‘‘பணவெறி இன்னும் உன்னை விட்டுப் போகவே இல்லையா? ஏன் இப்படி காசு காசுன்னு அலைஞ்சுகிட்டு இருக்க. சம்பாதிக்கிற பணத்தை வைச்சிக்கிட்டு நிம்மதியா இருக்கக் கூடாதா?’’ என்று தனது நண்பர் நீதிராஜனிடம் கேட்டார் பாலுசாமி.
‘‘எனக்கு உன்னைப் போன்ற நிலைமை இல்லையே! உன்னோட மூன்று மகன்களும் வெளிநாட்டில் வேலை செய்றாங்க. அதனால உனக்குப் பணக்கஷ்டம் எதுவும் இல்லை. ஆனால், என் நிலைமை அப்படி இல்லையே! என் இரண்டு பிள்ளைகளும் இங்கேயே வேலை செய்துகொண்டு சுமாரான சம்பளத்தில்தானே பணியில் இருக்காங்க. அதனால் எனக்குப் பணம் தேவையாயிருக்கு. அதுமட்டுமல்லாமல் என்னால் சும்மா உட்கார்ந்திருக்கவும் முடியாது. உடம்புக்கு ஏதேனும் வேலை கொடுத்துக் கொண்டிருக்க வேண்டுமல்லவா?’’ என்று பதில் சொன்னார் நீதிராஜன்.
‘எங்க பிள்ளைங்க எங்க ரெண்டு பேரையும் வெளியில் போக விடுவதே இல்லை. வெளிநாட்டிலிருந்துகொண்டே இங்கே இருக்குற காய்கறி, மளிகைக் கடை எல்லாத்துக்கும் போன் பண்ணி வீட்டுக்கே பொருட்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கும்படி சொல்லிடுவாங்க. உடம்பு சரியில்லாமல் போயிட்டா டாக்டரே வீட்டுக்கு வருவார். கப்பல்போல எங்களுக்கு காரும் வாங்கிக் கொடுத்திருங்காங்க. எங்காவது கல்யாணம் காட்சின்னா டிரைவர் போட்டு காரில்தான் செல்வோம்,’’ என்று மிகவும் பெருமையுடன் சொன்னார் பாலுசாமி.
அவர் தன்னை ஏளனம் செய்வதை அவர் பேசும் தொனியை வைத்து உணர்ந்தார் நீதிராஜன்.
‘‘உன் வசதி வாய்ப்பு எனக்கு இல்லைதான். ஓட்டைச் சைக்கிளில்தான் ஊரை வலம் வந்துகிட்டு இருக்கேன். நானும் என் வீட்டுக்கார அம்மாவும் ஏதோ சம்பாதிக்கிறோம். அதை வைச்சிகிட்டு நிம்மதியாகவே இருக்கோம். அப்புறம் உன்னால் எனக்கு ஒரு உதவி தேவைப்படுகிறது’’, என்றார் நீதிராஜன்.
‘‘உதவியா? என்ன உதவி? ஏதேனும் பணம் தேவையா? பணம் வேணும்னா என் பிள்ளைங்க கிட்ட கேட்டுத்தான் செய்ய வேணும்,’’ என்றார் பாலுசாமி.
‘‘பயப்படாதே பாலுசாமி; பணமெல்லாம் வேண்டாம்; நான் யாரிடமும் கடன் கேட்க மாட்டேன் என்பது உனக்குத் தெரியும்தானே? வேறொரு உதவி வேணும். நீதான் சர்வேயர் வேலை பார்த்தவராயிற்றே! என் வீட்டுத் தோட்டத்தைக் கொஞ்சம் அளக்க வேண்டி உள்ளது. நீ அதை அளந்து கொடுத்தால் நல்லது,’’ என்று ஒரு வேண்டுகோளை முன் வைத்தார் நீதிராசன்.
சற்று நேரம் யோசித்தார் பாலுசாமி. பிறகு பேசினார்… ‘‘நீதிராஜன், நான் இந்தப் பணியைச் செய்து ரொம்ப நாளாச்சி. இருந்தாலும் நான் உனக்குச் செய்து தர்றேன். ஆனாலும் ஒரு வார்த்தை என் பிள்ளைகளிடமும் சொல்லி விடுகிறேன்.’’
செய்து தருவார் என்ற நம்பிக்கையுடன் அந்த இடத்தை விட்டு அகன்றார் நீதிராஜன்.
சில நாட்கள் சென்றபின் ஒருநாள் தோட்டத்தை அளக்க வருவதாக, பாலுசாமி செய்தி அனுப்பினார்.
அவர் தெரிவித்த நாளில் நீதிராஜன் வீட்டில் தயாராக இருந்தார். பாலுசாமி காரில் வந்து இறங்கினார். நீதிராஜன் அவரை வரவேற்று தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். வேலைக்கு ஒரு பணியாளரையும் வரச் சொல்லியிருந்தார். பாலுசாமி அளவு சங்கிலி, நாடாவை எடுத்து அளந்து தன் பணியினைச் செய்து முடித்தார்.
நீதிராஜன் அவருக்கு நன்றி தெரிவித்தார்.
‘‘நான் வர்றேன் நீதிராஜன். நீ சொன்னபடி உன் தோட்டத்தை அளந்து முடித்துவிட்டேன். ரொம்ப நாள் கழித்து சங்கிலியை எடுத்து அளந்து வேலை செய்தேன். அதனால் நான் சும்மா போகக் கூடாது; ஆயிரம் ரூபாய் கொடு,’’ என்று கேட்டார் பாலுசாமி.
நீதிராஜன் அய்யாவின் பிள்ளைகள்
நம் மாவட்டத்திலேயே
அரசுப் பணி செய்து எல்லா இளைஞர்களுக்கும் வழிகாட்டியாக இருக்காங்க. சமூக வலைத்தளங்கள் மூலமா படித்த இளைஞர்கள் வேலை பெற வழிகாட்டிட்டு வர்றாங்க.
இதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தார் நீதிராஜன். சுமார் இருபது ஆண்டுகளுக்குமுன் நடந்த நிகழ்ச்சியை ஒரு கணம் நினைத்துப் பார்த்தார்.
ஒருநாள் திடீரென நீதிராஜன் வீட்டிற்கு வந்தார் பாலுசாமி. உடனே அவசரமாக மூவாயிரம் ரூபாய் வேண்டும் என்றார். நீதிராஜனுக்கு ஒன்றுமே புரியவில்லை. கடன் வாங்கும் நிலையிலா அவர் இருக்கிறார் என யோசித்தார். இருப்பினும், அவர் அவசரமாகக் கேட்டதைக் கருத்தில் கொண்டு தன் பிள்ளைகளுக்கு படிப்புச் செலவிற்கு வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொடுத்தார்.அதற்குப் பிறகு இன்று வரை அந்தப் பணத்தை பாலுசாமி திருப்பித் தரவே இல்லை.
இடையில் பலமுறை நேரிலும், மற்றவர்களிடம் சொல்லியும் பணத்தைத் திருப்பிக் கேட்டுப் பார்த்தார். ஆனால் பாலுசாமி ஏதேதோ சாக்குப் போக்குச் சொல்லி பணத்தைத் திருப்பித் தரவே இல்லை. ஒரு கட்டத்தில் சலித்துப்போன நீதிராஜன் பணத்தைத் திருப்பிக் கேட்பதையே விட்டு
விட்டார். ஆனாலும் இருவரும் சந்தித்துக் கொண்டால் பேசிக்கொள்வார்கள். அப்போதெல்லாம் பாலுசாமி நம்மை எமாற்றி விட்டாரே என்று எண்ணி மனதுக்குள் வேதனைப்பட்டுக் கொள்வார் நீதிராஜன்.
அதுமட்டுமல்லாமல், பல ஆண்டுகளுக்கு முன் அவரது மூத்தப் பிள்ளைக்கு உடல்நலம் சரியில்லாதபோது செலவுக்குப் பணம் இல்லாமல் அலைந்தார் பாலுசாமி. அப்போது பணம் கொடுத்து உதவினார் நீதிராஜன். அதையெல்லாம் மறந்துவிட்டு இப்போது ஒரு சிறு வேலை செய்தமைக்கு பணம் கேட்கிறாரே என்று வருத்தப்பட்டார்.
அவர் யோசனை செய்வதைக் கண்ட பாலுசாமி, ‘‘என்ன நீதிராஜா, என்ன யோசனை பண்றே. பணம் கேட்கிறேனே என்று யோசனை செய்கிறாயா? ஒரு நாளின் முதல் வேலையாக இருந்தால் பணம் கண்டிப்பாக வாங்க வேண்டும் என்பது சம்பிரதாயம். சங்கிலியை எடுத்து அளந்தாலே குறைந்தது மூவாயிரம் ரூபாய் வாங்குவேன். உனக்காக ஆயிரம் ரூபாய்தானே கேட்டேன்’’, என்றார்.
‘‘அதுக்கென்ன, பணம் கொடுக்கிறேன்’’, என்று மெல்லிய குரலில் பதில் சொன்னார் நீதிராஜன்.
‘‘பணம் கையில் இல்லாவிட்டால் செல்போன் மூலமா பணத்தை அனுப்பிவிடு. பணம் கேட்கிறேனே என்று வருத்தப்படாதே! ஆண்டவன் புண்ணியத்தில் என்னிடம் ஏராளமான பணம் இருக்கு. இன்னொரு விஷயத்தையும் உனக்குச் சொல்ல விரும்புறேன்.’’ என்று சொன்ன பாலுசாமியை ‘என்ன?’ என்பது போல் ஏறிட்டு நோக்கினார் நீதிராஜன்.
‘‘நீ, உன்னோட வீட்டுக்காரம்மா, உன்னோட ரெண்டு பிள்ளைங்க எல்லோரும் சேர்ந்து எவ்வளவு சம்பாதிப்பீங்க?’’ என்று கேட்டார் பாலுசாமி. அவரது குரலில் தெரிந்த ஏளனத்தை உணர்ந்தார் நீதிராஜன். அதனால் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
‘‘உன் குடும்பத்தில் உள்ள எல்லோருமே சேர்ந்து சம்பாதிக்கிற மொத்த பணமும் என் ஒரு மகனோட சம்பளத்தில் கால் பங்குக்குக்கூட தேறாது’’, என்று கர்வத்துடன் சொன்னார் பாலுசாமி.
அதைக் கேட்ட நீதிராஜன் மிகவும் வருத்தப்பட்டார். பாலுசாமி மகன்கள் நிறைய சம்பாதிப்பது உண்மைதான். அதற்காக அவருக்கும் மகிழ்ச்சிதான். அவர் பொறாமைப்படவில்லை. ஆனால், அதற்காக தனது பிள்ளைகளை இழிவாகப் பேசுவது அவருக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுத்தது. அவரது வளர்ச்சிக்கு தானும் ஒரு காரணம் என்பதை அவர் மறந்துவிட்டுப் பேசுகிறாரே என எண்ணி வருந்தினார். இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேசினார்.
‘‘ரொம்பவும் மகிழ்ச்சி பாலுசாமி. எங்களுக்கு வருமானம் குறைவுதான். என் பிள்ளைகள் குறைவாகத்தான் சம்பளம் வாங்குறாங்க. உன் பிள்ளைங்க உனக்குச் செய்யும் வசதிகளைப் போல் என் பிள்ளைகள் வசதிகள் செய்து தருவதில்லை. நான் இன்னும் வேலை செய்துகொண்டுதான் இருக்கேன். ஆனால் நாங்
களும் என் பிள்ளைங்களும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கோம். இப்போ உனக்குப் பணம்தானே வேணும், கொடுத்துடுறேன்’’ என்று சொல்லி முடித்தார் நீதிராஜன்.
‘‘எல்லாம் ஆண்டவன் செயல். என் பிள்ளைகளுக்கு அள்ளிக் கொடுக் கிறான் அந்த ஆண்டவன். அந்த ஆண்டவனுக்கும் என் பிள்ளைகள் நிறையவே செஞ்சிக்கிட்டு வர்றாங்க. அதாவது கோயில்களுக்கு நிறைய பணம் தந்துக்கிட்டு இருக்காங்க. உன்னைப் போலவும், உன் பிள்ளைகளைப் போலவும் இல்லை’’, என்று கூறியபடியே காரில் ஏறிப் புறப்பட்டார் பாலுசாமி.
அவர் சென்றபின் பழைய நிகழ்வுகளையெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டார் நீதிராஜன்.
‘‘என் பிள்ளைகளைப் பற்றி குறைவாகப் பேசுகிறாரே’’ என எண்ணி வருந்தினார்.
அவருடைய மூன்று பிள்ளைகளும் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் செய்திகளை நீதிராஜனும் படித்துப் பார்ப்பார். பெரும்பாலும் ஜாதி, மதம், சாமி, கோயில் என்றுதான் இருக்கும். அதிலும் மதவெறி நிறையவே காணப்படும். இங்கு வேலை கிடைக்காமல் சம்பாதிக்க வழியின்றி ஏதோ ஒரு வாய்ப்பில் வெளிநாடு சென்றவர்கள் அவர்கள். வேறு மதத்தினர் வாழும் அந்த நாட்டில் சம்பளம் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு எதிராகப் பதிவுகள் இடுவதும், மதவெறி தலைக்கேறி தரக்குறைவாகத் திட்டுவதும் இழிவான செயல் என்று கருதினார் நீதிராஜன்.
வெளிநாட்டில் அவர்கள் பிள்ளைகள் நிறைய சம்பாதித்து இங்கு பல்வேறு இடங்களில் சொத்துகளை வாங்கிக் குவிப்பதும் அவருக்குத் தெரியும். ஆனால், யாருக்கும் விசுவாசமாக இல்லையே என வருந்தினார். தன்னிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதுபோல் மேலும் பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றி இருக்கிறார் பாலுசாமி. இதையெல்லாம் நினைத்து ஒரு நீண்ட பெரு
மூச்சுவிட்டார் நீதிராஜன்.
சில மாதங்கள் கடந்தபின் ஒருநாள் பாலுசாமியின் மூன்று பிள்ளைகளும் வெளிநாட்டிலிருந்து வந்தனர். அதே நேரத்தில் நீதிராஜனின் இரண்டு பிள்ளைகளும் ஊருக்கு வந்தனர்.
அப்போது ஊரில் பொது நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொள்வதாகவும் இருந்தது. ஊரில் இருந்த இளைஞர்கள் அந்த விழாவில் கலந்துகொள்ள நீதிராஜனின் இரு மகன்களையும் அழைத்தனர். அழைப்பிதழில் அவர்கள் பெயரையும் சேர்த்தனர்.
இதையறிந்த பாலுசாமி மிகவும் கொதிப்படைந்தார். தன் பிள்ளைகளின் பெயர்களை அழைப்பிதழில் போடாதது அவருக்கு மிகவும் அவமானமாகப் பட்டது. நிகழ்ச்சி நாளன்று, முன்னதாகவே மேடைக்குச் சென்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைத் திட்டித் தீர்த்தார்.
‘‘என்ன நினைச்சிக்கிட்டு இந்த விழாவை நடத்துறீங்க! ஊரில் பெரிய மனுஷன், பணக்காரன் நான் இருப்பது உங்கள் கண்களுக்குத் தெரியலையா? என் பிள்ளைங்க மூணு பேரும் வெளிநாட்டிலிருந்து வந்திருக்காங்க. அதுவும் உங்களுக்குத் தெரியாதா? அவங்க வெளிநாட்டில் எவ்வளவு சம்பளம் வாங்கிட்டு இருக்காங்க தெரியுமா? கோயில் கட்ட எவ்வளவோ பணம் கொடுத்திருக்காங்க. நினைச்சிப் பார்த்தீங்களா? எல்லாத்தையும் மறந்துட்டீங்களா? என் பிள்ளைங்க பேங்க் பேலன்ஸ், என்னோட பேங்க் பேலன்ஸ் எவ்வளவு இருக்குன்னு யாருக்காவது தெரியுமா? தெரிஞ்சிருந்தா எங்களை அவமானப்படுத்தி இருக்கமாட்டீங்க. நீங்க பத்து பேர் சேர்ந்து சம்பாதிக்கிற காசு என்னோட ஒரு மகன் சம்பளத்துக்கு ஈடாகாது’’, என்று கடுமையாகப் பேசினார் பாலுசாமி.
அவரது பேச்சு கூடியிருந்தவர்களை எரிச்சலடைய வைத்தது. ஆனாலும் யாரும்
அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள
வில்லை.
ஆதவன் என்ற ஒரு இளைஞன் அவருக்குப் பதில் சொன்னான்.
‘‘நீங்க சொல்றது உண்மைதான் அய்யா. உங்க பேங்க் பேலன்ஸ் எங்களுக்குத் தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. நீதிராஜன் அய்யாவின் பிள்ளைகள் நம் மாவட்டத்திலேயே அரசுப் பணி செய்து எல்லா இளைஞர்களுக்கும் வழிகாட்டியாக இருக்காங்க. சமூக வலைத்தளங்கள் மூலமா படித்த இளைஞர்கள் வேலை பெற வழிகாட்டிட்டு வர்றாங்க. அதற்காகப் பயிற்சியும் கொடுத்து வர்றாங்க. மதவெறியையும், ஜாதி வெறியையும் தூண்டிவிட்டு இளைஞர்கள சீரழிக்கல. ஆனால், உங்க பிள்ளைங்க வெளிநாட்டில் அதுவும் வேறு சமயத்தைப் பின்பற்றுபவர்கள் வாழும் நாட்டில் வேலை செய்து சம்பாதித்துக் கொண்டு அவர்கள் வாழ்வியல் முறைகளைத் திட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதும், ஜாதி, மத வெறிகளைத் தூண்டி இளைஞர்களை வன்முறைப் பாதைக்கு அழைத்துச் சென்று குற்றவாளிகளாக்கி வேலை வாய்ப்பை கேள்விக்குறியாக்குவதும்தான் உங்கள் பிள்ளைகள் செய்யும் காரியம். அவர்களை நாங்கள் கொண்டாட முடியாது. மனிதனை நினைத்து, மனிதப் பற்றோடு உழைப்பவர்களே உயர்ந்தவர்கள். அவர்களுக்கு பேங்க் பேலன்ஸ் தேவையில்லை. அவர்கள் பேலன்ஸ் எங்கள் மனதில் நிறையவே இருக்கு.’’
ஆதவன் இவ்வாறு சொன்னதும் பாலுசாமி ஏதும் பேசாமல் அந்த இடத்தை விட்டகன்றார். அப்போது அவரது சிந்தனை ஆதவனின் கூற்றையே சுற்றிச் சுற்றிச் சுழன்றது.