சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இடஒதுக்கீடு தேவையில்லை என ஆகஸ்ட்12, 2005 ஆம் தேதியன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்தியாவில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பெரும் எதிர்ப்பு அலையை உருவாக்கியது. தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நமது அண்டை மாநிலமான கருநாடகாவிலும் போராட்டத்தை முன்னெடுக்கும் வகையில் அதற்கான பூர்வாங்கக் கூட்டம் பெங்களூரில் அம்மாநில மேனாள் துணை முதலமைச்சரும் பகுத்தறிவாளருமான (தற்போதைய முதலமைச்சர்) சித்தராமையா அவர்கள் இல்லத்தில் 7.9.2005ஆம் தேதி நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நாமும் சித்தராமையா, மேனாள் அமைச்சர் சி.எம்.இபுராகிம் மற்றும் ஏ.கே.சுப்பையா, ஜானகி வலி (மலைவாழ் மக்களின் பிரதிநிதி – மேனாள் அமைச்சர்) வழக்குரைஞர்கள் காந்தராஜ், ராஜேஸ்வரி தேவி, ரவிவர்மகுமார், சமூகநீதி மய்யத்தின் தலைவரும் மேனாள் மத்திய அமைச்சருமான சந்திரஜித் யாதவ், ஆந்திர மாநில உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி பி.எஸ்.ஏ. சாமி, மற்றும் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், பேராசிரியர்களும் கலந்துகொண்டு சமூகநீதிக்கு ஏற்பட்டுள்ள தடைகள் குறித்து விரிவாக ஆராய்ந்தோம்.
மேலும், தந்தை பெரியாரின் கொள்கைகள் சமூக நீதித்தளத்தில் தேவைப்படும் அவசியத்தை- அவசரத்தைப் பற்றி ஆய்வு முறையில் கருத்துகள் பரிமாறப்பட்டு சமூக நீதியைக் காத்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் நிறுவனமான Bharat Earth Movers Ltd.,இன் சி.எம்.டி. தலைவர் திரு.நடராசன்- சாந்தி இணையரின் மகள் டாக்டர் என். மதுமிதா மற்றும் கோவை டாக்டர் சரோஜ்- ஆறுமுகம் இணையரின் மகன் டாக்டர் எஸ்.ஏ. ராஜ்குமார் ஆகியோரின் இணையேற்பு நிகழ்வு பெங்களூரில் 7.9.2005 அன்று நடைபெற்றது. மணவிழாவில் நாம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினோம். பேராசிரியர் ரவிவர்மகுமார், நீதியரசர் பி.எஸ்.ஏ.சாமி (ஆந்திர மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி), சந்திரஜித் யாதவ், மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு, தங்கபாலு உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
பெங்களூர் பெரியார் பெருந்தொண்டர் ராம.கோவிந்தன் அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்தினோம். 7.9.2005 அன்று பெங்களூர் சென்ற நாம் அவரது இல்லத்திற்குச் சென்று அவரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். பின்னர் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி விடை பெற்றோம். இதில் கருநாடக மாநில தி.க. தலைவர் ஜானகிராமன், துணைத் தலைவர் ஜெயகிருட்டினன், பொருளாளர் வரதராஜன் உள்ளிட்ட திரளான கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.
திருத்துறைப்பூண்டி கழகத் தோழர் தி.குணசேகரன் அவர்கள் திருத்துறைப்பூண்டியில் அகமுடையார் தெருவில் புதிதாகக் கட்டியுள்ள ‘பெரியார் இல்லம்’ திறப்பு விழா 8.9.2005 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. விழாவில் நாம் கலந்துகொண்டு புதிய இல்லத்தைத் திறந்து வைத்தோம்.
ஒக்கநாடு மேலையூரைச் சேர்ந்த அ.ஆறுமுகம்- தமயந்தி இணையரின் மகன் ஆ.இலக்குமணன் மற்றும் சூழியக்கோட்டை வெ. சாமிநாதன்- மலர்க்கொடி இணையரின் மகள் சா.சுகந்தி ஆகியோரின் இணையேற்பு நிகழ்வு தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம், சோழா திருமண அரங்கில் 9.9.2005 அன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. நாம் தலைமையேற்று, இணையேற்பு நிகழ்வை நடத்தி வைத்தோம்.
கும்பகோணம் ஆர்.பி. சுந்தரம், மோகனம்பாள் பேரனும் ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் – இந்திரா இணையரின் மகனுமான ஆர்.பி.எஸ்.எஸ்.விஜய் ஆனந்த் மற்றும் பின்னவாசல் சாமிநாதன்- சரோஜா ஆகியோரின் பேத்தியும் பட்டுக்கோட்டை எஸ். செல்வ அழகன்- கன்னிகா இணையரின் மகளுமான எஸ்.மகாலெட்சுமி ஆகியோரின் இணை ஏற்பு நிகழ்வு கும்பகோணம் ராயா மகாலில் 9.9.2005 அன்று காலை 11.00 மணிக்கு எமது தலைமையில் நடைபெற்றது. மணமக்களை வாழ்க்கை இணை ஏற்பு ஒப்பந்த உறுதிமொழியைக் கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்து உரையாற்றினோம்,
தஞ்சை நகரச் செயலாளர் முருகேசன் அவர்களின் மகன் மு. அறிவுச் செல்வம் உடல் நலம் பாதிக்கப்பட்டு 9.9.2005 அன்று மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினோம். 11.9.2005 அன்று அவரது இல்லம் சென்று, மு.அறிவுச்செல்வம் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். பின்னர் அவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி விடை பெற்றோம்.
பெரியார் பெருந்தொண்டர் பெரியார் பேருரையாளர் சுயமரியாதைச் சுடரொளி பேராசிரியர் அ. இறையன் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் 11.9.2005 அன்று மிக எளிமையாக நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை தலைமை வகித்தார். அடுத்து பெரியார் பேருரையாளர் அ.இறையன் படத்தை நாம் திறந்து வைத்து புகழுரை வழங்கினோம். அப்போது இறையன் அவர்களின் கழகப் பணிகளையும் தன்னலமற்ற சமூக நலப் பணிகளையும் எடுத்துரைத்தோம்.
விழாவில் அ. இறையன் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரைத் தொகுப்பான “செயற்கரிய செய்த செம்மல்” எனும் நூலை நாம் வெளியிட, அதை மேடையில் இருந்த அனைவரும் பெற்றுக்கொண்டனர். மேலும் பெரியார் பேருரையாளர் அ. இறையன் நினைவுக் கூடத்தையும் சென்னை பெரியார் திடலில் இயங்கும் பெரியார் பகுத்தறிவு ஆய்வகத்தையும் நாம் திறந்து வைத்தோம். நிகழ்ச்சியின் முடிவில் அ. இறையனார்- திருமகள் இணையரின் மூத்த மருமகன் கண்ணப்பன் நன்றி கூற விழா சிறப்புடன் நிறைவடைந்தது.
பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் சிகாகோ டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களின் அன்னையாரும் திருச்சியை அடுத்த பிச்சாண்டார் கோயில் சோமசுந்தரம் அவர்களின் துணைவியாருமான திருமதி.நாகரத்தினம் அம்மையார் (வயது 83) அவர்கள் 11.9.2005 அன்று மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். 14.9.2005 அன்று நாம் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மறைந்த திருமதி. நாகரத்தினம்மாள் உடலுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்து இரங்கல் தெரிவித்தோம்.
சென்னை தியாகராயர் நகர் பகுதி திராவிடர் கழகத் தலைவரும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும் தியாகராயர் நகரில் தந்தை பெரியார் சிலையை நிறுவு வதற்கு அரும்பாடுபட்ட பெரியார் பெருந்தொண்டரு மாகிய ரகுராமன் (வயது 86) அவர்கள் 22.9.2005 அன்று மறைவுற்ற செய்தி அறிந்து வருந்தினோம்.
அன்று மாலை நாம் நேரில் சென்று அவரின் உடலுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தோம். பின்னர் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி விடை பெற்றோம்.
திருப்பூரில் திராவிடர் எழுச்சி மாநாடு – தந்தை பெரியார் அவர்களின் 127ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, ‘விடுதலை’, ‘உண்மை’ சந்தாக்கள் வழங்கும் விழா ஆகியவற்றை உள்ளடக்கி 24.9.2005 அன்று (முதல் நாள் மாநாடு) காலை 11 மணிக்கு திருப்பூர் டவுன் ஹாலில் (பெரியார் பேருரையாளர் அ. இறையனார் நினைவரங்கம், கோவை புலியகுளம் (பெரிய) வீரமணி நினைவுப் பந்தலில்) வெகு எழுச்சியோடு தொடங்கியது.
முதல் நிகழ்ச்சியாக பெரியார் அறிவியல் கண்காட்சி தொடங்கியது. கழகப் பொதுக்குழு உறுப்பினர் சாலைவேம்பு சுப்பையன் வரவேற்புரையாற்றினார்.
திருப்பூர் மாவட்ட தி.க. துணைத் தலைவர் பாசமலர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். சி.பி.அய்., கட்சியைச் சேர்ந்த கே.சுப்பராயன் எம்.பி., அவர்கள் வாழ்த்திப் பேசினார்.
நிறைவாக நாம் பெரியார் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினோம். அப்போது “இந்த இயக்கம் ஓர் அற்புதமான இயக்கம். காலம் காலமாக குனிந்திருந்த இந்தச் சமுதாயத்தை நிமிர்த்தி வைத்த அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய பணி உலகளாவிய பணியாகும்.இனிமேல் பெரியாரை விட்டு உலக வரலாறு சுழல முடியாது. எல்லோருக்கும் எல்லாமும் இருக்க வேண்டும் என்று சொல்லுவதுதான் இந்த இயக்கத்தின் நோக்கம். சமத்துவம் இந்த இயக்கத்தின் நோக்கம்” என நமது இயக்கத்தின் பெருமைகளை எடுத்துக் கூறினோம்.
காலை 10 மணியளவில் சமூகநீதி கருத்தரங்கம் பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு தலைமையில் நடைபெற்றது. பேராசிரியர் கு.வெ.கி. ஆசான், துரை. சந்திரசேகரன், அருள்மொழி, டாக்டர் பிறைநுதல் செல்வி, வழக்குரைஞர் கி. மகேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். காலை வாழ்வியல் சிந்தனைகள் நூல் அறிமுக விழா நடைபெற்றது. ம.தி.மு.க. தொழிலாளரணி பொறுப்பாளர் துரைசாமி, கவிஞர் அறிவுமதி ஆகியோர் பங்கேற்றனர்.
மாலை 4.30 மணிக்கு பரபரப்பூட்டும் பட்டிமன்றம் நடைபெற்றது. மண்டல இளைஞரணித் தலைவர் செந்தில்நாதன் வரவேற்புரையாற்ற, திருப்பூர் நகர திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் முத்தையா தலைமையேற்க, மேட்டுப்பாளையம் நகர திராவிடர் கழகத் தலைவர் கே.அர. பழனிச்சாமி முன்னிலை வகித்தார்.
பேராசிரியர் ந.வெற்றியழகன் நடுவராக இருந்தார். மூடநம்பிக்கைகளை அதிகம் பரப்புவது ‘சினிமாவே’ என்ற அணியில் அதிரடி அன்பழகன், ஆவடி மனோகரன், இராம.அன்பழகன் ஆகியோரும், ‘ஏடுகளே’ என்ற அணியில் பெரியார் செல்வன், மு.அ. கிரிதரன், சீனி.விடுதலைஅரசு ஆகியோரும் சிறப்பாக வாதிட்டனர்.
பட்டிமன்றத்தைத் தொடர்ந்து இந்துராஷ்டிர எதிர்ப்புக் கருத்தரங்கம் தொடங்கப்பட்டது. கழகத் தோழர்களும், பொது மக்களும் பல்லாயிரக்கணக்கில் கூடி கருத்தரங்கத்தைச் செவிமடுத்தனர். கருத்தரங்கில் உரையாற்றிய பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள் சிந்துச் சமவெளி நாகரிகத்தை ஆரிய நாகரிகம் என்று காட்ட, பார்ப்பனர்கள் எந்த வகையில் எல்லாம் முயற்சி செய்கின்றனர்; இணைய தளத்தை எவ்வாறெல்லாம் பயன்படுத்துகின்றனர்! வெளிநாட்டில் வாழும் பார்ப்பனர்களின் விஷமங்கள் எவை எவை என்பது பற்றிய ஒரு ஆய்வுரையை வழங்கினார். இந்துத்துவா எதிர்ப்பில் திராவிடர் கழகம் ஆற்றிவரும் பங்கினைப் பாராட்டினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய மாநிலச் செயலாளர் தோழர் தா. பாண்டியன் பங்கேற்று உணர்ச்சிபூர்வமான உரையை ஆற்றினார்.
சோம.இளங்கோவன், கவிஞர் அறிவுமதி, ஊடக இயலாளர் திரு.வீரபாண்டியன் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோரும் உரையாற்றினர்.
மாநாட்டின் முக்கிய நிகழ்வாக இரண்டாம் நாள் 25.9.2005 ஞாயிறன்று மாலை திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் பேரணி நடந்தது. கோட்டப் பிரச்சாரச் செயலாளர் ஈரோடு த. சண்முகம் பேரணியைத் துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் முழங்கப்பட்ட முழக்கங்கள், மூட நம்பிக்கைகளைச் சுட்டெரிக்கும் செயல் விளக்கங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. கழக மகளிரணியினர் கைகளில் தீச்சட்டி ஏந்தி “தீச்சட்டி இங்கே! மாரியாத்தாள் எங்கே?” என வீர முழக்கமிட்டு வந்தனர்.
மாலை 4.30 மணிக்கு திருப்பூர் நகராட்சி அலுவலகம் அருகிலிருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியாக மாலை 6.30 மணிக்கு மாநாட்டுப் பந்தலை வந்தடைந்தது. மாநாட்டில் நீதித்துறை உள்பட அனைத்துத் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை; வேலை வாய்ப்பை அடிப்படை உரிமையாக்க வேண்டும்; கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்பன உள்பட முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருப்பூர் மாநாட்டையொட்டி கலைஞர் அவர்கள் அனுப்பிய வாழ்த்து மடலில் “தந்தை பெரியார் அவர்களின் 127ஆம் பிறந்த நாள் விழாவினையும், ‘விடுதலை’, ‘உண்மை’ ஆகியவற்றின் சந்தா வழங்கும் விழாவினையும் இணைத்து ‘திராவிடர் எழுச்சி மாநாடு’ என்ற பெயரால் திருப்பூரில் வரும் 24, 25 ஆகிய நாட்களில் உங்களது தலைமையில் நடைபெறுவதறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இரண்டு நாட்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆன்றோர்களும், சான்றோர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவிருப்பது வருங்காலச் சமுதாயத்திற்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட பெரிதும் பயன்படும் என நம்புகிறேன். திராவிடர் எழுச்சி மாநாடு சிறப்பாக நடைபெறவும், அதிலே நல்ல பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
கருநாடக மாநிலம் பெங்களூருவில் ஹாசன் மாவட்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சிறுபான்மையினர் பொது மாநாடு ‘AHINDA’ 26.9.2005 அன்று நடைபெற்றது. மாநாட்டில் நாம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றினோம். கருநாடக மாநில மேனாள் துணை முதல்வர் சித்தராமையா, மேனாள் மத்திய அமைச்சர் சி.எம். இப்ராகிம், மேனாள் அமைச்சர் எச்.எம். விஸ்வநாத், சிகாகோ டாக்டர் சோம. இளங்கோவன், டாக்டர் சரோஜா இளங்கோவன், மோகனா வீரமணி உள்பட முக்கியப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
நெல்லை மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவரும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளையின் நிருவாகக் குழு உறுப்பினருமான மானமிகு சு.நெல்லையப்பா (வயது 75) அவர்கள் 27.9.2005 அன்று மறைவுற்ற செய்தியறிந்து அதிர்ச்சியுற்றோம். இவர் பம்பாயில் இருந்து கொண்டும் பின்னர் நெல்லையில் இருந்துகொண்டும் களப்பணி செய்ததுடன் புத்தகங்களை பம்பாய்க்கு வரவழைத்து விற்பனை செய்து பரப்பியவர். பல்வேறு போராட்டங்களில் சிறை சென்றவர். அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து 28.9.2005 அன்று ‘விடுதலை’ இதழில், “சு. நெல்லையப்பா அவர்கள் மும்பையில் வாழ்ந்தபோதும் சரி, மும்பையிலிருந்து நெல்லைக்குத் திரும்பிய பின்பும் சரி, கட்டுப்பாடு மிக்க செயல்வீரராக அடக்கத்தோடு பணிபுரிந்தவர்.
உழைப்போடு இயக்கத்திற்காகப் பொருளையும் செலவு செய்தவர். அவரின் மறைவு இயக்கத்திற்குப் பேரிழப்பாகும்.
அவரின் கடந்த கால இயக்கத்தொண்டிற்கு வீரவணக்கம் தெரிவித்துக் கொள்வதோடு அவர் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும் கழகத் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அறிக்கையில் தெரிவித்தோம்.
தமிழ்நாடு அரசின் சார்பில் “தந்தை பெரியார் சமூகநீதி விருது” அறிவிக்கப்பட்ட இரா.செழியன் மற்றும் டாக்டர் பட்டம் அளிக்கப்பெற்ற பேராசிரியர் பி.எஸ்.மணிசுந்தரம் ஆகியோருக்கு மனித நேய நண்பர்கள் குழுவின் சார்பில் பாராட்டு விழா சென்னை காஸ்மாபாலிட்டன் கிளப்பில் 28.9.2005ஆம் தேதி நடைபெற்றது.
கா.ஜெகவீரபாண்டியன் வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிக்கு நாம் தலைமை தாங்கி இரா.செழியன் மற்றும் டாக்டர் மணிசுந்தரம் இருவருக்கும் பாராட்டுத் தெரிவித்து சால்வை அணிவித்துச் சிறப்பித்தோம். பின்னர் விழா நாயகர்கள் இருவரும் ஏற்புரை வழங்கினர். முடிவில் மனித நேய நண்பர்கள் குழுவின் இணைச் செயலாளர் டாக்டர் சரோஜா பழநியப்பன் நன்றி கூறினார்.
கழக துணைப் பொதுச் செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரனின் தம்பி இரா. இராவணன்- கலையரசி இணையரின் மகன் இரா. இளந்தமிழ் 26.9.2005 அன்று மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். 29.9.2005 அன்று உரத்தநாடு சென்ற நாம் இரா.இராவணன் – கலையரசி இல்லம் சென்று மறைந்த பெரியார் பிஞ்சு இரா.இளந்தமிழ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினோம். பின்னர் அவரது உருவப் படத்தினைத் திறந்து வைத்து, “பெரியார் பிஞ்சு மறைவு என்பது யாரும் சமாதானம் செய்ய முடியாத அளவுக்கு மிகப் பெரிய இழப்பாகும். தந்தை பெரியார் அவர்கள் கூறுவதுபோல் இது இயற்கையின் கோணல் புத்தி. நடந்ததை நினைத்து வருந்தாமல் கழகப் பணிகளில் கவனம் செலுத்துவதன் மூலம் துன்பங்களைக் களைய வேண்டும்” என்று இரங்கலுரையாற்றினோம்.
திருச்சி பெரியார் மாளிகையில் பகுத்தறிவாளர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் 30.9.2005 அன்று காலை 11 மணியளவில் நடந்தது. கூட்டத்திற்கு நாம் தலைமையேற்று உரையாற்றினோம். அப்போது பகுத்தறிவாளர் கழகம் தோற்றுவிக்கப்பட்டது ஏன்? என்பது குறித்தும் உலகளாவிய பகுத்தறிவாளர் கழகங்களின் செயல்பாடுகளையும் நமது செயல்பாடுகளையும் ஒப்பிட்டு விளக்கினோம்.
அன்று மாலை 5 மணிக்கு திராவிடர் கழக சொற்பொழிவாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் எமது தலைமையில் நடந்தது. அப்போது சொற்பொழிவாளர்கள் பேச வேண்டிய முறை, பக்குவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தோம்.
பாரத மின்பகு நிறுவனம், திருச்சிராப்பள்ளி மற்றும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, வல்லம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் 30.9.2005 அன்று செய்துகொண்ட தொழிலக பயிலக கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. அதில் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தோம். மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்களில் கல்வி கற்கின்ற காலத்திலேயே தொழில் பயிற்சி அளிப்பதும் அவர்களிடத்து தொழிற்சாலைகளை நேரடியாகப் பார்வையிடுதலை ஊக்குவித்தலும் இவ்விரு நிறுவனங்களைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்கள், பணியாளர்களுக்குப் போதுமான தொழில்நுட்பப் பயிற்சியினை வழங்குதலும் ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாக இருந்தன.
பெரியார் புரா திட்டத்தின்கீழ் குடியரசுத் தலைவர் மாளிகையுடன் இந்தியாவிலேயே முதலாவதாக இராயமுண்டான்பட்டி கிராமம் இணைக்கப்பட்ட நிலையில் ஆச்சாம்பட்டி, கோமாபுரம், பாலையப்பட்டி, வீரமரசன்பேட்டை மற்றும் பூதலூர் ஆகிய கிராமங்களுக்கு கம்பியில்லா தொடர்பு வசதி வழங்கும் விழா 30.9.2005 அன்று நடைபெற்றது. மோட்டோரோலா மற்றும் புரோட்டோ இன்போசிஸ் நிறுவனங்களும் அய் கியாரண்டி மென்பொருள் நிறுவனமும் அளித்த தொழில்நுட்ப உதவி மற்றும் ஒத்துழைப்பைத் தொடர்ந்து இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியினை பெரியார் மணியம்மை மகளிர் பொறியியற் கல்லூரி முதல்வரும் ‘புரா’ திட்ட இயக்குனருமான டாக்டர் நல்.இராமச்சந்திரன் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஆறு கிராமங்களுடன் ஒரே நேரத்தில் கலந்துரையாடிய நாம், பெரியார் ‘புரா’ திட்ட கிராம மக்களை வாழ்த்திப் பேசுகையில் “இந்தக் கம்பியில்லா மின்னணு தொடர்பினை ஏற்படுத்தியதன் மூலம் நமது போற்றுதலுக்குரிய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்துள்ளோம். நாம் அனைவரும் அவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்” எனத் தெரிவித்தோம்.