல; அலங்காரத்திற்காக அல்ல.

இந்தச் சமுதாயத்தினுடைய மான வாழ்வு காப்பாற்றப்படுவதற்காக – சூத்திரப் பட்டமும், பஞ்சமப் பட்டமும் ஒழிவதற்காக-ஜாதி, பெண்ணடிமை, மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்காக அது ஆட்சியில் இருக்கவேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் மறைந்தபொழுது, இத்தோடு இயக்கம் இருக்காது என்று சொன்னார்கள். இயக்கம் இருக்கிறது என்பது மட்டும் முக்கியமல்ல; மேலும் வலிமையாக இருக்கிறது. நண்பர்களே, இவர் இருக்கிறார், இந்த ஆட்சி இருக்கிறது.
‘‘பெரியார் உலக மயம்
உலகம் பெரியார் மயம்!’’ என்று சொல்லக்கூடிய அளவிற்குக் காரியங்கள் நடைபெறுகின்றன.

21 மொழிகளில் தந்தை பெரியார்!

21 மொழிகளிலே பெரியார் சென்றிருக்கின்றார் என்று சொன்னால், இதோ அந்தக் கைகள்தான் அதற்கான கையொப்பமிட்ட கைகள்தான் – நம் முதலமைச்சரின் கைகள். அவை சாதாரணக் கைகள் அல்ல! நெருக்கடி காலத்தில் தளபதி ஸ்டாலின் அவர்களை அடித்து, உதைத்து சிறைச்சாலையில் தள்ளியபொழுது, இந்தக் கரம்தான், அந்த ரத்தத்தைத் துடைத்தது.
எங்கள் உறவு என்பது பதவியினால் வரக்கூடிய உறவு அல்ல.

சில பைத்தியக்காரர்கள் புரியாமல் கேட்கிறார்கள் – முதலமைச்சர், பெரியார் திடலுக்கு ஏன் போகிறார்? என்று.
அவர்களைப் பார்த்துக் கேட்கிறோம், இதுதான் தாய்வீடு – மூலிகைப் பண்ணை இங்கே இருக்கிறது.
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவினை மிகப்பெரிய வெற்றிவிழாவாக நடத்தியமைக்காக – அவருக்கு நினைவுச் சின்னமாக ஒன்றை அளிக்கவிருக்கின்றோம்.

அது என்ன நினைவுச் சின்னம் தெரியுமா நண்பர்களே?

இங்கே இருப்பவர்கள் மட்டுமல்ல, வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பவர்கள் மட்டுமல்ல, இணைய தளம் மூலமாக உலகம் முழுவதும் இருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தாய்வீடு தரக்கூடிய மிகப்பெரிய நினைவுச் சின்னம் – பெரியார் அவர்கள் உடலால் மறைந்து 51 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இயக்கம் – சமூகப் புரட்சி இயக்கமான, தாய்க்கழகமான திராவிடர் கழகம், அதன் சேய்க் கழகமான திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பு அரசியல் ரீதியாக சாதனைகளுக்குமேல் சாதனை செய்து சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கின்றது.
உங்களை வரவேற்கின்ற நேரத்தில், இந்த நிகழ்ச்சி முடிந்து நீங்கள் செல்லுகின்ற நேரத்தில், இன்னும் தைரியத்தோடு, இன்னும் துணிவோடு, களமாடக் கூடிய முதலமைச்சராக நீங்கள் இருக்கின்ற காரணத்தினால், இதோ உங்களுக்கு ஒரு பேராயுதத்தை அளிக்க விருக்கின்றோம்.

நீங்கள் எப்பொழுதுமே வன்முறையில் நம்பிக்கை இல்லாதவர்கள்; நாமும் வன்முறையில் நம்பிக்கை இல்லாதவர்கள்தான்!
இதோ ஒரு கைத்தடி

– நினைவுப் பரிசு!

ஆனால், கருத்து – களம் – போராட்டம் – சட்டம் இவற்றின் மூலமாக மிகப்பெரிய அளவிற்குச் சாதித்து இருக்கிறீர்கள்.
அந்த ஆயுதம் இதோ – அனைவரது சார்பாக, உலக மக்கள் சார்பாக, தமிழர்கள் சார்பாக, திராவிட மக்கள் மட்டுமல்ல, மனித உரிமைக்காக – எப்படி வைக்கத்தில் மனித உரிமைப் போராட்டம் நடந்ததோ – அதேபோல இருக்கக்கூடிய அனைவரின் சார்பாக – இன்றைக்கு அளிக்கிறேன்.

இதோ, அந்தப் பரிசைக் கொடுக்கிறோம்!

பரிசுகள் சில நேரங்களில் மென்மையாக இருக்கும். இந்தப் பரிசு வன்மையாகவும் இருக்காது; மென்மையாகவும் இருக்காது. மிகப்பெரிய அளவிற்குப் புதுமையாக இருக்கும். ஆனால், தேவையானதாக இருக்கும்.

அனைவரின் சார்பாக, பெரிய வாய்ப்பாக நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்குக் கொடுக்கிறோம். இதுதான் சரியான ஆயுதம்! பெரியாரின் கைத்தடி! அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்வோம்!

இந்தக் கைத்தடி இந்த ஆட்சிக்கு மட்டுமல்ல – என்றைக்கும் திராவிடத்தைக் காக்கின்ற தந்தை பெரியாரின் கைத்தடியாக இருக்கும்.
விலங்குகள் எங்கிருந்தாலும் அவற்றைத் தகர்ப்போம்! சற்றுநேரத்திற்கு முன்பு காணொலியில் பார்த்தீர்கள், விலங்குகள் எங்கு இருந்தாலும், அந்த விலங்கைத் தகர்ப்பது முக்கியக் கடமையாகும்.

விலங்குகளில் இரண்டு வகை உண்டு. இரும்பிலும் உண்டு; மனிதர்களிடத்திலும் உண்டு. அவற்றை இந்தக் கைத்தடி தகர்க்கும்! நன்றி, வணக்கம்!