தை 2 : திருவள்ளுவர் நாள் திருவள்ளுவர் தமிழர் சொத்து!- செல்வ.மீனாட்சிசுந்தரம்

2025 கவிதைகள் ஜனவரி-16-30-2025

சொந்தச் சரக்கில் லாதோர்
சூதால் திளைத்து வாழ்வார்!
சிந்தை கரவை ஏந்தச்
சீரைக் கொள்ளார் நெஞ்சில்!
மந்தை ஓட்டி வந்தார்
மண்ணில் ஆட்சி கொள்ள
எந்தை வள்ளுவ னாரைத்
தங்கள் தந்தை யென்றார்!

மொந்தை குடித்துப் போதை
மூழ்கிக் களித்தி ருத்தல்
மந்தை நிற்கும் விலங்கை
வாட்டிக் கொன்று தின்னல்
சிந்தை தன்னில் சாதிச்
சீக்கைப் போற்றி நிற்றல்
நிந்தை என்று சொன்னார்
நெடுவான் குறளில் அய்யன்!

‘சோம பானம்’ உண்டோர்
‘சுரா’வைச் சுவைத்து மொண்டோர்
‘ஓமம்’ வளர்த்துத் தீயில்
உயிர்கள் வாட்டித் தின்றோர்
‘வாமன்’ வித்தை செய்து
‘வருணம்’ நாலாய்ச் சொன்னோர்
பூமன வள்ளு வர்தம்
புகழைச் செரிக்க வந்தார்!

முன்னந் தலைம ழித்து
முடியுங் குடுமி இட்டு
வண்ணக் காவி போர்த்தி
வாகாய்ப் பட்டை யிட்டுத்
தன்னின் கொள்கை தன்னைத்
தரமில் முறையில் இங்கே
விண்நேர் குறளார் மீது
வீணர் திணிக்கின் றாரே!

எதிர்த்துத் தோற்ற பின்னர்
எதிரிக் கொள்கை தன்னைச்
சதியாய்த் தனதாய்க் காட்டிச்
சாற்றும் வித்தை கற்றார்!
புதிராய்க் கொள்கை மாற்றிப்
புதிதாய் நிலையைக் கொள்வார்!
மதியால் உயர்ந்தோர் என்றே
மமதை கொண்ட கூட்டம்!

குறளின் கொள்கை யேற்காக்
குடுமிக் கூட்டம் இன்றோ
உறவாய் அவரைக் காட்ட
உறங்கா தலையு தின்று!
இறவாப் புகழ்ப டைத்தார்
ஏய்ப்பார்க் குறவோ? வெட்கம்!
குறளார் தமிழர் சொத்து!
குள்ள நரிக்கா சொந்தம்? 