கரையான் புற்றில் கருநாகம் !

2025 கட்டுரைகள் ஜனவரி-1-15-2025

பொதுவாக ஆரியம் தமக்கு எதிரான பண்பாட்டுக் கூறுகளைச் சாம, பேத, தான, தண்டம் என எல்லா வழிகளையும் பயன்படுத்தி அழித்தொழிக்கும்.

அப்படி அழித்தொழிக்க முடியாத கூறுகளை ஊடுருவி அழிக்கும். அப்படிதான் தற்போது செம்மொழித் தமிழாய்வு மய்யத்தையும் ஊடுருவி அதன் நோக்கத்தை அழிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழ் மொழி ஆய்விற்கான நிதியைக் குறைப்பது, திருவள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசுவது, காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை மறுப்பது, தமிழர்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் கூறும் கீழடி அகழ்வாய்வை நிறுத்தியது, தொல்லியல் ஆய்வாளரான அமர்நாத் ராமகிருஷ்ணனைக் கீழடியிலிருந்து பணி மாற்றம் செய்தது, கீழடி தொடங்கி ஆதிச்சநல்லூர் வரையிலான பல்வேறு பகுதிகளின் அகழ்வாய்வு அறிக்கைகளை வெளியிட மறுப்பது என தொடர்ந்து தமிழ் விரோத – தமிழர் விரோதப் பணிகளைச் செய்து வந்த இந்துத்துவ சனாதன ஒன்றிய அரசு அந்த வழியில் ஒரு பெருங்கேட்டைச் செய்தது – செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு துணைத் தலைவராக டாக்டர் சுதா சேஷய்யனை நியமித்தது ஆகும்.

தமிழ் மொழியைச் செம்மொழியாக்கும் முயற்சி தமிழர்களின், திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு கோரிக்கை, நீதிக்கட்சிக் காலத்தில் தொடங்கியது.

தொடர் நடவடிக்கைகளின் விளைவாக தமிழ் ஒரு செம்மொழி என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை 2004ஆம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்டபோது தமிழ் அறிஞர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் ஒரு நூற்றாண்டு காலக் கனவு நிறைவேறியது.

2004 தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் குறைந்தபட்ச செயல் திட்டத்திலும் இடம் பெற்றிருந்தது. தமிழைச் செம்மொழியாக அறிவிக்கும் முடிவைக் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சரவை 2004 செப்டம்பர் 17ஆம் தேதி எடுத்தது. அந்த முடிவை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அறிவித்தார்.
தமிழைச் செம்மொழி ஆக்கவேண்டும் என்பது தி.மு.க. இடம் பெற்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டத்திலேயே இருந்தது. அந்த அரசின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே ஜூன் 6ஆம் தேதி தமிழ் செம்மொழிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பின்னர் இந்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் ஆய்வுப் பணிகளைச் செய்ய செம்மொழித் தமிழ் உயராய்வு மய்யம் (Centre of Excellence for Classical Tamil – CECT) என்னும் பெயரில் ஓர் உயராய்வு நிறுவனம் தொடங்கப்பட்டது.

தமிழின் தொன்மை, தனித்தன்மை, தமிழர்களின் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் சிறப்புகளைக் கவனத்தில் கொண்டு பல திட்டங்களைத் தீட்டிச் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் கீழ்க்கண்ட பணிகளைக் குறிக்கோள்களாகக் கொண்டது “பல்துறை அறிஞர்களை ஒருங்கிணைத்துத் தமிழின் தொன்மை குறித்து ஆய்வு செய்தல்தமிழ், பிற திராவிட மொழிகள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து விரிவாக ஆய்தல.

பண்டைத் தமிழ் இலக்கணம், இலக்கியம், தொல்லியல் சார்ந்த செய்திகளைக் குறும்படங்களாக உருவாக்குதல்
இணையவழிச் செம்மொழித் தமிழ் கற்பித்தல் திராவிட மொழிகளின் வரலாற்று ஒப்பாய்வும் தமிழ் வழக்காறுகள் குறித்த ஆய்வும் மேற்கொள்ளல் உலக அளவில் ஆய்வுக்களங்களை உருவாக்கிப் பன்னாட்டு அறிஞர்களை ஆய்வில் ஈடுபடுத்தல்
பழந்தமிழ் நூற்களை வெளியிடவும் அவற்றை முறையே ஆங்கிலத்திலும் பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடவும் நிதி வழங்குதல் தமிழாய்வில் நிலைத்த பணிபுரியும் நிறுவனங்களுக்கு ஆய்வுத் திட்டங்களை வழங்குதல்
செம்மொழி தொடர்பான முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கும் முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கும் உதவித்தொகை வழங்குதல்
செம்மொழித் தமிழாய்வில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு நல்கியோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பு செய்தல்.

41 பழந்தமிழ் நூல்களின் செம்பதிப்புகளை வெளியிடுதல் அந்த நூல்களை முக்கிய அய்ரோப்பிய, இந்திய மொழிகளில் மொழிபெயர்த்தல்.

ஆனால், இந்த நோக்கங்களுடன் செயல்படுகிறதா? இதிகாசப் பேச்சாளரும், தீவிர சனாதன வாதியுமான டாக்டர் சுதா சேஷய்யனைச் செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு துணைத் தலைவராக்கினார்கள். இந்த நடவடிக்கை தமிழ் வளர்ச்சிக்கோ, நல்ல ஆய்வுகளுக்கோ உதவாது. மத்திய பா.ஜ.க. அரசாங்கத்தின் சனாதனக் கருத்தியலுக்கு இசைவான ஆராய்ச்சிகளைச் செய்து மொழி வளர்ச்சிக்கே முட்டுக் கட்டையாகிவிடுவார் என்று ஏற்கனவே பல முறை நாம் எச்சரித்துள்ளோம்.

அவரது நியமனம் குறித்து தமிழறிஞர்களும் ‘‘சுதா சேஷய்யன் அவர்களின் நியமனம் செம்மொழித் தமிழாய்வு மய்யத்தின் நோக்கங்களுக்கு எதிரானது. இலக்கியங்கள், இலக்கணங்கள் ஆய்வு செய்யும் நிறுவனத்தில் தமிழில் இருக்கக்கூடிய பக்திப் பாடல்களோ அல்லது பின்னர் வந்த இலக்கியங்களோ இவற்றைப் பற்றி ஆய்வு செய்வதற்கு இந்த நிறுவனம் உருவாக்கப்படவில்லை. அவர் ஒரு மருத்துவர் என்ற நிலையில் பக்திச் சொற்பொழிவு செய்கிறார் என்பதனாலும் பட்டிமன்றத்தில் பேசுவதாலும் இவருக்கு தமிழோடு நேரடித் தொடர்புள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்கள். சுதா சேஷையன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பது செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்குவதற்கான திட்டமே என்று கண்டித்தனர்.
அவர் பதவிக்கு வந்த பின் அப்படியே பார்ப்பனியத்தையும் அதன் பண்பாட்டையும் திணிப்பதையே இலக்காகக் கொண்டு நடந்து வருகிறார்.

தற்போது அகத்தியருக்கு விழா என்ற பெயரில் ஓர் ஊடுருவி அழிக்கும் செயலைத் தொடங்கியுள்ளார்கள். இந்த அகத்தியர் விழாவைச் செம்மொழி ஆராய்ச்சி நிறுவனம் கொண்டாடியுள்ளது! தமிழ் வளர்ச்சிக்கு மத்திய அரசு கொடுத்துள்ள பல கோடிகள் அகத்தியர் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது!

அந்த வரிசையில் திடீரென அகத்தியர் விழா தமிழர்கள் மீது தங்களின் ஆன்மிகக் குப்பைகளை ஏற்ற நினைக்கும்போதெல்லாம் கற்பனையாக ஒரு பாத்திரத்தை உருவாக்கித் தூக்கிப் பிடிப்பார்கள். அல்லது தங்கள் புராணங்களைத் திடீரெனப் பரப்புவார்கள். ‘அனுமன் ஜெயந்தி’ நாரதர் ஜெயந்தி விஸ்வகர்மா நாள் துரோணாச்சாரி நாள் என்று கிளப்பிவிடுவார்கள்.
ஏழு (சப்த) ரிஷிகளில் ஒருவராக அகத்திய ரைச் செருகுகின்றனர். சித்த மருத்துவத்தை வளர்த்தெடுத்த பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் அகத்தியரைச் செருகுகின்றனர்.

பெயர் தெரியாத நம் சித்தர்கள் பலர் எழுதி வைத்த சித்த மருத்துவக் குறிப்புகளுக்கும் அகத்தியரை உரிமையாளராக்கிவிட்டார்கள்.
தமிழ் இலக்கணத்தை உருவாக்கியவரும் அகத்தியரே என அவருக்கு மொழி அறிஞர் என்ற அத்தாரிட்டியும் தந்துள்ளனர் இந்த சனாதனிகள்!

தமிழ் இலக்கணத்தை உருவாக்கியவரே அகத்தியர் என்றும், அவர் இயற்றிய நூல் அகத்தியம் என்றும், அதுவே முதல் இலக்கணநூல் என்றும் காலப்போக்கில் நம்ப வைத்துவிட்டனர். சுப்பிரமணிய பாரதியார் கூட,

‘‘ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை
மேவும் இலக்கணம் செய்தான்.’’
எனப் பாடியுள்ளார். அகத்தியர் பாண்டிய நாட்டில் இருந்ததாகக் கூறப்படும் முதற்சங்கத்திலும் இடைச்சங்கத்திலும் இருந்தததாகக் கட்டுக்கதைகளைப் பரப்பிவிட்டனர்.

முதற்சங்கம் 4440 ஆண்டுகள் இயங்கியதாகவும், இடைச்சங்கம் 3700 ஆண்டுகள் இயங்கியதாகவும், இவை இரண்டிலும் அகத்தியர் இருந்ததாகவும் கூறி தங்கள் கற்பனையை வரலாறாக்கிவிட்டனர். இது அறிவியல் பூர்வமாக ஏற்கத்தக்கதாயில்லை. மேலும் தலைச்சங்கத்தில் சிவன், முருகன் இவர்களும் இருந்தார்கள் என்பதால் தலைச்சங்கமே கற்பனை என்று விளங்குகிறது.

தமிழ் இலக்கணத்தை உருவாக்கியவர் தொல்காப்பியர். அவர் அகத்தியரின் தலைச்சீடர் என்கின்றனர். ஆனால், அவர் உருவாக்கிய பாயிரத்தில் அகத்தியர் எனும் பெயர் இல்லை. நல்ல வேளையாக இதுவரை அப்படி செருகும் முயற்சியை யாரும் செய்யவில்லை.
பாரதியார் பாடலின் மூலமாக அகத்தியர் என்ற கற்பனைக் கதாபாத்திரம் பார்ப்பனர் என்பதும், வட இந்தியாவின் ஆரிய மைந்தன் என்பதும் தெரிய வருவதால், இவர்களின் சனாதனக் கருத்தாக்கத்தைக் காலந்தோறும் வலிமைப்படுத்த அகத்தியரைக் கருவியாக்கி உள்ளனர் என நாம் தெளிவு பெறலாம்.

தொல்காப்பியத்திலோ, சங்க நூல்களிலோ இந்த அகத்தியர் என்ற பெயரே இல்லை. அய்ந்தாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை அகத்தியர் என்ற சொல்லாடலே இல்லை. ஆனால், பிற்காலத்தில் தமிழ், சித்த மருத்துவம், வேதம், புராணங்கள்.. எல்லாவற்றிலும் நீக்கமற நிறைக்கப்பட்டுள்ளார்.

குறிப்பாக அகத்தியர் பற்றிக் குறிப்பிடும் முதல் நூல் இறையனார் களவியல். இது கி.பி.7 அல்லது 8ஆம் நூற்றாண்டில் உருவானது என்பதை இராமசுந்தரம் நிறுவியுள்ளார்.

ஆனால், நவீன அறிவியல் யுகத்திலும் ஆட்சி அதிகாரம் தன் தங்களிடம் இருக்கிற காரணத்தால் அறிவியல் மொழியான தமிழை மீண்டும் புராணக் குப்பைக்குக் கொண்டு போகத் திட்டமிடுகிறார்கள்! அதற்குதான் நண்டைச்சுட்டு நரியைக் காவல் வைப்பது போல் சுதா சேஷய்யனை தமிழ் வளர்ச்சிக்கான அமைப்புக்குள் ஊடுருவச் செய்துள்ளனர்.