ஆங்கில ஆட்சியின் அடையாள நீக்கமா ? பார்ப்பனிய மீட்டுருவாக்கமா ? – குமரன் தாஸ்

2024 கட்டுரைகள் நவம்பர் 1-15

கடந்த அக்டோபர் 16ஆம் தேதி உச்சநீதி மன்ற நீதிபதிகளது நூலகத்தில் இருந்த நீதி தேவதையின் சிலையை அகற்றிவிட்டு புதிய நீதி தேவதையின் சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் நிறுவியுள்ளார். அதற்குச் சொல்லப்பட்ட காரணமான காலனியப் பண்பாட்டு நீக்கம் என்பது நமது கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது.

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் பலரும் பல்வேறு இயக்கங்களும் அன்று 1947க்கு முன் போராடினர். ஆனால் இந்த இயக்கங்களின் போராட்டங்களுக்கான காரணங்களும், சித்தாந்தங்களும் வேறு வேறாக இருந்தன. உதாரணமாக, காங்கிரஸ் கட்சியினுடைய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியிலிருந்த காரணிகளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பின்னணியிலிருந்த காரணிகளும் வேறு வேறாக இருந்தன.

அதே சமயம் இந்தக் கட்சிகளுக்குள்ளிருந்த தலைவருக்குள்ளேயே பிரிட்டிஷ் அரசை எதிர்ப்பதற்கான காரணிகள் மாறுபட்டிருந்தன. குறிப்பாக அகிம்சாவாதிகள், தீவிரவாதிகள் என்கிற வெளிப்படையான வேறுபாடுகளையும் தாண்டிய சித்தாந்த வேறுபாடுகள் இருந்தன. தேச விடுதலை, சுதந்திரம் என்ற நவீன அரசியல் கருத்தாக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு மட்டுமல்ல; இனம், மொழி, நிறம், ஜாதி, மதம் உணர்வுகளில் இருந்தும் பலர் பிரிட்டனை எதிர்த்தனர்.

இதன் காரணமாகவே ஆங்கிலேயர், பரங்கியர், மிலேச்சர், வெள்ளையர், மிஷனரியினர் என்ற பல்வேறு பெயர்களில் பிரிட்டிஷாரை இவர்கள் அடையாளப்படுத்தினர். அதே போல கும்பினியார் எனவும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எனவும் அரசியல் பொருளாதார அடிப்படையில் அடையாளப் படுத்தும் இயக்கங்களும் இங்கிருந்தன. அதாவது பிரிட்டிஷாரை எதிர்ப்பவர்களில் திலகர், பட்டேல், பாரதி, சுப்ரமணிய சிவா, அரவிந்தர், வாஞ்சிநாதன் போன்ற தீவிரவாத வலதுசாரிப் போக்கினரும் காந்தி, கோகலே, நேரு, ஆசாத், காமராசர், வ.உ.சி. போன்ற இடதுசாரி மற்றும் மிதவாத வலதுசாரிப் போக்கினரும் இருந்தனர் என்பது தெளிவாகிறது. இவ்விரு போக்குகளும் அல்லாத அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின், பார்ப்பனரல்லாத மக்களின் விடுதலை நோக்கிலிருந்து பிரிட்டிஷாரை அணுகும் முறை என்பது தனித் தன்மையானது ஆகும்.

இந்த மூன்று விதப் போக்குகளும் 1947இல் இந்தியா விடுதலை அடைந்ததோடு முற்றுப்பெற்று விடவில்லை. இன்றும் 2024லும் தொடர்கிறது. அதாவது பாசிச பா.ஜ.க. பேசுகின்ற சுதேசியத் திலிருந்து இடதுசாரிகள் பேசும் சுதேசியம் வேறாக உள்ளது. எடுத்துக்காட்டாக இடதுசாரிகள் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தினையும் சுரண்டலையும் எதிர்க்கின்றனர். ஆனால், வலதுசாரிகளோ ஒரு புறம் கார்ப்பரேட் முதலாளியத்திற்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுக்கொண்டே காலனியப் பண்பாட்டை எதிர்க்கிறோம், காலனியக் கால சட்டங்களைத் திருத்துகிறோம், அடையாளங்களை மாற்றுகிறோம் என்று கூறி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

கடந்த 2024 ஜூலையில் மூன்று குற்றவியல் சடங்களை பா.ஜ.க. அரசு திருத்தியதை நாம் அறிவோம். இப்போது காலனியக் கால பண்பாட்டு அடையாளத்தை நீக்குகிறோம் என்கிற பெயரில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நூலகத்தில் இருந்த பழைய நீதி தேவதையின் சிலையை அகற்றி விட்டு புதிய தோற்றத்தில் புதிய நீதி தேவதை சிலையை நிறுவியுள்ளனர். பழைய நீதி தேவதையின் கண்களை மறைத்திருந்த கருப்புத் துணியை மட்டும் இவர்கள் அகற்றவில்லை. பழைய நீதி தேவதையின் தோற்றத்தையும் முற்றிலுமாக மாற்றியுள்ளனர். தலையில் கிரீடம், உடம்பில் பல்வேறு விதமான அணிகலன்களுடன் புடவை கட்டி நெற்றித் திலகத்துடனும் காட்சியளிக்கும் விதமாக மாற்றியுள்ளனர். (தினமணி- 17.10.2024)

மேலோட்டமாகப் பார்க்கும் போது கண்களைக் கட்டியிருந்த கருப்புத்துணியை நீக்கி கையில் ஏந்திய வாளுக்குப் பதிலாகப் புத்தகமும் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும் உள்ளார்ந்து நோக்கும் போது ஏற்கனவே இருந்த நீதி தேவதையின் மதச்சார்பற்ற அடையாளத்தை மாற்றி ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்திற்குள் நீதி தேவதையைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர் என்பதே முதன்மையான செய்தியாகும்.

இவ்வாறுதான் 2024 ஜூலையில் மூன்று சட்டங்களைத் திருத்திய போதும் அதன் உள்ளடக்கத்தினை மட்டுமல்ல; இது நாள் வரை ஆங்கிலத்தில் இருந்து வந்த அதன் பெயர்களை

1) The Indian Penal Code – 1860 என்பதை Bharatiya Nyaya Sanhita – 2023 என்றும்,

2) The Code of Criminal procedure – 1973 என்பதை Bharatiya Nagarik Suraksha Sanhita – 2023 என்றும்,

3) The Indian Evidence Act – 1872 என்பதை Bharatiya Sakshya Adhiniyam – 2023 என்றும்

சமஸ்கிருத்தில் மாற்றியதன் மூலம் – அதாவது காலனியத் தன்மையை நீக்கி இந்தியத் தன்மையை அளிக்கிறோம் என்கிற பெயரில் – மாநிலங்களின் மொழி உரிமையையும் (மாநில சுயாட்சியையும்) காலி செய்துள்ளனர்.

உண்மையில் காலனியத் தன்மையை நீக்குதல் என்கிற பெயரில் இங்கு நடைபெற்று வருவது மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி போன்ற நவீன ஜனநாயக அரசியல் சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் குழி தோண்டிப் புதைத்து விட்டு பழைய வேத கால மனுதர்மச் சிந்தனைகளையும், கோட்பாடுகளையும் சமஸ்கிருத மொழியையும் கொண்டு வந்து திணிக்கும் வேலைகளையே செய்கின்றனர்.

அதாவது, வரலாற்றுச் சக்கரத்தை முன்னோக்கிச் சுழற்றி இப்போதுள்ள ஜனநாயக சமூகத்திலிருந்து சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் என்கிற இலக்கை நோக்கிக் கொண்டு செலுத்துவதற்குப் பதிலாக மீண்டும் பின்னோக்கிச் சுழற்றி பிரிட்டிஷார் இங்கு வருவதற்கு முன்பிருந்த நால்வர்ண ஆண்டான்- அடிமைச் சமூக நிலைக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்குத் திட்டமிட்டு வேலை செய்கின்றனர்.

அவர்களது இந்த முயற்சிக்குத் தடையாக பிரிட்டிஷாரால் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டு பார்ப்பனரல்லாத மக்களின் முன்னேற்றத்திற்கு இன்று வரை உதவி வரும் அனைத்து அம்சங்களையும் சிதைத்து அழிக்கத் துடிக்கின்றனர். ஆனால், விழிப்புணர்வு பெற்ற நாகரிக மனிதர்கள்
இதனை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.