சிறையில் நடந்த பொதுக்கூட்டம்! ஆசிரியருக்கெல்லாம் ஆசிரியர் !- வி.சி.வில்வம்

2024 ஆகஸ்ட் 1-15, 2024

ஆசிரியர் முனியாண்டி அவர்கள், 1942ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், நகரமங்கலம் எனும் கிராமத்தில் பிறந்தவர். 82 வயது நிறைந்தவர். பெற்றோர் மாரியம்மாள், கண்ணையன். பரமக்குடியில் இருந்து பஞ்சம் பிழைப்பதற்காகத் திருவாரூர் மாவட்டம் ஆமூர் பகுதிக்கு அம்மா அழைத்து வந்துள்ளார். அப்பா மலேசியாவில் பணியாற்றியவர். ஆமூர் பகுதி என்பது பார்ப்பனப் பண்ணையம் நிறைந்த ஊர்.

15 வயதில் இயக்கத் தொடர்பு!

அந்நிலையில் தான் இயக்கத் தொடர்பு கிடைத்துள்ளது. 15 வயது முதல் பெரியார் கூட்டங்களில் கழகப் பாடல்கள் பாடும் வாய்ப்பைப் பெற்றவர். பெரியார் இருந்த மேடைகளிலும் பாடும் சிறப்பைப் பெற்றவர்! பின்னாளில் வி.கே.ராமு அவர்களுடன் இணைந்தும் பாடல்கள் பாடியுள்ளார். பல கால கட்டங்களில் இவரின் பாடல்களும், கவிதைகளும் ‘விடுதலை’ ஏட்டில் இடம்பெற்றுள்ளன.
மணியம்மையார் அவர்களுடனும் அறிமுகம் இருந்துள்ளது. மேடையில் பாடல்கள் பாடிவிட்டு, மணியம்மையார் அவர்கள் நூல்கள் விற்கும் இடத்திற்குச் சென்று உதவி செய்வார்.

1954இல் ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த காலத்தில் அய்ந்தாம் வகுப்பு படித்தவர். அரைநேரம் பள்ளிக்குப் போகக்கூடாது என்கிற நிலையில், இவரின் கிராமத்திலும் போராட்டங்கள் நடந்துள்ளன. 1959இல் கீழ்வேளூரில் உயர்நிலைப் பள்ளியில் படித்த நேரத்தில், இன்றைய துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், “தந்தை பெரியார் தன்மானப் பேரவை” என்கிற அமைப்பை நிறுவி நடத்தி வந்தார்கள். அரசுப் பணியில் இருந்தவர்களை ஒருங்கிணைத்து, பல நிகழ்ச்சிகளை நடத்துவார்.

மாணவர்களுக்குப் பகுத்தறிவு கருத்துகள்!

இந்நிலையில் படிப்பை முடித்ததும், முனியாண்டி அவர்களுக்கு ஆசிரியர் பணி கிடைத்துள்ளது. மொத்தம் 9 கிராமங்களில் 38 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். தந்தை பெரியார் தன்மானப் பேரவையில் உறுப்பினராகவும் சேர்ந்துள்ளார்.‌ பின்னர் துணைச் செயலாளராகப் பணியாற்றி இருக்கிறார். 1969ஆம் ஆண்டு இவ்வமைப்பின் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் தந்தை பெரியார், என்.வி.நடராசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு அறிவியல் ரீதியான பகுத்தறிவுக் கருத்துகளை எடுத்துக் கூறுவதில் ஆசிரியர் முனியாண்டி சிறந்து விளங்கியுள்ளார்.

1966இல் புலவர் இராமநாதன் அவர்கள் தலைமையில் இவருக்குத் திருமணம் நடந்தது. இணையர் பெயர் சந்திரா. கடந்த 30 ஆண்டுகளாக இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு வெண்ணிலா, கவிதா என்கிற இரு மகள்களும், கண்மணி என்கிற மகனும் உள்ளனர். பிள்ளைகள் அனைவருமே கொள்கையைக் கடைப்பிடிப்பவர்கள்.

மாநில அளவில் போட்டிகள் !

1970ஆம் ஆண்டு பெரியாரின் அனுமதியுடன் பகுத்தறிவாளர் கழகத்தைத் திருவாரூரில் தொடங்கி, அதன் செயலாளராகவும், தலைவராகவும் பணி செய்தவர். பெரியார் குறித்து கட்டுரை, பேச்சுப் போட்டிகளை‌ மாநில அளவில் நடத்தியவர். இன்றைய கழகத் துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் இன்பக்கனி அவர்கள், இந்தக் கட்டுரைப் போட்டியில் பங்கேற்று முதல் பரிசைப் பெற்றுள்ளார். பெரியாரும், ஆசிரியர் முனியாண்டி அவர்களும் கையொப்பம் இட்ட சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. அதேபோல

1971ஆம் ஆண்டு, பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார், தவத்திரு குன்றக்குடி அடிகளார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரைக் கொண்டு மாநாடு நடத்தியுள்ளார். பின்னாளில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களால் உருவாக்கப்பட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணியின் கீழ், கீழத் தஞ்சை மாவட்ட அமைப்பாளராகவும் பணி செய்துள்ளார்.

ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர்

1986ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தை ஏற்படுத்தக் கோரி, திருவாரூரில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அதுசமயம் தலைவருடன் தோழர்கள் பலரும் கைதாகினர். இந்நிலையில் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் ஒன்றில் பங்கேற்று, முனியாண்டி அவர்களும் கைதாகி, ஆசிரியர் இருந்த அதே சிறைக்குச் சென்றுள்ளார். அடுத்த நாள் காலை ஆசிரியரைச் சென்று சந்தித்ததோடு, பல்வேறு கோரிக்கைகளுடன் சிறைப்பட்ட ஆசிரியர்களை ஒன்றிணைத்து, ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களைப் பேசவும் ஏற்பாடு செய்துள்ளனர். ஆசிரியர்களின் உரிமைகள், குறிக்கோள்கள் குறித்து, சிறைக்குள்ளேயே பேசியது அனைவரையும் ஈர்த்தது என்கிறார் ஆசிரியர் முனியாண்டி. அந்த நிகழ்வை “ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர்” எனவும் அவர் வர்ணிக்கிறார்.

தோழர்கள் சூழ் உலகம்!

ஒருங்கிணைக்கப்பட்ட தஞ்சை மாவட்டத் தலைவர் நீடாமங்கலம் அ.ஆறுமுகம், செயலாளர் நாகை எஸ்.எஸ்.பாட்சா ஆகியோர் காலகட்டத்தில் இயக்கத்திற்கு வந்த இவர் பெரியார் பேருரையாளர் புலவர் ந.இராமநாதன், கவிஞர் கலி.பூங்குன்றன், டாக்டர். மா.நன்னன், அ.இறையன், ந.வெற்றியழகன், கவிஞர் சுரதா, புலவர் சேலம் அண்ணாமலை, நாகை
என்.பி.காளியப்பன், சு.சாந்தன், வேளாங்கண்ணி முத்தையா, ஆயக்காரன்புலம் சுந்தரம், இயக்க மகளிர் தோழர்கள் க.பார்வதி, ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம், அ.அருள்மொழி உள்ளிட்ட அனைவருடனும் இயக்கப் பணி செய்தவர். தம் மகள் பெயரிலேயே “வெண்ணிலா கலைக்குழு” எனும் அமைப்பையும் நடத்தியவர்.

நல்லாசிரியர் முனியாண்டி!

சிறு வயதில் தொடங்கிய ‘விடுதலை’ வாசிப்பு இன்றுவரை தொடர்கிறது. வயதில் சற்று தளர்வானாலும், நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் தடையேதும் இல்லை. திருவாரூர் அருண் காந்தி அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தம் வாகனத்தில் அழைத்துச் செல்கிறார். இவரிடம் பயின்ற கிராமப்புற மாணவர்களில் பலர் உயர் பணிகளில் உள்ளனர். 2003ஆம் ஆண்டு நல்லாசிரியர் விருது பெற்றவர். அய்ந்து ஜாதி மறுப்புத் திருமணங்களைச் செய்து வைத்தவர். பெற்றோர்களை இழந்த பிள்ளைகளை, திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் பயில வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்தவர். திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்குத் தம் உடலைக் கொடையாகத் தர பதிவு செய்துள்ளார்.

பெரியாரால் வெல்லுங்க!

2015ஆம் ஆண்டு, பாரதிதாசன் 125ஆம் பிறந்தநாளில், தாம் பாடிய பாடல்களை ஒலிநாடாவாக வெளியிட்டார். அதில் ஒரு பாடலில், “ஆத்திகமா? நாத்திகமா? சொல்லுங்க அய்யா,பார்ப்பன ஆதிக்கத்தைப் பெரியாரால் வெல்லுங்க அய்யா! அப்பன் தொழிலைச் செய்யச் சொன்னது ஆத்திகம்தான், நம் அனைவரையும் படிக்க வச்சது நாத்திகம்தான்! அம்மாவை விதவை என ஒதுக்கியது ஆத்திகம்தான், அவரை அவைக்கு வந்து அமர வைத்தது நாத்திகம்தான்! பெண்கள் படிக்கக்கூடாது என்றது ஆத்திகம்தான்,
வீட்டில் பெட்டைக் கோழியாக்கி வைத்தது ஆத்திகம்தான்! பொட்டுக்கட்டி, தாசியாக்கியது ஆத்திகம்தான்,
அதைப் பொசுக்கி பெண்ணியம் மீட்டெடுத்தது நாத்திகம்தான்!’’
என்று இதைப் போன்ற ஏராளமான கொள்கை விளக்கப் பாடல்களை இயற்றியவர்!

விடுதலை விரும்பி!

வாய்ப்பான நேரங்களில் எல்லாம் ‘விடுதலை’ சந்தா வசூலிக்கும் இவர், இதுவரை 70 சந்தாக்கள் கொடுத்துள்ளார். 2011ஆம் ஆண்டு “விடுதலை விரும்பி” எனும் சான்றிதழையும் பெற்றுள்ளார். திருவாரூர் பேருந்து நிலையத்தில் இருக்கும் பெரியார் சிலையின் அமைப்புக் குழுவில் இணைச் செயலாளராகவும் இருந்து பணியாற்றியவர். தற்சமயம் திருவாரூர் மாவட்டம் ஆமூர் எனும் கிராமத்தில் வசிக்கிறார். மண்டலத் திராவிடர் கழகச் செயலாளராகப் பணியாற்றி, தற்போது பொதுக்குழு உறுப்பினராகத் தடம் பதித்து வருகிறார் செயல்வீரர் ஆசிரியர் முனியாண்டி அவர்கள்!