விஞ்ஞான உலகில் மூடநம்பிக்கைகளை விலக்க வேண்டும்!- தந்தை பெரியார்

2025 பெரியார் பேசுகிறார் ஜனவரி-16-30-2025

தாய்மார்களே! தோழர்களே! நான் ஒரு பகுத்தறிவுவாதி. எப்படிப்பட்ட விஷயமானாலும் அறிவைக் கொண்டு சிந்திக்க வேண்டும்; அதன் முடிவுப்படி நடந்துகொள்ள வேண்டுமென்கிற பிடிவாதமான பகுத்தறிவுவாதியாவேன். நான் எதையும் தயவு தாட்சண்யமின்றி எடுத்துக் கூறுபவன். அதனால் எனது கருத்துகள் சிலருக்கு ஏற்புடையதாகவும் பலருக்கு மாறுபாடாகவும் இருக்கலாம் என்றாலும், எனக்குத் தோன்றியதை – சரியென்று பட்டதை எடுத்துக் கூறுகிறேன்.

தோழர்களே! நமது நாட்டிலே பண்டிகைகள் என்பது எந்த நாள் முதல் தெரிய வருகிறதோ அன்று முதல் பெரியவர்கள், அறிஞர்கள், படித்தவர்கள் எல்லோருமே வெகு நாட்களாக வகுத்து வருகிற வழக்கப்படி பெரியோர்கள் நடப்புப்படி, சாஸ்திரப்படி என்றுதான் கொண்டாடிக்கொண்டு வந்தார்களே தவிர, எவரும் அறிந்து கொண்டாடியது கிடையாது. யாராவது அப்படிச் சிந்தித்தார்களா என்பதும் எனக்குத் தெரியாது. பெரிய புலவர்களுக்குத் தெரியுமோ என்னமோ!

நான் 35 வருடங்களுக்கு முன் இந்தப் பொங்கல் அறிவுக்கு ஒத்தது; தமிழர்களுக்கான பண்டிகை; தமிழர்கள் இதைத்தான் தங்களின் விழாவாகக் கொண்டாட வேண்டும்; இதைத் தவிர்த்து பெரும்பாலான மக்களால் கொண்டாடப்பட்டு வரும் மதப் பண்டிகைகள் எல்லாம் முட்டாள் தனமான காட்டுமிராண்டித் தன்மையோடு மூடநம்பிக்கை நிறைந்தவைகளே ஆகும்; இது ஒன்றுதான் மூடநம்பிக்கையற்ற – முட்டாள்தனமற்ற அறிவுக்குப் பொருத்தமான விழாவாகும் என்று சொல்லி வருகின்றேன்.

மனிதன் உழவு செய்கிறான் அதற்கு முக்கியமாக மாட்டைப் பயன்படுத்திக் கொள்கிறான். நல்ல வெள்ளாமை எடுக்கிறான். பெரும்பாலும் இதுதான் அறுவடைக் காலம். பாடுபட்டு உற்பத்தி செய்தவன் தன் குடும்பம் – சுற்றம் – நண்பர்களோடு சேர்ந்து, தான் வெள்ளாமை செய்த பொருளைப் பொங்கி, பங்கிட்டு உண்டு மகிழ்ச்சியடைகின்றான். அதற்குப் பயன்படுத்தும் மாடுகளைச் சிறப்புச் செய்யும் பொருட்டு அதைக் குளிப்பாட்டி, அதற்கு நல்ல உணவும் ஓய்வும் கொடுத்து, அதற்கு நன்றி செலுத்திடும் வகையில் கொண்டாடப்படுவதே இந்த மாட்டுப் பொங்கல் விழாவாகும்.

இந்தப் பண்டிகைகளில் பார்ப்பனர்கள் பலவற்றைப் புகுத்தி நம் மக்களை மூடர்களாகவே ஆக்க வேண்டுமென்று இதை மூடநம்பிக்கைப் பண்டிகையாக்கிவிட்டார்கள். இது இந்திரனது பண்டிகை – இந்திரனுக்குச் செய்கின்ற பொங்கல்
என்று எழுதி இருக்கிறான். போகி என்றாலே அகராதியில் இந்திரன் என்கிற பொருளாகும். இதற்கு அவன் கட்டியிருக்கிற கதை வேடிக்கையானது. அதற்கு முன் இந்திரனுக்கே இந்தப் பண்டிகை நடந்து வந்தது. மக்கள் இந்திரனுக்குப் பொங்கல் வைத்துப் படைத்து வந்தனர். இதைக் கண்ட கிருஷ்ணக் கடவுளுக்கு பொறாமை வந்தது. நாம் கடவுள்; இவன் சாதாரண இந்திரன்;
இவனுக்கு மட்டும் பொங்கல் ஏன் எனக் கருதி மக்களை எல்லாம் அழைத்து இனி இந்திரனுக்கு விழா செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டான். மக்களும் அவன் சொல்லைக் கேட்டு இந்திரனுக்கு விழா கொண்டாடவில்லை.

உடனே இந்திரனுக்குக் கோபம் வந்து பெரு மழையைக் கொண்டு வந்து, வெள்ளத்தைப் பெருக்கி மக்களுக்குத் தொல்லை கொடுத்தான். மக்கள் கிருஷ்ணனிடம் போய் முறையிட்டனர். உன் பேச்சைக் கேட்டதால் தானே எங்களுக்கு இந்தக் கதி என்று. உடனே கிருஷ்ணன் மலையைத் தூக்கி மழையை மறைத்து மக்களைக் காப்பாற்றினானாம். பின் இந்திரன் கிருஷ்ணனிடம் வந்து நீ
எப்படி மழையைத் தடுக்கலாம் என்று கேட்டானாம்.

பின் இருவருக்கும் வாதம் ஏற்பட்டு, கடைசியில் இருவரும் சமாதானம் அடைந்து, இந்திரனுக்கு வழக்கம் போல விழா செய்வதென்றும் மறுநாள் கிருஷ்ணனுக்கும் விழா கொண்டாடச் செய்வதென்றும் ஏற்பாடு செய்துகொண்டார்களாம். அதன்படி போகி இந்திரனுக்கான விழாவாக வும் மறுநாள் பொங்கல் கிருஷ்ணனுக்கான விழாவாகவும் மக்களால் கொண்டாடப்பட்டு வருவதாகக் கதை எழுதி வைத்திருக்கின்றார்கள். மற்றும் ஒரு கதை – இது சங்கராந்திப் பண்டிகை.

மூதேவியானவள், இந்த மாடுகளுக்கெல்லாம் கேடு செய்ய வேண்டுமென்று புலி உருவம் எடுத்து மாடுகளுக்கெல்லாம் தொல்லை கொடுத்தாளாம். அதனால்தான் இந்தப் பொங்கல் விழாவின்போது சேகண்டி அடித்துக் கொண்டு தாம்பாளத்தில் கம்பால் தட்டிக்கொண்டு பொங்கலோ பொங்கல்! புலியோ புலி! என்று கூவுகிறார்கள் என்று கருதுகின்றேன். இப்போதும்
அந்தப் பழக்கம் இருந்து வருகிறது. இங்கெல் லாம் உண்டோ என்னமோ எங்கள் பக்கம் நடைபெற்று வருகிறது. இவை யாவும் மனிதன் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில் ஏற்பட்ட கருத்துகள் – கதைகள் ஆகுமே தவிர, அறிவோடு
சிந்திப்பதற்கு இதில் ஒன்றுமே இல்லை.

நமது மக்கள் பண்டிகைகள் என்று நீண்ட நாட்களாகக் கொண்டாடி வருகிற தீபாவளிப் பண்டிகை, ஆயுதபூஜை, கோகுலாஷ்டமி இப்படி எந்தப் பண்டிகையை எடுத்துக்கொண்டாலும் எல்லாப் பண்டிகைகளும் பார்ப்பனை உயர்த்தவும் நம்மை இழிவு செய்யவுமான பண்டிகைகளே ஆகும்.

நாம் நம் இழிவு நீங்கவும் நம் மக்கள் பகுத்தறிவு பெறவும் வேண்டி இந்தப் பண்டிகைகளையெல்லாம் ஒழிக்க வேண்டுமென்கிறோம். ஆனால், அரசாங்கம் இந்தப் பண்டிகைகளுக் கெல்லாம் லீவு விட்டு மக்களைக் கொண்டாடச் செய்யத் தூண்டுகிறது. விநாயக சதுர்த்தி, இராமநவமி, கோகுலாஷ்டமி, தீபாவளி என்று இவைகளுக்கெல்லாம் விடுமுறை விடுவதன் மூலம் மனித சமுதாயத்தைக் காட்டுமிராண்டி களாக்கவே பாடுபடுகின்றனவே ஒழிய, மனிதன் பகுத்தறிவுவாதியாக வேண்டுமென்கிற கவலை
ஆட்சியிலுள்ளவர்களுக்கு இல்லை; நம்மிடையே கொண்டாடப்பட்டு வருகிற பண்டிகைகள் யாவும்
மக்களின் பொது நன்மையை உத்தேசித்தோ உண்மையை உத்தேசித்தோ அறிவை உத்தேசித்தோ எந்தப் பண்டிகையும் இல்லை.
இந்த ஒரு பண்டிகைதான் அறிவுக்கும் உண்மைக்கும் பொருத்தமான பண்டிகை என்று சொல்லும்படியாக அமைந்திருக்கிறது.
நான் ஏன் இதையெல்லாம் சொல்கிறேனென்றால் மக்களெல்லாம் பகுத்தறிவு மான உணர்வு பெற வேண்டும்; இழிவு நீங்க வேண்டும்; உலக மக்களைப் போல நம் மக்களும் அறிவில்; விஞ்ஞானத்தில் வளர்ச்சி பெற்று உலக மக்களோடு போட்டிபோடக் கூடியவர்களாக ஆகவேண்டுமென்கின்ற எண்ணத்தாலேயே ஆகும்.

பொதுவாக உலகில் எடுத்துக் கொண்டால் இந்த ஒரு நூற்றாண்டிலே ரொம்ப வேகமாக பகுத்தறிவு பயன்படுத்தப்படுவதும், அதனாலே பல அதிசய அற்புத காரியங்களைச் செய்வதும் அது மனித சமுதாயத்திற்கு மிகப் பயன்படுவதுமாக இருக்கிறது.

நம் நாடு ஒன்றுதான் இந்த 1968ஆம் வருடத்திலும் பின்னணியில் நிற்கிறது. நம்மைவிட காட்டுமிராண்டியாக இருந்த நாடுகள் எல்லாம்கூட வெகுவிரைவில் முன்னேறிவிட்டன.

பொதுவாக அதற்குமுன் மனிதன் ஒவ்வொரு குறிப்பிட்ட இடத்திலேயே இருந்தான். ஒரு 50 மைல் தூரம் பிரயாணம் கூட இல்லாமலே இருந்தான். எனவே, அவன் அறிவு வளர்ச்சியடையாமலே இருந்தது, காரணம், இன்று ரோடு, பஸ், ரயில், ஆகாய விமானம் இவைகள் தோன்றியபின் மனிதன் மணிக்கு 100, 200, 500 ஆயிரம் மைல் வீதம் பிரயாணம் செய்கிறான்.

இன்னும் விஞ்ஞானத்தின்மூலம் பல புதுமைகள் கண்டு பிடிக்கப்பட்டதன் மூலம் உலகம் மிகச் சுருங்கி விட்டது. மனிதன்தான் இப்போது நினைத்த உடன் நினைத்த இடத்திற்குப் போகக்கூடிய சக்தியையும் வாய்ப்பையும் பெற்றிருக்கின்றான். விஞ்ஞானத்
தின் மூலம் கிடைத்த அதிசய அற்புத சாதனங்கள் – கருவிகள் – பொருள்கள் இதையெல்லாம் அனுபவிக்கிறோமே தவிர, நாம் அதைப் பற்றிச் சிந்திப்பதே கிடையாது. சிந்திக்க ஆரம்பித்தால் நாமும் அவர்களைப் போலவே பல அதிசயங்களை அற்புதங்களைச் செய்ய முடியும். நாம் அறிவைத் தங்கு தடையின்றி விட்டுச் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் நாம் முன்னேற முடியும். நமது சமுதாயம் முன்னேற்றமடைய முடியும். அதைவிட்டு, பின்னாலேயே 1000, 2000 வருடங்களுக்கு முன் எப்படி இருந்தானோ அப்படியே இருந்துகொண்டு போனால் நாம் இன்னமும் காட்டுமிராண்டிகளாகத்தான் போவோம்.