மூத்திரப்பை கைசுமந்து மூடத்தைக் களைந்தாய் வாழி !தந்தை பெரியார் பிறந்த நாள் வாழ்த்து!

2024 கவிதைகள் செப்டம்பர் 16-30-2024

– பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம்

காப்பில்லாக் கனிமரமாய்க் காய்த்த தெல்லாம்
கயவர்கை பறித்தெடுத்தும் மகிழ்ந்தி ருந்தோம்!
தோப்பென்று கூடாமல் தனித்தி ருந்து
துயர்ச்சாதி மயக்கத்தில் அமிழ்ந்தி ருந்தோம்!
கூப்புதற்கே கைகளுற்றோம்! பணிந்து நிற்கக்
கூன்முதுகில் குலப்பெருமை ஏற்றி வைத்தோம்!
பூப்பறியா மலர்ச்செடியாய்க் கல்வி யற்றும்
புத்தனெங்கள் பாட்டனென்று பெருமை கொண்டோம்!
இருள்செரிக்கும் கதிரொளியாய் நின்கண் பட்டே
இழிவிருளை ஓட்டியெம்மின் விடியல் கண்டோம்!
மருளூட்டும் மதஞ்சாதி சாத்தி ரங்கள்
மறுதலித்து மனிதந்தான் முதன்மை யென்னும்
தெருளூட்டத் தெருவெல்லாம் வடம்பி டித்துத்
திராவிடத்தேர் தனியயென இழுத்து வந்தே
அருள்கூட்டி அணைத்தெமக்கு மீட்சி தந்தே
அரியனையில் அமரவைத்த அய்யன் நீயே!
ஆணாகப் பிறந்திருந்தும் பெண்க ளுக்காய்
ஆண்டையெனச் சுகித்திருந்தும் அற்ற வர்க்காய்க்
கூனாத சாதியிலே பிறந்தி ருந்தும்
கேடாக இழிந்துழன்ற தாழ்ந்த வர்க்காய்க்
கோனாக வாய்ப்புவந்தும் உதறித் தள்ளிக்
கொள்கைசொலிக் கொடிபிடித்துப் போரி டர்க்காய்த்
தானெதுவா யிலையோஅந் நிலைகொண் டார்க்காய்த்
தனைமறுத்துத் தொண்டுசெய்த தாயு மானன்!
எரிதழலாய் எதிர்த்தெழுந்த வேதி யத்தை
எரிமலையாய் வெடித்தெழுந்து பொசுங்க வைத்தாய்!
புரிநூலார் புரட்டுவஞ்சப் புனைசு ருட்டைப்
புத்தனாகிப் புத்திசொல்லிப் புரிய வைத்தாய்!
மறிகடலின் பெருந்திரளாய் வாழ்ந்த மக்கள்
வருணத்தால் சிறுகுளமாய்த் தேங்கி நின்றோம்!
அறிவாசான் பெரியார்நும் தொண்டி னாலே
அடிமைவிலங் கறுத்தெரியும் அறிவை யுற்றோம்!
மூத்திரப்பை கைசுமந்து வலிபொறுத்து
முடங்காதெம் மூடத்தைக் களைந்தாய் வாழி!
சாத்திரப்பொய் சனாதனச் சதிநொ றுக்கித்
தன்மானச் சங்கநாதம் ஒலித்தாய் வாழி!
சூத்திரர்க்கும் உரிமைகளைப் பறித்தெ டுக்கச்
சூளுரைத்துத் தொடர்ந்துழைத்த தலைவ வாழி!
காத்திரமாய் எமைக்காத்த கருப்பே வாழி!
கைகூப்பி வணங்குகின்றோம் பெரியார் வாழி!