ஆன்மிகக் காலம் அல்ல; ‘Artificial Intelligence’ காலம் !வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

2024 கட்டுரைகள் செப்டம்பர் 16-30-2024

உலகில் எந்தத் தொழில் தொடங்குவதற்கும் முதலீடு மிக அவசியம். கையில் பணம் இல்லாமலோ, முதலீடு செய்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லாமலோ எவ்விதத் தொழிலையும் தொடங்குவது சிரமமான காரியம். ஆனால், மிகவும் எளிதாக, ஒரு ரூபாய்கூட செலவின்றி தொழிலைத் தொடங்கி, பல கோடி ரூபாய் இலாபம் ஈட்ட முடிகின்ற வாய்ப்பினைப் பெற்ற ஒரே தொழில் “சாமியார் தொழில்” மட்டுமே! யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு லாபத்தை ஈட்டித் தரும் இவ்வகை சாமியார் தொழிலுக்கு மிக முக்கியமான இரண்டு முதலீடுகள் இருக்கின்றன. அவை:

* மக்களின் பயம் – அச்ச உணர்வு

* மக்களின் பேராசை – பணக்கார மோகம்

மேற்சொன்ன இரண்டு காரணங்களும் மக்களின் உளவியல் சம்பந்தப்பட்டது. தன்னால் ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாமல், அந்தப் பிரச்சனையின் அழுத்தத்திலிருந்து எப்படியேனும் விடுபட வேண்டும் என்று நாள்தோறும் பிரச்சினைகளைப் பற்றியே சிந்தித்துப் பயம் கொள்ளக்கூடிய மக்கள் ஒரு பக்கம்; மறுபுறம் கடவுளால் தான் அனைத்தும் நடக்கிறது; கடவுளை விட்டுவிட்டால் நம்மால் நிம்மதியாக வாழ முடியாது என்றும், கடவுளை எதிர்த்துக் கேள்வி கேட்கத் துணிச்சலற்றும் பயம் கொள்ளும் தன்மை.
இதைவிட மிக ஆபத்தான மனநிலை என்பது, பணம் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்; சேருகின்ற பணத்தைப் பாதுகாத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் பணம் சேர்ப்பதற்காகவும் சேர்த்த பணத்தைப் பாதுகாப்பதற்காகவும் அதற்குத் துணையாகக் கடவுள் தன் பக்கம் இருக்க வேண்டும் என்று நினைக்கும் போக்கு. அதிலும் குறிப்பாக, சாமியார்கள் மூலம் கடவுளின் ஆசியைக் குறுக்கு வழியில் பெற்றுவிடலாம் என்ற எண்ணம். முதல் ரகம் ஏழை, எளிய நடுத்தர வர்க்க மக்கள்; இரண்டாவது ரகம் பணக்காரர்களும், பெரும் முதலாளிகளும்.

இப்படியாக கடவுள் நம்பிக்கை கொண்ட அனைத்து தரப்பு – மக்களும் சாமியார்களைத் தேடி செல்லும் சூழலை மதம், ஆன்மிகம் என்ற பெயரில் “வணிகச் சாமியார்கள் கூட்டம்” ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

‘பக்தி வந்தால் புத்தி போகும்; புத்தி வந்தால் பக்தி போகும்’ என்று தந்தை பெரியார் கூறியதை நம் மக்கள் உணர்ந்ததை விட சாமியார்கள் கூட்டம் அதிகம் உணர்ந்திருப்பதால் தான், மக்கள் எந்த வகையிலும் புத்தி வந்து சிந்திக்காமல், தங்களைக் கேள்வி கேட்காமல் பார்த்துக் கொள்கின்றனர். மக்களைச் சிந்திக்க விடாமல் தடுப்பதற்கு எந்த வகையில் எல்லாம் முயற்சிகளை மேற்கொள்ள முடியுமோ அதனை, அந்தந்தக் காலகட்டத்திற்கு ஏற்றவாறு செய்து வருகின்றனர். அப்படி இந்த நவீன யுகத்தின் மாடர்ன் சாமியார்தான், கைது செய்யப்பட்டுள்ள மகாவிஷ்ணு என்ற குட்டி அவதாரம்!

பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு, வாழ்க்கையில் உழைத்துச் சம்பாதிக்கச் சோம்பேறித்தனப்பட்டு,  சித்தர் சொன்னார்; காசி விசுவநாதர் சொன்னார் என்ற கட்டுக்கதைகளுடன் சாமியாராக உருவாகி இருக்கிறார். இந்த ஏமாற்றுப் பேர்வழி. ஆபாசக் கதைகள் கூறுவது, ஞானம் என்ற பெயரில் பல இச்சைகள் பொருந்திய கதைகளைக் கூறுவது, பாவம் – புண்ணியம் என்று ஏமாற்றுவது, தானே ஞானம் பெற்ற சித்தர் என்றும், சித்தர்கள் தான் இவை அனைத்தையும் பேசச் சொன்னார்கள் என்றும் ‘மெகா’ பொய்களைச் சொல்வதில் வல்லவர்தான் இந்த மகாவிஷ்ணு.

ஊரில் உள்ள மக்களைக் கடந்து, வெளிநாடு வாழ் தமிழர்களையும் ஏமாற்றிக் கொண்டிருந்த இந்த நபர், சென்னையில் உள்ள இரண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடம் பாவம் – புண்ணியம் என்று கதைகளைப் பேசியும், அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகளை விதைத்தும், மாற்றுத்திறனாளிகளைக் கொச்சைப்படுத்தியும், அதை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அவரே பகிர்ந்து, தானாகவே மாட்டிக் கொண்டு கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

தமிழ் மண்ணிலே, தமிழ்நாட்டு மாணவர்களிடம் இது போன்ற மூடநம்பிக்கைகளை விதைத்து, நாளைய தலைமுறையைப் பகுத்தறிவற்றவர்களாக- மனிதநேயமற்றவர்களாக மாற்ற விடமாட்டோம் என்ற குரலுடன், அறிவு இயக்கமான தந்தை பெரியார் கண்ட  திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், எந்தப் பள்ளியில் பாவம் – புண்ணியம் என்று மூடநம்பிக்கைச் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டதோ, அதே பள்ளிக்கு அருகாமையில் இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 51A(h) பரப்புரைக் கூட்டத்தை நடத்தி, மக்களுக்கு ஆதாரங்களுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

பள்ளிக்கூடங்கள் அனைவருக்கும் பொதுவானவை; அனைவரையும் பொதுவாக நடத்தக்கூடிய, எந்தவித பேதமும் இன்றி, குழந்தைகள் சீரிய சிந்தனையுடனும் அறிவாற்றலுடனும் வளர்வதற்கான ஓர் இடம் ஆகும். அந்த இடத்தில் மதப் பிரச்சாரமோ, ஆன்மிகப் பிரச்சாரமோ, மூடநம்பிக்கைகளை வளர்க்கக்கூடிய பிரச்சாரமோ, அவ்வகையான எவ்வித நடைமுறைகளையும் மேற்கொள்ளக்கூடாது என்பது அரசியல் சட்டம் நமக்கு உணர்த்தும் செய்தி. அந்த வகையில் ஏமாற்றுப் பேர்வழியான, மோசடி சாமியாராக வலம் வரும் மகாவிஷ்ணு போன்ற கயவரைப் பள்ளிக்குள் பேச அனுமதித்தது யார்? என்ற கேள்வியைச் சமூக வலைதளங்களில் இளைஞர்கள் கேட்கத் தொடங்கியவுடன், அதனை தமிழ்நாட்டு அரசுக்கு நேரடியாகக் கொண்டு செல்லும் நோக்கில் மிக விரிவான, விளக்கமான நீண்ட அறிக்கையை ஆசிரியர் அவர்கள் வழங்கினார்.

உடனடியாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எந்தப் பள்ளியில் சங்கர் என்ற மாற்றுத்திறனாளி ஆசிரியருக்கு எதிராக மகாவிஷ்ணு பேசினாரோ, அதே பள்ளிக்குச் சென்று ஆசிரியர் சங்கரின் துணிச்சலைப் பாராட்டி மகிழ்ந்தார். அதனோடு நில்லாமல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மிகத் தீர்க்கமாக அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது தான் இந்த அரசினுடைய நோக்கம் என்பதைக் குறிப்பிட்டு வெளிப்படையாக அறிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரசு இம்மாதிரியான பிரச்சனைகள், சம்பவங்கள் நடக்கின்ற போது அதனைக் கண்டும் காணாமல் இருப்பதுபோல் இல்லாமல், உடனடியாகக் குழந்தைகளின் பகுத்தறிவின் மீதும், தமிழ்நாட்டு வளர்ச்சியின் மீதும் அக்கறை கொண்டு நடவடிக்கை எடுப்பது என்பது மிக ஆக்கப்பூர்வமான செயல் ஆகும். அதனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர் அவர்கள் தமிழ்நாட்டு அரசை வெகுவாகப் பாராட்டி, தமிழ்நாடு அரசைப் பாராட்டுவதற்கான மேடையாகவும் அந்த மேடையை அமைத்திருந்தார்.

சுட்டிக்காட்ட வேண்டியதைச் சுட்டிக்காட்டுவதும், பாராட்ட வேண்டியதைத் தாமதமின்றிப் பாராட்டுவதும் தாய்க் கழகத்தின் கடமை வழிப்பட்ட பண்பன்றோ?

திராவிடர் இயக்கத்தில் அங்கம் வகிக்கும் சிலரே ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்டு, அறிவியல் வளர்ச்சியைப் புறந்தள்ள நினைக்கின்ற வேளையில், ‘பேரறிஞர் அண்ணா’ அவர்கள் கூறிய கருத்தினை நாளும் அவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டிய தேவையும் எழுந்திருக்கிறது.

“எலக்ட்ரிக்,ரயில்வே, மோட்டார்,  கப்பல்,  நீர்மூழ்கிக் கப்பல், அதைக் கண்டுபிடிக்கும் கருவி, டார்பிடோ, அதனின்றும் தப்புவிக்கும் கருவி, விஷப் புகை, அதைத் தடுக்கும் முகமூடி,

இன்ஜக் ஷன் ஊசி, இனாகுலேஷன் ஊசி, இவைகளுக்கான மருந்து, ஆப்ரேஷன் ஆயுதங்கள், தூரதிருஷ்டி (தொலைநோக்கி)க் கண்ணாடி, ரேடியோ, கிராமபோன், டெலிபோன், தந்தி, கம்பியில்லாத் தந்தி, போட்டோ மெஷின், சினிமாப் படம் எடுக்கும் மெஷின், விமானம், ஆளில்லா விமானம், டைப் மெஷின், அச்சு எந்திரம், ரசாயன பொருட்கள், புதிய உரம்,  புதிய விவசாயக் கருவி, சுரங்கத்துக்குள் போகக் கருவி, மலை-உச்சி ஏற மெஷின், சந்திரமண்டலம் வரை போக சாட்டிலைட் விமானம், அணுவைப் பிளக்கும் மெஷின்  இன்னும், எண்ணற்ற, புதிய, பயன் தரும்-மனிதனின் கற்பனைக்கே எட்டாத, மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்தவர்கள்எல்லாம், இன்னமும் கண்டு பிடிக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, கொண்டாடாதவர்கள்!” (பேரறிஞர் அண்ணா, ‘திராவிடநாடு’ – 26.10.1947)
மேற்சொன்ன செய்திகளை ஒரே வரியில், மக்களுக்குப் புரிகின்ற வண்ணம் ஆசிரியர் எடுத்துரைத்த விதத்தை வியந்து பார்க்கிறோம். ‘ஆன்மிகம் பேசிக் கொண்டிருக்கிறோம் – Artificial Intelligence (AI) வளர்ந்து கொண்டிருக்கக் கூடிய காலகட்டத்தில்’ என்றார். ஆம், 21ஆம் நூற்றாண்டு என்பது ஆன்மிகக் காலம் அல்ல; ‘ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்’கள் போன்ற அறிவியல் வளர்ச்சிகளுக்கான காலகட்டம். நம் பிள்ளைகள், அடுத்த தலைமுறையினர் அறிவியலை நோக்கிச் சென்றால்தான் சமூகம் வளரும். ஆன்மிகத்தை நம்பிய எந்தச் சமூகமும் வளர்ச்சியடைந்ததாக வரலாறு இல்லை. தமிழ்நாடு அறிவியலை நம்பியதன் விளைவுதான் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக வளர்ந்து நிற்கிறது.

இவ்வளர்ச்சிக்குக் காரணம், தந்தை பெரியாரும், அவர்தம் கொள்கை வழி ஆண்ட – ஆளுகின்ற அரசுகளும்தான் என்பதை எவராலும் மறுக்க முடியாது!