பெரியார், மணியம்மையாருக்குப் பின் திராவிடர் கழகத்தை மட்டுமல்லாது திராவிடக் கருத்தியலையே சரியான திசையில் செலுத்திக் கொண்டிருக்கும் கொள்கைக் குன்று ஆசிரியர் வீரமணி அவர்கள்.
இரண்டாம் தலைமுறையாக அரசியலுக்கு வருபவர்கள் மட்டுமே ஒரு கட்சியிலோ அல்லது கருத்தியலிலோ சிறுவயது முதலே ஈடுபாடு கொண்டவர்களாக இருக்க முடியும். ஆனால், 10 வயதுச் சிறுவனாக இருக்கும் போதே, எந்த பெரிய அரசியல் பின்புலமோ, தாய் தந்தை அரசியல் இயக்கங்களில் பொறுப்புகளிலோ இல்லாத நிலையிலும் பெரியாரின்பால் ஈர்க்கப்பட்டு தன் தொண்டறப் பயணத்தைத் துவங்கியவர் அய்யா வீரமணி.
பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கிற வேறுபாடுகள் நீதிக்கட்சியால் நிறுவப்பட்டிருந்தாலும், பெரியாரின் தீவிரப் பிரச்சாரத்தால், அவர் முன்னெடுத்த போராட்டங்
களால் அது, இன்று எல்லோர் மனதிலும் ஆழப் பதிந்திருக்கும் கருத்தாகவும், ஒரு வாழ்வியல் நடைமுறையாகவும் இருக்கின்றது. ஆனால், திராவிடச் சித்தாந்தம் உருப்பெற்ற காலத்தில் சிறுவனாக இருக்கும் போதே தனது ஈடுபாட்டைக் காட்டியவர் ஆசிரியர்.
சாரங்கபாணி என்ற சிறுவனிடம் ஆழ்ந்த அறிவும், பேச்சாற்றலும் இருப்பதைக் கண்டு அச்சிறுவனுக்கு வீரமணி என்று பெயர் சூட்டி அவருக்குக் கொள்கை வழிகாட்டியாக இருந்தவர் அவரது ஆசிரியர் திராவிடமணி அவர்கள். ஆசிரியர் திராவிடமணியால் இனங்காணப்பட்டு இன்று எல்லோருக்கும் திராவிடக் கருத்தியலைப் புகட்டும் கொள்கை ஆசிரியராய் திகழ்பவர் அய்யா வீரமணி.
பல மேடைகளில் சிறுவயதில் திராவிடக் கருத்துகளை முழங்கிய போதும் 1944இல் முதன்முதலாகப் பெரியார் முன்னிலையில் பேசுகிறார் ஆசிரியர். அவரது பேச்சாற்றலைக் கண்டு எல்லோரும் வியந்தனர். அதற்குப் பின் பேசவந்த அறிஞர் அண்ணா ‘‘இச் சிறுவன் மட்டும் நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத்ராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந்தால் திருஞான சம்பந்தராக ஆக்கியிருப்பார்கள். ஆனால், இவர் அருந்தியிருப்பது ஞானப்பாலல்ல, பெரியாரின் பகுத்தறிவுப் பால் என்று அவரது பேச்சிலேயே தெரிகிறது’’ எனக் கூறியவுடன் ஒரு மாபெரும் கர ஒலி.
கலைஞர் கருணாநிதியின் உற்ற தோழராக, அவரது கொள்கை வழிவந்த திராவிட நாயகன் ஸ்டாலின் அவர்களது ஆட்சிக்கு உரிய வேளையில் ஆலோசனை வழங்கும் கொள்கை வழிகாட்டியாகத் திகழ்பவர் ஆசிரியர்.
கலைஞர் அவர்களுடனான ஆசிரியரின் தோழமை மிக நெடியது. பெரியாரின் கொள்கைகளைப் பட்டிதொட்டி எங்கும் பரப்ப ஆசிரியரும், கலைஞரும் சிறுவயதிலேயே இணைந்து இயங்கியிருக்கின்றனர். பல ஊர்களுக்கு மிதிவண்டியிலும், கட்டை வண்டியிலும் சென்று தங்களின் பேச்சாற்றலால் திராவிடக் கொள்கைகளை – சித்தாந்தத்தைப் பரப்பியிருக்கின்றனர்.
திருவாரூரில் கலைஞர் நடத்திய தென்மண்டல திராவிட மாணவர் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு கலைஞரின் அழைப்பின் பெயரில் சென்று பேசியவர் நம் ஆசிரியர்.அம்மாநாடு நடந்த ஆண்டு 1945, அப்போது ஆசிரியருக்கு வயது 12, கலைஞருக்கு வயது 21. அதே ஆண்டு சேலத்தில் நடைபெற்ற தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் 16 வது மாகாண மாநாட்டில் இருவரும் கலந்து கொண்டனர்.
எதிர்த் தரப்புக் காலிகளால் கொடும் தாக்குதலுக்கு உள்ளானார் கலைஞர். அவர் இறந்துவிட்டதாகக் கருதியவர்கள் அவரை சாக்கடையில் வீசிச் சென்றனர். இது குறித்து முழு விவரங்களையும் தனது ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் விளக்குகிறார் கலைஞர். பாவேந்தர் பாரதிதாசன் உட்பட பலரும் தாக்கப்பட்ட நிலையில் வீரமணி அவர்களைப் பத்திரமாக அங்கிருந்து மீட்டுவந்தவர் அவரது ஆசிரியர் திராவிடமணி.
1975இல் அவசர நிலையின்போது சிறை சென்று சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தவர்களில் ஆசிரியரும் ஒருவர். தடியடி, சித்திரவதைகள், என எல்லா சிறைக்கொடுமைகளையும் சந்தித்து 358 நாட்களுக்குப் பின் மிசா சட்டம் திரும்பப் பெறப்பட்டபின் மீண்டார்.
எத்தனைக் கொடிய காலகட்டத்திலும் கொள்கையுறுதியோடு போராடியவர் ஆசிரியர். 1979இல் இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பைக் கொண்டுவந்தது எம்ஜிஆர் அரசு. அதை எதிர்த்து தமிழ்நாடு எங்கும் பிரச்சாரம் செய்தார் ஆசிரியர். அதன்விளைவாக அதற்கடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வியடைந்தது. உடனே, அது குறித்து ஆலோசிப்பதற்காக எம்ஜிஆர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தனது கருத்துகளை வலுவாக முன்வைத்துப் பேசினார் ஆசிரியர். அதன் விளைவாக பிற்படுத்தப்பட்டவருக்கான இட ஒதுக்கீடு 31% என்று இருந்தது 50% ஆக உயர்த்தப்பட்டது.
இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மையாருக்கு உறுதுணையாக இருந்து 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க சட்ட ஆலோசனைகள் வழங்கி தமிழ்நாடு சட்டமன்றத்தில் 31c சட்டவரைவு மசோதாவை நிறைவேற்றச்செய்து, பிரதமர், குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் மக்களவையில் நிறைவேற்றி அரசமைப்புச் சட்ட 9ஆம் அட்டவணைப் பாதுகாப்பைப் பெறச் செய்தவர் நம் அய்யா.
எல்லாக் காலங்களிலும் கலைஞருக்கு நெருக்கமாகவும், உறுதுணையாகவும் இருந்த போதும், தி.மு.க.- பா.ஜ.க கூட்டணியமைத்த போது தனது கடும் எதிர்ப்பைக் காட்டத் தவறாதவர் ஆசிரியர்.
ஆசிரியரின் ஆதரவும், எதிர்ப்பும் கொள்கை வழிப்பட்டதே! கொள்கைக்கு முரணாக உற்ற தோழரே சென்றாலும் கண்டிக்கத் தவறாதவர்.அதனால்தான் அவர் தமிழினத்தின் தலைவராக எல்லோராலும் போற்றப்படுகிறார். அவருக்கு ‘‘தகைசால் தமிழர்’’ என்று பொருத்தமான விருதை வழங்கிப் போற்றுகிறது திராவிட மாடல் அரசு.