இணையப் பதிவுகள்

செப்டம்பர் 16-30

பொளந்து கட்டுறார்

“காமராஜரோட தாயார் சிவகாமி அம்மாவ பாக்க பல தலைவர்கள் அடிக்கடி வருவாங்க, சிவகாமி அம்மா எங்க மாமியாரை விட (காமராஜரின் தங்கை நாகம்மாள்) என்னிடம் அன்பாக நடந்து கொள்வாங்க,

ஒரு தடவை தாடி வச்ச சாந்தமான பெரியவர் ஒருவர் சிவகாமி அம்மாவ பாக்க வந்தாரு, அப்புறம் தான் தெரியும் அவர் தான் தந்தை பெரியாருன்னு, அவரு ரொம்ப சாந்தமா இருந்தாரு , அம்மா கூட அன்பா பேசிகிட்டு இருந்தாரு, போகும் போது அவரு “அம்மா நான் உங்களுக்கு ஒன்னும் வாங்காம வந்துட்டேன், கொஞ்சம் இருங்க வந்துடுறேன்”னு சொல்லிட்டு கார்ல இருந்து ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் மாதிரி ஒன்னு கொண்டு வந்து கொடுத்தாரு. “இத சாப்பிடுங்க உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு சொல்லிட்டு போனார்.

அன்னைக்கு சாயந்திரம் விருதுநகர் பொட்டல்ல அவரு மீட்டிங் பேசுனாரு, நானும் கேக்க போனேன், காலைல அவளோ சாந்தமா இருந்த பெரியாரா இப்படி ஆவேசமா பொளந்து கட்டுறார்” னு எனக்கு தோனிச்சு

மத்தவங்க பேசுறத விட வித்யாசமா இருந்தது அவரு பேச்சு, அதனால நெறைய பேரு கேட்டு கிட்டு இருந்தாங்க.

பெரியாரு எவளோ பெரிய ஆளுன்னு அப்போ தான் எனக்கு புரிஞ்சது, அவரமாதிரி வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு பேசுற வங்கள எல்லாம் இந்த காலத்துல பாக்க முடியாது.

–  காமராஜரின் தங்கை நாகம்மாளின் மருமகள்  தங்கம்மா காமராஜர் குடும்பத்தின் வலைப்பூ kamarajar.blogspot.in–லிருந்து


திராவிடம் என்ன செய்தது?

ஒரு வருடமாக தனது உறவினருக்கு திருமணத்திற்கு பெண் தேடும் நண்பர் ஒருவர் சலித்துக் கொண்டார், “பெண்ணே கிடைக்க வில்லை”. “வரதட்சனை எதிர்பார்ப்பாலா ” என்று கேட்டேன். “இல்லை, படிப்பு பிரச்சினை “என்றார். ” அதிகம் படித்த பெண் பார்க்கிறீர்களா? “என்று கேட்டேன்.

“அதுதான் பிரச்சினையே, எனது மச்சினன் +2 படித்தவன், +2 படித்த பெண்ணாக  பார்க்கிறோம். ஆனால் நமது பகுதியில் +2 படித்த பெண்ணே இல்லை. குறைந்த பட்சம் கல்லூரி படிப்பு படித்த பெண்களாகத் தான் இருக்கிறார்கள்” என்றார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம் இது. அதற்கு பிறகு சந்தித்த தோழர்களிடம் இது குறித்து ஆய்ந்த போது, மெல்ல நடந்தேறியிருக்கிற ஒரு சமூக மாற்றம் தெரிய வந்தது. தலைவர் கலைஞர் கொண்டு வந்த திருமண உதவித் திட்டம் படிப்படியாக மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறது.

1989ல் முதல்வரான போது, 8ம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ5000 திருமண உதவித்தொகையாக வழங்கி இத்திட்டத்தை துவக்கி வைத்தார் . 1996ல் 10ம் வகுப்பு படித்த பெண்ணுக்கு ரு10,000 வழங்கினார். மிக ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இது பேருதவியாக இருந்தது. ஆனால் அப்படி படிக்க ஆரம்பித்த பெண்கள் கல்வியில் ஆர்வம் கொண்டு மேற்கொண்டும் படிக்க இது தூண்டுகோலாக இருந்திருக்கிறது.

முன்னேற்றம் என்றால் ஷங்கர் இயக்கத்தில், ரஜினி விரலசைக்க சாலை அமைவது போல , படபடவென மாற்றம் தெரியும் என்று நினைக்கும் நண்பர்கள், பெண் கல்வியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை உணர வேண்டும். திராவிடம் என்ன செய்தது என கேட்கும் தோழர்களே, ” இதை போன்ற பல சமூக மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது.” # திராவிடத்தால் தான் உயர்ந்தோம், உயர்கிறோம், உயர்வோம்….

-சிவசங்கர் (குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *