சர்வதேச பெண் குழந்தைகள் தினம் 2012ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி அய்க்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சர்வதேசப் பெண் குழந்தைகள் தினத்தின் கருப்பொருள் ‘பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான பார்வை’ என்பதாகும். (The theme of this year’s International Day of the Girl is ‘Girls’ vision for the future’.)
அக்டோபர் 11, பெண் குழந்தைகளைக் கொண்டாடி மகிழும் நாள் என்று அய்க்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது.
“ஆண்டுதோறும் அக்டோபர் 11 அன்று அனுசரிக்கப்படும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம், பெண்களின் குரல்கள், செயல்கள் மற்றும் தலைமைத்துவத்தைப் பெருக்கி, எல்லா இடங்களிலும் பெண் குழந்தைகளைக் கொண்டாடும் ஒரு முக்கிய உலகளாவியத் தருணமாகும். பெண் குழந்தைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் உரிய நாள் இது. இந்த நாளில், பெண் குழந்தைகளின் உரிமைகளை முழுமையாக அங்கீகரித்து வாதிடுவோம்’’ என்று அய்க்கிய நாடுகள் சபை இந்த நாள் பற்றி அறிவித்திருக்கிறது.
சர்வதேசப் பெண் குழந்தைகள்தினம் என்பதைப் பார்த்தவுடன் தந்தை பெரியாரின் நினைப்பும் அவர் இயக்கத்தின் பணிகளும்தான் நினைவுக்கு வந்தது.ஆமாம், இதைப் பற்றிப் பேசுவதற்கு மிகப்பொருத்தமான தலைவர் தந்தை பெரியார் அவர்கள்தானே. அதுவும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளான பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான பார்வை என்பதைப் பார்த்தபோது தந்தை பெரியாரின் பெண் குழந்தைகள் பற்றிய தொலைநோக்குப் பார்வைதான் நினைவுக்கு வந்தது.
‘ஒரு வீட்டில் நான்கு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இருந்தால் பெண் குழந்தையைப் படிக்க வையுங்கள்’ என்று சொன்னவர் யார்? ‘பெண்களே உங்களை வெறும் அலங்காரப் பொம்மைகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்’ என்று ஊர்தோறும் மேடைகள் போட்டு முழங்கி மாற்றத்திற்கான காரணமாகத் திகழ்ந்தவர் யார்? ‘பெண் குழந்தைகளுக்கு கல்வியைக் கொடுங்கள்,அவர்கள் படித்து முடித்த பின் வேலை கொடுங்கள்.அவர்கள் வாழ்க்கையை அவர்கள் தேர்ந்தெடுக்க உரிமையைக் கொடுங்கள்’ என்று பெண் குழந்தைகள் எதிர் காலத்தில் நிம்மதியாக இருப்பதற்கான வழியைச் சொன்னவர் யார்? தந்தை பெரியார் தானே!
“ஆணுக்குப் பெண் அடிமை என்று இருக்கக் கூடாது; சரி நிகர் சமமான நிலை இருக்க வேண்டும்; சம உரிமை இருக்க வேண்டும்; இருவருக்கும் உள்ள பேதம் ஒழிய வேண்டும்; மடமையில் மூழ்கி இருக்கக்கூடாது; மக்களைத் தெளிவு பெற்றவர்களாக ஆக்க வேண்டும் என்ற கருத்தில் நாங்கள் தான் முதன்முதலில் பலத்த எதிர்ப்புக்கிடையேயும் ஆரம்பித்தோம். இன்று ஓரளவு மாறுதல் அடைந்துள்ளது. இந்த அளவான மாறுதல் போதாது. இன்னமும் மாறுதல் தேவை. நீங்கள் மனம் வைத்தால் குறிப்பாக பெண்கள் மனது அமைத்தால் மிக விரைவில் கொடுமைகளை உடைத்து விடலாம்” என்றார் தந்தை பெரியார் (விடுதலை 26.5.1962)
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்தக் காலகட்டத்தில் நம் தமிழ்நாட்டில், இன்றைய தென் இந்தியாவில் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பெண் குழந்தைகளின் நிலைமை நம் கண் முன்னால் தெரிகிறது. குழந்தை வயதுத் திருமணங்கள், குழந்தை வயது விதவைகள், பெண்களுக்கான கல்வி மறுப்பு, அர்த்தமற்ற சடங்குகளால் ஆச்சாரங்கள் என்னும் பெயரால் பெண்கள்,பெண் குழந்தைகள் கொடுமைப்படுத்தப்பட்ட நிலைமை என்று அன்று இருந்த நிலைமைக்கும் இன்று இருக்கும் நிலைமைக்கும் மடுவுக்கும் மலைக்குமான வேறுபாடு தெரிகிறது. இந்த மாற்றத்திற்கான காரணம் தந்தை பெரியார்தானே!
“பெண் குழந்தைகளின் எதிர்காலத்தில் தீவிரமாக முதலீடு செய்வது நமது சொந்த எதிர்காலத்தில் முதலீடு செய்வதாகும்.ஒவ்வொரு பெண்ணின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் எதிர்காலத்தை நாம் ஒன்றாக உருவாக்க முடியும்’’ என்று அய்க்கிய நாடுகள் சபை இந்தத் தினத்தை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. இதைத்தான் திராவிட இயக்கங்கள் பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் செய்து வருகின்றன.அதனால்தான் உயர்கல்விக்குச் செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை 50 சதவிகிதத்திற்கும் மேலாகத் தமிழ்நாட்டில் இருக்கிறது. இப்போது கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்படும் பெண் மாணவிகளுக்கான ‘புதுமைப் பெண்’ திட்டம் இத்தகைய திட்டமே! இதைப்போன்ற பல திட்டங்கள் இன்றைய திராவிட மாடல் அரசால்,சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒரு பெண் குழந்தை தானாக வெளியில் செல்ல முடியாத நிலைமை இன்றைக்கும் இந்தியாவின் வட நாட்டில் நிலவுகிறது. மூடத்தனத்தின் முடை நாற்றம் வீசுகின்ற அந்தப் பகுதிகளில் பெண் குழந்தைகளின் கல்வி என்பது எட்டாக் கனியாக உள்ளது.தலிபான் போன்ற மதவாதிகள் பெண் குழந்தைகளுக்கு ‘சமைப்பது எப்படி‘ என்பதை மட்டும் கற்றுக் கொடுத்து, அவர்களை அடுப்பங்கரைக்கும், படுக்கையறைக்கும் பயன்படும்படி மட்டும் வளர்த்தால் போதும் என்று
அறிவுரை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ‘பெண்களின் கையில் இருக்கும் கரண்டியைப் பிடுங்கிவிட்டு
அவர்கள் கையில் புத்தகங்களைக் கொடுங்கள்’ என்றவர் தந்தை பெரியார்! மதவாதப் பிற்போக்குத்தனம் நிலவும் உலகின் பல நாடுகளில் தந்தை பெரியாரின் குரல் பயணிக்க வேண்டிய அவசியமிருக்கிறது.
‘‘இளம்வயதில் அப்பா,மணமான பின் கணவன்,வயதான காலத்தில் பிள்ளைகள் கட்டுப்பாட்டில்தான் பெண்கள் இருக்கவேண்டும்’’ என்று மனுநீதி சொல்கிறது. அந்தக் குரலைத்தான் பல்வேறு வடிவங் களில் இந்துமதப் பழமைவாதிகள் பலகோணங்களில் சொல்கின்றனர்.’பெண் ஏன் அடிமையானாள்?’’ என்பதற்கான காரணங்களை ஒரு வெளியீட்டின் மூலம் தெளிவுபடுத்தி இன்றைக்கும் பல மொழிகளில் பெண்களுக்கான விழிப்புணர்வை அந்த நூல் கொடுத்துக்கொண்டிருக்கிறது.‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்னும் நூலின் ஒவ்வொரு பக்கமும் இன்றைக்கு பெண்களால் வாசிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளிடம் கொண்டு போய்ச் சேர்க்கப்பட வேண்டும். தந்தை பெரியாரின் தத்துவம் பெண் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். சுயமரியாதையை உணர்த்தும். உலகின் ஏற்றத்தாழ்வுகளை எளிதில் புரிந்துகொள்ள வழிவகுக்கும். இதை மாற்றுவதற்கான வழி என்ன என்பதைப் பற்றி யோசிக்க வைக்கும். அஞ்சி நடுங்கி கோழைகளாய் அடுப்பங்கரைக்குள் கிடந்து, வெந்து, நொந்து வாழும் வாழ்க்கை முறையிலிருந்து மாறி எதையும் எதிர்கொள்ளும் துணிவு மிக்க பெண்களாய் எதிர்காலத்தில் பெண் குழந்தைகள் மாற வழி வகுக்கும். ஜாதி, மத பேதங்களைத் தள்ளி
ஒதுக்கிவிட்டு மனிதர்களாய் மாறி வாழும் பொன்னான
வாழ்க்கைக்கு அடித்தளம் அமைக்கும்.