திராவிடக் கொள்கையின் வெற்றியை பறைசாற்றும் ஆவணம்- வை.கலையரசன்

2024 செப்டம்பர் 1-15 நூல் மதிப்புரை

நூல் : கலைஞரின் பெரியார் நாடு
ஆசிரியர் : ப.திருமாவேலன்
வெளியீடு : கருஞ்சட்டைப் பதிப்பகம்,
ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், சென்னை-24
பக்கங்கள் : 144
விலை : 160/-

ஆரியத்தின் வஞ்சகத்தால் அடக்கி ஒடுக்கப்பட்ட திராவிடர் இனத்தின் விடியலாய்த் திகழ்ந்த அறிவுலகப் பேராசான் தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பட்டறையில் பயிற்சி பெற்று உருவாகி அதனை, நானிலம் எங்கும் பரப்பிட தம் ஆற்றல் அனைத்தையும் பயன்படுத்தியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். அவரே பிற்காலத்தில் தமிழ்நாட்டை ஆளும் வாய்ப்பைப் பெற்று, தான் பயின்ற பெரியாரின் கொள்கைகளையும் திராவிடர் மறுமலர்ச்சிக் கோட்பாடுகளையும் சட்டங்களாக, நலத்திட்டங்களாக உருவாக்கியவர். அவரைப் பற்றிய பல்வேறு அரிய தகவல்களை, எளியோர் அறியும் வகையில் தெள்ளிய நடையில் எழுதப்பட்டு வெளிவந்துள்ள நூல்தான் “கலைஞரின் பெரியார் நாடு” என்னும் புத்தகம்.

படிக்கத் தொடங்கினால் முடிக்கும் வரை கீழே வைக்க மனம் இல்லாத அளவிற்கு சுவையான நடையில் தெளிவான செய்திகளால் நிரப்பப்பட்டுள்ளது.

இந்நூல் திராவிடர் இயக்கச் சிந்தனையாளர், எழுத்தாளர் ப.திருமாவேலன் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளின் நூல் வடிவம்.
ஊடகவியலாளராகவும், எழுத்தாளராகவும் அறியப்படும் தோழர் திருமாவேலன், சிறந்த ஆய்வாளர். சமூகம், அரசியல் வரலாறு சார்ந்த செய்திகளைத் தொகுத்துத் தருவதில் தமக்கென தனி பாணியைக் கையாள்பவர். ‘ஆதிக்க ஜாதியினருக்கு மட்டுமே அவர் பெரியாரா? என்னும் நூல் தந்தை பெரியாரின் மீது வீசப்பட்ட அவதூறுகளை எரித்துச் சாம்பலாக்கிய தகனமேடை! அதுபோல் ‘இவர் இல்லாவிட்டால் எவர் தமிழர்’ நூலும் தந்தை பெரியார் தமிழர்களின் எழுச்சிக்கு – வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளை எடுத்துரைப்பதுடன் மோசடியான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் நூல்.

“பெரியோர்களே தாய்மார்களே”, “திரும்பத் திரும்பத் திராவிடம் பேசுவோம்”, “ஆதிக்க ஜாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?” “இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?”, “வைக்கம் வீரரும் ஜெயமோகனின் கயமையும்” போன்ற அவரது அறிவாயுதங்கள் வரிசையில் இது ஒரு முக்கிய ஆவண நூலாகும்.

“கலைஞரின் பெரியார் நாடு” என்னும் தலைப்பில் அமைந்துள்ள கட்டுரை தந்தை பெரியாரின் சிந்தனைகளைச் செயல்வடிவாக்கிய முத்தமிழ் அறிஞர் கலைஞரின் அரும்பணிகளைப் பட்டிய
லிடுகிறது.

அண்ணா அவர்கள் தி.மு.க. தொடங்கப்பட்ட போது அதன் பாதை எப்படியிருக்கும் என்று சுட்டிக்காட்டி ஆற்றிய உரை
யைப் பதிவு செய்துள்ளது. அதன் நீட்சியாக அரசியல் இயக்கமாக மாற்றி தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் சுயமரியாதைக் கோட்பாடுகளை ஒலிக்க வைத்த அண்ணாவின் அரசியல் சமூகத் தளத்தின் பணிகளை விளக்குகிறது.

1955 ஆம் ஆண்டு “இந்தத் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் இல்லாமல் நான் வாழ்ந்து பயன் என்ன“ என்ற தந்தை பெரியாரின் ஏக்கத்தைப் போக்கி தமிழ்நாடு என்று பெயர் சூட்டியதுடன், இரு மொழிக் கொள்கையை அரசின் கொள்கையாக்கி, தந்தை பெரியார் நடத்திய பண்பாட்டுப் புரட்சியில் தலையாயதான சுயமரியாதைத் திருமண முறைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளித்து மிகக் குறுகிய கால தமது முதலமைச்சர் பணியையும் வாழ்வையும் முடித்துக் கொண்டார் அண்ணா.

அதன் பிறகு வந்த கலைஞர் அண்ணாவைப் பின்பற்றி, அண்ணா செய்ய நினைத்த தந்தை பெரியாரின் கொள்கைகள் அனைத்தையும் சட்டபூர்வமாக்கினார். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை, பெண்களுக்குச் சொத்துரிமை, பெண்களுக்கு அரசுப் பணிகளில் உரிமை, தேர்தல்களில் உரிமை, இலவச எரிவாயு, அவர்களது பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள், மகளிர் முன்னேற்றம், திருமண உதவி, மகப்பேறு உதவி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் கொண்டு வந்ததை விளக்கமாகப் பதிவு செய்கிறது. சுயமரியாதை இயக்கத்தின் அடிநாதமான சமூக நீதியை அனைவருக்கும் பெற்றுத் தருவதில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றது முதல் இறுதி வரை கலைஞர் அவர்கள் ஆற்றிய பணிகளில் காட்டிய முனைப்பு ஆகியவற்றை விரிவாகப் பதிவு செய்கிறது.

மொழி வளர்ச்சி, மாநில உரிமைகள் ஆகியவற்றிற்கு கலைஞர் ஆற்றிய பணிகளை விரிவாகப் பதிவு செய்கிறது.
சுயமரியாதை, சமதர்மம், சமத்துவம் என்னும் தந்தை பெரியாரின் இறுதி இலக்கை நோக்கி இந்தச் சமூகத்தை நகர்த்துவதற்கு அடிப்படைக் காரணிகளான கூட்டுறவு வளர்ச்சிக்கும், நாட்டின் பொருளாதாரம், வளங்கள் ஆகியவற்றை மக்கள் உடைமையாக்குவதற்கும் கலைஞர் அவர்கள் செய்த ஏற்பாடுகளைப் பதிவு செய்கிறது.

“தமிழினத் தலைவர்” என்னும் கட்டுரை கலைஞர் அவர்களைப் பற்றி தந்தை பெரியார் அவர்களும் பேரறிஞர் அண்ணா அவர்களும் கணித்த கணிப்புகளையும் பின் நாட்களில் அவர் அந்தக் கணிப்புகளை உண்மையாக்கியதையும் விரிவாகப் பதிவு செய்கிறது.
‘உயிர் எழுத்து கலைஞர்’ என்னும் கட்டுரை கலைஞர் அவர்களின் எழுத்தாற்றலையும் படைப்பாற்றலையும் விளக்குகிறது.
பேனாவில் மை ஊட்டி அல்ல, ரத்தம் ஊட்டி எழுதியவர்; வியர்வை விட்டு எழுதியவர். அதனால் தான் கடைசி வரை அவரது எழுதுகோல் சாயாமல் இருந்தது. என்னிடம் இருக்கும் செங்கோலை யாரும் பறிக்கலாம்; எழுதுகோலைப் பறிக்க முடியாது என்று சொன்னவர். இந்த வயதிலும் உங்களால் எப்படி எழுத முடிகிறது என்று கேட்கிற பொழுது, ”எழுதவில்லை என்றால் செத்துடுவேன்” என்று சொன்னவர். எழுத்து அவரது உயிர். அதனால் தான் “தமிழ் உயிர் எழுத்தாய் இருந்தார் கலைஞர்” என்னும் நூலாசிரியரின் உயிரோட்டமான வரிகள் கட்டுரைத் தலைப்பை உயிர்ப்பிக்கின்றன.

‘திராவிடப் பண்பாடுவோம்’ என்னும் கட்டுரை தமது அரைகுறை ஆராய்ச்சிகளால் திராவிட மாடலை விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதிலடி தரும் விதமாக” திராவிட மாடல் என்பது சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம், அதிக அதிகாரங்களை மாநிலங்கள் பெறுதல், அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமை ஆகியவற்றின் உள்ளடக்கம் தான் திராவிட மாடல்” என்று பதிலளிக்கிறார்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு பல பரிமாணங்கள் உண்டு. கலை, இலக்கியம், இதழியல், அரசியல், சமூகவியல் என்று ஒவ்வொன்றிலும் முத்திரை பதித்தவர் அவர். பத்திரிகையாளராக ஆற்றிய பணிகள் மற்றும் அவரது அனுபவங்களைப் பதிவு செய்கிறார்.

திராவிடர் இயக்கக் கொள்கைகளைப் பாமர மக்களிடம் கொண்டு செல்வதில் நாடகங்களின் பங்கு இன்றியமையாதது. அத்தகைய நாடகங்களையும் அவற்றை எழுதிய நாடக ஆசிரியர்களாகவும் திகழ்ந்த திராவி இயக்கப் படைப்பாளிகள், கலைஞர்கள் குறித்த அரிய தகவல்களைப் பதிவு செய்கிறது.

வீழ்ந்து கிடக்கும் எந்த ஓர் இனமும் முன்னேற வேண்டுமானால், அவர்கள் விழிப்படைய வேண்டும். அவ்வாறு விழிப்படைய கல்வி மிக மிக அவசியமான தேவை. அக்கல்வி எளிய மக்களுக்குக் கிடைக்க விடாமல் தடை செய்யும் வகையில் இந்த நாட்டின் மூடப் பழக்கவழக்கங்களும், மதச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாஸ்திரங்களும் ஆதிக்கம் செலுத்தின. கல்விச் சாலைகளும் கல்லூரிகளும் அரசின் கட்டுப்பாட்டிலும், தனி நபர் கட்டுப்பாட்டிலும் உருவாக்கப்பட்டாலும் எளிய மக்களால் அதன் நிழலில்கூட இளைப்பாற இயலவில்லை. அவ்வளவு தடைகள் இருந்தன, அந்தத் தடைகளை உடைத்துத் தனித்துவம் பெற்ற கொள்கை திராவிடர் கொள்கை. உடைத்த இயக்கம் திராவிடர் இயக்கம்.

அந்தத் திராவிட ஆட்சி மரபில் வந்த கலைஞர் எளியோர் உயர்கல்வி பெறச் செய்த தொலை நோக்கான சட்டங்களையும் திட்டங்களையும் தம் சீர் எழுத்துகளால் பொறித்து வரலாற்றில் தமிழ் மக்கள் கல்விக்கு திராவிடமே வித்திட்டது என்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவுகிறார்.

கலைஞர் மீது பரப்பப்படும் அவதூறுகளில் மீண்டும் மீண்டும் பேசப்படுவது கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்ட பிரச்சினை. அந்தப் பிரச்சினையை ஆழமாக ஆதாரங்களுடன் அலசுகிறது இந்த நூல்.

ஏராளமான செய்திகளுடன் கலைஞரின் புகழ் மணக்க வெளிவந்துள்ள கருத்துப் பெட்டகம் இது.
அனைவரும் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல்… திராவிட இயக்க இளைஞர்கள் தங்கள் நண்பர்களுக்குப் பரிசளிக்க உகந்த நூல்.