சமூகநீதிக்காகவே அரசியலில் (1917) ஈடுபட்டு, பிறகு அதனை அன்றைய ஆதிக்கத்தின் பிடியிலிருந்த காங்கிரஸ் ஏற்க மறுத்தவுடனேயே அதிலிருந்து வெளியேறி, முழு மூச்சாக ஒரு சமூகநீதி. சுயமரியாதைப் போராளியாக தனது இறுதி மூச்சு வரையில் போதித்தும், போராடியும், சாதித்தும் சரித்திரம் படைத்தவர் தந்தை பெரியார்!
ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, உத்தியோகம், சம உரிமை, சம வாய்ப்புக்கான சமூகநீதிக் கொடியைக் காக்க எதிர்நீச்சலடித்துப் புரட்சியாளர் அம்பேத்கர் களங்கண்டார்.
இவர்களுக்கு முன்னோட்டமாக மராத்தியத்தில் ஜோதிபாபூலேவும், கோலாப்பூர் மன்னர் சாகுமகராஜ் அவர்களும் தெற்கே நாராயண குரு போன்றவர்களும் தனித்தனியே களமாடினர்!
தமிழ்நாட்டில் 1916 முதல் தொடங்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற திராவிடர் இயக்கம் ‘‘ஜஸ்டிஸ் கட்சி’’ என்று வெகுமக்களால் அழைக்கப்பட்ட பார்ப்பனரல்லாதார் உரிமை முழக்கமான நீதிக்கட்சியும், அதன் வழித்தோன்றி, பல பரிமாணம் பெற்று இன்று திராவிடக் குரலாகவும், ஆட்சியாகவும் செய்துவரும் களத்தில், திராவிட இயக்கம் தொய்வின்றிப் பிரச்சாரம், போராட்டம் என்ற இரு களங்களையும் நிலை நிறுத்தியதன் காரணமாக நல்ல விளைச்சல்களைக் காண முடிகிறது.
பின்னாளில், காங்கிரஸ் கட்சி சமூகநீதிக் கொள்கையை நடைமுறைப்படுத்தி, மண்டல் அறிக்கையின்படி 27 சதவிகித இட ஒதுக்கீட்டை வேலை வாய்ப்பிலும், கல்வியிலும் வழங்கியது மட்டுமன்றி, தனது பாதையை சமூகநீதித் திசையில் தீர்மானித்துச் செயல்பட்டுவருகிறது.
ஆனால், அடிப்படையில் சமூகநீதியை வெறுத்து அழித்தொழிக்க உறுதிபூண்ட ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வினர் இப்போது ஓட்டு வேட்டை, அதிகாரக் கைப்பற்றலுக்குத் திடீர் சமூகநீதி வேடம் அணிந்து புதிய வித்தைகளை தேர்தல் களத்தில் நடத்தி, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., எல்லோரையும் ஒருசேர ஏமாற்ற ஆயத்தமாகியுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ்.சின் அடிப்படைக் கொள்கை இட ஒதுக்கீடு, சமூகநீதியை எதிர்த்து ஒழிப்பதேயாகும்! ஆனால், ‘பொய்மான்’ வேடமிட்டு, ஏமாற்றிய புராணக் கதைபோல், இப்போது ஒடுக்கப்பட்ட மக்கள்மீது திடீர்க் கரிசன சமூகநீதியாளர்களாகக் காட்டி, வாக்காளர்களை ஏமாற்றி வருகின்றது.
‘எப்படியோ’ ஜெயித்து, வடமாநிலங் களில் பிற்படுத்தப்பட்டவர்களை முதலமைச்சர்களாகக் காட்டி, அரசியல் தூண்டிலில் அவர்களை நாக்கு பூச்சிகளாக்கி, மீன்களைச் சிக்க வைப்பதுபோல செய்து வருகின்றனர்.
இராஜஸ்தானில் பா.ஜ.க.வில் ஒரு (மோகன் யாதவ்) பிற்படுத்தப்பட்டவர் முதலமைச்சர்; அண்மையில் வென்ற அரியானா மாநிலத்தில் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சைனி என்பவர் பிற்படுத்தப்பட்டவர்.
இவை எல்லாம் மனமாற்றமோ, கொள்கை நிலைப்பாட்டு மாற்றமோ அல்ல. மக்களை ஏமாற்றி, எப்படியாவது ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும்; வந்த பின், தமது
இச்சைபோல தங்களது கொள்கைகளுக்குச் சட்ட வடிவம் தரவேண்டும் என்பதற்காக, மறைவான சூழ்ச்சி அரசியலில் ஈடுபட்டு, சூதாட்டத்தில் காய்களை மாற்றுவதுபோல, ‘‘வித்தையாக‘‘ செய்து வருவது கண்கூடு! வருகிற நவம்பர் 20 ஆம் தேதி மகாராட்டிர மாநிலத் தேர்தல், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் எல்லாம் இந்த வித்தையைப் பெருமளவில் நடத்தி, எப்படியாவது வெற்றி பெறவேண்டுமென்ற தந்திர வியூகம் அமைக்கத் தொடங்கிவிட்டனர்!
இந்தியா கூட்டணியினர் ஒன்றுபட்டு, முந்தைய பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற இடங்களைக் கூடுதலாகப் பெற ஒருங்கிணைந்து
பாடுபட்டதுபோலவே, தமிழ்நாட்டு தி.மு.க. கூட்டணி எப்படி பலம் வாய்ந்த, சிதறடிக்க முடியாத கொள்கைக் கூட்டணியாக உள்ளதோ,
அதேபோல், அங்கேயும் கூட்டணியைக் கட்டி, தன்முனைப்பில்லாது வெற்றி ஒன்றே நம் இலக்கு என்று கவனமாக நடந்து கொள்ளவேண்டும்.
ராகுல்காந்தி போன்ற நல்ல இளந்தலைவரின் உழைப்பு வீண்போகாமல், அணைக்கவேண்டியவர்களை அணைத்து, பிணைக்கவேண்டியவர்களைப் பின்னிப் பிணைத்து, சுய கவுரவத்தை இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பார்க்காது, இலக்கு மட்டுமே நாணேற்றத்தில் குறி என்பதுபோல், தங்கள் இலக்கு பாசிச பா.ஜ.க. கூட்டணி, மராத்தியத்தில் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுத்து நிறுத்துவதே முக்கியம் என்ற நோக்கில் நடந்துகொள்வது மிகமிக முக்கியம்.
பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் நலனில் எப்போதும் பா.ஜ.க. அக்கறை கொண்டதில்லை; சமூகநீதிக்கு எதிராகவே நடந்துகொள்ளும் என்பதை எடுத்துச் சொல்லவேண்டும். மண்டல் அறிக்கையைச் செயல்படுத்தும் முடிவை, அன்றைய பிரதமராக இருந்த சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் எடுத்தபொழுது, மண்டலுக்கு எதிராக கமண்டலைக் காட்டி, அவரது ஆட்சியைக் கவிழ்த்து, பிற்படுத்தப்பட்டோருக்கும், சமூகநீதிக்கும் கேடு விளைவித்தவர்கள் பா.ஜ.க.வினர் என்பதை மக்கள் மத்தியில் நினைவூட்ட
வேண்டியது அவசியமாகும்.
நாட்டு மக்கள் தயாராக உள்ளனர். ஆனால், தலைவர்கள் ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று’ கூறாமல், ஒத்திசைவு கொண்டவர்
களாக நடந்து, வெற்றிக் கனி பறித்து, பா.ஜ.க. கூட்டணியை வீழ்த்தவேண்டியது அவசியம், அவசரம்! எந்த ஒப்பனையில் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். வந்தாலும், அவர்கள் எப்படி தமிழ்நாடு, புதுவை உள்பட முழுத் தோல்வியைக் கண்டார்களோ (40க்கு 40) அதுபோல பெற, கரம் கோர்த்து, சிரம் தாழ்த்தி, வாக்காளர்களின் பேராதரவினைப் பெற, ஒருமித்து களம் காணவேண்டும். முனைந்தால், முடியும்! முன்யோசனையுடன் முனைப்புடன் உழைத்தால், வெற்றி நிச்சயம்!
– கி.வீரமணி,
ஆசிரியர்