விலங்கிடமிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுவது பகுத்தறிவு உணர்ச்சி தான். பகுத்தறிவுடன் நடப்பதும், மற்றவர்களை அவ்வழி நடக்கச் செய்வதும், பகுத்தறிவுக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வதும், பகுத்தறிவைப் பரப்புவதற்குப் பயணங்கள் மேற்கொள்வதும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வது என்பது சுலபமான வேலையாக நமக்குத் தெரியலாம். ஆனால், உலக வரலாற்றில் அறிவியல் மனப்பான்மையுடன் செயல்படுவதோ, பகுத்தறிவுடன் தனக்குத் தோன்றிய கருத்துகளை வெளிப்படுத்துவதோ மிகப்பெரிய அளவில் உயிருக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கும் பணிகளாக இருந்தன.
குறிப்பாக, ‘சிந்தித்துச் செயலாற்று; அவர் சொன்னார் இவர் சொன்னார் எனக் கருதி நம்பி முடிவு செய்து விடாதே!’ என்று மக்களிடம் பகுத்தறிவுக் கருத்தினைக் கூறிய சாக்ரடீஸ் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார். ‘சூரியன் தான் மய்யம். பூமியும் கோள்களும் அதைச் சுற்றி வருகின்றன’ என்று அறிவியல் உண்மையைச் சொன்ன கோபர் நிக்கஸ் அரசின் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரின் கோட்பாட்டினை வழிமொழிந்து டெலஸ்கோப் பற்றிய ஆய்வை விரிவுபடுத்திய கலிலியோ சிறைத் தண்டனைக்கு ஆளானார். ‘அண்டம் எல்லையற்றது; அதற்கு மய்யம் இருக்க முடியாது’ என்று சொன்ன புரூனோ தீயில் தள்ளப்பட்டார். இவை அனைத்தும் உலக அரசியல் என்று நாம் கடந்து போக முடியாது. காரணம், மத நூல்களுக்கு எதிராக அறிவியல் கருத்துகளைக் கூறிய வெளிநாட்டவர்களுக்கு மட்டும் இந்த நிலை இல்லை. மாறாக இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புக் கான தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கேட்ட ஒரே காரணத்திற்காக சனாதன் சன்ஸ்தாவின் குண்டுகளுக்குப் பலியானார் நரேந்திர தபோல்கர். அவரின் வரிசையிலே கோவிந்த் பன்சாரே, கல்புர்கி,
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் என்று மதவாதிகளாலும், அறிவியல் மனப்பான்மைக்கு எதிரானவர்
களாலும், பகுத்தறிவுச் சிந்தனைக்கு விரோதமானவர்
களாலும் படுகொலை செய்யப்பட்ட உயிர்கள் ஏராளம்.
பகுத்தறிவு பேச உயிரைப் பணயம் வைக்க வேண்டும் என்ற நிலையைத் தான் மேற்சொன்ன வரலாறுகள் எல்லாம் நமக்குக் காட்டுகின்றன. ஆனால், இவ்வனைத்து சூழல்களையும் துணிச்சலு
டன் எதிர்கொண்டு, தனது 95 வயது வரை பகுத்தறிவுப்
பிரச்சாரத்தைத் தோள் மீது போட்டுக்கொண்டு ஊர் ஊராக,
தெருத்தெருவாக, தமிழ்நாட்டின் வீதி எங்கும் பரப்பிய தலைவர் தந்தை பெரியார். எத்தனை வசை மொழிகள், ஆபாச வசை
பாடல்கள், எதிர்ப்புகள், செருப்பு மாலை, கூட்டத்தில் கழுதை, முட்டையில் மலம் வைத்து அடித்தல் என்று அனைத்து
எதிர்ப்பையும் கடந்து, ‘கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை!’ என்பதை உரக்கச் சொன்னார் பெரியார். தனது பகுத்தறிவுக் கருத்துக்கு விலை அவரின் உயிர் தான் என்பதை உணர்ந்தும், தந்தை பெரியார் இத்துணை துணிச்சலுடன் பகுத்தறிவுக் கருத்துகளை, மூடநம்பிக்கை ஒழிப்பை, கடவுள் மறுப்பைப் பேசியதற்கு என்ன காரணம் என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தந்தை பெரியாரின் பகுத்தறிவு உணர்ச்சிக்குப் பின்னால் இருந்தது ஆழமான மானுட நேசிப்பு. மனிதநேயத்தின் வாயிலாகத் தான் தந்தை பெரியாரின் பகுத்தறிவை நம்மால் உணர முடியும். என்னுடன் வாழும் சக மனிதன் ஜாதியின் பெயரால் தீண்டாமைக் கொடுமைகளை அனுபவிக்கும் போது, அதை எதிர்த்து எழுப்பப்படும் குரலில் பகுத்தறிவு உணர்ச்சி வெளிப்பட வேண்டும். ஒருவர் ஏன் கீழ்? ஒருவர் ஏன் மேல்? என்ற கேள்வி தான் பகுத்தறிவின் ஆரம்பப் புள்ளி. பெரியாரின் வாழ்வில் நேரடியாக ஜாதியக் கொடுமைகளால் தீண்டாமை என்கிற வலியை அனுபவிக்காத போதும், தன்னுடன் வாழும் சக மனிதனின் வலியைத் தன் வலியாக உணர்ந்து, இதற்கு எது காரணம்? யாரால் இது ஏற்படுத்தப்பட்டது? யாருக்கு இதனால் பயன்? என்று ஏன், எதற்கு, எப்படி, யாரால், எங்கு என்கிற அனைத்துக் கேள்விகளையும் தனக்குத்தானே கேட்டு, அதற்கான விடை தேடிய பயணத்தில், பெரியாரின் கொள்கைகளில் கடவுள் மறுப்பும் முதன்மையாக மாறிப்போனது.
மானுட சமத்துவத்திற்கு எதிராக எது வந்தாலும், அதனை எதிர்ப்பேன் என்ற கொள்கை உணர்வின் வெளிப்பாடுதான் பெரியாரின் கடவுள் மறுப்பு.
“மனிதனை மனிதன் தொடக் கூடாது; கண்ணில் படக் கூடாது; தெருவில் நடக்கக்கூடாது; கோயிலுக்குள் போகக் கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கின்றவை போன்ற கொள்கை தாண்டவமாடும் ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ; எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ; சமுத்திரம் பொங்கி மூழ்கச் செய்யாமலோ; பூமிப்பிளப்பில் அமிழச் செய்யாமலோ; சண்ட மாருதத்தால் துகளாக்காமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகும் கூட, கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், சர்வதயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால், அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.”
மேற்சொன்ன வரிகளை உற்று நோக்கினால், இலக்கியவாதிகளால் கூட இத்தனை நயத்துடன் அவரின் கருத்தை வெளிப்படுத்த முடியாது என்பதை உணர முடியும். இத்தனைக் கொடுமைகளை ஒரு சமூகம் அனுபவித்துக் கொண்டுள்ள போது, அதனை எதிர்த்து இம்மி அளவு கூட அசையாத ஒரு கடவுள் இருக்கிறார் என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா? என்ற கேள்வியைப் பெரியார் தொடர்ந்து கேட்டார். அப்படி ஒருவர் இருந்தாலும் அவரை நீதிமான் என்று சொல்வது எவ்வளவு பெரிய முரண் என்ற பெரியாரின் கேள்விக்கு இந்நாள் வரை பதில் இல்லை. இன்றைய இளைஞர்கள் பெரியாரைப் பற்றி வாசிக்கும்போது அவரது எழுத்துகளில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொள்ள முற்படுகின்றனர். பெரியாரின் ஒவ்வொரு சொற்களுக்கும் அழகான விளக்கத்தைக் கொடுக்க அவர்களின் மொழியில், அவர்களின் நடையில் சமூக வலைதளங்களில் முயற்சி செய்கின்றனர். அப்படி ஒரு மிக சுவாரசியமான, எளிமையான பதிவைக் காண நேர்ந்தது.
ஒரு பெரியவர் இளைஞன் ஒருவனிடம் ‘உன் பிரச்சனைகளைக் கடவுளிடம் கூறு அவர் பார்த்துக் கொள்வார்’ என்று, அதற்கு அந்த இளைஞன் சட்டென சொல்கிறான், ‘எனக்கு என்ன பிரச்சனை என்று தெரியாத ஒருவர் எனக்கு எப்படிக் கடவுளாக இருக்க முடியும்?’.
‘கடவுளுக்குத்தான் எல்லாம் தெரியுமே! என் பிரச்சனை என்னவென்று அவரே கண்டுபிடித்துத் தீர்த்து வைக்க மாட்டாரா?’ என்று மற்றொரு பதிவு.
இது போன்ற பதிவுகளைப் பார்க்கின்றபோது, வட இந்தியாவில் இல்லாத ஒரு புரிதலை இங்கு ஏற்படுத்தி, வட இந்தியாவில் பகுத்தறிவு பேசினால் உயிர் போகும் என்ற அச்சத்தைத் தமிழ்நாட்டில் தளர்த்தி, அறிவியல் சிந்தனைகளை, அறிவியல் மனப்பான்மைகளைத் தாராளமாகவும் எளிமையாகவும் எந்தப் பயமும் இன்றிப் பரப்புவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்த இயக்கம் சுயமரியாதை இயக்கமும், தலைவர் தந்தை பெரியாரும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
ஒரு கொள்கையை முன்னிறுத்துவது என்பது அனைவரும் செய்யக்கூடிய காரியம் தான். ஆனால், தனக்குப் பின்னும் அந்தக் கொள்கையைத் தளர்வின்றி, தடையின்றி உலகெங்கும் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு தலைமையை அடையாளம் காட்டுவது என்பது எல்லோராலும் முடியும் காரியம் அல்ல. அதையும் பெரியார் தான் செய்து முடித்தார். தந்தை பெரியாரால் அடையாளப்படுத்தப்பட்ட, இன்றைய திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பெரியார் ஏந்திய பகுத்தறிவுச் சுடர் ஒருபோதும் அணையாமல் இருக்க, 2024 ஆம் ஆண்டிலும், ‘மூடநம்பிக்கை ஒழிப்பு; பெண்ணுரிமைப் பாதுகாப்பு’ என்ற தலைப்பில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 51A(h)ன்படி அறிவியல் மனப்பான்மையினைப் பரப்பும் விதமாக, தமிழ்நாடு முழுவதும் 100 கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தார். இதில் வியப்பு என்னவென்றால், கூறு 51A(h) என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 42ஆவது சட்டத் திருத்தத்தின் மூலமாக 1976ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட கூறு. ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, சட்டம் சொல்வதற்கு முன்பே, சமூக மாற்றத்திற்கு அடித்தளமிட்டு, பகுத்தறிவுக் கருத்துகளையும், அறிவியல் மனப்பான்மையையும் வளர்த்து, மனித நேயத்தைத் தனது சுயமரியாதை இயக்கத்தின் மூலம் பேசிய தலைவர் தந்தை பெரியார். இந்தியா சிந்திப்பதற்கு அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்துச் செயலாற்றியதால்தான் அவர் என்றும் தந்தை பெரியார்!