விமர்சனத்திற்கல்ல, விடிவுக்கானது மணமுறிவு !- திருப்பத்தூர் ம. கவிதா

2025 கட்டுரைகள் ஜனவரி-16-30-2025

சென்ற இதழ் தொடர்ச்சி…

சுயமரியாதைத் திருமண முறையை ஏற்படுத்தி இன்ப துன்பங்களில் சமபங்கு ஏற்கும் சம உரிமை படைத்த உற்ற நண்பர்களாக வாழ்வோம் என்ற உறுதி மொழியைத் தந்த தந்தை பெரியார் தான், திருமணங்களையும் அதன் விளைவுகளையும் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து இத்தகைய விளக்கங்களைக் கொடுக்கிறார்.

பெண்கள் நிலையில் மாற்றம்!

ஓர் ஆணின் வாழ்க்கையைப் பற்றி எந்தச் சூழ்நிலையிலும் விமர்சனம் செய்யாத இந்தச் சமூகம் ஒரு பெண்ணை, அவள் பிறந்ததி
லிருந்து இறப்பு வரை துரத்தி அடித்தது…

கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன் என்றும், சேலை மேல முள்ளு பட்டாலும் முள்ளு மேல சேலை பட்டாலும் சேலைக்குத்தான் பாதிப்பு என்றும் காலம் காலமாகப் புகுத்தப்பட்டதில் ஆண்களை விட்டுப் பிரிந்து வந்தால் எங்கே இந்தச் சமூகம் தன்னை ஏற்றுக்கொள்ளாதோ என்ற அச்சத்தில் பெரும்பாலும் பெண்கள் எவ்வளவு அழுத்தப்பட்டாலும் விவாகரத்துக்குத் துணிவதில்லை. அதேபோல பெரும் அளவிற்கு பொருளாதாரத்திலும் ஆண்களையே சார்ந்து இருக்கும் நிலையும் இருந்ததால் அவர்களால் வெளியேற இயலவில்லை. இப்போது கல்வி, வேலை வாய்ப்புகளில் பெண்கள் சொந்தக் காலில் சுயமாக நிற்கும் தகுதியும் திறமையும் பெற்றுக் கொண்டு சமுதாயத்தின் போக்கையும் உணர்ந்து எதிர்க் கேள்வி கேட்கும் துணிவும் பெற்று வருவது வரவேற்று மகிழக் கூடியதாகும்.

வெளிப்புற பூச்சுகள்!

திருமணங்களின் நுழைவு வாயில் என்பது பிரம்மாண்டங்களால் கட்டமைக்கப்படுகிறது. உறவினர்கள் கூடல், அலங்காரம், ஆபரணம், விருந்து என்று மதிமயக்கப்படுகிறது.

இருவருக்குள்ளும் இருக்கும் உண்மையான சிக்கலைத் தீர்க்க முன் வராமல் ஊரைக் கூட்டி ஜாம் ஜாம் என்று திருமணம் செய்தோமே! உறவினர்கள் என்ன சொல்வார்களோ… ஊர் என்ன சொல்லுமோ என்ற அச்சம் அகல, திருமணங்களை எளிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் இந்தக் கவலை இல்லை.

மனவிணையர்களாக வாழாமல் உறவுக்காக ஊருக்காக மணவிணையர்களாக வாழ்வதில் யாதொரு நன்மையுமில்லை.
ஜாதகம், ஜோசியம் என்று திரிவதை விட மணமகனும் மணமகளும் தன் தேவைகளையும் விருப்பங்களையும் முன்னமே எடுத்துச் சொல்ல வேண்டும். தங்கள் இருவரின் குடும்பச் சூழலைப் பற்றியும் ஒருவருக்கொருவர் புரிதல் ஏற்படுத்த வேண்டும். தாங்கள் வாழ்வதற்கேற்ற இணக்கமான சூழல் இருக்கிறதா என்பதை ஒருவருக்கொருவர் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருவரை ஒருவர் திருப்திப்படுத்தும் உடற்தகுதியோடு இருக்கிறோமா என்பதை அறிய வேண்டும். அதனால் தான் வாழ்க்கைத் துணைத் தேர்வில் காதல் மட்டும் போதாது என்றும் பெரியார் சொன்னார்.

விடிவை எதிர்நோக்கி வெளி வருகிறார்கள்!

மகிழ்ச்சியைத் தேடி மணம் முடித்து 20 வருடம் 30 வருடம் வாழ்ந்துவிட்டு வெளியே வர முடிவு எடுப்பவர்கள், ஏற்கெனவே பலமுறை அதைப்பற்றி சிந்தித்தே இருப்பார்கள். எதிர்கால வாழ்க்கையில் அவர்கள் கடந்த கால வாழ்க்கையின் இன்பத்தை இழந்து வாழும் கொடுமையை யோசித்தே இருப்பார்கள். பலமுறை அதற்காக விட்டுக் கொடுத்தும் இருப்பார்கள். அதையும் தாண்டித்தான் அவர்கள் உறுதியாக முடிவு எடுக்கிறார்கள் எனும்போது, விமர்சனங்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். ஏனென்றால், மகிழ்ச்சியாக
வாழ்தல் என்பது மற்ற உரிமைகளைப் போல மனிதனுக்குப் பிறப்புரிமை ஆகும். மகிழ்ச்சியை நாடி நாம் ஏற்படுத்திக் கொள்கிற துணை அதற்கு எதிராக இருக்கும் பொழுது விலகுவது என்பது சரியான தீர்வே. அப்படி வெளி வருபவர்களை மரியாதையோடு நடத்துவது என்பதே மிக முக்கியமானது.

எல்லோரும் விரும்பித்தான் மணம் முடிக்கிறார்கள். யாரும் வெளியே வரும் எண்ணத்தோடு செய்வதில்லை. அப்படி இருக்கும் ஒருவர் துணிந்து முடிவெடுக்கும் நிலையில், அதில் உள்ள நியாயத்தை உணர வேண்டும்.

மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதால் தனித்து வாழ்வதில் எப்போதும் மனிதனுக்கு இன்பம் இருக்காது. ஆனாலும், சூழ்நிலைகள் காரணமாக தனித்து விடப்பட்டாலும் அவர்கள் நிலையில் நின்று அதை உணர முன்வர வேண்டும். ஆணோ பெண்ணோ எவரையும் விமர்சனத்திற்கு ஆளாக்கி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சக் கூடாது.

குழந்தைகள் குறித்த கடமை!

‘பெற்றவர்கள் பிரிதல்’ என்பது குழந்தைக்கு ஏற்கெனவே மனரீதியான பாதிப்புகளைத் தரும் என்பதால் மேலும் மேலும் குழந்தைகளை அழுத் தத்திற்கு ஆளாக்காமல் இருவரின் பாசமும் குழந்தைக்குக் கிடைக்கும் படியான வழி வகைகளைத் திறந்த மனத்துடன் தற்செருக்கின்றி விவாகரத்து செய்து கொள்பவர்கள் செய்து விட வேண்டும்.

இதற்குத்தான் குடும்பங்கள் வழிகாட்டி உதவ வேண்டும். குழந்தைகள் இருவருக்கும் உரியவர்
கள் என்பதால் தேவையற்ற வெறுப்புணர்வை அவர்கள் மனத்தில் ஏற்படுத்தக் கூடாது.

மனிதனுக்காகக் கலாச்சாரமா? கலாச்சாரத்திற்காக மனிதனா?

மண வாழ்வில் ஈடுபடும் இருவருக்கு மிடையே நிலவும் அன்பும், பரிவும், மதிப்பும், நம்பிக்கையும் அவர்கள் வாழ்வை ஒருமித்துக் கட்டி வைக்கிறது. அதில் எந்த ஒன்று கேள்விக் குறியானாலும் அவ்வாழ்வு ஆட்டம் காணத் தொடங்குகிறது.

தன் துணையின் நியாயமான தேவைகளை நிறைவேற்ற முடியாமல் இருப்பவர்கள் அவர் களுக்கான வாழ்க்கையை அவர்கள் வாழ வழி விடுவது தான் உயரிய நாகரிகமாக இருக்க முடியும். அதனால் மற்றவர்கள் யாரும் இதில் அளக்கத் தேவையில்லை. மூக்கை நுழைக்கத் தேவையில்லை.

புனிதம் என்கிற பெயரில் மகிழ்ச்சிக்கும் மன நிம்மதிக்கும் தடையாக இருக்கக்கூடிய எதையும் விலக்கத் தயாராக இருக்க வேண்டும்.

மண முறிவுகள் இலகுவாகும்போது சமத்துவ சிந்தனைகளும் பெருகியே இருக்கும். பழிவாங்கல் நடவடிக்கைகளும் அதற்கான பாதிப்புகளும் தொடராமல் காக்கும்.

கலாச்சாரம் என்னாவது என்று யாரும் கூப்பாடு போடத் தேவையில்லை. மனிதனுக்காக கலாச்சாரமா? கலாச்சாரத்திற்காக மனிதனா? என்பதைச் சிந்திக்க முற்பட வேண்டும்.

வாழ்விணையர்களுக்கான உரிமை!

“மண முறிவுகள் பெருகுவதும் தந்தை பெரியாரின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி தானே?” என்று காட்டாங்குளத்தூர் இ.ப.சீர்த்தி எழுப்பிய கேள்விக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இவ்வாறு பதிலளிக்கிறார்: “சரியான காரண காரியத்தோடு உள்ள மணமுறிவுகள் – ஒருவகை. இரு சாராருக்கும் விடுதலை – சுதந்திர வாழ்வு என்பதால் அது வெற்றியே! பிடிக்காத நண்பர்கள், வேலை செய்ய விரும்பாத, முடியாத வேலைக்காரர்கள் எஜமானரிடமிருந்து கூட விலகிக் கொள்ளும் உரிமை இருக்கும்பொழுது வாழ்விணையர்கள் அந்த உரிமையைச் சரியாகப் பயன்படுத்துவது நியாயம்தானே!” என்கிறார். எனவே, விவாகரத்து என்பது பொதுச் சமூகத்தின் விமர்சனத்திற்கானது அல்ல; அது தனிப்பட்ட ஒருவரது வாழ்வின் விடிவுக்கானது என்பதை எடுத்துக் காட்டுவோம்.