உலக வாழ்க்கையில் பொருளின்றி பொருளில்லை. எனவே, பொருள் என்பது வாழ்வின் அடிப்படை, பொருளாதாரச் சிந்தனைகள் வளர்ந்து விரிந்து நிற்கின்ற இன்றைய நாளில்கூட பழமொழிகள் வழங்குகின்ற பொருள்சார்ந்த சிந்தனைகள் மிகவும் ஏற்புடையதாயும், பயனுடையதாயும் உள்ளன.
“பணம் பத்தும் செய்யும்”
“பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்”
“ஈட்டி எட்டிய மட்டும் பாயும்”
“பணம் பாதாளம் வரை பாயும்!”
என்ற பழமொழிகள் பொருளின் கட்டாயத் தேவையையும், பொருள் எத்தகு வலிமையுடையது என்பதையும், பொருளைக் கொண்டு எதையும் செய்யலாம் என்பதையும் விளக்கி, அரிய பொருளியல் சிந்தனைகளை வழங்குகின்றன.
இச்செல்வத்தை எப்படி ஒரே நாளில் கொள்ளையடித்துப் பெறுவதா? எப்படிப் பெறுவது?
“சிறுதுளி பெருவெள்ளம்”
“சிறுகச் சேர்த்து பெருக வாழ்”
என்ற பழமொழிகள் எப்படிப் பொருள் சேர்க்க வேண்டும் என்ற அறவழியையும், நேர் வழியையும் காட்டுகின்றன.
ஒருவர் கொடுத்து மற்றவர்கள் வாழவுங் கூடாது: வாழவும் முடியாது என்கிறது பழமொழி. பின் எப்படி பொருள் ஈட்டி வாழ்வது?
“பத்து விரலால் பாடுபட்டு அய்ந்து விரலால் அள்ளியுண்!”
என்கிறது பழமொழி.
இது எவ்வளவு கருத்துச் செறிவுள்ள சிந்தனை பாருங்கள். விரல்கள் உண்ண மட்டும் அல்ல, உழைக்கவும் என்பதைக் கூறுவதோடு, உழைத்தே உண்ண வேண்டும் என்பதையும் தெளிவாகக் கூறுகிறது. எனவே, பிறரிடம் ஏந்திப் பெற்று வாழாதே என்கிறது பழமொழி.
“இட்ட குடியும் கெடும் ஏற்றகுடியும் கெடும்”
என்ற நுட்பமான கருத்தை இது உலகுக்கு வழங்குகிறது.
கொடுத்துக்கொண்டேயிருந்தால், எவ்வளவு வளம் இருந்தாலும் அக்குடி சிறுகச்சிறுக அழியும். ஏற்று வாழும் குடி, சுயமுயற்சியில்லாமல், அடுத்தவரை நம்பியே இருந்து அழியும் என்ற இருபெரும் சிந்தனைகளை இப்பழமொழி அழகுற வழங்குகிறது.
வரவுக்கு ஏற்ற செலவு செய்ய வேண்டும். அதுவே வாழ்வு சுவைக்க வழி செய்யும்; பிறர் மதிக்கவும் துணை செய்யும்.
“விரலுக்கு ஏற்ற வீக்கம்; வரவுக்கு ஏற்ற செலவு”
என்ற பழமொழி இக்கருத்தை அழகுற விளக்குகிறது.
கடனில்லாமல், பிச்சையெடுக்காமல் உழைத்துப் பெறும் வருவாய் சிறிதாயினும் அதனைக்கொண்டு சிறப்புடன் வாழ் என்கிறது.
“கடனில்லா கஞ்சி கால்வயிறு போதும்”
வெட்கம் போனாலும் பரவாயில்லை விலா முட்ட சாப்பிட வேண்டும் என்பவர்களின் மண்டையில் கொட்டி, மானத்தோடு வாழ் என்ற சிந்தனையை இப்பழமொழி வழங்குகிறது.
செல்வம் நிறைந்த குடும்பமாயினும் உழைக்காது. உண்ணத் தலைப்படுவார்களானால், அக்குடும்பம் அழியும், செல்வம் முழுமையாய் ஒழியும் என்பதை,
“குந்தித் தின்றால் குன்றும் அழியும்”
என்ற பழமொழி எடுத்துக்காட்டோடு விளக்குகிறது. குவிந்து கிடக்கிற செல்வம் என்பதற்காக உட்கார்ந்து உண்ணத் தொடங்கினால் உருக்குலைந்து அழியும் என்கிறது.
பொருள் என்பது உண்ணுவதற்கு மட்டுமல்ல. பொருளாதார வலிமையில்லையென்றில், அவனை இச்சமுதாயம் புறக்கணிக்கும். எனவே பொருள் வேண்டும் என்ற உலக நடப்பினையும் உணர்த்துகிறது பழமொழி.
“ஏழை சொல் அம்பலம் ஏறாது!”
என்று திட்டவட்டமாகச் சொல்லி, பொருளின் தேவையைப் புரியும்படிச் செய்கிறது.
இப்படிப்பட்ட பொருளை ஊதாரித்தனமாகச் செலவு செய்யக் கூடாது. அதை அளவறிந்து, தேவையறிந்து, செயலறிந்து, செலவிட வேண்டும் என்கிறது, இதை,
“ஆற்றில் போட்டாலும் அளந்து போடு”
என்று கூறி, நயத்தோடு நல்வழிப்படுத்துகிறது நம் பழமொழி.
பொருளீட்ட வேண்டுமானால் உள்ளூரிலே உழன்று கொண்டிருக்காமல், வாய்ப்புக் கிடைக்கும் இடம் நோக்கிச் செல்லவேண்டும். அவசியம் நேரின் கடல் தாண்டியும் செல்ல வேண்டும் என்கிறது நம் பழமொழி.
“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு”
என்ற பழமொழியின் மூலம் இச்சிந்தனையை வழங்கிய நம் பழமொழி, கிராமப்புறங்களில் நலிந்து கெட்டுப்போனால், பொருளீட்ட பட்டிணத்துக்குப் போய் பிழைத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையை.
“கெட்டும் பட்டணம் சேர்”
என்ற பழமொழி வழங்குகிறது:
பொருள் வாழ்வின் அச்சாணி. நேருக்கு அல்லது வண்டிக்கு அச்சாணி இல்லையென்றால் நகராது. அதேபோல், பொருளின்றி ஒரு நாளைக்கூட நம்மால் கடத்த முடியாது, கடக்க முடியாது என்ற அடிப்படை சிந்தனையை,
“அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது!”
என்று உவமையோடு உணர்த்துகிறது பழமொழி.
பொருள் இருந்தால் சாதாரணமானவர்கள்கூட சாதனை படைப்பர் என்ற நடைமுறைக் கருத்தை நறுக்கென்று சொல்கிறது நம் பழமொழி.
“திரு உண்டானால் திறம் உண்டாகும்!”
என்ற பழமொழி மூலம் இந்த உயரிய சிந்தனை வழங்கப்படுகிறது.
ஏழையாய் உள்ளவன் இது நிரந்தரம் என்று ஏங்குவதும் தவறு; பணம் படைத்தவன் அது நிலையானது என்று கர்வம் கொள்வதும் தவறு. காரணம் வறுமையும், வளமையும், செல்வமும், ஏழ்மையும் வண்டிச்சக்கரத்தின் மேற்புறமும் கீழ்ப்புறமும் மாறி வருவதுபோல் மாறிமாறி வரும் என்ற உண்மை நிலையை உலகுக்கு உணர்த்துகிறது.
“வாழ்க்கையென்பது வண்டிச்சக்கரம்”
என்ற வாழ்வியல் பழமொழி. ஏழைக்கு நம்பிக்கையையும் பணம் படைத்தோனுக்கு ஓர் எச்சரிக்கையையும் இப்பழமொழி வழங்குவதை நாம் அறியலாம்.
வாழ்க்கையென்பது, பிறரைச் சார்ந்து வாழ்வதே. எனவே, பணத்திற்கும், பாதுகாப்பிற்கும், உதவிக்கும், நட்பிற்கும் இன்னும் பலவற்றிற்கும் நாம் பிறரைச் சார்ந்தே வாழ வேண்டும். அப்படியிருக்க நாமும் பிறருக்கு உதவவேண்டும்; நாமும் பிறருக்குக் கொடுத்துப் பயன் பெற வேண்டும். அவ்விதம் கொடுத்துப் பெறுகையில் மிகவும் நாணயமாகவும், நம்பிக்கையாகவும், நாகரிகமாகவும் உரிய காலத்திலும் செய்ய வேண்டும். ஆனால், பலரிடம் இப்பண்பு இருப்பதில்லை. பெறும்போது இருந்த மகிழ்வு அதைத் திருப்பிக் கொடுக்கும்போது இருப்பதில்லை.
“கொடுத்ததைக் கேட்டால் அடுத்தது பகை”
என்ற பழமொழி உண்மை நிலையை உணர்த்துவதோடு, அப்படிச் செய்யக்கூடாது என்பதையும் உள்பொருளாகக் கொண்டு இக்கருத்தை உரைக்கின்றது.
இப்படிப்பட்ட நிலைகள் ஏன் வருகிறது? உழைக்காமலே பிறர் உழைப்பில் உண்ண முற்படும்
போதுதான். எனவே, உழைத்து “ஈட்டி, சிறப்பாக வாழ வேண்டும் என்ற தன்மானச் சிந்தனையை,
“தோட்டி போல் உழைத்து துரைபோல் வாழ்!”
என்ற பழமொழி மூலம் வழங்குகிறது.
எவ்வளவு தாழ்நிலை வேலையாயினும் தரம் பாராது. அதை மனநிறைவோடு செய்தால், அதில் கிடைக்கும் பொருளை வைத்து உயர்வான, மதிப்பான, பண்பான, நேர்மையான வாழ்வை வாழ வேண்டும். கள்ளத்தொழில் செய்து, கனவானாய் மாளிகையில் வாழ்வதைவிட, எளிய தொழில் செய்து ஏழையாய் குடிசையில் வாழ்வதே மேல் என்ற உயர்வான சிந்தனையை உள்ளடக்கி நிற்கிறது இப்பழமொழி.
நாளைக்கு அதிகம் கிடைக்கும் என்பதைவிட இன்றைக்குக் குறைவாகக் கிடைத்தால் அதுவே மேல் என்ற சிந்தனையை,
“நாளைய பலாக்காயை விட இன்றைய களாக்காய் மேல்!”
என்ற பழமொழி ஆழமாகச் சொல்கிறது. காரணம், பொருளியல் அடிப்படையில் இன்றைய நூறு ரூபாய் மதிப்பு ஓராண்டு கழித்து 75 ரூபாய் மதிப்பே பெறுகிறது. இன்னுமொரு ஆண்டு போனால் 50 ரூபாய் மதிப்பே பெறுகிறது. எனவேதான் எதிர்காலத்தில் ஏராளம் கிடைக்கும் என்பதைவிட இன்றைக்கு சிறிது கிடைப்பதே மேல். அச்சிறுதொகைக்கு ஒரு பொருள் வாங்கினால் எதிர்காலத்தில் அது பெரும் மதிப்பைப் பெறும். எனவே, இழப்பு ஏற்படாது என்றும் சிந்தித்தே இப்பழமொழி கூறப்பட்டது என்பதால், இது நுட்பமான பொருளியல் சிந்தனையை உள்ளடக்கியதாகும்.
பொருளாதார உயர்வு என்பதே. சிறுதொகையைப் போட்டு பெருந்தொகையை ஈட்டுவதேயாகும். சில நேரங்களில் சிறுதொகையை இழந்தால்தான் பெருந்தொகையை ஈட்ட முடியும் என்ற கட்டாயம் வரும். அப்போது அதற்கும் முன்வர வேண்டும் என்ற பொருளாதாரம் சார்ந்த வணிகவியல் சிந்தனையை,
“சின்ன மீனைப் போட்டால்தான் பெரிய மீனைப் பிடிக்கலாம்”
என்ற பழமொழி தெளிவாகக் கூறுகிறது.
தன் சக்திக்கு ஏற்ற முதலீடு; முதலீட்டிற்கு ஏற்ற தொழில் என்பதே படிப்படியான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். மாறாக, அதிக ஆசை கொண்டு ஏராளமாய் கடன் வாங்கி செலவு செய்து தொழில் செய்வதென்பது சீரழியவே வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறது.
“அகலக்கால் வைக்காதே!”
என்ற பழமொழி அகலக்கால் வைத்தால் அல்லலே மிஞ்சும் என்ற சிந்தனையை இப்பழமொழி தெளிவாகத் தெரிவிக்கிறது.
வெளியூரில் மலிவு என்பதால் அப்பொருளை அங்கே வாங்க முயற்சிப்பதைவிட, சற்று விலை கூடுதலாயினும் அருகில் பெறுவது நல்லது. பொருளாதாரக் கண்ணோட்டத்தில் அதுவே சரியாகும் என்பதை,
”ஊசி மலிவு என்பதற்காகச் சீமைக்குச் சென்றா வாங்குவது?”
என்ற பழமொழி வினா எழுப்பிச் சிந்திக்க வைக்கிறது.
எந்தப் பண்டமும் அறிமுகம் இல்லையென்றால் விலை போகாது என்ற பொருளியல் சார்ந்த வணிகச் சிந்தனையை,
“ஆடம்பரமில்லா பெண்ணும்விளம்பரமில்லா பொருளும் விலை போகாது”
என்ற பழமொழி வழங்குகிறது.
சிறுகச் சேர்த்து முதல் பெருக்கினால்தான், அதைக் கொண்டு வளர்ச்சி பெற முடியும். அதைவிட்டு வெறுங்கையுடன் சென்று எதையும்ஜாதிக்க முடியாது என்பதை,
“குரு இல்லார்க்கு வித்தையில்லை
முதலில்லார்க்கு தொழிலில்லை”
என்ற பழமொழி தெளிவாகக் கூறுகிறது.
விலை குறைவான பொருட்களை வெகு தொலைவிலிருந்து கொண்டு வந்து விற்பதும் வாங்குவதும் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் சிறப்பல்ல. காரணம், அதன் விலையை விட அதைக் கொண்டு வரும் செலவு அதிகமாகிவிடும் என்பதை,
“சுண்டைக்காய் கால் காசு
சுமை கூலி முக்கால் காசு”
என்ற பழமொழி அழுத்தமாக, ஆழமாகத் தெரிவிக்கின்றது.