மன்னார்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்தவரின் மகள் அந்த நகராட்சிக்கே ஆணையாளராகி நெகிழ வைத்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சத்தியமூர்த்தி மேட்டு தெருவைச் சேர்ந்தவர் சேகர். மன்னார்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தார். இவரது இணையர் செல்வி. இவர்களது மகள் துர்கா, வயது 30. இளங்கலைப் பட்டதாரியான துர்கா பலமுறை TNPSC தேர்வு எழுதியும் வெற்றி பெற முடியவில்லை. ஆனாலும் விடாமுயற்சி மேற்கொண்டு தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதி வெற்றி பெற்று தந்தை பணியாற்றிய அதே மன்னார்குடி நகராட்சியில் ஆணையாளராகப் பொறுப்பேற்று பெற்றோருக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
வெற்றி குறித்து துர்கா கூறுகையில் “எனது தந்தை மன்னார்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தார். பொருளாதார வசதியில்லாத சாதாரண குடும்பம், எனது தந்தை என்னைக் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்தார். இளங்கலை பட்டப்படிப்பை மன்னார்குடி அரசினர் கலைக்கல்லூரியில் முடித்தேன். எப்படியாவது அரசு ஊழியராகிவிட வேண்டும் என்பது எனது சிறுவயது கனவாக இருந்தது. திருமணமான பின்பும் அரசு ஊழியர் கனவை விடவில்லை. எனது கணவர் நிர்மல்குமார் உறுதுணையாக இருந்து அரசு வேலையில் சேர என்னை ஊக்கப்படுத்தினார்.
2016 முதல் நான்கு முறை TNPSC தேர்வு எழுதியும் வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில் 2022ஆம் ஆண்டில் குரூப் 2 தேர்வு எழுதி முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றேன். பின்னர் 2023ஆம் ஆண்டு நடந்த முதன்மைத் தேர்விலும் 2024இல் நடைபெற்ற நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்று இப்போது மன்னார்குடி ஆணையாளராகப் பொறுப்பேற்றுள்ளேன்.
எந்த ஒரு குடும்பப் பின்னணியும் பொருளாதார வசதியும் இல்லாத நான் இன்றைய தினம் அரசு அதிகாரியாக உயர்வு பெற்றுள்ளதற்கு முதன்மைக் காரணம் கல்விதான். என்னை அரசு ஊழியராக்க வேண்டும் என எனது தந்தை ஆசைப்பட்டார். ஆனால், அவரது கனவு நிறைவேறியதைப் பார்க்க இப்போது என் தந்தை உயிருடன் இல்லை. எனது தாத்தா, அப்பா என வழிவழியாக அனைவரும் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தனர். அந்த அடையாளத்தை மாற்ற வேண்டும் என நினைத்தேன் – வென்றேன்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
‘ஒரு குடும்பம் ஒரு பையனுக்குக் கல்வி கற்பித்தால் அவன் மட்டுமே பயனடைவான்; ஆனால், ஒரு பெண் படித்தால் முழுக் குடும்பமும் பயனடைகிறது” என்ற தந்தை பெரியாரின் பொன்மொழிக்கு இலக்கணமாகத் திகழ்கிறார் இந்தச் சாதனைப் பெண்மணி.