மிகப்பெரிய வாய்ப்பு– முனைவர் வா.நேரு

2025 கட்டுரைகள் ஜனவரி-1-15-2025

உண்மை வாசகர்கள் அனைவருக்கும் 2025 புத்தாண்டு வாழ்த்துகள். காலம் மாற மாற அறிவியல் கண்டுபிடிப்புகள் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கின்றன. கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முறையும் மாறிக்கொண்டே இருக்கிறது.
இணையம், சமூக ஊடகங்கள் வந்த பின்பு ஒரு கருத்தைப் பரப்புவது என்பது எளிதாக மாறி இருக்கிறது. வாழும் இடம் எங்கெங்கோ இருந்தாலும் கருத்துகளால் இணையத்தின் வழியாக இணைய முடிகிறது. உரையாட முடிகிறது. எவ்
வளவு எளிதாகக் கருத்துகள் பரவுகிறதோ அதே அளவிற்கு வதந்திகளும் பரவுகிறது.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக வாரந் தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் நூல் அறிமுகம் நிகழ்ச்சியில் தோழர் டார்வி அவர்கள், கவிஞர் சுகுணா திவாகர் அவர்கள் எழுதிய ‘அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்’ என்னும் கவிதை நூலை விமர்சனம் செய்தார்கள். அந்த நூல் முழுக்க முழுக்கத் தந்தை பெரியாரின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை, வரலாற்றை நவீனக் கவிதை வடிவில் கொண்டுவரும் முயற்சி. அதனைச் சிறப்பாகச் சுகுணா திவாகர் அவர்கள் செய்திருக்கிறார் என்பதை அந்த நூல் திறனாய்வில் தோழர் டார்வி அவர்கள் எடுத்து வைத்தார்கள்.

மறுநாள் பகுத்தறிவு ஊடகத்துறையின் மாநிலச் செயலாளர் தோழர் ஆவடி முருகேசன் அவர்கள், அய்யா சுகுணா திவாகர் அவர்களின் ‘அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்’ என்னும் நூலினைப் பற்றி டுவிட்டர் ஸ்பேசில் தோழர்கள் விமர்சனம் செய்கிறார்கள். கலந்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டார். நானும் எனது டுவிட்டர் குறியீட்டின் வழியாக உள்ளே நுழைந்து அவர்கள் பேசுவதைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது.

டுவிட்டர் ஸ்பேஸ் என்பது 2020ஆம் ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பு. வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் நமக்குச் செய்தியையோ, கருத்தையோ தருவார்கள். நாம் கேட்டுக்கொள்ளலாம்.இணையத்தின் வழியாக நடைபெறும் சூம்,கூகுள் மீட் போன்ற கூட்டங்களில் நாம் கருத்தைக் கேட்கலாம், நமது கருத்தைக் கூறலாம்,வீடியோவில் நமது முகத்தைக் காட்டலாம். இப்படி பல்வேறு வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறார்கள்.ஆனால் இந்த வசதிகளுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக நடத்துவதற்கு நாம் பணம் கட்டவேண்டும்.

ஆனால், டுவிட்டர் ஸ்பேசில் நாம் நமது முகத்தைக் காட்ட இயலாது. உரையாடல்கள் மட்டும் நிகழ்த்த முடியும் வசதியைக் கொடுத்
திருக்கிறார்கள். ஒரே நேரத்தில் 600 பேர்வரை இந்த நிகழ்வில் கலந்து கொள்ளமுடியும். இலவசமாக நீங்கள் எத்தனை மணி நேரம்
வேண்டுமென்றாலும் உரையாடிக் கொண்டிருக்கலாம். கருத்தைப் பரிமாறிக் கொள்ளலாம்.

‘அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்’ என்ற கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளை வாசித்த அந்தத் தோழர்களில் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் இருந்தனர்.அவர்கள் எந்த நாட்டில் இப்போது வாழ்கிறார்கள், என்ன படித்திருக்கிறார்கள்,என்ன வேலை செய்கிறார்கள், என்ன பின்புலத்தில் இருக்கிறார்கள் என்று எதுவும் தெரியவில்லை என்றாலும்கூட, தந்தை பெரியாரைப் பற்றிய அந்த நவீன கவிதையைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் இணைந்து கொண்ட அனைவரும் பங்கேற்கக் கூடிய ஒரு கலந்துரையாடலாக அந்தக் கலந்துரையாடல் இருந்தது.டாக்டர் கோமதி என்று தன்னை மிக வெளிப்படையாக அறிவித்துக்கொண்ட தோழர் முதல், அந்த நிகழ்வினை நடத்திய தோழர் தன்னை ‘குதிரை’ என்ற புனைபெயரால் அழைத்துக்கொண்டதுவரை நிறையத் தோழர்கள் தங்கள் பெயர்களாலும், புனை பெயர்களாலும் கலந்துகொண்டனர். மிக ஆரோக்கியமான விவாதமாக, இளைய சமூகத்தினரின் விவாதமாக, தந்தை பெரியாரைப் போற்றும் விதத்தில் அந்த உரையாடல்கள் அமைந்து இருந்தன.

பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம்(டிஜிட்டல்) மற்றும் ஆய்வு மய்யம் சென்னை பெரியார் திடலில்,தந்தை பெரியாரின் 51ஆம் நினைவு நாளில்(24.12.2024) தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களால்,திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் எண்மப்படுத்தப்பட்டுள்ள(Digitalized)திராவிட இயக்க நூல்களை, ஆவணங்களை, தமிழில் வெளிவந்துள்ள மின் நூல்களைக் கணினிகளிலேயே படிக்க ஆவண செய்யப்பட்டுள்ளது. இது பழைய ஆவணங்களை எவ்விதச் சேதமும் இல்லாமல், ஆய்வாளர்கள் எளிதில் படிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கும்.

மேலும் தமிழில் இயங்கும் மின் நூலகங்களையும், ஆவணக் களஞ்சியங்களையும் இப்புதிய எணினி நூலகத்தின் பயன்பாட்டாளர்கள் இங்கிருந்தே அணுகமுடியும். அதே போல் உலகில் முதன்மையான மின் நூலகங்களின் புத்தகங்களையும், ஆவணங்களையும் இங்கிருந்து படிப்பதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது (விடுதலை, 24.12.2024) என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் இருக்கும் தோழர்களுக்குப் பெரியார் பகுத்தறிவு நூலகமும் அதன் விரிவாக்கமாக இப்போது வந்துள்ள பெரியார் எணினி நூலகம்(டிஜிட்டல்) மற்றும் ஆய்வு மய்யம் என்பது மிகப்பெரிய வாய்ப்பாகும்.

இப்போதே கூகுள் வழியாக மின் நூல்கள்கிடைக்கிறதே என்று சில தோழர்கள் நினைக்கக்கூடும். ஆனால், அவை முறையான ஆவணம் அல்ல.உறுதிப்படுத்தப்பட்டவை அல்ல. ஒரு தலைப்பினை எடுத்துக்கொண்டு, அந்தத் தலைப்பிற்குள் இருக்கும் உள்ளடக்கத்திற்குள் வேறு கட்டுரைகளை, அந்தத் தலைப்பிற்கு எதிரான, நூல் ஆசிரியரின் கருத்திற்கு எதிரான கருத்துகளை உள்ளே வைத்து மின் நூல்களாக உலாவ விட முடியும்.அறிஞர் அண்ணாவின் ‘ஆரியமாயை’ என்னும் நூலினை,தலைப்பினை வைத்துக்கொண்டு, நூலின் உள்ளே ஆரியத்திற்கு ஆதரவான சில கருத்துகளை உள்ளடக்கி இருக்கும் கட்டுரைகளை உள்ளே இணைத்து ‘ஆரிய மாயை’ என்னும் தலைப்பில் மின் நூல்களாக உலாவ விடமுடியும். நமது எதிரிகள் அப்படிப்பட்ட இடைச்செருகல்களைச் செய்கிறார்கள். இந்த எணினி நூலகம் அப்படிப்பட்ட ஆபத்துகளை மிக எளிதாக முறியடிக்கும்.

உறுதிப்படுத்தப்பட்ட, ஆவணப்படுத்தப்பட்ட மின் நூல்கள் ஆய்வாளர்களுக்குக் கிடைக்கும்.

எங்கெங்கோ இருந்துகொண்டு இணையத்தின் வழியாக ஒரு நூலினை எடுத்துக்கொண்டு அதன் வாசிப்பில், கருத்துப் பரிமாற்றத்தில் இணைந்து கொள்வது ஒருவகையான பிரச்சாரம் என்றால், பெரியார் திடலில் பெரியார் பகுத்தறிவு எணினி நூலகத்தில் அமர்ந்து கொண்டு உலகத்தில் இருக்கும் பல்வேறு நூலகங்களுக்குள் உள்ளே சென்று, எணினி வடிவத்தில் இருக்கும் தந்தை பெரியாரின், ஒத்த கருத்துள்ளவர்களின் நூல்களை வாசிப்பதற்கான ஒரு வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.

இன்னும் என்னென்ன வடிவங்கள் எல்லாம் அறிவியல் முன்னேற்றத்தால் கிடைக்குமோ அத்தனை வடிவங்களிலும் தந்தை பெரியாரின் கருத்துகள் கிடைக்கும், பரவும். ஏனென்றால் தந்தை பெரியாரின் கருத்துகள் என்பது உண்மை. உண்மையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. பொய்கள் எத்தனை முகமூடிகள் போட்டு வந்தாலும் உண்மை வெளிச்சத்திற்கு முன்னால் காணாமல் போகும். அந்த வகையில் 2025-புத்தாண்டில் வரும் புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை வரவேற்போம். அப்படி வரும் புதிய புதிய கண்டுபிடிப்புகளின் வழியே தந்தை பெரியாரின் மனித நேய, உலகம் உய்ய வழி செய்யும் கருத்துகளைக் கொண்டு சேர்ப்போம். அதனை உற்சாகமாகச் செய்யும் இளைய தலைமுறையினரை உச்சி மோந்து பாராட்டி மனம் மகிழ்வோம்.