வள்ளல் பெருமான் வாழ்வு கொள்கை அடிப்படையில் பரிணாமம் பெற்ற வாழ்வு. அவர் பிறந்த மருதூர் சிதம்பரம் அருகில் உள்ளது. நான் பிறந்த மஞ்சக் கொல்லை மருதூருக்கு மிக அருகில் நடந்தே செல்லக் கூடிய தூரத்தில்தான் உள்ளது. எனவே, அவர் பிறந்த ஊர், வாழ்ந்த கருங்குழி, மேட்டுக்குப்பம், சத்திய ஞானசபை அமைத்த வடலூர் எல்லாம் அருகருகே உள்ள ஊர்கள்தாம்.
எனவே, கிராமச்சூழலில் எல்லோரையும் போல் பிறந்து வளர்ந்தவர்தான் வள்ளலார். அதனடிப்படையில்தான் அவர் கடவுள் நம்பிக்கைகளும் இருந்தன. ஆனால், வயதும் அனுபவமும், சிந்தனையும் வளர்ச்சி பெற, வளர்ச்சி பெற அவரது கடவுள் கொள்கையில் பெரும் மாற்றங்களை பரிணாம அடிப்படையில் ஏற்பட்டன.
உச்சநிலையாக கடவுள் ஜோதி வடிவானவர் என்று எண்ணி, அக்கருத்தையே பரப்பினர். அப்படி அவர் கடவுளை எரிதழலாய் (ஜோதியாய்) வணங்கியது ஏன் என்று ஆய்வு செய்தால், அவரின் அரிய புரட்சிச் சிந்தனைகள் அதில் அடங்கியுள்ளது வெளிப்படும்.
ஜோதி (ஒளி) வழிபாடு
அனைவருக்கும் பொதுவான, சமயங் கடந்த முதற்கோயிலாக ஞான சபையை நிறுவி அதில் ஒளி வழிபாட்டு முறையைத் தொடங்கினார் அடிகளார். சோதி வழிபாடு பல்வேறு பிரிவினரும் ஒரே இடத்தில் சேர்ந்து வழிபடவும், ஒருமையுணர்வுடன் கூடிப் பழகவும் வழி வகுக்கும் என்று நினைத்தார் அவர்.
வள்ளலாரின் ஜோதி,
அறிவின் அடையாளம், அறியாமை இருளகற்றி,
அறிவு ஒளியாய் மானுட வாழ்வைத் துலங்கச் செய்வது
பிரஜோற்பத்தி ஆண்டு தைத் திங்கள் 13ஆம் நாள் வியாழக்கிழமை (25.01.1872) பூச நன்னாளில் சபையில் முதன்முதலாக வழிபாடு தொடங்கப் பெற்று, அருட்பெருஞ்சோதி தரிசனத்தை அனைவரும் கண்டு மகிழ்ந்தனர். அருட்பெருஞ்சோதியாகிய அகண்டத்தின் ஒளி ஆறடி ஒன்பது அங்குல உயரமும் நாலடி இரண்டங்குல அகலமும் உள்ள கண்ணாடியில் பேரொளியாகப் பிரதிபலிப்பதே சபையிற் காணும் அருட்பெருஞ்சோதி தரிசனமாம். 48 நாள் வழிபாட்டிற்குப் பிறகு அக்கண்ணாடியைச் சித்தி வளாகத்திலிருந்து ஞானசபையில் நிறுவச் செய்தனர்.
கடவுளையும் கோயிலையும் தங்களுக்கு மட்டுமே உரியதாக ஆக்கிக்கொண்டு, ஆரிய பார்ப்பனர்கள் செய்த ஆதிக்கத்
தையும், ஏற்றத்தாழ்வுகளையும், தீண்டாமையையும், மூடச்செயல் களையும், சுரண்டல்களையும் ஒழிக்க, கடவுள் ஜோதி வடிவானது என்ற கொள்கையை அவர் கட்டமைத்தமை புலப்படுகிறது.
தீண்டாமை ஒழிப்பு
கடவுளை நாங்கள் மட்டுமே தொட்டுப் பூசை செய்வோம். மற்றவர்கள் தொடக்கூடாது அதுவே சனாதனதர்மம் என்று
ஆரியப் பார்ப்பனர்கள் கூறி, மற்றவர்கள் கடவுளைத் தொடவும், கருவறைக்குள் செல்லவும் தடை விதித்திருந்தனர். வள்ளலார் கடவுள் ஜோதி வடிவானது என்று கூறியதன் மூலம், பார்ப்பனர்களும் கடவுளைத் தொடமுடியாது என்ற நிலையை உருவாக்கி ஆரியப் பார்ப்பன ஆதிக்கத்தை, உயர்வை, அவர்களின் புனிதத்தைத் தகர்த்தார். எல்லோரும் எட்ட நின்றே வணங்க வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்கினார். இதன்மூலம் கருவறைக்குள் சடங்குகளை ஒழித்தார் கடவுளுக்கு உருவம் செய்து அதற்கு பாலாபிஷேகம், தேனாபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் என்று செய்யப்பட்ட சடங்கை, கடவுள் ஜோதி வடிவு என்று கூறியதன் மூலம் தகர்த்தார். நெருப்புக்கு யாரும் அபிஷேகம் செய்ய முடியாது அல்லவா? எனவே ஜோதி வடிவு என்ற தன் மூலம் சனாதனச் சடங்குகள் ஒழிக்கப்பட்டன.
தீப ஆராதனை நீக்கம்
கடவுளே ஜோதி வடிவு (நெருப்பு வடிவு) என்றபின் அதற்கு தீபஆராதனை தேவையற்றது என்று ஆக்கினார். இதன்மூலம் கடவுளுக்கு தீபாராதனை செய்யும் சனாதன மூடச் செயல் ஒழிக்கப்பட்டது.
அலங்காரம் நீக்கப்பட்டது
கடவுள் சிலைக்கு விதம்விதமாய், பல முறைகளில் அலங்காரம் செய்யும் வழக்கத்தை கடவுள் ஜோதி வடிவு என்ற தன் மூலம் ஒழித்தார். நெருப்பு வடிவிலான கடவுளுக்கு ஆடை, அணிகலன் அணிவித்து அலங்காரம் செய்ய முடியாது என்பதால், அலங்காரம் செய்யும் அறியாமையை இதன்மூலம் அகற்றினார். சனாதன முறைகள் இதன்மூலம் முற்றாக ஒழிக்கப்பட்டது.
தேர்த் திருவிழா ஒழிப்பு
கடவுளுக்கு உருவம் கற்பித்ததால் கடவுள் சிலையைத் தேரில் வைத்து வீதிவீதியாக இழுத்துச் செல்லும் மடமையை, கடவுள் ஜோதி வடிவு என்றதன்மூலம் அகற்றினார். நெருப்பைத் தேரில் வைத்து இழுக்க முடியாது என்பதால், அம்முறை இவரின் ‘ஜோதி’க்கொள்கையால் ஒழிந்தது.
பல கடவுள் ஒழிப்பு
கடவுள் ஜோதி வடிவம் என்றதன் மூலம் அதற்கு உருவம் இல்லை, ஆண் பெண் பேதம் இல்லை என்றானது. உருவம் இல்லை ஒளிவடிவு என்றதால் பல கடவுள்களை, பல வடிங்களில் உருவாக்க முடியாமல் போனது. கடவுள் சக்தி வடிவானது (நெருப்பு ஒரு சக்தி) அதற்கு எந்த உருவமும் இல்லை என்றதால் பல கடவுளும் இல்லை என்றாக்கினார்.
புராண ஒழிப்பு
கடவுள் ஜோதி வடிவு என்றதால், உருவம் இல்லை, பல கடவுள் இல்லை, ஆண் கடவுள், பெண் கடவுள் இல்லை என்றானது. இதன்மூலம் புராணங்கள் ஒழிக்கப்பட்டன. புராணங்கள் எல்லாம் பல கடவுள் நம்பிக்கையால் புனையப்பட்டவை. கணவன்- மனைவி, பிள்ளை என்றும், படைப்புக் கடவுள், காக்கும் கடவுள், அழிக்கும் கடவுள் என்றும், சிவனுக்கு பார்வதி மனைவி, விஷ்ணுவுக்கு லட்சுமி மனைவி என்பன போன்ற கற்பனைப் புனைவுகள் தகர்க்கப்பட்டன.
இதன்மூலம் சனாதன மோசடிகள் பெருமளவு ஒழிக்கப்பட்டன. பல கடவுள் இல்லை என்பதால் பிரம்மன் இல்லை, கிருஷ்ணன் இல்லை என்று ஆனது. கிருஷ்ணனும், பிரம்மனும் இல்லை என்றானதால் அவர்களால் படைக்கப்பட்டதாய்க் கூறப்படும் வர்ணாஸ்ரம தர்மம் ஒழிக்கப்பட்டது. இதன்மூலம் சனாதனத்தின் அடிப்படையே வள்ளலாரால் தகர்க்கப்பட்டது.
அறிவே தெய்வம் என்றாக்கினார்
வள்ளல் பெருமான் கடவுளை ‘அறிவான தெய்வம்’ என்றார். அறிவு, அறியாமை இருள் அகற்றுவது. நெருப்பு இருள் அகற்றி எல்லாவற்றையும் துலங்கச் செய்வது. ஆக, அறிவும் நெரும்பும் ஒன்றே. எனவே நெருப்பு வடிவலான கடவுள் அறிவான தெய்வம் என்றார். அந்த அறிவும் அருளின் அடிப்படையிலானதாய், மனிதம் வளர்ப்பதாய் இருக்கவேண்டும் என்பதால் அருட்பெருஞ்ஜோதி என்றார். ஆக, வள்ளல் பெருமான் கருணையும் அறிவுமாய்க் கடவுளைக் கண்டார்.
நெருப்பின் சிறப்பு:
நெருப்பு ஆக்கத்திற்கும் பயன்படும்; அழிவுக்கும் பயன்படும்.நாம் அதை எப்படிப் பயன்படுத்துகிறோமோ அப்படிப் பயன்படும். எனவே, நெருப்பான கடவுளை உலக நன்மைக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். மாறாக மத மோதலுக்கும், உயர்வு தாழ்வுக்கும், சுரண்டுவதற்கும் பயன்படுத்தக்கூடாது என்ற சமூகநலத்தை இதன்மூலம் வலியுறுத்தினார்.
அந்த நெருப்பையே சத்திய தருமச்சாலை அடுப்பில் பற்றவைத்தார். அவர் பற்ற வைத்த அந்த நெருப்பு கடந்த 141 ஆண்டுகளாக அணையாமல் எரிந்து, ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்களின் பசி நெருப்பை அனைத்து வாழ்விக்கிறது. வள்ளலார் காலத்தில் 20 பெரும் பஞ்சங்கள் மக்களை வாட்டிவதைத்தது. அதற்குத் தீர்வு காண்பதே முதல் வேலை என்று எண்ணிச் செயலாற்றியவர்.
‘‘உறுபசி உழன்று வெந்துயரால் வள்ளலே நெஞ்சம் வருந்தவும் படுமோ!’’ என்று பாடினார் வள்ளலார். ஆக வள்ளலாரின் ஜோதி, அறிவின் அடையாளம், அறியாமை இருளகற்றி, அறிவு ஒளியாய் மானுடவாழ்வைத் துலங்கச் செய்வது.
நெருப்பு உலகப் பொது. உலக மக்கள் உய்ய, உயர, சமத்துவத்துடன் வாழ விரும்பியவர் வள்ளலார். அனைவருக்கும் பொதுவான ஜோதியை கடவுளாகக் கற்பித்தார். ஜோதி வணக்கத்தின் மூலம் சனாதனத்தின் அடித்தளத்தைத் தகர்த்த வள்ளலார், சனாதனம் கட்டமைத்த ஜாதி, மதம், சாஸ்திரம், சடங்கு, பெண்ணடிமை, கல்வி மறுப்பு, உரிமை, உடைமை மறுப்பு போன்றவற்றை ஒழிக்க முயற்சிகளை- செயல்திட்டங்களை மேற்கொண்டார். உயிர்நேயம் வளர்த்தார்.