பிஞ்சு நெஞ்சில் நஞ்சா?- திருப்பத்தூர் ம.கவிதா

2024 கவிதைகள் செப்டம்பர் 16-30-2024

செயற்கை நுண்ணறிவுக் காலமிதில்
ஜீ(சீ)பூம்பா காட்டும் ஒருவன்
சொத்தைக் கருத்துகளைச் சொல்லி
வித்தை காட்டும் (மகா)விஷ்ணு!

மந்திரங்கள் உச்சரிக்க
மழையே நெருப்பாய்ப் பொழியுமாம்!
உளறுகிறான் இவ்வாறாய்
ஊருக்குள் இக்கிறுக்கன்!

ஆகாய விமானத்தில்
ஆஸ்திரேலியா போனானா?
அஞ்சனை மைந்தனைப் போல்
ஆகாயத்தில் பறந்தானா?

பாவமாம் புண்ணியமாம்
பிறவிப்பலன் கல்வியே ஞானமாம்
பெரியார் பிறந்த மண்ணில்
பிதற்றுகிறான் என்ன துணிச்சல்?

வீறுகொள் மாணவப் பருவத்தைச்
சேறுபூசிச் சிதைக்கப் பார்க்கிறான்!

ஆன்மிகப் பேச்சென்று
அளந்து கொட்டுவோர் வரிசையில்
இப்போது இவன் புதுவரவு!

பிறப்பால் தரம் பிரித்தல்
பெரும் சேவை போல்
பேசுகிறான் எகத்தாளப் பேச்சு!

ஆசிரியர் ஒருவர் எழுந்து
அறிவுக்கண் திறந்து
சீறினார் பார் சினந்து…

அடேய் இதுதாண்டா தமிழ்நாடு!
மாற்றுத்திறனர்களை மதிக்கும்
மனிதப் பண்பாடு!
இது கூட தெரியாத மகாவிஷ்ணு
இஃதுனக்கு மகா வெட்கக்கேடு!

பள்ளிக் கதவுகள் திறந்தது இங்கு
நூற்றாண்டு தட்டிய பாடு!

கறையான் புற்றெடுக்க
கருநாகக் குடியிருப்பா?
புருடாக்கள் புகுத்துவது தான்
புத்தகம் தாண்டிய வித்தகப் படிப்பா?

குருகுலம் ஒழிந்ததால்
நாசமானதாமே நாடு?
உன் பாட்டன் பாட்டி காலத்தில்
ஒரு விழுக்காட்டுக்கும் குறைவு படிப்பு!

வாழ்வியல் என்ற பேரில்
வாய்க்கு வந்ததை
வரலாறு அறியாமல் உளறாதே!

வஞ்சக எண்ணத்தோடு
வளர்பிஞ்சுகள் நெஞ்சில்
நஞ்சை கருத்துகள் புகுத்தாதே!

மதியே உலகை வெல்லும் வேளையில்
விதியெனும் வேதாந்தம் பேசாதே…

மனிதனை முன்னிறுத்தக் கூடாதெனில்
மருத்துவம் மருந்துகள் இனியெதற்கு?
பெரு நோய்கள் பீடித்தாலும்
முற்பிறப்பில் செய்த பாவமென
முடங்கி மடிவாயா நீ வீட்டில்..?

கேள்வி கேள் என்கிறது பகுத்தறிவு;
ஏற்றுக்கொள் என்கிறது ஆன்மிகம்.
அச்சமும் அவநம்பிக்கையும்
உளவியல் அச்சுறுத்தலும் தான்
ஆன்மிகச் சொற்பொழிவெனில்
தட்டிக்கேட்க, தானே வெடிக்கும் புரட்சி!

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகென
மாமனிதர் பெரியார் சொன்னார்!

மனிதனை மனிதன் வெறுக்கும்
மகாகேடுகளின் புதுப்புது ஊடுருவல்கள்
நாடு விட்டு நகர்ந்தோட
பெரியாரே நமக்குக் கைத்தடி!
மாணவச் சமூகமே நீ
பெரியாரைப் பிழையறப் படி!