Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வழிநெடுகிலும் வைக்கப்பட்டிருந்த பதாகைகளைப் பார்த்து, கடும் எரிச்சலுடன் தனது இரு சக்கரவண்டியை ஓட்டியபடியே மேலூரைக் கடந்து தனது ஊரான கீழூரை நோக்கி வந்துகொண்டிருந்தான் குமார். மேலூரில் சாமி ஊர்வலத்திற்காக வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளைப் பார்த்துதான் கோபம் கொண்டான் குமார்.

‘‘நாம் மேலூர் காரன்களைவிட உயர்ந்த ஜாதி. நம்மைவிட இவனுங்க பெரிசா சாமி ஊர்வலம் நடத்துவதா? விடக்கூடாது. இவனுங்களைவிட நம்ம ஊரில் சிறப்பா செய்யணும்’’ என்று எண்ணியவாறே ஊரையடைந்தான் குமார். வந்தவுடனே அவன் தனது நண்பர்கள் சிலரை அழைத்தான்.

‘‘நமக்கெல்லாம் சூடு சொரணையே கிடையாதா? மேலூர்க்காரனுங்க ஜாதி என்ன? அவனுங்க வைச்சிருக்கும் விளம்பரப் தட்டிகளையெல்லாம் பாத்தீங்களா? எவ்வளவு பெரிய கோயில் கட்டியிருக்கானுங்க! நாம என்ன அவனுங்களைவிட குறைஞ்சா போயிட்டோம்?’’ என்று பொரிந்து தள்ளினான்.

அவன் பேசுவதை அவன் நண்பர்களும், ஊரில் உள்ள சில பெரியவர்களும் கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சில இளைஞர்களின் நாடி நரம்புகள் எல்லாம் முறுக்கேறின. உதடுகள் துடித்தன.

‘‘வேலை செய்ஞ்சி நெறைய சம்பாதிக்கிற திமிரு அவனுகளுக்கு. நம்மகிட்ட பணம் இல்லையா என்ன? நம்ம வீட்டை வித்தாவது பணத்தைத் திரட்டி அவனுங்களைவிட சாமி ஊர்வலத்தை சிறப்பா நடத்திக் காட்டி அவனுங்க மூஞ்சியில் கரியைப் பூசணும்,’’ என்று ஆவேசமாகப் பேசினான் குமார்.

‘‘அதுக்கு இப்ப என்ன செய்யணும்’’ என்று ஒரு பெரியவர் கேட்டார்.

‘‘நாமும் உடனே சாமி தூக்கணும். ரோடு நெடுக பேனர் கட்டணும். மேளக் கச்சேரி, பாட்டுக் கச்சேரி, ஆட்டம்பாட்டம், வாணவேடிக்கைன்னு தூள் கிளப்பணும். நம்ம ஊர் போல இனி எந்த ஊர்லேயும் இப்படி சாமி ஊர்வலம் நடத்தினதா இருக்கக்கூடாது’’ என்றான் குமார். அப்போது அங்கிருந்த துரைசாமி என்பவனும் ஆவேசமாகப் பேசினான்.

‘‘நீ சொல்றது சரிதான் குமார். நம்ம சாமிதான் சக்தியுள்ள சாமி. நாம் சாமி தூக்கினால்தான் மழை பெய்யும். அவனுங்க தூக்கினா பெய்யாது. நம்ம சாமியோட பெருமையை அவனுங்க உணரணும். நாம அடிக்கப்போற மேளச் சத்தம் அவனுங்க காதைப் பிளக்கணும். நாம உடப் போற வாணத்தில் அவனுங்க ஊரே நடுங்கணும்.’’
அப்போது அந்த ஊர்ப் பள்ளிச் சிறுவர்களும் அங்கு வந்து குழுமினர். இவர்கள் பேச்சைக் கேட்டு அவர்களுக்கு மிகவும் உற்சாகமாகப் போய்விட்டது.

‘‘சீக்கிரமா சாமி தூக்கணும்… சினிமாப் பாட்டை அடிக்கடி போடணும். தெருவில் நாங்க இறங்கி ஆடுவோம்’’, என்றான் ஒரு சிறுவன்.

‘‘சாமி தூக்குவதை ஞாயிற்றுக்கிழமை வைக்காதீங்க. அப்போ பள்ளிக்கூடத்துக்கு லீவு. வேற கிழமையில் வையுங்க. அப்பத்தான் நாங்க பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட்டுட்டு ஆட்டம் போட வசதியா இருக்கும்’’ என்று மகிழ்ச்சி பொங்கச் சொன்னான் ஒரு சிறுவன். அவன் பேச்சைக் கேட்டு மற்ற சிறுவர்கள் ‘ஓ’வெனக் கத்தி அவன் கூற்றை ஆமோதித்தனர். சிறுவர்கள் பேசியதை வெகுவாக ரசித்தான் குமார். பிறகு சிறுவர்களைப் பார்த்துப் பேசினான்.

‘‘டேய் பசங்களா! மேலூர்க்காரனுங்க மூணு நாள் உற்சவம் நடத்தினானுங்க. நாம் அவங்கள விட ஒரு நாள் கூடுதலா நாலு நாள் நடத்துவோம். அதனால எப்படியும் நீங்க பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட்டுத்தான் ஆகணும்’’ என்று அவர்களை ஊக்கப்படுத்தினான்.

ஒரு தலைக் கட்டுக்கு ஆயிரம் ரூபாய் வரிபோடுவது எனவும், விருப்பப்பட்டவர்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நன்கொடையாகத் தரலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது. சாமி ஊர்வலத்திற்கான நாளும் குறிக்கப் பட்டது. மறுநாள் முதல் பண வசூல் செய்வதெனவும், அதற்கு அய்ந்து பேர் கொண்ட குழு அமைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

மீண்டும் ஊர்க்கூட்டம் நடத்தி, மேலும் பல குழுக்கள் அமைத்து பொறுப்புகளைப் பகிர்ந்தளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
ஒரு நாள் காலை நேரம். ஆசிரியர் இளம்பரிதி வீட்டின் கதவு தட்டப்பட்டது.

இளம்பரிதி வெளியே வந்தார். அவர் கீழூர் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர். வெளியூர்க்காரர். குடும்பத்துடன் வாடகை வீட்டில் குடியிருந்தார். மாணவர்களுக்குப் பொறுப்புடன் சிறப்பாகப் பாடம் சொல்லிக் கொடுப்பவர் என்ற நல்ல பெயர் அவருக்கு உண்டு. எப்போதும் இனிய முகத்துடன் அமைதியாகவே காணப்படுவார்.

‘‘என்ன செய்தி?’’ என்று வெளியே நின்று கொண்டிருந்த குமார், துரைசாமியிடம் கேட்டார். மேலும் பலரும் அங்கே இருந்தனர்.

‘‘சார், நாங்க சாமி ஊர்வலம் நடத்தப் போறோம். நாலு நாட்கள் உற்சவம். அடுத்த மாசம் நடக்க இருக்கு. எல்லோருக்கும் ஆயிரம் ரூபாய் வரி போட்டிருக்கோம். எங்க ஊரில் நீங்கள் குடியிருக்கிறதால நீங்களும் வரி கொடுக்கணும்’’ என்றான் குமார். அவனை ஏற இறங்கப் பார்த்தார் இளம்பரிதி. பிறகு பேசினார்.

‘‘குமார், நீயும் உன்னோட வந்திருப் பவர்களும் என்கிட்ட படிச்சவங்கதான். ஆனால், நீங்கள் அதிகம் படிக்காமல், வேலைக்கும் போகாமல் ஊரிலேயே சுத்திகிட்டு வர்றீங்க. இப்போ சாமி ஊர்வலம் நடத்த போறதா சொல்றீங்க. நடத்துங்க; நல்லா நடத்துங்க. நான் வேணாம்னு சொல்லலே. சொன்னாலும் நீங்க கேட்கப் போவதில்லை. இன்னும் ரெண்டு நாள் கழிச்சி வாங்க. சம்பளம் வந்தபின் பார்க்கிறேன்’’, என்றார்.

வந்தவர்கள் ஏதும் பேசாமல் சென்றுவிட்டனர். ஆசிரியர் அல்லவா! அதற்கு மேல் அவரிடம் யாரும் பேசவில்லை. எல்லோரும் கலைந்து சென்றனர். சில நாட்கள் சென்றபின் மீண்டும் ஆசிரியர் இளம்பரிதி வீட்டிற்கு அனைவரும் வந்தனர்.

‘‘அய்யா, சம்பளம் வந்த பிறகு பணம் கொடுப்பதாகச் சொன்னீங்க. அதனாலதான் வந்தோம்’’ என்றான் துரைசாமி.

‘‘ம். விடமாட்டீங்க போலிருக்கே. ரொம்ப செலவு செய்ஞ்சி உற்சவம் நடத்தப் போறீங்களோ? அதுக்கு என்ன காரணம்னு நான் தெரிஞ்சுக்கலாமா?’’ என்று கேட்டார் இளம்பரிதி.

‘‘எங்களுக்கு மானம், ரோஷம், வீரம் எல்லாம் இருக்கு. அதனால்தான் வெகு சிறப்பா சாமி ஊர்வலம் நடத்தப் போறோம்,’’ என்று நெஞ்சை நிமிர்த்திச் சொன்னான் குமார்.

‘‘அப்படியா! ரொம்ப மகிழ்ச்சி. அதோடு விவேகமும் இருக்கணுமே! மானம், ரோஷம், வீரம் எல்லாம் எப்படி, எங்கே, எப்போது வரணும் தெரியுமா? எனக்கு மேலூரில் என்ன நடந்துக்கிட்டு இருக்குன்னு தெரியும்,’’ என்றார் ஆசிரியர்.

‘‘என்ன நடக்குது?’’ என்று கேட்டான் குமார்.

‘‘ஏதோ சாலை ஓரமா மேலூர்க்காரனுங்க வைச்சிருந்த பேனர்களைப் பார்த்து நீங்க வெறியோட இருக்கீங்க. அவங்க நீங்க நினைக்கிறது போல் நிறைய வீண் செலவு செய்யலை. அந்த ஊரை பூர்வீகமாகக் கொண்ட, வெளியூரில் வசிக்கும் ஒருவர் கோயில் கட்டிக் கொடுத்திருக்கிறார். ஆனால், அது வழிபாடு செய்வதற்காக என்பதைவிட மாணவர்கள் உட்கார்ந்து படிப்பதற்காகத்தான். அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் பள்ளிப் பிள்ளைகள் அங்கு வருகிறார்கள். ஊரில் படித்த இளைஞர்கள் அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். பள்ளிப் பள்ளிப் பிள்ளைகள் கும்பலாகச் செல்வதைப் பார்த்துவிட்டு ஏதோ அங்கு உற்சவம் நடப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்களும் உங்க ஊர்ப்பிள்ளைகள் நல்லாப் படிக்க வைச்சி முன்னேற்றும் வழியைப் பாருங்க. அந்த ஊரில் நிறையபேர் அரசாங்க வேலையில் சேர்ந்திருக்காங்க. ஆனால் உங்க ஊரில் அப்படி இல்லை. அதோடு அவங்க நடத்தினது…’’ என்று ஆசிரியர் சொல்லி முடிப்பதற்குள் கூட்டத்திலிருந்த ஒருவன் குறுக்கிட்டான்.

‘‘அய்யா, சாமி ஊர்வலம் நடத்தின பிறகு எல்லாம் நடக்கும். இந்த ஊர் மக்கள் எந்த வியாதியும் இல்லாம நல்லா இருப்பாங்க.’’

‘‘வியாதி போறது இருக்கட்டும். ஆனா உங்க நோய் போகணுமே!’’ என்றார் இளம்பரிதி. இதைக் கேட்டு எகத்தாளமாகச் சிரித்தான் குமார்.

‘‘அய்யா, வியாதி என்றாலும் நோய் என்றாலும் ஒன்றுதானே’’ என்றான். இளம்பரிதி விளக்கம் கொடுத்தார்.

‘‘பிணி, நோய், வியாதி எல்லாம் ஒன்றுபோல் தோன்றினாலும் ஒவ்வொன்றுக்கும் வேறு வேறு பொருள் உண்டு. பசிப்பிணி என்கிறோம். அதை உணவு கொடுத்து உடனடியாகத் தீர்க்க முடியும். வியாதி என்பது வெளிக்காரணிகளால் ஏற்படுவது. உதாரணமாக டெங்குக்காய்ச்சல், கொரோனா, காலரா போன்றவை. இவற்றுக்கு வைத்தியம் உண்டு. மருந்து, மாத்திரைகளால் குணமாகும். ஆனால் நோய் என்கிறோமே அது மனநோய். போட்டி, பொறாமை, காழ்ப்புணர்ச்சியால் வருவது. அதற்கு மருந்து கிடையாது. நல்லோர் சொல் கேட்டுத் திருந்தினால்தான் உண்டு. உங்களுக்குப் பிடித்திருப்பது மனநோய். அதற்கு மருந்து கிடையாது. நல்லா யோசித்துப் பாருங்க. போய் வாருங்க’’ என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.

அனைவரும் முனகியபடியே கலைந்து சென்றனர். சாமி ஊர்வல நாள் நெருங்கியது. பூசை செய்யவும், யாகம் வளர்க்கவும் அர்ச்சகர்களை அழைக்க குமார், துரைசாமி உட்பட சிலர் அருகில் உள்ள ஊரான முதுமங்கலத்துக்குச் சென்றனர்.

‘‘பேஷா செய்யுங்கோ… நாங்க சரியான நேரத்துக்கு வந்துடுறோம்’’, என்று அர்ச்சகர்கள் சொன்னார்கள்.
குமார் மேலூர்க்காரர்களைப் பற்றி அவர்களிடம் முறையிட்டான்.

‘‘எங்களைப் பார்த்து அவனுங்க பொறாமைப்படுறானுங்க. எங்க உற்சவத்தைக் குறை சொன்னாலும் சொல்லுவானுங்க. அவனுங்க சாமி ஊர்வலத்தை நடத்த நீங்க போகலையல்லவா?’’ என்றான்.

‘‘நாங்க போவோமா? அங்கெல்லாம் போகமாட்டோம். உங்க ஜாதிக்காரங்க எங்கள வாளுக்கு தலைமுறை தலைமுறையா சேவகம் பண்ணிட்டு இருக்கிறதால, நீங்க கூப்பிட்டா மட்டும்தான் வருவோம். உங்க ஜாதி என்ன? அவா ஜாதி என்ன? நீங்க போய் வேலையைப் பாருங்கோ’’ என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தனர் அர்ச்சகர்கள்.
திருவிழா நடக்கும் நாளும் வந்தது. பெரிய பந்தல் போட்டு யாகம் நடைபெற்றது. கோயிலைச் சுற்றி பெரிய பெரிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அருகில் பெரிய மேடை போட்டு பாட்டுக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காகவே இரண்டு இலட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டிருந்தது. எந்த அனுமதியும் பெறாமல் மின்சாரம் எடுக்கப்
பட்டிருந்தது. ஊரெங்கும் கண்ணைக் கவரும் வண்ண விளக்குகள் மின்னின.

சாமி சிலைகளை பெரிய டிராக்டரில் வைத்துக்கட்டி ஊர்வலம் தொடங்கியது. வீட்டுக்கு வீடு தீப ஆராதனை காட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. காற்று பலமாக வீசியது. ஆனால், மழை பெய்யவில்லை. அடித்த சூறைக்காற்றில் மேடையில் வேயப்பட்டிருந்த கீற்றுகள் மேல்நோக்கிப் பறந்தன. அலங்காரத் துணிகளும் கிழிந்து பறந்தன. மின்சார இணைப்புகள் அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்து, போடப்பட்டிருந்த கொட்டைகைகள், பேனர்கள் நெருப்புப் பற்றி எரிந்தன. மின்கசிவால் வீடுகளும் தீப்பிடித்து எரிந்தன. மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடியும், கீழே விழுந்தும் பலத்த காயம்பட்டனர். மின்சாரம் பாய்ந்து பலர் படுகாயமடைந்தனர். எங்கு பார்த்தாலும் கூச்சல், குழப்பம். அழுகைச் சத்தம் விண்ணைப் பிளந்தது. இந்த நிலை நீண்ட நேரம் நீடித்தது.

பிறகு தீயணைப்பு வண்டிகளும், மருத்துவ ஊர்திகளும் அணிவகுத்து வந்தன. காவல்துறையினரும் வந்தனர். ஊரே அல்லோலகல்லோலப்பட்டது.

மறுநாள் மருத்துவமனை நிரம்பி வழிந்தது. குமார், துரைசாமி உட்பட பலரும் உடம்பின் பல பகுதிகளில் கட்டுகளுடன் படுக்கையில் கிடந்தனர்.

அவர்களைப் பார்க்க மேலூர் இளைஞர்கள் சிலர் வந்தனர். அவர்கள் குமாரைச் சந்தித்து ஆறுதல் கூறினர். மற்றவர்களுக்கும் ஆறுதல் கூறினர். அதில் ஒருவன் குமாரின் கைகளை ஆதரவாகப் பற்றிக்கொண்டு,

‘‘நீங்கள் எங்களை தவறாகப் புரிந்துகொண்டீர்கள். நாங்கள் அநாவசியமாக எந்தச் செலவும் செய்யவில்லை. சமூக நீதி காத்த தலைவர்களின் படங்களை வண்டியில் வைத்து படஊர்வலம்தான் நடத்தினோம். நேற்று உங்க ஊரில் எழும்பிய கூச்சல், அழுகை, பற்றிய நெருப்பு இவற்றைக் கண்டு பதறிப்போய் நாங்கள்தான் தீயணைப்புத் துறைக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தோம். நெறைய இரத்தம் தேவைப்படுவதாக அறிந்தோம். எங்க ஊரில் வீட்டுக்கு ஒருவர் இரத்தம் கொடுக்க முன்வந்துள்ளோம். நாங்கள் பெரும்பாலானோர் அரசுப் பணியில் உள்ளோம். பணிக்கு நேரமாகிவிட்டது. அலுவலகம் முடிந்து மாலையில் மீண்டும் பார்க்க வருகிறோம். என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள், செய்கிறோம். நீங்கள் எங்களை எதிரியாக நினைத்தாலும் நாங்க உங்களை நண்பர்களாகவே பார்க்கிறோம்.’’

இவ்வாறு அந்த மேலூர் இளைஞன் கூறியதும் குமாரின் கண்கள் பனித்தன; கைகள் தாமாகவே குவிந்தன. படுக்கையில் இருந்த துரைசாமி உட்பட மற்றவர்களும் நீர் ததும்பிய கண்களுடன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.