1. கே : மாபெரும் மக்கள் தலைவர்களையெல்லாம் வரலாறு அறியாத அரைகுறைகள் வாய்க்கு வந்தபடி மோசமான வசைச் சொற்களால் பொதுவெளியில் பேசுவதை சட்டரீதியாகத் தடுக்க முடியாதா? இந்நிலை மிக மோசமாக தமிழகத்தில் நீடிப்பதைத் தடுக்க வழியென்ன?
– கே.காந்தி, தருமபுரி.
ப : சட்டப்படி என்ன நடவடிக்கையோ அதற்கு உடனடியாக காவல் துறையும், அரசும் விரைந்து செயல்படவேண்டும்.
வெறி நாய்களை ஒழிக்க என்ன சிகிச்சையோ அதனையே மக்கள் செய்யும் நிலையும் கூட ஏற்படலாம். தங்களது கட்சிகளின் பலவீனம், தோல்வி, வெளியேற்றம் இவற்றை மறக்கவும். கூலிப்பட்டாளங்களாக பார்ப்பனர்களுக்குப் பாதம் தாங்கிகளாக
வேலை செய்து கிடைக்கும் கூலி அதிகமாகக் கிடைப்பதாலேயே அப்படி என்பதை மக்களுக்குப் புரிய வைப்பது, பகுத்தறிவாளர்
கடமையாகும்.
2. நிதிப்பகிர்வில், மத்திய அரசு எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு வஞ்சனை செய்வதை உச்சநீதிமன்றம் தலையிட்டு நியாயம் வழங்க முடியாதா?
– அ.சுமதி, காசிமேடு.
ப : உண்மைதான்– ஆனால். அங்கு என்ன எல்லாம் சரியாகவே நடக்கும் என்பதற்கு உறுதியான உத்தரவாதம் ஏதும் உண்டா?
அவர்கள் தலையிடலாம்! நீதி கிடைக்கும் என்று நம்பலாம்.
3. கே : இந்தியா அளவில் முதல் நிலை மாநிலமாக தமிழ்நாட்டை முதல்வர் உயர்த்தியுள்ள நிலையில் மோசமான ஆட்சி நடப்பதாய் பொய்த்தோற்றத்தை, திட்டமிட்டு தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே எதிர் தரப்பினர் உருவாக்கும் நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி பிரச்சாரச் செயல்திட்டங்களை வகுத்து இப்போதிருந்தே செயல்படுத்தி மக்களுக்குத் தெளிவூட்டுவது கட்டாயம் அல்லவா?
– ச.காமராஜ், அடையாறு.
ப3 : உங்கள் நல்லெண்ணத்திற்கும் விழைவுக்கும் நன்றி பாராட்டு கிறோம். நமக்குள்ள விழைவும் அதுதான். என்றாலும் அவரவர் எல்லை என்று ஒன்று உண்டே!
4. கே : கிராமங்களில் ஜாதியின் பெயரால் நஞ்சைப் பரப்ப முயற்சி என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– ம.கோபி, பெரியமேடு.
ப : உண்மையாகவே பிரதமர் மோடி இதைக் கூறினால், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதில், ஒரே ஜாதி என்று கூறினால் நாடும் நாமும் கூட பாராட்டலாமே! உதடுகளைவிட உள்ளம் பேசவேண்டும்.
5. கே: சிந்துவெளி கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு ஆய்வுக் கட்டுரைகளை “உண்மை இதழில்” வெளியிட வாய்ப்புண்டா?
– கே.கவிதா, குடியாத்தம்.
ப : ஆலோசனைக்கு நன்றி, முக்கியக் கட்டுரையை வெளியிடுவோம். பிறகு ஒரு தனி நூலாக மக்கள் பதிப்பாக்கிப் பரப்பவும் செய்வோம்!
6. கே : அறநிலையத் துறையைக் கலைக்க வேண்டும் என்று மேனாள் அய்.ஜி.பொன்மாணிக்கவேல் கூறியுள்ளதைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?
– ச.செந்தில், ஆரணி.
ப: அவர் போன்றவர்கள் இப்போது பா.ஜ.கவின் ஒலி குழாய் ஆனதின் விளைவே இது! அவர் மீதுள்ள புகார்? நினைவுக்கு வருகிறதோ!
7. கே: நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும் 5 ஆண்டுகளும் ஒன்றிய அரசைக் காப்பாற்றுவார்கள் என்ற நிலை, பி.ஜே.பி.யின் ஆதிக்கச் செயல்பாடுகளை அதிகரிக்காதா? தங்களைக் காத்துக் கொள்ள இந்தியாவின் நலனை இருவரும் பலி கொடுக்கத் துணிந்துவிட்டதைத் தடுக்க முடியாதா?
– வ.வேணி, காஞ்சிபுரம்.
ப : பொய்க்கால் குதிரை ஆட்டம், ரேஸ் குதிரைகளின் ஆட்டம் இருக்கிறது! காட்சிக்கு மட்டும்- – பதவி லாபம் பெறும் மட்டும்.
போகப்போகத் தெரியும்- பொறுத் திருப்போம்!
8. கே: சிந்துவெளி ஆய்வுகள் சார்ந்த அனைத்து நூல்களையும் பெரியார் நூலக ஆய்வகத்தில் கிடைக்கும்படி செய்து ஆய்வாளர்களுக்கும், தமிழினத்தின் உயர்வுக்கும் உதவுவீர்களா?
– கே.இராமதுரை, அண்ணாநகர்.
ப : நிச்சயமாக, இப்போது நல்ல அளவுக்கு நூல்கள் தரவுகள் சேர்த்துவருகிறார்கள்- நமது நூலகர்
களும் ஆய்வுத் தோழர்களும்.