ஆதிக்கக் கூட்டத்தின் மோசடிச் செயல்பாடுகளை விவரிக்கும் நேரத்தில், அவர்கள் மீது எதிர்ப்புணர்வை மட்டுமின்றி, வெறுப்பு உணர்ச்சியையும் சிலர் ஏற்படுத்தியிருக்கக்கூடும். அத்தகைய வெறுப்புணர்ச்சி, காலப்போக்கில் இரு பிரிவினருக்கான மோதலாக, வன்முறையாகக் கூட முடிந்திருக்கிறது. வரலாற்றில் அத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும்கூட, தந்தை பெரியாரின் பார்ப்பனிய எதிர்ப்பில், ஆரிய இனத்தின் மீதான வெறுப்புணர்ச்சியை நம்மால் காண முடியவில்லை. மாறாக, ‘நான் தான் மேல்’ என்று நினைத்து, அதனையே பார்ப்பனரல்லாத மக்களின் மனங்களிலும் நிறுவி, நம்மையெல்லாம் அடிமைப்படுத்த, ஆரியக் கூட்டம் நிகழ்த்திய அடக்குமுறைகளைக்கூட மனிதநேயக் கண்ணோட்டத்தில் அணுகி, அவர்களையும் திருத்த வாய்ப்பிருக்கிறதா என்ற கோணத்தில் தந்தை பெரியார் சிந்தித்த விதம் நமக்கு வியப்பைத் தருகிறது.
தற்காலச் சூழலில், ஆரியப் பார்ப்பனக் கூட்டம் தமிழ்நாட்டில் அவர்களுக்கு ஆபத்து என்ற நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். அய்யோ… நாங்கள் ஒடுக்கப்படுகிறோம்; இந்த மண்ணில் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை; எங்களை இழிவு செய்கிறார்கள்; எங்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன; எல்லா இடங்களிலும் ஒடுக்கு முறைகளுக்கு ஆளாகிறோம் என்று குரல் எழுப்புகிறார்கள். அவர்களின் இந்த நீலிக் கண்ணீர் நமக்கு சிரிப்பூட்டுவதாக இருந்தாலும், அதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சியை நாம் ஆராய வேண்டும்.
பார்ப்பனரல்லாத மக்களின் கல்வி வளர்ச்சி, வாழ்வியல் மேம்பாடு அவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளதன் விளைவுதான் அத்தகைய வெற்றுக் கூச்சல். கிடைக்கின்ற வாய்ப்புகளில் எல்லாம், இப்படியான பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபட, ஒருபோதும் பார்ப்பனியம் தவறியதே இல்லை. இந்த முறை வீதிக்கு வந்து, பார்ப்பனக் கைக்கூலிகளின் பாதுகாப்புடன் நிரம்பவே பேசி இருக்கிறார்கள். அரசு வேலை வாய்ப்பில் நாங்கள் ஒரு இடத்தில் கூட இல்லை என்றும் கடைந்தெடுத்த பொய்யைப் பரப்பி இருக்கிறார்கள்.
ஏற்கெனவே ஏகபோகமாக ஒன்றிய அரசின் வேலை வாய்ப்புகளைப் பெற்றுவிட்டு, அதுவும் போதாதென்று, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவு ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு என்கிற பெயரில், இன்னும் பன்மடங்கு வாய்ப்பினை அதன்மூலம் பெற்றிருக்கிறீர்களே! என்று நாம் கேள்வி எழுப்பினால், ‘‘இல்லை! இல்லை! நாங்கள் கூறுவது தமிழ்நாடு மாநில அரசுப் பணியிடங்களை என்கிறார்கள். வாதத்திற்காக அவர்களின் கேள்வியை நாம் கணக்கில்கொண்டு பார்த்தால்கூட, தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீடு மொத்தம் 69 சதவிகிதம், மீதமுள்ள 31 சதவிகிதம் பொதுப் போட்டி என்று சொல்லப்படக்கூடிய open competition.
நாங்கள் எல்லாம் பிறவியிலேயே அறிவாளிகள்; புத்திசாலிகள்; உடல் முழுவதும் மூளையுடன் சுற்றக்கூடிய ‘பிராமணாள்’ என்று பெருமை பேசக்கூடிய கூட்டம் மேற்சொன்ன பொதுப் போட்டியில் தாராளமாக அரசுப் பணியிடங்களுக்கு வரலாம். அப்படி வருவதற்கு எந்தத் தடையுமின்றி வாய்ப்பிருக்கின்றபோது, ஒடுக்கப்படுகிறோம் என்ற கூச்சல் எவ்வளவு வன்மமும், பொய்யும் நிறைந்தது என்பதை மக்கள் அறிவார்கள். சரி, வேறு எங்கு ஒடுக்கப்படுகிறீர்கள்? என்று அக்கறையுடன் நாம் விசாரித்தால், நாங்கள் திரைப்படங்களில்கூட ஒடுக்கப்படுகிறோம் என்று பரிதாப முகத்துடன் பதில் அளிக்கின்றனர். ஏதோ இரண்டு படங்களை மேற்கோள்காட்டி இதில் நடிகர்கள் பார்ப்பனர் சமூகத்தைச் சார்ந்தவர்கள்; அதை நீங்கள் இருட்டடிப்பு செய்கிறீர்கள் என்று கதை அளக்கும் அறிவாளிகளிடம், நாம் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டிய முக்கிய செய்தி ஒன்று இருக்கிறது.
அது என்னவெனில், படங்களில் ஒடுக்கப்படுகிறோம் என்ற வாதங்களை முன் வைப்பதற்கு முன்பு 2024 ஆம் ஆண்டிலும், பூணூல் அணிந்து கொண்டு, எதிரில் வரும் நபரை பார்த்து ‘நீ எல்லாம் சூத்திரன்’ என்று சொல்லாமல் சொல்லுவதை விட அது பெரிய ஒடுக்கு முறையா? பார்ப்பனரல்லாத மக்கள் தொட்டால் தீட்டாகிவிடும் என்பதை நவீன வார்த்தைகளில், ‘‘எல்லோரும் லட்டு சாப்பிடத் தொடங்கியவுடன் நாங்கள் சாப்பிடுவதை நிறுத்தி விட்டோம்’’ என்று கூறுவதை விட இது பெரிய அடக்குமுறையா? ஜாதி மறுப்புத் திருமணங்களின் மூலம் பிறக்கக்கூடிய குழந்தைகள் பிளேடு பக்கிரிகளாகப் பிறக்கும் என்று, மற்ற சமூகத்தைச் சார்ந்த அனைவரையும் கொச்சைப்படுத்துவதைவிட இது பெரிய அடக்குமுறையா?
நாங்கள் எல்லோரும் பிராமணாள் என்று கூறுவதில் பெருமையடைகிறோம்; ஜாதி ஒழியாது, இருந்தே தீரும் என்று இறுமாப்புடன் மநுதர்மத்தைத் தூக்கிப் பிடித்து, இச்சமூகத்தின் பெரும்பான்மை சமூகத்தை விபசாரி மக்களாகத் தான் வைத்திருப்போம் என்று மறைமுகமாகப் பறைசாற்றுவதைவிட இது அடக்கு முறையா?
‘‘நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள், – பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன்.’’
இந்தக் கேள்விகளை நாம் கேட்கும் நேரத்தில் அதை மடைமாற்ற, ‘‘பெரியார் எங்களை எவ்வளவு கேவலப்படுத்தினார் தெரியுமா? எங்கள் மீது வெறுப்பு உணர்ச்சியுடன் நடந்து கொண்டார் என்றும், இன்றும் திராவிடர் கழகம் வெறுப்பு உணர்ச்சியைத் தூண்டுகிறது’’ என்ற கட்டுக்கதையை அவிழ்த்து விடுகின்றனர். இதில் ஏதேனும் உண்மைத் தன்மை இருக்கிறதா? ஒவ்வொரு முறையும் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்க உணர்வை, வர்ணாசிரமத் திமிரை ஒழித்துவிட்டு மனிதத் தன்மையுடன் வாழ வாய்ப்பைத் தந்தார் பெரியார்!
“பார்ப்பனத் தோழர்களே! நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் – பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம்ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரிடத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன்.
இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு- அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அதுபோலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல்நிலையில் இளைத்துப்போய், வலுக் குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்றக் குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அதுபோலத்தான் நான் மற்ற வலுக் குறைவான – பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவுதான் நான் பார்ப்பனரிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக்கொள்ளும் உணர்ச்சி ஆகும்.
உண்மையிலேயே பார்ப்பனர்கள் தங்களை இந்நாட்டு மக்கள் என்றும், இந்நாட்டில் உள்ள மக்கள் யாவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும், தாயின் செல்வத்துக்கும், வளப்பத்துக்கும் தாங்கள் எல்லோரும் சரிபங்கு விகிதத்துக்கு உரிமை உடையவர்கள் என்றும் கருதுவார்களேயானால், இந்நாட்டிலே சமுதாயப் போராட்டமும், சமுதாய வெறுப்பும் ஏற்பட வாய்ப்பே இருக்காது”.(தந்தை பெரியார், ‘விடுதலை’ – அறிக்கை – 01.01.1962)
பெரியாரின் மேற்காணும் சொற்களில் நம்மால் ஏதேனும் ஒரு வெறுப்பு உணர்ச்சியைக் காண முடிகிறதா? அடிமைப்படுத்தி, ஆதிக்கம் செலுத்திய கூட்டத்தை ‘தோழர்கள்’ என்று அழைக்கும் பெரியாரின் பண்பு சாதாரணமானதா?
இதைவிட பெரியாரின் மனிதத் தன்மையுடன் கூடிய அணுகுமுறைக்கு சான்று வேண்டுமா? சிந்தியுங்கள்!