‘‘நீ எதற்கு எங்களுக்கு ராஜாவாக இருக்க வேண்டும்?’’ தந்தை பெரியாரின் மரண சாசனம்!- வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

2024 கட்டுரைகள் டிசம்பர் 16-30 2024

மனிதன் தானாகவும் பிறக்கவில்லை; தனக்காகவும் பிறக்கவில்லை’ என்ற தனது வார்த்தைகளுக்கு, தானே இலக்கணமாக வாழ்ந்து மறைந்தவர், தந்தை பெரியார் அவர்கள். மரணம்  காத்துக்கொண்டிருக்கும் சூழலில்கூட ஒரு மனிதரால் இவ்வளவு பேச முடியும் என்பதும், இத்தனை செய்திகளைப் பதிவு செய்யமுடியும் என்பதும், வெவ்வேறு கோணங்களில் சிந்திக்க முடியும் என்பதும், பேசும் ஒவ்வொரு வரியிலும் ஒரு தத்துவம் அடங்கி இருக்கும் என்பதும் வரலாற்றுப் பேரதிசயம் தான்! மறைவதற்கு ஆறு நாட்கள் முன்புகூட ஒரு மனிதரால், தனது கொள்கையை இத்துணை வீரியமாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் எனில், அந்த மனிதர் தன்னுடைய வாழ்நாட்கள் முழுவதும் எத்தகைய மனிதநேய மாண்பாளராக வாழ்ந்திருப்பார் என்ற வியப்பு ஒரு புறம்;  மற்றொரு புறம், 95 வயதில் உள்ளூர் அரசியல், இந்தியச் சட்டம் தொடங்கி உலக அறிவியல் வரை தெரிந்துகொண்டு, அதனை மக்கள் மயப்படுத்துவற்காக கடைசி வரை பேசியும் எழுதியும் வந்தது மேலும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. 19.12.1973 அன்று தந்தை பெரியாரின் இறுதிப்பேருரை – சென்னை தியாகராயர் நகரில். உரை கேட்ட யாரும், அதுவே அய்யாவின் ‘மரண சாசனமாக’ மாறும் என்று துளியும் நினைத்திருக்க மாட்டார்கள். காரணம், அந்த உரையில் அமைந்த கொள்கை முழக்கம். போர் முரசம் கொட்டுவதைப் போல் திராவிடர்களை ஆரிய எதிர்ப்புப் போருக்கு அழைத்திருக்கிறார்.
சிந்தித்துப் பாருங்கள் – நலிவடைந்த உடல், வடியும் சிறுநீர், வயிற்றில் ஏற்படும் சொல்லொண்ணா வலி இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு ‘சூத்திர இழிவு’ ஒழித்திடக் களத்திற்கு வாருங்கள் என்ற அழைப்பில் இருந்த ஆழத்தை.

தந்தை பெரியாரின் சொற்பொழிவுகளில் அடிப்படை ஆதாரங்கள் இன்றி, தனக்குத் தோன்றுவதை மட்டும் பேசிச் சென்றார் என்று யாரும் குறை கூறிவிட
முடியாது. அத்தனை ஆழமும் அர்த்தமும் பொதிந்த உரைகளாகத்தான் அனைத்து உரைகளும் இருந்துள்ளன. இறுதிப் பேருரையும் அதற்கு விதிவிலக்கல்ல.

அறிவியல், சட்டம், அரசியல், போர் முரசம் என்று அனைத்தும் கலந்த மரண சாசனத்தில் இன்றும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய வரிகளைப் பார்ப்போம்!
“வெள்ளைக்காரன் நூறு வருடத்திற்கு மேல் இருப்பான். சாகமாட்டான்; சாவதற்கு அவசியம் இல்லை. அந்த அளவு மருந்தும் வந்துவிட்டது. ஏதோ ஒன்று இரண்டுக்கு இல்லை; அதுவும் ஆராய்ந்து கொண்டிருக்கிறான். எனவே, நல்ல வளர்ச்சியான காலத்திலே இருக்கிறோம். நான் கொஞ்ச நேரத்திற்கு முன்பு சொன்னேன். பாருங்கள், நேற்று வந்த பத்திரிகைகளிலே விந்துகளைப் பேங்கில் சேர்த்து வைத்து, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகளை உண்டாக்கலாம் என்று வந்திருக்கிறது. கோழிக்குஞ்சைப் பொரிக்க வைப்பதுபோல் பொரிக்க வைத்து விடலாம். பெண்களுடைய இந்திரியம் ஒரு டப்பியிலே, ஆண்களுடைய இந்திரியம் ஒரு டப்பியிலே, பேங்க் என்று அதற்குப் பெயர். அதிலே சேர்த்து வைத்துக் கொள்ளலாம். என்றைக்குக் குழந்தை வேண்டுமோ, அன்றைக்குக் குழந்தையை உண்டாக்கிக் கொள்ளலாம். ‘பியா பியா’ என்று கத்திக்கொண்டு குழந்தை வரும். இதையெல்லாம் பொய் என்று சொல்ல முடியாது. பெரிய பெரிய பிரசித்தியான பத்திரிகையிலே போட்டோவுடன் வருகிறது. அப்புறம் அய்ந்தாயிரம் மைல் பறக்கிறான்; பத்தாயிரம் மைல் பறக்கிறான்; சந்திரனுக்குப் போய் வந்தான். இதெல்லாமா பொய்? இப்போது நாம் மானத்துக்காகப் போராடுகிறோம்; வேறொன்றுக்கும் இல்லை.” (தந்தை பெரியார் 19.12.1973) உலக அளவில் ‘Test Tube Baby’ என்ற அறிவியல் ரீதியான குழந்தை பெறும் முறை தோன்றுவதற்கு முன்பே, அதுபற்றி விஞ்ஞானிகள், மருத்துவர்கள் சிந்திக்கும் முன்பே ஆண் – பெண் சேர்க்கையின்றி குழந்தை பிறக்கும் என்று “இனி வரும் உலகத்தில்” பேசிய தலைவர் தந்தை பெரியார். தான் சிந்தித்துப் பேசிய செய்தி நடைமுறையில் நடந்ததை – தான் மரணிக்கும் முன்பே உலக அரங்கில் நடைபெற்றதை – பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொள்கிறார். தான் தெரிந்து கொண்டது மட்டுமின்றி, அதனை இறுதிப் பேருரையில் பதிவும் செய்துள்ளார்.

பள்ளிக் கல்வியைக்கூட முழுவதுமாக முடிக்காத மனிதர், சட்டப் பல்கலைக்கழகத்தில் படிப்பவர்களுக்கும் புரியாத பல அரசியல் சட்ட நுணுக்கங்களை ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார். அதன் விளைவுதான் ஜாதியைப் பாதுகாக்கும் சட்டப் பிரிவுகளை 1957ஆம் ஆண்டு திராவிடர் கழகத் தோழர்கள் எரித்த “சட்ட எரிப்பு” வரலாறு. இறுதி வரை சட்டத்தின்படி நாங்கள் சூத்திரர்களாக இருக்கிறோம் என்பதையும், ஏன் அப்படி இருக்க வேண்டும்? மான உணர்ச்சி வேண்டாமா என்பதையும் மக்களிடமும் அரசிடமும் உரக்கக் கேட்டார்.

“ஓர் அரசாங்கம் நடக்க வேண்டுமானால் அரசியல் சட்டம் வேண்டும்; ஒத்துக்கொள்கிறேன். அதற்காக அரசாங்கம் நடக்க வேண்டும் என்பதற்காகப் பார்ப்பான் இருக்க வேண்டுமா? அரசாங்கம் இருக்க வேண்டும் என்பதற்காகச் சூத்திரன் இருக்க வேண்டுமா? மனிதன் தானே இருக்க வேண்டும்? மற்ற நாட்டிலேயும்தான் அரசாங்கம் நடக்கிறது. அங்கு பார்ப்பான் சூத்திரன், இருக்கிறானா? ஆகவேதான், அவன் வைத்திருக்கிற பாதுகாப்பு எல்லாம் எல்லோரும் ஒன்று சேரக்கூடாது என்பதற்காகவும், பார்ப்பானுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் செய்யப்பட்ட ஏற்பாடு. நாம் தான் மாற்ற வேண்டும் என்கிறோம்” (தந்தை பெரியார், 19.12.1973) தந்தை பெரியாரின் போராட்டக் குணம் ‘மனித சமத்துவத்தின்’ அடிப்படையில் பிறந்தது.

உயிர்கள் மீது அவர் கொண்ட அளவற்ற அன்புதான் அவரை போராட்டக் களங்களில் துணிச்சலுடன் நிற்க வைத்திருக்கிறது.

95 வயதிலும் சூத்திர இழிவை நீக்குவதற்காக சிறைக்குப் போகத் தயாராக நின்ற தலைவரை இதுவரை உலகம் கண்டிருக்குமா என்று தெரியவில்லை. “கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தால், பிடிக்க ஆரம்பிப்பான்; அய்யாயிரம், பத்தாயிரம் என்று நாம் ஜெயிலுக்குப் போகவேண்டும். நாம் காரியம் முடியும் வரை ஜெயிலில் இருக்கத் தயாராக இருப்போம் என்று காட்டிக் கொள்ள வேண்டும். சட்டத்தை மாற்று என்று சொல்ல வேண்டும்; மாற்றாவிட்டால், உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? போ வெளியே! நீ 10 ஆயிரம் மைலுக்கு அப்பால் இருக்கிறாய்; உன் பேச்சு எனக்குப் புரியாது; உன் பழக்கம் வேறு என் பழக்கம் வேறு; உன் நடப்பு வேறு; என் நடப்பு வேறு;”

இதைப் பேசிக்கொண்டிருக்கும்போதே வயிற்றில் ஏற்பட்ட வலியால் ‘அம்மா, அம்மா’ என்று தமிழர்களின் மான மீட்பர் துடித்த காட்சியை மக்கள் பார்த்திருக்கின்றனர். மரணத் தறுவாயிலும் பொறுக்கமுடியாத வலியையும் பொருட்படுத்தாமல் மீண்டும் தொடங்கி, ஏராளமான செய்திகளைப் பேசி, களத்திற்கு அழைத்து, சிறைக்குப் போகத் தயாராக இருங்கள் என்ற தனிப்பெரும் தலைவர், உலகிலேயே தந்தை பெரியார் ஒருவரே!
“எனக்குப் புரியாது, நீ மரியாதையாகப் போ! நீ எதற்கு எங்களுக்கு ராஜாவாக இருக்க வேண்டும்? என்று பேச்சினைத் தொடர்ந்தார்.
இன்று மாநில சுயாட்சி என்னும் வலுப்பெற்ற முழக்கத்திற்கு முன்னோடியாக தந்தை பெரியாரின் ‘நீ எதற்கு எங்களுக்கு ராஜாவாக இருக்க வேண்டும்’ என்ற வரிகளைப் பார்க்கிறேன்.

தொலைநோக்குடன் அய்யா கூறிய வரிகள் : “உலகத்திற்கே நாம் வழிகாட்டிப் போவோம்; நாம் புது உலகம் காண்போம். இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய சக்தி உடையவராக இருப் போம். அநேகக் கோளாறுகள் இருந்தாலும் அவை எல்லாம் உடனே மாறிவிடும். அது செய்கிறவன் உடைய லட்சியத்தைப் பொறுத்திருக்கிறது”.

ஆம், இன்று திராவிடம், இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலகத்திற்கே வழிகாட்டி நிற்கிறது. இன்னும் ஜாதி ஒழிப்புக் களத்தில், சமத்துவ சமூகம் அமைக்கும் நமது கொள்கையில் செல்ல வேண்டிய தூரம் இருப்பினும், தந்தை பெரியாரின் கொள்கைகள் உலகமயமாகி இருப்பதுதான் அய்யாவின் மரண சாசனத்தின் வெற்றி!