வலியுறையும் வயநாடு வடுக்கள் ..!- திருப்பத்தூர் ம.கவிதா

2024 ஆகஸ்ட் 16-31 கவிதைகள்

ஆலமரத்து ஊஞ்சலிலே
ஆடியிருந்த அழகுச் சிட்டு
பட்டாம்பூச்சி பிடித்து வந்து
பாடிப் பாடி சிரித்த மொட்டு
காலையெழுந்து பள்ளி போகும்
கனவுகளோடே மாண்டதோ?
கண்ணைக் கசக்கி நிற்கையிலே
முந்தானையால் முகம் துடைத்து
மார்போடு அணைத்த தாயும்
மண்ணோடு போனாரோ?
தோள் மேலே தூக்கி வைத்து
காடு மேடு கழனி காட்டி
கைப்பிடித்து வந்த தந்தை
கண்மூடிப் போனாரோ?
பாட்டி தாத்தா அத்தை மாமன்
கூடிப் பிழைத்த பிழைப்பு எல்லாம்
கூட்டாய்ச் செத்து மடிந்ததுவோ?
ஆக்கி வச்ச சோறு ஊட்டி
ஆடு மாடு இழுத்துக் கட்டி
அசந்து போய்ச் சாய்ந்த இரவு
மேகமுடைத்து வேகமெடுத்த மழையில்
ஆற்று வெள்ளம் அகண்டமாகி
பாறையெல்லாம்
பெயர்ந்து வந்து

மூச்சு முறித்துப் போட்டதுவோ?
இல்லாத இறைவனை
ஏசிப் பலனென்னவோ?
கடவுள் எங்கே போனார் அப்பா?
கேள்விக்கு விடை தான் என்னவோ?
புதைக்கப்பட்ட உடல்களைத் தான்
பார்த்திருக்கிறோம் இதுவரை
புதையுண்ட உடலைத் தோண்டும்
கோரமும் கொடுமையும்
பார்ப்பது இப்போதல்லவா?

உள்ளுக்குள் உயிரேதும் துடிக்கிறதா
தெர்மல் ஸ்கேனர் கொண்டே
தேடும் பணி அல்லும் பகலும் நடக்க
ஆயிரக்கணக்கானோர்
ஊனின்றி உறக்கமின்றி
பேரிடர் மீட்புப் பணியாற்றும்
இயற்கைத் தாண்டவம் அல்லவோ?
அவ்வப்போது நால்வர் கிளம்புவர்
அழியப்போகிறது உலகமெனக் கிளப்புவர்
இப்படியாகப் பல கதைகள்
இதுவரை கேட்டோர் தான் நாமும்…
கடல் கொண்டது காவிரிப்பூம் பட்டினமென
கல்விக்கூடத்தில் படித்தோம் நாமும்
ஆழிப்பேரலை அழிவை
அருகிலேயே பார்த்தோம் நாமும்
சத்தமில்லாமல் இயற்கை
சரித்து விடுவது எப்படியென
சற்றிப்போது புரிதல் கொண்டோம்!
நெருநல் உள ஊர்கள்
இன்றில்லை எனும்
கடுமை உடைத்ததிவ்வுலகு என்று
கண்டுகொள்கிறோம் நாமும்!
கோயிலுக்குக் கொட்டுவதும்
கும்மாளம் அடிப்பதிலும்
ஒரு பங்கு நேரத்தை
ஒரு பங்கு அறிவை
ஒரு பங்கு பணத்தை…
புவியியலை அறியவும்
சூழலியலைப் புரியவும்
ஆபத்தான பகுதிகளிலிருந்து
குறைந்த பட்சம் நம்மை

அப்புறப்படுத்தவாவது சிந்திப்போம்…
எதுவும் நடக்கும்
எப்போதானாலும் நடக்கும்
என்றான இயற்கையில்
நம்மை நாம் காக்கவும்
புவி வெப்பம் தணிக்கவும்
பருவநிலை மாற்றங்களை
உய்த்துணர்ந்து வெல்லவும்
அத்தனைக்கும் நமக்கிங்கு
அறிவியல் ஒன்று தான்
நம்பிக்கை! நம்பிக்கை!!
வயநாட்டை உருக்குலைத்த
நிலச்சரிவின் வருத்தங்கள்
வரலாற்றில் வலியுறையும்
வடுக்கள்! வடுக்கள்!!