வரலாறு படைத்த வைக்கம் போராட்டம்!- முனைவர் கடவூர் மணிமாறன்

2025 கவிதைகள் ஜனவரி-1-15-2025

சாதியில்லாச் சமுதாயம் உலகில் பூத்தால்
சமத்துவமும் நல்லறமும் செழிக்கும் எங்கும்!
வேதியர்யாம் எனவிளம்பிப் புரட்டும் பொய்யும்
வெந்துயரும் பிறர்க்களித்து மகிழக் கற்றார்!
தீதியற்றிப் பிழைப்பதுவே நோக்காய்க் கொண்டார்!
தெரிந்தேதாம் பெண்ணுரிமை மறுக்க லானார்!
பாதியிலே நுழைந்திட்ட பார்ப்ப னர்கள்
படுகுழியில் தமிழரையே வீழ்த்தி வென்றார்!

வரலாற்றுப் புகழ்பெற்ற பெரியார் அந்நாள்
வைக்கத்தில் நடைபெற்ற இழிவைக் கண்டே
உரத்தோடு போராட்டக் களத்தில் நின்றார்!
ஒறுத்திடவே சிறைப்பட்டார்! மீண்டும் அங்கே
தரம்தாழ்ந்து சிலர்யாகம் வளர்த்தார்! மக்கள்
தன்மானச் சிறகுகளை முறித்தார்! பின்னர்த்
திருவிதாங்கூர் அரசியிடம் அண்ணல் காந்தி
தெளிவுறுத்தத் தெருச்செல்லும் உரிமை பெற்றார்!

வேண்டாத மதம்சாதி வெறுப்பை நல்கும்
விரும்பாத குலக்கல்வித் திணிப்பைச் செய்வோர்
தீண்டாமைத் தொழுநோயைப் பரப்பி வந்தார்
திருடரினைக் காவலுக்கு வைப்போர் உண்டோ?
மாண்பெல்லாம் பறிபோக மனித நேயம்
மண்ணுக்குள் கிடப்பதுவோ? பெரியார் அந்நாள்
ஆண்மையுடன் தொடுத்திட்ட வைக்கம் போரே
அம்பேத்கர் தமக்குறுதி அளித்த தாகும்!

மதம், மக்கள் ‘‘அபின்’’ என்றார் அறிஞர் மார்க்சு!
மனிதருளே நால்வருணப் பகுப்பைச் செய்த
உதவாத மனுதரும உளறல் தம்மை
உணர்த்தியுமே ஆரியத்தை அலறச் செய்தார்!
பதவிக்கும் பணத்துக்கும் ஆசை கொண்ட
பழிசேர்த்த பாவியரோ பெரியார் அல்லர்!
கதறிடவே சனாதனத்தின் வேரைக் கிள்ளிக்
கலங்கிடவே செய்தவரும் பெரியார் அன்றோ!