பாவ எரிப்புப் பொம்மையாட்டம்! – திருப்பத்தூர் ம.கவிதா

2024 அக்டோபர் 16-30 2024 கட்டுரைகள்

சமூகத்தில் சில நிகழ்வுகள் கேட்பாரற்ற அல்லது கேட்கத் துணிச்சலற்ற காரணத்தால் காலம் காலமாக நடைபெறுகிறது. ஆனால், அறிவுக்கும் அவற்றுக்கும் துளியும் தொடர்பிருக்காது. பல பண்டிகைகள் நாட்டில் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றன. அது ஏனோ என்ன அறிவு மழுங்கி விட்டதோ என்னவோ, இப்படியான நம்ப முடியாததும் நகைப்புக்கிடமானதுமான எந்த ஒன்றின் மீதும் மக்கள் சிறு கேள்வியையோ அய்யத்தையோ முன் வைப்பதில்லை.

அதனால்தான் அறிவார்ந்த திராவிட நாகரிகத்தை அழித்தொழிக்க வந்த ஆரிய கருத்துருவாக்கங்களை நிலை நிறுத்துவதற்காகக் கட்டிவிடப்பட்ட கதைகள் இன்னமும் பண்டிகைகளாக இந்த நூற்றாண்டிலும் நடம் புரிந்து கொண்டிருக்கின்றன என்பதற்கு இன்னொரு சான்றாக வடமாநிலங்களில் தசரா பண்டிகையின் இறுதியில் ராவணன் மற்றும் கும்பகர்ணன் உள்ளிட்டோரின் உருவப் பொம்மைகளை அவர்கள் எரித்து மகிழ்வதைப் பார்க்க முடிகிறது.

டெல்லியில் மட்டும் சுமார் 60 இடங்களில் ராவணன் உருவப் பொம்மை எரிக்கப்படுகிறதாம். இந்த ஆண்டு டெல்லி துவாரகாவில் ஸ்ரீராம் லீலா சங்கம் சார்பில் 211 அடி உயரம் கொண்ட ராவணன் உருவப் பொம்மை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளதாம்! இது இந்தியாவின் மிக உயரமான ராவண உருவப் பொம்மையாம்! அதிகரித்து வரும் பாவங்களை இந்த உருவம் சித்திரிக்கிறது என்று கூறி அக்டோபர் 12ஆம் தேதியன்று எரித்தனர். அதிகரித்து வரும் பாவங்களை இந்த உருவம் சித்திரிக்கிறது என்பது எப்படிப்பட்ட பித்தலாட்டம்!

சக மனிதனைப் பிறப்பின் பெயரால் பிரித்து வைத்ததை விட பெரிய பாவம் இந்த நாட்டில் வேறு எதுவாக இருக்க முடியும்? அதை எப்போது தீயிட்டுக் கொளுத்தப் போகிறீர்கள் என்பதுதான் நாம் அவர்களைப் பார்த்து வைக்கும் கேள்வி!

பெண்களை இழிவாய்ப் பார்க்கும் மநுதர்ம சிந்தனையை எப்போது கொளுத்தப் போகிறீர்கள்? எதிர்த்துப் போராடும் பெண்களை எப்படியாவது ஒடுக்கவேண்டும் என்ற பெரும்பாவத்திற்கு எப்போது தீ வைக்கப் போகிறீர்கள்?

மதவெறியைத் தூண்டி அதில் குளிர் காயும் அரசியலைச் செய்யும் பாவத்திற்கு எப்போது தீ வைக்கப் போகிறீர்கள்?

ஒரு பக்கம் விநாயகர் பொம்மைகளைச் செய்து வணங்கி விட்டு அவற்றை நீர் நிலைகளில்

அடித்துத் துவைத்துக் கரைத்து கடவுள் என்கிறீர்கள்… இன்னொரு பக்கம் பிரம்மாண்டமான பொம்மைகளைச் செய்து கொளுத்தி பாவத்தின் உருவம் என்கிறீர்கள்… என்னே கேலிக்கூத்து!

பாரத புண்ணிய பூமியில் – பண்டிகைகளுக்குக் குறைவில்லாத நாட்டில் பாவம் எப்படி அதிகரிக்கிறது? ஒரு குடும்பம் தான் சார்ந்த மதத்தையும் பக்தியையும் தன் வாரிசுகளுக்கு வழிவழியாகக் கடத்த முடியும் என்கிற போது ஏன் பண்பையும் ஒழுக்கத்தையும் கடத்த முடியவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி!
தீயினால் பாவங்கள் பொசுங்கும் என்றால் தீப்பந்தங்களே போதுமே… காவல் நிலையங்களும் சிறைச்சாலைகளும் நீதிமன்றங்களும் நாட்டில் எதற்கு?

பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்குக் கடிதம்!

1973 டிசம்பர் 8, 9 தேதியில் சென்னையில் நடைபெற்ற தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் பல திட்டங்களைத் தனது கைக் குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்தார்கள். அந்தத் திட்டங்களில் ஒன்றுதான் ராவண லீலா(ராமலட்சுமண உருவப் பொம்மைகளை எரிக்கும்) போராட்டம். கழகத் தலைவர் அன்னை ஈ.வெ.ரா மணியம்மையார் அவர்களும் கழகப் பொதுச் செயலாளர் என்ற முறையில் ஆசிரியர் அவர்களும் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்கு அனுப்பிய கடிதம் இன்றும் எவ்வளவு பொருந்தி வருகிறது என்பது எடுத்துக்காட்டத் தக்கதாகும்.

“வடக்கே விந்தியத்திற்கு அப்பால் வாழும் உங்கள் மக்களுக்கு அக்டோபர் மாதம் வந்த உடனே ராமலீலா கொண்டாட்டம் துவங்கி விடுகிறது. அங்கே உள்ள மக்களுக்கு வேண்டுமானால் இன்பமாகவும் இனிமையாகவும் களிப்பாகவும் உல்லாசமாகவும் பகட்டாகவும் ஆரவாரங்களாகவும் இருக்கலாம். ஆனால் எங்களுக்கு வெட்கம், அவமானம், பரிகசிப்பு! ராமாயணக் கதையின் தலைவர்களைப் பற்றி தென்னாட்டு மக்களாகிய நாங்கள் ஏதோ தவறான கருத்தைக் கொண்டு இதைக் கூறுவதாக நினைக்கக் கூடாது. மதிப்பிற்குரிய உங்களது தந்தை ஜவகர்லால் நேரு உட்பட பல சரித்திர ஆசிரியர்கள் கூறிய உண்மையின் அடிப்படையில் எங்கள் கருத்தை முன் வைக்கிறோம். ராமாயணக் கதை தென்னாட்டு மக்களின் தலைவனான ராவணனை எதிர்த்து ஆரியர்கள் நடத்திய போரையே குறிக்கும்; ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள குரங்குகளும் தென்னிந்தியாவில் வாழ்ந்த கருப்பர்களையே குறிக்கும் என்பது ,நீங்கள் குழந்தையாக இருந்த போது தங்கள் தந்தை உங்களுக்கு எழுதிய கடிதங்கள் கொண்ட நூலில் இருக்கும் கருத்தாகும். எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பிரதமர், ஜனாதிபதி போன்ற முக்கியமானவர்கள் இதில் கலந்து கொள்ளக் கூடாது” என்ற செய்திகள் அடங்கிய கடிதம் 17.10.1974 அன்று அனுப்பப்பட்டது.
அதற்கு இந்திரா காந்தி அம்மையார் அனுப்பிய பதில் கடிதத்தில், “பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற இந்தியக் குழந்தைகளுக்கு ராமன் பெயர் சூட்டப்படுகிறது உங்களுடைய கட்சியின் மதிப்பிற்குரிய தலைவர் உட்பட …

வட இந்தியாவில் கொண்டாடப்படும் ராமலீலாவில் எந்த இனப் பிரச்சினையும் இல்லை. இதை அரசியலாக்கும் எந்த முயற்சியும் துரதிருஷ்டவசமானது. பொருளாதார பேதத்தையும் மக்களின் துன்பத்தையும் போக்குவதற்கே நமது மக்களின் சக்தி திரட்டப்பட்டு பயன்படுத்த வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட கிளர்ச்சி நடவடிக்கையை கைவிடுமாறு வற்புறுத்த விழைகிறேன்” என்று பதில் அனுப்பினார்.

ஆனால், கழகம் திட்டமிட்டபடி அன்னையார் தலைமையில் ராவண லீலா நடத்தி முடித்த சாதனை இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது வரலாறாகும்.
நான்கு மாதங்கள் உழைத்து பிரம்மாண்ட பொம்மையைச் செய்து, ஏராளம் பொருள்செலவு செய்து, அதைத் தீயிட்டுக் கொளுத்தி காற்று மாசுபாடு ஏற்படுத்துவதைத் தவிர, மக்களின் எந்தத் துன்பத்தை இந்தப் பொம்மையாட்டம் குறைக்கப் போகிறது?

பெரியார் காண விரும்பிய பகுத்தறிவுச் சமூகம் படைப்பதும் , அரசியல் சட்டம் 51A(h) படி அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதும் தான் இத்தகைய பொம்மை எரிப்பு ஆட்டங்களை ஒழிக்க ஒரே வழியாம்!