மேனாள் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமி அவர்களின் துணைவியார் திருமதி. புனிதவதி அவர்கள் 11.2.2006 அன்று மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். அவ்வமயம் சுற்றுப்பயணத்தில் இருந்த நாம் சென்னை திரும்பியதும், 14.2.2006 அன்று காலை சென்னை இராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கே.ஏ.கிருஷ்ணசாமி அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினோம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு சென்னை அமைந்தகரை புல்லாரெட்டி நிழற்சாலையில் 14.2.2006 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது. மாநாட்டிற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் முன்னிலை வகித்தார். தோழர்கள் தியாகு, இயக்குநர் வி.சி.குகநாதன், பாவலர் அறிவுமதி ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக நாம் சிறப்புரையாற்றுகையில் ஈழத்தமிழர்களின் கோரிக்கைகள் என்ன என்பதைப் பட்டியலிட்டு விளக்கினோம். மேலும் ‘‘தமிழர்களின் துறைமுகமான திரிகோணமலையைத் தன் வயப்படுத்த தொடக்கம் முதலே மோப்பமிட்டுக் கொண்டு கிடக்கிறது அமெரிக்கா. அங்கே கப்பல்தளம் அமைக்க வேண்டும் என்பது அதன் நீண்ட காலக் கனவு. விடுதலைப்புலிகள் உள்ளவரை அந்தப் ‘பாச்சா’ பலிக்காது.
திரிகோணமலையில் அமெரிக்காவின் கப்பல்தளம் உருவாக்கப்பட்டால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்லவா? அந்தக் கண்ணோட்டத்தில் ஏன் பார்க்கத் தவறுகிறது இந்திய அரசு’’ என்று நாம் எழுப்பிய வினா, அனைவரின் சிந்தனையையும் கிளறியது.
மாநாட்டு மேடையில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் கலைத்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட ஒலிப்பேழையை (புள்ளி இல்லா சிறுத்தை) நாம் வெளியிட அதைத் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பெற்றுக்கொண்டார்.
சிங்கப்பூர் நாட்டின் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் அரிகிருஷ்ணன் அவர்கள் 15.2.2006 அன்று சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்தார். அவரை நாம் வரவேற்று சால்வை அணிவித்து சிறப்புச் செய்தோம். பின்னர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் பணிகள் மற்றும் அது முன்னெடுக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்து அவருடன் உரையாடினோம். தொழிலதிபரும் தொண்டறம் புரிபவருமான ஆனந்தராஜா உடன் இருந்தார்.
தந்தை பெரியார் பெருந்தொண்டரும் சுயமரியாதை இயக்க வீரருமான ஆத்தூர் மெடிக்கல் ஸ்டோர் ஜி.முருகேசன்(வயது 76) அவர்கள் 16.2.2006 அன்று இயற்கை எய்திய செய்தியறிந்து வருந்தினோம். நம்மிடத்தில் மிகுந்த பற்றும் பாசமும் கொண்டவரும் கழகம் நடத்திய பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவருமான அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தும், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியும் செய்திஅனுப்பி வைத்தோம்.
ஓய்வு பெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலாளரும், மாநிலப் பகுத்தறிவாளர் கழக மேனாள் தலைவரும், மாநிலங்களவை மேனாள் உறுப்பினரும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் பேரன்புக்கு உரியவருமான சி.டி.நடராசன் (வயது 91) அவர்கள் 17.2.2006 அன்று மறைவுற்ற செய்தியறிந்து சொல்லொணா துயருற்றோம். 18.2.2006 அன்று மதியம் 12.00 மணியளவில் மறைந்த சி.டி. நடராசன் அவர்களின் உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தி இரங்கலுரையாற்றிய பின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினோம்.
தமிழ் அறிஞர் உ.வே.சா., கிருபானந்த வாரியார், தமிழவேள் உமாமகேசுவரனார், திராவிட மொழி நூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆகியோரது நினைவு அஞ்சல் தலைகள் வெளியீட்டு விழா 18.2.2006 அன்று மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல்துறைத் தலைவர் வத்சலாரகு அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதிமாறன், விழாவில் கலந்துகொண்ட சிறப்பு அழைப்பாளர்களுக்குப் பொன்னாடை போர்த்தி அஞ்சல் தலைகளை வெளியிட்டார். உ.வே.சா. அவர்களின் அஞ்சல் தலையினை
தி.முக. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களும், கிருபானந்தவாரியார் அஞ்சல் தலையினை சாந்தலிங்க அடிகளார் அவர்களும், தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களின் அஞ்சல் தலையினை தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களும், தேவநேயப் பாவாணர் அவர்களின் அஞ்சல் தலையினை கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்களும் பெற்றுக்கொண்டனர். தமிழறிஞர்களின் உருவ அஞ்சல் தலைகளை முதலமைச்சர் கலைஞர் திறந்து வைத்தார்.
விழாவில் நாம் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றுகையில் ‘‘திராவிட மொழி நூல் ஞாயிறு தேவநேயப் பாவாணருக்கு அஞ்சல் தலை வெளியிட வேண்டுமென்று ‘விடுதலை’யில் எழுதி நாங்கள் நினைவூட்டினோம். உடனே அஞ்சல் தலை வெளியிட்டு கலைஞர் எங்களை வியப்பில் ஆழ்த்தினார்’ எனக்கூறி விளக்கவுரையாற்றினோம்.
தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் நிறைவுரையாற்றுகையில் ‘‘ ‘விடுதலை’ பத்திரிகையிலே முதல் பக்கத்திலே தேவநேயப் பாவாணரின் அஞ்சல் தலை வெளியிட வேண்டுமென்ற வேண்டுகோள் இருந்தது.
உடனடியாக அதைக் கத்தரித்து டில்லிக்கு தம்பி தயாநிதிமாறனுக்கு அனுப்பி வைத்தது மாத்திரமல்ல; தொலைபேசியிலும் அதைச் சொல்லி அவரும் அதை நிறைவேற்றி இன்றைக்கு அந்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டிருக்கிறது என்றால், அதற்கு தூண்டு சக்தியாக இருந்தது நம்முடைய வீரமணி அவர்கள் என்பதையும் இதைப் போல தூண்டு சக்தியாக நீங்கள் பல காரியங்களில் இருக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஆலயங்களில் அர்ச்சகராவதற்குத் தகுதி படைத்தவர்களாக இருந்தால் அர்ச்சனை செய்யலாம் என்பதை முதல் வேலையாக நிறைவேற்றுவோம் என்பதையும் அய்யா அவர்களின் நெஞ்சிலே தைத்த அந்த முள் நிச்சயமாக எடுக்கப்படும்” எனச் சூளுரைத்து உரையாற்றினார்.
இறுதியில் கிருபானந்த வாரியாரின் தம்பி மகன் புகழனார் நன்றி கூறினார்.
பத்மசிறீ விருது பெற்ற பிரபல மகப்பேறு மருத்துவ இயல் பேராசிரியர் டாக்டர் பூ. பழனியப்பன் அவர்களுக்கும், காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணரான டாக்டர் மோகன் காமேஸ்வரன் அவர்களுக்கும் பாராட்டு விழா 23.2.2006 அன்று இரவு 7 மணிக்கு சென்னை பெரியார் திடலில் மனித நேய நண்பர்கள் குழு சார்பில் நடைபெற்றது.
கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அகில இந்திய தேசிய மருத்துவக் குழுத் தலைவரும் சிறுநீரகத்துறை நிபுணருமான டாக்டர் ஏ.ராஜசேகரன் தலைமை வகித்து உரையாற்றினார்.
அடுத்து டாக்டர் பூ.பழனியப்பன் அவர்களுக்கும் டாக்டர் மோகன் காமேஸ்வரன் அவர்களுக்கும் நாம் பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்தோம். திருமதி.லட்சுமி பழனியப்பன் அவர்களுக்கு மோகனா அம்மையாரும் திருமதி. இந்திரா மோகன் காமேஸ்வரன் அவர்களுக்கு டாக்டர் மீனாம்பாள் அவர்களும் பொன்னாடை அணிவித்தனர்.
விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர்கள் டாக்டர் முத்துக்குமாரசாமி, மாரிமுத்து மற்றும் மனிதநேய நண்பர்கள் குழு துணைச் செயலாளர் டாக்டர் சரோஜா பழனியப்பன், டாக்டர் ஜே.ஜி. கண்ணப்பன் ஆகியோர் பாராட்டுரை வழங்கினார்கள்.
இறுதியாக நாம் உரையாற்றுகையில், ‘‘உழைக்கும் எந்திரங்கள் கூட ஓய்வு எடுக்கின்றன.
ஆனால், மருத்துவர்களுக்கு அந்த வாய்ப்பு கூட இல்லை. நேரம் என்பது அவர்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அறிவோம். இந்த இரு தமிழர்களும் பெற்ற விருதை எண்ணி உலகளாவிய அளவில் உள்ள தமிழர்கள் பூரிப்படைகிறார்கள். அவர்களால் இந்த விருதுக்குப் பெருமை கிடைத்துள்ளது’’ என அவர்களின் தொண்டறத்தையும் தூய பணியையும் பாராட்டிப் பேசினோம்.
பின்னர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் அவர்களும், டாக்டர் பூ.பழனியப்பன் அவர்களும் ஏற்புரையாற்றுகையில், ‘‘எங்களுக்கு விருதுகள் கிடைத்ததை விட பெரியார் திடலில் நடந்த பாராட்டையே பெரிதாக எண்ணுகிறோம்’’ என உணர்ச்சிப் பெருக்குடன் கூறினர். இறுதியில், வழக்குரைஞர் கோ.சாமிதுரை நன்றி கூறினார்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் மகன் டாக்டர் அண்ணா பரிமளம் அவர்களைத் தலைவராகக் கொண்டு இயங்கும் அண்ணா பேரவை, அண்ணா ஆய்வு மய்யத்தின் 16ஆம் ஆண்டு விழா சென்னை பெரியார் திடலில் நடிகவேள் ராதா மன்றத்தில் 26.2.2006 அன்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது.
அண்ணா பேரவை சென்னை மாவட்ட அமைப்பாளர் இரா.செம்பியன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். வேள்.கதிரவன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அண்ணா பரிமளம், ‘இனமுரசு’ சத்யராஜ், ‘இலட்சிய நடிகர்’ எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினர்.
பின்னர் ‘பேரறிஞர் அண்ணா பேசுகிறார்’ என்ற குறுந்தகடுகள் பத்து வெளியீட்டு விழா நடந்தது. குறுந்தகடுகளை நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்கள் வெளியிட, அதை நடிகர் சத்யராஜ் பெற்றுக்கொண்டார். பத்து குறுந்தகடுகளை ரூ.500 கொடுத்து நாம் பெற்றுக்கொண்டோம்.
அடுத்து நாம் சிறப்புரையாற்றுகையில், ‘‘அய்யா கொள்கை எதுவோ அதுவே அண்ணா அவர்களின் கொள்கை. அய்யா எழுத்தானாலும் அண்ணா எழுத்தானாலும் அவை ஒரே குறிக்கோளும் இலக்கும் கொண்டவை. எனவேதான், அவர்களுடைய எழுத்துகள் காலத்தால் சாகடிக்கப்பட முடியாத சரித்திரப் புகழ் பெற்று விளங்குகின்றன.
அய்யாவின் சொத்து, அண்ணாவின் சொத்தெல்லாம் பகுத்தறிவுச் சிந்தனை, கொள்கை, இயக்கம், தன்மானம், சுயமரியாதை- இவைதான். அந்தக் கொள்கைகளை யாராலும் காலத்தால் அழிக்க முடியாது. அதுபோலத்தான் இந்த இயக்கம்’’ என அய்யா – அண்ணா அவர்களின் பெருமைகளை எடுத்துக் கூறினோம். நிறைவாக சந்திரசேகரன் நன்றி கூறினார்.
நிர்மா பல்கலைக்கழகம், அகமதாபாத்தில் 23.2.2006 அன்று 85ஆவது அகில இந்திய தொழிற்கல்விக் கழகத்தின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரி முதல்வர் நல்.ராமச்சந்திரன் அவர்கள் அகில இந்திய தொழிற்கல்விக் கழகத்தின் அகில இந்திய துணைத் தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையொட்டி நல்.ராமச்சந்திரன் அவர்கள் 27.2.2006 அன்று எம்மைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
உரத்தநாடு நடேசன் – பார்வதி இணையரின் மகன் ந.மணிகண்டன் மற்றும் சோமசுந்தரம்- சாந்தா இணையரின் மகள் சோ.பிரியதர்ஷினி ஆகியோரின் இணையேற்பு நிகழ்வு உரத்த நாட்டில் 27.2.2006 அன்று நடைபெற்றது. ரஞ்சித்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
மணவிழாவிற்கு நாம் தலைமையேற்று மணமக்களை ஒப்பந்த உறுதிமொழி ஏற்கச் செய்து, மணவிழாவை நடத்தி வைத்து, வாழ்த்துரை வழங்கினோம்.
லண்டன் கிருஷ்ணமூர்த்தி சமுதாயக் கூடம் திறப்பு விழா, ஆர்.ஏ.துரைசாமி நினைவுப் பண்டக சாலை தொடக்க விழா, கே.ஆர்.சி. நினைவுத்திடல் தொடக்கவிழா ஆகியவை கண்ணந்தங்குடி கீழையூரில் 27.2.2006 அன்று மாலை நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை பன்னீர்செல்வம்- தமயந்தி (சில்வர் கிரீன் Agro products) ஆகியோர் செய்திருந்தனர். பன்னீர் செல்வம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
விழாவில், கே.ஆர்.சி. நினைவுத்திடலை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் எல்.கணேசன் அவர்கள் திறந்து வைத்தார். லண்டன் கிருஷ்ணமூர்த்தி சமுதாயக் கூடத்தை நாம் திறந்து வைத்தோம். ஆர்.ஏ.துரைசாமி நினைவுப் பண்டக சாலையை மேனாள் நாகை ஒன்றியப் பெருந்தலைவர் எஸ்.பி. தங்கையா திறந்து வைத்தார். விழாவில், பன்னீர்செல்வம் – தமயந்தி ஆகியோர் உடல்கொடைக்கான உறுதி மொழிப் பத்திரத்தை தஞ்சை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கே.கலைச்செல்வி அவர்களிடம் வழங்கினர்.
பின்னர், சி.பி.எம். மாவட்டச் செயலாளர் ஆர்.சி. பழனிவேல் தலைமை உரை நிகழ்த்தினார்.
எல்.கணேசன் எம்.பி., எஸ்.பி.தங்கையா, டாக்டர் கே.கலைச்செல்வி ஆகியோர் உரையாற்றியபின் நிறைவாக நாம் சிறப்புரையாற்றியபோது இந்த
நினைவிடம், அரங்கம் ஆகியவை அமைந்துள்ள அந்தப் பெரியவர்களின் பெருமைகளையும் சிறப்புகளையும் எடுத்துரைத்தோம்.
அன்று இரவு சுயமரியாதை இயக்க 80ஆம் ஆண்டு நிறைவு விழா, 80 வயது நிறைந்த பெரியார் பெருந்தொண்டர்களுக்குப் பாராட்டு விழா ஆகியவை பட்டுக்கோட்டையில் சுயமரியாதைச் சுடரொளி வெங்கடாசலம் நினைவு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் தலைமை தாங்கினார். விழாக்குழுத் தலைவர் அ.அண்ணாதுரை அனைவரையும் வரவேற்றுப் பேசினார். முன்னதாக சிற்பி ராசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் தலைமைக் கழகப் பேச்சாளர்கள் இரா.பெரியார்செல்வன், அதிரடி அன்பழகன் ஆகியோர் இயக்கக் கொள்கைகள் குறித்துப்
பேசினர். விழாமேடையில் பெரியார் பெருந்தொண் டர்களுக்கு நாம் சால்வை அணிவித்துப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினோம். அடுத்து
நாம் சிறப்புரையாற்றுகையில், சுயமரியாதை இயக்கம் தோன்றியதன் அவசியம் குறித்தும் அதன் தத்துவம் குறித்தும் அந்தக் காலகட்டங்
களில் அதை வளர்க்க தோழர்கள் பட்ட சிரமங்கள் குறித்தும் எடுத்துக்கூறி விளக்கிப் பேசினோம். இறுதியில் நகரத் தலைவர் சா.சின்னக்கண்ணு நன்றி கூறினார்.
திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் 2ஆவது மழலையர் பட்டமளிப்பு விழா 28.2.2006ஆம் தேதி காலை 9 மணியளவில் நடைபெற்றது. பள்ளி முதலவர் இரா.இரமணிதேவி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விழாவிற்கு நாம் தலைமை தாங்கி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி சிறப்புரையாற்றி மழலையர்களுக்குப் பட்டங்களை வழங்கினோம். முடிவில் ஆசிரியர் ஏ.ஜே.பிரபாகரன் நன்றி கூறினார்.
மாலை 6 மணியளவில் பள்ளியின் 27ஆம் ஆண்டு விழா, பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் உள்ள கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அரங்கில் நடைபெற்றது. பெரியார் ஆண்கள் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ப.சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பள்ளி முதல்வர் இரா.இரமணிதேவி ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் திருச்சி மாவட்டக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் என்.அறிவுச்செல்வன் அய்.பி.எஸ்., கலைமாமுனைவர் எஸ்.எம். ஜார்ஜ்
அடிகளார், தொழிலதிபர் வீகேயென் கண்ணப்பன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்
களுக்கும் கல்வியில் சிறந்த மாணவர்களுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கிப் பாராட்டி உரையாற்றினோம். நிறைவாக ஆசிரியை பிரான்சிடா ஜெரால்டு நன்றி கூறினார்.