இயக்க வரலாறான தன் வரலாறு (350)
மலேசியக் காங்கிரசின் தேசியத் தலைவரும் மலேசியப் பொதுப்பணித்துறை அமைச்சரும் மலேசியத் தமிழர்களின் தலைவருமான டத்தோ ஸ்ரீ சாமிவேலு அவர்களை சென்னையில் நாம் 2.1.2006 அன்று சந்தித்து, தஞ்சை வல்லம், பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தோம். பெரியார் பற்றிய (ஆங்கிலம், தமிழ்) நூல்களை அவருக்குப் பரிசாக அளித்தோம்.
சுயமரியாதை இயக்க 80ஆம் ஆண்டு நிறைவுப் பெருவிழா (1925-2005), பகுத்தறிவாளர் கழக மாநில மாநாடு ஆகிய இருபெரும் மாநாடுகள் சென்னை பெரியார் திடலில் 4.1.2006 அன்று காலை 9 மணிக்கே வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் தொடங்கியது.
அறிவியல் கண்காட்சியைத் திறந்து வைக்கிறார் விஞ்ஞானி மீனா அரசு
காலை 9 மணிக்கு திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்கியது. 10 மணிவரை இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநாட்டு முதலாவது நிகழ்ச்சியாக சிவகங்கை இராமலக்குமி சண்முகநாதன் அவர்கள் சென்னை பெரியார் திடலில் மாநாட்டுப் பந்தலுக்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த கழகக் கொடியினை ஏற்றினார்.
அடுத்து பெரியார் அறிவியல் கண்காட்சியை அமெரிக்க பேராசிரியை திருமதி. மீனா அரசு திறந்து வைத்தார். திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பெரியார் பெருந்தொண்டர் பட்டுக்கோட்டை நா.இராமாமிர்தம் மாநாட்டுத் தொடக்க உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து நாம் மாநாட்டிற்கு வந்திருந்த வெளிநாட்டினர் உட்பட அனைவரையும் வரவேற்று, அறிமுகப்படுத்தி, பாராட்டிப் பேசினோம்.
பின்னர் அமெரிக்க மேரிலேண்ட் பல்கலைக் கழகத்தின் பேராசிரியை விஞ்ஞானி மீனா அரசு உரையாற்றுகையில், “பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னுக்கு வந்தால் நாடு எளிதில் முன்னேறும் என்று கூறினார். சோதிடம், மூடநம்பிக்கைகளை நம்பக்கூடாது என்றும், அதைப் பரப்புகிறவர்களை ஒதுக்குங்கள். அறிவியல் மனப்பான்மையை வளருங்கள்” என்றும் பேசினார்.
அதன்பின் சுயமரியாதைச் சுடரொளிகளின் தியாகத்தால், இரத்ததால், உழைப்பால் இந்த நாடு முன்னேறி இருக்கிறது என்பதை விளக்கிக் கூறி, அவர்களை நினைவு கூர்ந்து வீர வணக்க உறுதி மொழியை நாம் படித்தபோது, மாநாட்டில் கூடியிருந்த மக்கள் எழுந்து நின்று அப்படியே திரும்பக் கூறினர்.
விழாவில், பெரியார் பெருந்தொண்டர்களுக்கு சால்வை அணிவித்து தந்தை பெரியார் உருவம் பொறித்த
நினைவுப் பரிசினை ஆசிரியர் வழங்குகிறார்…
அதனைத் தொடர்ந்து, பெரியார் பெருந்தொண்டர்களான, 80, 90 வயதிற்கு மேற்பட்ட பட்டுக்கோட்டை நா.இராமாமிர்தம், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம், கழகச் செயலவைத் தலைவர் ராசகிரி கோ.தங்கராசு, திருவாரூர் எஸ்.எஸ்.மணியம், திருப்பத்தூர் ஏ.டி.கோபால், வேல். சோமசுந்தரம், பா.அருணாசலம், இராமலக்குமி சண்முகநாதன் ஆகியோருக்கு நாம் சால்வை அணிவித்து, தந்தை பெரியார் உருவம் பொறித்த நினைவுப் பரிசினை வழங்கி பெருமைப்படுத்தினோம். I.H.E.U. அமைப்பின் மேனாள் தலைவர் லெவிஃபிராகல், பாபு கோகினேனி (லண்டன்), டாக்டர் கோ.விஜயம் (ஆந்திரா), அரசு செல்லையா (அமெரிக்கா), அவருடைய துணைவியார் மீனா அரசு ஆகியோருக்கு சால்வை அணிவித்து சிறப்புச் செய்தோம்.
நண்பகல் தீர்மான அரங்கம் நடைபெற்றது. இவ்வரங்கத்திற்கு மயிலை நா. கிருஷ்ணன் தலைமை வகித்தார். தீர்மானங்களை முன்மொழிந்தும், வழிமொழிந்தும் குடந்தை தி. ராசப்பா, வடசேரி வ. இளங்கோவன், பேராசிரியர் பூ.சி. இளங்கோவன், தகடூர் தமிழ்ச்செல்வி, அ.கூத்தன், திருமகள் இறையன், ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம்,
க.சிந்தனைச்செல்வன், அ. அண்ணாதுரை, திண்டுக்கல் நாகலிங்கம், எம்.ஏ. செல்வராசன், மு.நீ.சிவராசன் ஆகியோர் பேசினர்.
நிறைவாக நாம் உரையாற்றுகையில், தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகத்தை ஏன் தொடங்கினார் என்பது பற்றியும் விளக்கமளித்தோம். உலகத்தில் உள்ள எல்லா அகராதியையும் எடுத்துப் போட்டால் சுயமரியாதை என்ற சொல்லைத்தான் தேர்ந்தெடுப்பேன் என்று அய்யா அவர்கள் 1931இல் கூறியதை விளக்கிப் பேசினோம்.
மேலும், தந்தை பெரியார் அவர்களுடன் உடன் இருந்து பாடுபட்ட- சுயமரியாதை இயக்க வளர்ச்சிக்காகப் பாடுபட்ட தோழர்கள் மாவட்டம் தோறும் பெருமைப்படுத்தப்படுவார்கள்.அவர்களைப் பற்றிய வரலாறுகளை அந்தந்த மாவட்டத் தோழர்கள் அவரவருடைய குடும்பத்துடன் தொடர்பு கொண்டு அவர்களைப் பற்றிய செய்திகளைச் சேகரித்துத் தாருங்கள் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் சுயமரியாதைச் சுடரொளிகள் பற்றி ஒரு பெரிய நூல் வெளியிடப்படும் என்றும் அறிவித்தோம். மேலும், இந்த உலகத்திற்குப் பெரியார் கொள்கையின் தேவை எத்தகையது என்பதையும் விளக்கினோம்.
பிற்பகல் 3:00 மணிக்கு ‘சுயமரியாதை இயக்க வரலாற்றுச் சாதனைகள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் தொடங்கியது. கழகச் சட்டத்துறை அமைப்பாளர் வழக்குரைஞர் கி.மகேந்திரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பெரியார் ஆவணக் காப்பக இயக்குநர் டாக்டர் பு.இராசதுரை, கழகப் பொதுச் செயலாளர் சு.அறிவுக்கரசு, கழக துணைப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, பேராசிரியர் நம். சீனிவாசன், கழகத் துணைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் ஆகியோர் உரையாற்றினர்.
அடுத்து மாலை 4.30 மணிக்கு, “மதச்சார்பின்மை மனித நேயம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் தொடங்கியது. கழகத் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி வரவேற்றுப் பேசினார். கருத்தரங்கத்தில் மலேசியா இரா.அன்பழகன், கேரளா யூ. கலநாதன், அமெரிக்க டாக்டர் அரசு செல்லையா, கருநாடகா நரேந்திர நாயக், ஒரிசா நிகர் ரஞ்சன் ஆச்சார்யா, சி.கே.மோகனம், டாக்டர் ஜி. விஜயம் ஆகியோர் தந்தை பெரியாரின் மனித நேயம், சுயமரியாதை இயக்கம் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
அதனைத் தொடர்ந்து சென்னை – பெரியார் திடலிலிருந்து மாபெரும் ஊர்வலம் ஜெர்மையா சாலை வழியாக புரசைவாக்கம் தாணா தெருவில் முடிவடைந்தது.
புரசைவாக்கம் தாணா தெருவில் திறந்தவெளி மாநாடு தொடங்கியது. மாநில ப.க. பொதுச் செயலாளர் வீ. குமரேசன் வரவேற்புரையாற்றினார்.
பன்னாட்டு பகுத்தறிவு மனிதநேய அறநெறி ஒன்றியத் தலைவர் (I.H.E.U) ராய் பிரவுன் தன்னுடைய உரையில்,
சுயமரியாதை இயக்க 80ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொள்ள வந்திருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். உலகத்திலேயே இது போன்றதொரு பகுத்தறிவு மனிதநேய இயக்கத்தை எங்கும் காண முடியாது.
ஜாதி, மதம், கடவுள் ஆகியவற்றை ஒழிக்க- மனித நேயத்தை வளர்க்க உலக மனித நேய பகுத்தறிவாளர் கழக அமைப்பு, திராவிடர் கழகமாகிய உங்களுக்கு ஆதரவு தரத் தயாராக இருக்கின்றது என்றார். (கு.வெ.கி.ஆசான் தமிழில் மொழி பெயர்த்துக் கூறினார்).
உலகப் பகுத்தறிவாளர் கழக மனிதநேய அமைப்பின் மேனாள் தலைவர் லெவிஃபிராகல் தன்னுடைய உரையில்,
“நார்வே நாட்டைச் சார்ந்தவன் நான். அந்த நாடு ஒரு சிறிய நாடுதான். அங்கே கடவுள் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், தந்தை பெரியார் பிறந்த மண்ணிலே இங்கு தெருவுக்குத் தெரு கடவுள் இல்லை என்று கூறக்கூடிய சுதந்திரம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால், எங்களுக்குக் கூட அத்தகைய சுதந்திரம் இன்னமும் கிடைக்கவில்லை.
இந்த இயக்கம் நயத்தக்க நாகரிகத்துடன், கட்டுப்பாட்டுடன் நடைபெறுகின்றது. இந்த இயக்கத்தைப் பார்க்கும்பொழுது பெருமகிழ்ச்சி அடைகிறேன். நல்ல இலட்சிய இயக்கத்தை ஜனநாயக முறையில் கொண்டு செல்கிறீர்கள். மதக்காரர்களால் மக்களை ஒன்றுபடுத்த முடியாது. தந்தை பெரியாருடைய மனிதநேய இயக்கம்தான் மக்களை ஒன்றுபடுத்தும்” என்றார்.
தந்தை பெரியார் விருது பெற்ற இரா.செழியன் அவர்கள் தமது உரையில், “உங்களை எல்லாம் வரவேற்கின்றேன். தந்தை பெரியாரைப் பின்பற்றாதவர்கள் யாரும் ஆட்சிக்கு வர முடியாது. குடும்பம் குடும்பமாக உள்ள இதுபோன்ற மாபெரும் இயக்கத்தை- நல்லதொரு இயக்கத்தை வேறு எங்கும் காண முடியாது. நாம் எல்லோரும் பெரியார் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். பெரியாருடைய கொள்கைகளைப் பின்பற்றி நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்” என்றார்.
தமிழ்நாடு அரசின் பள்ளி மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தின்கீழ் பெரியார் கல்வி நிறுவன மாணவ-_மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
நடிகர் இனமுரசு சத்யராஜ் தமது உரையில், எனக்கு வயது 52 ஆகிறது. 25 வயது வரை நான் தீவிர ஆன்மிகவாதியாக இருந்தேன். போகாத கோயில் இல்லை. எனது எடைக்கு எடை சாமிக்கு தேங்காய் எல்லாம் என்னுடைய குடும்பத்தினர் கொடுத்தார்கள். அங்கப்பிரதட்சணம் செய்தேன். இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளில் ஊறிப் போனேன். பிறகு பெரியாருடைய புத்தகங்களைப் படித்து சுயமாகச் சிந்தித்து நாத்திகன் ஆனேன்.
கடவுள், மதம், ஜாதி, நாள், நட்சத்திரம் தான் மனிதனைக் கொடுமைப்படுத்துகிறது. நாட்டிலே குண்டு வைக்கிறவனும் கடவுள் நம்பிக்கைவாதி. அதனால் சாகிறவனும் கடவுள் நம்பிக்கைவாதி. எந்தக் கடவுளும் உன் உயிரைக் காப்பாற்றவில்லையே! எதற்கு அவற்றையெல்லாம் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்? கடவுள் இல்லை என்று கூறும் இந்த சத்யராஜ் 2004ஆம் ஆண்டு அதிகப் படங்களில் நடித்த கதாநாயகன். அதேபோல 2005ஆம் ஆண்டிலும் அதிகப்படங்களில் நடித்தவன் இந்த சத்யராஜ். இன்றைக்கு ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் (பி.ஜே.பி.யைத் தவிர) புதிதாக கட்சியை ஆரம்பிக்கிறவர்களுக்கும் பெரியார்தான் தேவைப்படுகிறார். ஆட்சியைப் பிடிப்பதற்கும் பெரியார்தான் தேவைப்படுகிறார்.
நாங்கள் எல்லாம் திரைப்படத்தில் ஹீரோவாக நடிப்பவர்கள் ஆனால், மக்களுக்காக வாழ்ந்த நிஜமான ஹீரோ தந்தை பெரியார்தான். தந்தை பெரியார் அவர்களுடைய இயக்கத்தை வளர்ப்பதுதான் தனது ஒரே இலட்சியம் என்று நம் ஆசிரியர் அய்யா வீரமணி அவர்கள் செயல்பட்டுக் கொண்டு வருகின்றார். தந்தை பெரியார் கருத்து பரவ உதவுங்கள்,” என்று கேட்டுக்கொண்டார்.
நிறைவாக நாம் உரையாற்றுகையில், இன்றைக்குப் பார்ப்பனர்களே இடஒதுக்கீடு கேட்டு மாநாடு போடுகிறார்கள் என்று சொன்னால், தந்தை பெரியார் அவர்கள் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் இன்றைக்கு வெற்றி பெற்றிருக்கின்றதா? இல்லையா?
தந்தை பெரியார் அவர்களுடைய இறுதி விருப்பம் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதாகும். பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளோடு புதைத்தோம்.
தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப் பட்டவர்கள் அர்ச்சகராவதற்குத் தடையில்லை என்று வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றத்தைச் சார்ந்த ஒரு நீதிபதி அல்ல, இரண்டு நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளார்கள். ஆகவே உச்சநீதிமன்றம் பச்சைக் கொடி காட்டிவிட்டது.
தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பிக்க வேண்டியது மட்டும்தான் பாக்கியாக இருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோதும் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளோம். இருந்தபோதிலும் இதுவரை இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
எனவே, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் மாபெரும் மறியல் போராட்டம். நடைபெறும். அப்போது, சிறை செல்ல நாம் தயாராக இருக்கவேண்டும். குறிப்பாக ஆண்களுக்கு சமையல் வேலையை விட்டு விட்டு தாய்மார்கள் அதிகளவில் சிறை செல்லத் தயாராக வேண்டும்.
அதேபோல, நவரத்தினங்கள் என்று சொல்லக்கூடியவற்றில் ஒன்றான ‘பெல்’ தொழிற்சாலையின் பங்குகளை விற்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளிவந்தவுடனே திருச்சி ‘பெல்’ நிறுவனத்தின் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி ‘பெல்’ நிறுவனத்தை விற்கக்கூடாது என்பதை வலியுறுத்தினோம்.
இடதுசாரிகளும் அதைத் தடுத்து நிறுத்த பெரு முயற்சி எடுத்துக் கொண்டார்கள். ‘பெல்’ நிறுவனத்தின் பங்குகளை விற்பதில்லை என்று ஒன்றிய அரசு அறிவித்துவிட்டது.
அதுபோல, லாபத்தில் இயங்கிவரும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசனின் பங்குகளையும் தனியாருக்கு விற்க ஒன்றிய அரசு திட்டமிட்டு வருகிறது. இதைக் கண்டித்து
அந்த நிறுவனத்தின் முன்பு கழகப் பொதுச் செயலாளர் சு.அறிவுக்கரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், அதற்கடுத்த தாக புதுச்சேரியில் உள்ள புதுவைப் பல்கலைக் கழகத்தில் இந்தி, சமஸ்கிருத ஆதிக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அங்குள்ள அறிவிப்பு பலகைகளில் எல்லாம் தமிழ் நீக்கப்பட்டு இந்தி, சமஸ்கிருதத்திலேயே எழுதப்பட்டிருக்கிறது. இந்த ஆதிக்கத்தை எதிர்த்து கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் 18ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் கூறி மேலும் பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தோம்.
இறுதியாக, தென் சென்னை மாவட்ட தி.க. தலைவர் இரா.வில்வநாதன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை கழகப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் ஒருங்கிணைத்தார். தாணா தெரு கண்ணுக்கு எட்டியவரை கருஞ்சட்டைக் கூட்டமாகவே காணப்பட்டது.
கண்காட்சியில் பங்கேற்ற மாணவ-_மாணவிகளைப் பாராட்டி சான்றிதழ் வழங்கும் ஆசிரியர்…
மாநாட்டு மேடையில் நடுப்பட்டி முருகேசன் – உண்ணாமலை இணையரின் மகள் புலிக்கொடிக்கும் காவேரிப்பட்டணம் பூங்காவனம் – ஜெயலட்சுமி இணையரின் மகன் ராஜேந்திர பாபுவுக்கும் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்தோம்.
மேலும் மாநாட்டு மேடையில் திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆன கோவை மாவட்டம்
மேட்டுப்பாளையம் அருகில் உள்ள சாலைவேம்பு என்ற ஊரைச் சேர்ந்த சக்திவேல் – வாணி தம்பதியினர் மற்றும் திருமணம் ஆகி 40 ஆண்டுகள் ஆன திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளர் எல்லப்பன் – சென்னம்மாள் இணையர் ஆகியோர் தங்கள் விருப்பத்தின் பேரின் எமது முன்னிலையில் தாலியை அகற்றிக் கொண்டனர்.
திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் 5.1.2006 அன்று நிறுவனர் (தந்தை பெரியார்) நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. அவ்வமயம் எம்முடன் உலக நாத்திக அமைப்பாளர் ராய் பிரவுன், லெவிஃபிராகல், பாபுகோகினேனி ஆகியோர் பெரியார் கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டனர். விழா மேடையில் தமிழ்நாடு அரசு, பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கிய மிதிவண்டிகளை வெளிநாட்டுச் சிறப்பு விருந்தினர்கள் ராய் பிரவுன், லெவிஃபிராகல், பாபு கோகினேனி, டாக்டர் விஜயம், இரா. அன்பழகன் மற்றும் பள்ளிச் செயலாளர் சு.அறிவுக்கரசு ஆகியோர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர், மலைவாழ் வகுப்பினர் மற்றும் இதர பிரிவு மாணவர்களுக்கு வழங்கினர்.
மதுரை ஆதீனம் தந்தை மறைவுக்கு ஆறுதல் கூறும் ஆசிரியர்…
சென்னை பெரியார் திடலில் 4.1.2006ஆம் தேதி பெரியார் அறிவியல் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. இக்கண்காட்சி சிறப்பாக நடைபெறப் பாடுபட்ட திருச்சி பெரியார் கல்வி நிறுவன மாணவ- மாணவியருக்கும் மாநாட்டிற்கு ஒத்துழைத்த தோழர்களுக்கும் பாராட்டு விழா நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 6.1.2006 அன்று இரவு 7 மணிக்கு நடந்தது. விழாவில் நாம் கலந்துகொண்டு பெரியார் கல்வி நிறுவன மாணவச் செல்வங்கள் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு அவர்களது செயற்கரிய பணியைப் பாராட்டி சான்றிதழ் வழங்கி பாராட்டுரை வழங்கினோம்.
இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ. சேனாதி ராசா, மலையக மக்கள் முன்னணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பொ. சந்திரசேகரன் ஆகியோர் 7.1.2006 அன்று நண்பகல் சென்னை பெரியார் திடலில் எம்மைச் சந்தித்து உரையாடினர்.
மதுரை ஆதீனம் அவர்களின் தந்தையார் பூர்வாசிரம் ஆரம்.குமாரசுவாமிகள் தனது 100ஆம் வயதில் 5.11.2005 அன்று மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். 8.1.2006 அன்று மதுரை சென்ற நாம் எமது இணையருடன் நேரில் சென்று மறைந்த ஆரம்.குமாரசுவாமிகள் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மதுரை ஆதீனம் அவர்களுக்கு ஆறுதல் கூறினோம்.