வெறும் ஆசையல்ல…- முனைவர் வா.நேரு

2024 கட்டுரைகள் டிசம்பர் 16-30 2024

தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாள் டிசம்பர் 24. தந்தை பெரியார் என்னும் சொல் வெறும் பெயரைக் குறிப்பது அல்ல; அது ஒரு தத்துவம்! ‘‘தந்தை பெரியார் அவர்கள் உடலால் மறைந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அவரது கொள்கைப் பயணம் தொடர்கிறது’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள்- சென்ற ஆண்டு தந்தை பெரியார் நினைவு நாள் பேட்டியில்.

இன்றைக்கு உலகமே பணக்காரர்களின் கையில் – கார்ப்பரேட்டுகளின் கையில் சிக்கி இருக்கிறது. லாபம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் அவர்கள் சமத்துவத்திற்கு எதிராகவும் பெண்ணுரிமைகளுக்கு எதிராகவும் அடிமைத்தனத்திற்கு, வர்ணாசிரமத்திற்கு ஆதரவாகவும் செயல்படுவதைப் பார்க்கிறோம்.

இந்தியாவைப் பொறுத்தளவில் கோவில் களுக்கும் மதங்களுக்கும் கொட்டிக் கொடுப்பவர் களாகப் பணக்காரர்கள் இருக்கிறார்கள். தங்கள் மூளையில் ஏற்றிக் கொண்ட பக்திச் சாயத்திற்கு ஏற்ப பெரும்பணத்தைப் பக்திக்காகச் செலவழிக்கிறார்கள். அதே நேரத்தில் ஏழைகள், தொழிலாளர்கள் படும் துன்பத்திற்கும், ஏழ்மை நிலைக்கும் காரணம் ‘அவர்களின் விதி, போன ஜென்மத்துப் பலன்’ என்று கடந்து போய்விடுகிறார்கள். எனவேதான் தந்தை பெரியார் ‘பணக்காரன் ஒழிய வேண்டும்’ என்று சொல்கின்றார்.

தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளுக்கு முந்தைய நாள் டிசம்பர் 23. இந்தியாவில் டிசம்பர் 23 விவசாயிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. வெறுமனே விழா கொண்டாடுகிறார்களே தவிர, இந்திய விவசாயிகளின் வேதனையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை இந்திய ஒன்றிய அரசு எடுப்பதில்லை.

தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கான உரிய விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர்ச்சியாகப் பல்வேறு போராட்டங்களை இந்திய விவசாயிகள் நடத்திக் கொண்டே இருக்கின்றனர். ஆனால், அவர்களுடைய கோரிக்கைகள், அவர்களுடைய போராட்டங்கள் அலட்சியப்படுத்தப்படுகின்றன; அடக்கு முறையால் ஒடுக்கப்படுகின்றன. தந்தை பெரியார் அவர்கள் இந்த நாட்டில் இருக்கும் பார்ப்பனர்கள் விவசாயத்தின் பக்கம் ஏன் வருவதில்லை என்ற கேள்வியை எழுப்பினார். உழவுத் தொழில் பாவத்தொழில் என்று மநுதர்மம் குறிப்பிடுகிறது என்பதைக் குறிப்பிட்டார். பாவத்தொழில் என்று விவசாயத்தை ஆக்கிவிட்டு அதில் பாடுபடும் தோழர்களைப் பஞ்சமர்கள், சூத்திரர்கள் என்றும் வகைப்படுத்தி அவர்களை இழிவுபடுத்தி அவர்களுக்குப் படிப்பறிவு கொடுக்காமல் அவர்களை வெறும் உழைப்பாளிகளாக மட்டுமே வைத்துப் பார்த்தது – பார்க்கிறது மநுதர்மம்.

Chat GPTயின் உருவாக்கத்திலும் பயன்பாட்டிலும் மிகப்பெரும் பிரச்சனையாகக் கருதப்படுவது தண்ணீர். அதுவே பெரும் தாகம் கொண்டதாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஜி.பி.டி.3 வடிவத்துக்கான பயிற்சிக்கு மட்டும் ஏழு லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது… (மு.சங்கையா, திராவிடப்பொழில் ஆராய்ச்சி இதழ், ஜூலை- செப்-2024) என்று கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். செயற்கை நுண்ணறிவுக்குத் தேவைப்படும் தண்ணீர் பற்றி பல அபாய அறிவிப்புக் கட்டுரைகள் வந்து கொண்டிருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு ஏழைகளின் வேலைவாய்ப்பைப் பறிப்பது மட்டுமல்லாது, அவர்களுக்குச் கொஞ்ச நஞ்சம் கிடைத்துக்கொண்டிருக்கும் தண்ணீரையும் பறித்துவிடும் போல் தோன்றுகிறது. இந்த நிலையில் தந்தை பெரியார் அவர்கள் சொன்ன ‘பணக்காரன் ஒழிய வேண்டும்’ என்னும் கொள்கை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கு மட்டுமல்ல; உலகம் முழுமைக்கும் தேவைப்படுகிறது.

இன்றைக்கும் இந்த உலகம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த உலகமாகவே இருக்கிறது. பல்வேறு நாடுகளில் பெண் அடிமைத்தனம் கோலோச்சுகிறது. மதத்தின் அடிப்படையில் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படுகிறது. அவர்களுக்கு உரிய உரிமை மறுக்கப்படுகிறது.ஆனால், ஒவ்வொரு நாட்டையும், அந்த நாட்டின் பணக்காரர்கள் அல்லது உலகின் சில பணக்காரர்கள் தங்கள் பணத்தின் மூலம் நிர்வகிக்கிறார்கள். மேம்போக்காகப் பார்த்தால், ஒரு நாடு ஜனநாயக நாடு என்பது போலத் தெரியலாம். ஆனால், அந்த நாட்டினை ஆள்பவர்கள் பெரும் பணக்காரர்களே.

எளிய மக்கள், உழைக்கும் மக்கள் நிறத்தின் அடிப்படையிலும் ஜாதி அடிப்படையிலும் மேலே வருவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு அடித்தளத்தில் வெறும் உடல் உழைப்புக் கூலிகளாக மட்டும் இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். ஒரு வேளைச் சோற்றுக்காக உழைத்து உழைத்து ஓடாய்ப் போய் நிற்கும் கோடிக்கணக்கான மக்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். செயற்கை நுண்ணறிவு என்பது பல மனிதர்களின் வேலைவாய்ப்பைப் பறித்து விடும் என்று சொல்கிறார்கள். அதற்கு மாற்றாக வேறு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலை இழப்பவர்கள் சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்களாகவும், வேலை பெறுபவர்கள் சமூகத்தின் உயர்தட்டில் இருப்பவர்களாகவும் இருக்கப் போகிறார்கள். ஏற்றத்தாழ்வுகள் இன்னும் பெருகக்கூடும். உலக நாடுகளுக்கு இடையே பகைமையும் போட்டியும் சச்சரவும் சண்டையும் மேலும் வளரக் கூடும். எனவேதான் இந்த நிலையில் தந்தை பெரியார் தேவைப்படுகிறார்.

தந்தை பெரியார் ஒரு தத்துவம்.அந்தத் தத்துவம் மனித குல விடுதலைக்கான வழிகளைச் சொல்கிறது. தொழிலாளி – முதலாளி பேதமற்று, இருவரும் பங்காளிகளாக இணைந்து ஒரு புதிய உலகத்தைப் படைக்கச் சொல்கிறது. பெண்களும் ஆண்களும் ஒன்று என்பது வெறும் பேச்சாக இல்லாமல், நடைமுறை ஆவதற்கான வழிமுறைகளை அந்தத் தத்துவம் சொல்கிறது. ஜாதிகளாய்ப் பிரிந்து, உயர்வு – தாழ்வு பேசி, உருப்படாமல் போகக்கூடிய நிலையை மாற்றி அனைத்து மனிதர்களும் சமம் என்னும் நிலையை எட்டுவதற்கான வழிகளைச் சொல்கிறது. அனைவர்க்கும் அனைத்தும் என்னும் நிலை அமைந்துவிட்டால் இனி வரும் உலகம் இன்பமாக இருக்கும் என்னும் தொலைநோக்குப் பார்வையைச் சொல்கிறது.

‘உலகம் பெரியார் மயம்’ ஆகவேண்டும் என்பது வெறும் ஆசையல்ல. இந்த உலகமே அமைதியாக இருக்கவேண்டும், அன்பாக இருக்கவேண்டும், பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்கவேண்டும், சோறில்லாமல் உலகில் மனிதர்கள் சாகக்கூடாது, அனைவரும் ஒருதாய் மக்களாக வாழவேண்டும் என்பனவற்றுக்கான விருப்பமே ‘உலகம் பெரியார் மயம்’ என்னும் விருப்பம்.தந்தை பெரியாரை எதிரியாகப் பார்த்தவர்களில் எத்தனையோ பேர், அவரது உரையைக் கேட்டு முழுமையாக மாறி, தங்கள் வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியாரின் தத்துவத்தைப் பரப்பியிருக்கிறார்கள். ‘பெரியார் உலக மயம், உலகம் பெரியார் மயம்’ என்னும் உன்னத நோக்கத்தை நோக்கி உலகம் நகர, நாமெல்லாம் உறுதி எடுத்துக்கொள்ளும் நாளாகத் தந்தை பெரியாரின் நினைவு நாள் அமையட்டும்.