நான் நடிகர் திலகத்திடம் ஏழு ஆண்டுகள் அவருக்கு கார் ஓட்டுநராக இருந்தேன். நான் அறிந்தவரை நடிகர் திலகம் தினமும் காலையில் கடவுள் படங்களையும், அன்னை ராஜாமணி அம்மாளின் திருவுருவப் படத்தையும் வணங்கிவிட்டு அன்றாட அலுவல்களைத் தொடங்குவாரே தவிர, ஜோசியம், ஜாதகம், பரிகாரத்தில் எல்லாம் அவருக்குப் பெரிய ஈடுபாடு இருந்ததே கிடையாது.
கண்ணன் போலவே நிறையப் பேர், ‘அந்த கோயிலுக்குச் சென்று பூஜை செய்யுங்கள், பரிகாரம் செய்யுங்கள், யாகம் செய்யுங்கள்… உடல் ஆரோக்கியமாக இருக்கும்’ என்று சொல்லும்போது எல்லாம் நகைச் சுவையாகவே பதில் அளிப்பார்.
‘எல்லோரும் உடல்நலத்துக்காகக் கோயில்களி லேயே பரிகாரம் தேடிக் கொண்டால், அப்புறம் டாக்டர் எதற்கு? கோடி கோடியாக செலவு செய்து ஆஸ்பத்திரி கட்டுவதெல்லாம் எதற்கு?’ என்று கேட்டுவிட்டு, ‘மனிதனுக்கு நோயும், உபாதைகளும் அந்தந்த வயதில், வர்ற நேரத்தில் வந்துதான் தீரும். அதை சமாளிச்சு வாழ நாமதான் பழகிக் கணும்’ என்பார். அதே நேரத்தில், உடல் நலத்துக்காக மற்றவர்களுக்கு அறிவுரை கூறும்போது, ‘உடல்நலம், மன நலம் ரெண்டும் நல்லா இருக்கணும்னா… அண்ணன் மாதிரி (எம்.ஜி.ஆர்.) உடற்பயிற்சியும், எம்.என். (நம்பியார்) மாதிரி உணவுப் பழக்கமும் இருக்கணும்’ என்பார். ஆனால் கண்ணன், அந்தப் புத்தகத்தில் நடிகர் திலகம் ஜோசியம், பரிகாரம், இதற்கெல்லாம் விருப்பப்பட்டது போலவும், அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் அதற்கு மாறாக நடந்துகொண்டது போலவும் எழுதி இருக்கிறார்.
நடிகர் திலகம் ஏதாவது விருப்பப்பட்டார் என்றால், அவரது தம்பி சண்முகமும் கமலா அம்மாளும் மற்றும் குடும்பத்தாரும் அதை நிறைவேற்றிவிட்டுத் தான் மறு வேலை பார்ப்பார்கள். கண்ணன் கூறியதுபோல் திருச்செந்தூர் சென்று பரிகாரம் செய்யவில்லை என்றால், நடிகர் திலகமே அதை விரும்பவில்லை என்றுதான் பொருள்.
அந்த சம்பவம் நடந்த நேரத்தில் ஒரு நாள் லயோலா கல்லூரி வழியாக காரில் சென்றுகொண்டு இருந்தோம். அப்போது நடிகர் திலகத்தின் உதவியாளர் இந்தப் பரிகாரப் பேச்சை ஆரம்பித்தார். பதிலுக்கு நடிகர் திலகம் அங்கே இருந்த குடிசைப் பகுதியைப் பார்த்துக்கொண்டே, ‘இந்த ஏழை மக்கள் தங்கள் உடம்புக்கு ஏதாவது வந்தால் எங்கேடா போவார்கள்?’ என்றார்.
அதற்கு நான், ”அரசு ஆஸ்பத்திரிக்குப் போவார்கள்!” என்றேன். அதற்கு அவர், ‘நாம் மட்டும் ஏண்டா ஜோசியம், பரிகாரம்னு தங்கத்தையும், வைரத்தையும் கடவுளுக்கு லஞ்சமாக் கொடுத்து குறுக்கு வழியில் போகணும்?’ என்று சிரித்துக்கொண்டே கூறினார். இதில் இருந்தே நடிகர் திலகத்துக்கு ஜோசியம், பரிகாரம் போன்றவற்றில் எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை அறியலாம். வீட்டில் கணபதி ஹோமம் பண்ணும்போது, ‘எனக்கு இதில் எல்லாம் ஆர்வம் இல்லை. நீ சந்தோஷத்தை உணர்ந்தால், செய்துகொள்’ என்பார். அந்த அளவுக்கு அன்பும் பாசமும் ஒற்றுமையும் அந்தக் குடும்பத்தில் கரை புரண்டோடியது!
– சொன்னவர்:
சுந்தர மூர்த்தி
(நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கார் டிரைவர் _ 1982_-89)
கேட்டவர்: சந்திரன் வீராசாமி