பாரீசில், உலக மனித நேய, பகுத்தறிவு மாநாடு…- கி.வீரமணி

2024 Uncategorized அய்யாவின் அடிச்சுவட்டில் ஆகஸ்ட் 1-15, 2024

ராயபுரம் கோபால் அவர்களின் மாமா கோ.பிச்சையன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். 27.6.2005 அன்று அவரின் இல்லத்திற்குச் சென்று அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். பின்னர் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி விடை பெற்றோம்.

பட்டுக்கோட்டை மாவட்டம் ராயபுரத்தில் 28.6.2005 அன்று மாலை தந்தை பெரியார் சிலை திறப்பு விழா மிகச் சிறப்பாகக் நடைபெற்றது. மாலை 4 மணியளவில் கழக இளைஞரணித் தோழர்கள் சார்பில் ராயபுரம் தெற்குத் தெருவிலிருந்து வடக்குத் தெரு வரை நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் ஊர் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராயபுரம் கோபால் அவர்களின் மாமா கோ.பிச்சையன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், ராயபுரம் முக்கியச் சாலையில் அமைத்திருந்த தந்தை பெரியார்

முழு உருவச் சிலையை பொதுமக்களின் பலத்த கரவொலிக்கிடையே திறந்து வைத்ததோடு அருகில் அமைந்துள்ள கோ. பிச்சையன் நினைவு பெரியார் படிப்பகத்தையும் நாம் திறந்து வைத்தோம்.

 

பின்னர், எனது பெயரில் (கி.வீரமணி) அமைந்த நூலகத்தை கழகப் பொதுச் செயலாளர்
சு.அறிவுக்கரசு திறந்து வைத்தார். நிகழ்ச்சியின் நிறைவில் நாம் சிறப்புரையாற்றினோம். முடிவில் கோ.கணேசன் நன்றி கூற விழா சிறப்புடன் முடிந்தது.

சென்னை – பெரியார் திடலில் புலவர் குழந்தை அவர்களின் நூற்றாண்டு விழா, 28.6.2005 அன்றும் 30.6.2005 அன்றும் இரு நாட்கள் கொண்டாடப்பட்டன.

செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள்,
டாக்டர் கி.வீரமணி நூலகத்தைத் திறந்து வைக்கிறார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியின் மாநிலத் தலைவர் பெரியார் பேருரையாளர்
அ.இறையன் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிக்கு கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை தலைமை வகித்துப் பேசினார்.

முனைவர் (மேனாள் துணை வேந்தர்) பொற்கோ அவர்கள் புலவர் குழந்தை அவர்களின் படத்தை அனைவருடைய கரவொலிக்கிடையே திறந்து வைத்தார். புலவர் குழந்தை அவர்களின் மூத்த மகள் சமத்துவம், இளைய மகள் சமரசம் ஆகியோருக்கு நாம் சால்வை அணிவித்து நூல்களை வழங்கினோம்.

அடுத்து புலவர் குழந்தையைப் பாராட்டி மு.வே. கங்காதரன் கவிதை வாசித்தார். சாகித்ய அகாடமி விருது பெற்ற ஈரோடு தமிழன்பன் அவர்கள் உரையாற்றினார்.

நிறைவாக நாம் உரையாற்றுகையில், புலவர் குழந்தை நூற்றாண்டு விழாவை ஒட்டி நாம் பல இடங்களிலே அவருடைய பெருமைகளை கருத்தரங்கங்களின் வாயிலாகப் பரப்ப வேண்டும்.

ஏற்கெனவே நாம் அறிவித்த ஒன்று – தமிழ்நாடு அரசுக்கு திரும்பத் திரும்ப வேண்டுகோளாக வைக்கின்றோம். புலவர் குழந்தை அவர்களுடைய நூல்களை அரசுடைமையாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

பல்கலைக் கழகங்களில் இராவண காவியத்தின் உயிரோட்டமான பகுதிகளை எல்லாம் பாடங்களாக ஆக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்ப் புலவர்கள், தமிழறிஞர்கள் எல்லோரையும் இணைத்து
பல்கலைக்கழகங்கள் முன்னாலே ஆர்ப்பாட்டங்களை நடத்தலாம். முதலில் பல்கலைக்கழகங்களுக்கு எழுதுவோம். அதற்கு பிறகு தேவைப்பட்டால் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் என்று கூறினோம்.

புலவர் குழந்தை நூற்றாண்டு விழாவில் புலவரின் குடும்பத்தினருடன் கவிஞர் ஈரோடு தமிழன்பன், பேராசிரியர் அ.இறையன்,
தமிழர் தலைவர் ஆசிரியர், பொருளாளர் கோ.சாமிதுரை, கி.சத்தியநாராயணன்

பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி மாநிலத் தலைவர் பெரியார் பேருரையாளர் பேராசிரியர் அ.இறையன் அவர்கள் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே தந்தை பெரியார் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்த இயக்கத்திற்காக தன்னை ஒப்படைத்துக் கொண்டவர். அதேபோல அவருடைய துணைவியார் திருமகள் அவர்களும் இயக்கப் பணிகளிலே தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவர்கள். பெரியார் திடலிலேயே அவர்கள் தங்கி இயக்கப் பணியாற்றினர். ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்கள். அவர்களின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் கூட முழுமையான கொள்கையாளர்கள்.

அ.இறையன் மற்றும் அவரின் இணையருக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்யும் ஆசிரியர்

அவரது 75ஆம் ஆண்டு பவள விழா மற்றும் அவரின் துணைவியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் சா.திருமகள் அவர்களின் 66ஆம் ஆண்டகவை நிறைவு விழா நிகழ்ச்சி 1.7.2005 அன்று காலை 9 மணிக்கு சென்னை பெரியார் திடலில் உள்ள இராதா மன்றத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி வரவேற்றுப் பேசினார்.

கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்துப் பேசினார்.

பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் தொடக்கவுரையாற்றினார்.

காலை 10 மணிக்கு வெற்றி உலா புகழ் ஒளிப்பட நிறுவனத்தின் வாழ்த்துச் சிறப்பிதழைப் புலவர் இளஞ்செழியன் வெளியிட முதல் படியைப் பாவலர் அ. மறைமலையான் பெற்றுக்கொண்டார்.

பகல் 12 மணிக்கு கழகப் பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு “இயக்க முன்னோடிகளும், சான்றோரும்” என்ற தலைப்பில் விழா நாயகர்கள் அ.இறையன் – சா.திருமகள் இணையரைப் பாராட்டி உரையாற்றினார்.

அடுத்து விழா தொடங்கியதும் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் அ.இறையன் – திருமகள் இணையருக்குச் சால்வை அணிவித்தார்.

இறையன் அவர்களைப் பாராட்டி சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதியரசர்
எம்.எஸ்.ஜனார்த்தனம்அவர்கள் பேசியபின் நாம் உரையாற்றினோம். அப்போது, ‘‘இறையனார் அவர்கள் முரட்டுப் பிடிவாதக்காரர். ஏற்ற கொள்கைக்காக எதையும் இழக்கத் தயாரானவர்கள். இறையன் – திருமகள் இருவரும் எங்கள் அங்கங்கள் மட்டுமல்ல, அவர்கள் எங்களுக்குக் கிடைத்த கொள்கைத் தங்கங்கள்-சிங்கங்கள். இறையன் அவர்களை 40 ஆண்டு காலமாக நான் அறிவேன்.

எனக்குத் தெரிந்த வரையில் பாவாணருக்கு அடுத்தபடியாக எல்லா நிலையிலும் தனித் தமிழ்ச் சொற்களை கையாளக் கூடியவர் இறையனாராகத்தான் இருக்க முடியும். ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் அவர்கள். அவர்கள் என்ன ஜாதி என்றே எங்களுக்குத் தெரியாது. அவர்கள் அரசு ஊழியர்களாக இருந்தாலும் கழக ஊழியம் செய்தவர்கள். இறையனார் அவர்கள் உருவாக்கிய “இதழாளர் பெரியார்” என்ற நூல் ஒரு காலப் பெட்டகம்’’ எனப் புகழுரை வழங்கினோம்.

இறுதியாக விழா நாயகர் இறையன் ஏற்புரை வழங்கினார்.

அண்ணா நகர் பெரியார் படிப்பகத்தை திறந்து வைக்கும் தமிழர் தலைவர்.

சென்னை அண்ணாநகரில் பொறியாளர் வி.சுந்தரராசுலு அவர்களின் பெரும் முயற்சியால் ஓர் இடம் குத்தகைக்குப் பெறப்பட்டு அங்கு ஒரு பெரியார் படிப்பகம் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா 1.7.2005 மாலை நடைபெற்றது.

வி.சுந்தரராசுலு விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கழகப் பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் தலைமை தாங்கிப் பேசினார். விழாவில் நாம் கலந்துகொண்டு பெரியார் படிப்பகத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகையில், ‘பொதுமக்கள் மூடநம்பிக்கைக்கு ஆட்படாமல், தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும். அறிவுக்கும் பகுத்தறிவுச் சிந்தனைக்கும் முதலிடம் கொடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினோம். படிப்பகத்தை உருவாக்கிக் கொடுத்த பொறியாளர் சுந்தரராசுலுக்கு நாம் பாராட்டுத் தெரிவித்தோம்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 5.7.2005 முதல் 8.7.2005 வரை நடைபெறவிருக்கும் உலக மனித நேய பகுத்தறிவாளர் மாநாட்டில் கலந்துகொள்ள நானும் எனது இணையர் மோகனா அம்மாளும் 3.7.2005 அன்று காலை 8 மணியளவில் சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் பாரீஸ் புறப்பட்டுச் சென்றோம்.

திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை, கவிஞர் கலி.பூங்குன்றன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, பேராசிரியர் மு.நீ.சிவராசன், கா.ஜெகவீரபாண்டியன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் எம்மை
வழியனுப்பி வைத்தனர்.

4.7.2005 அன்று லண்டன் சென்றடைந்த எங்களை லண்டன் விமான நிலையத்தில் எஸ்.சங்கரமூர்த்தி (பிபிசி), செல்வநாயகம், தேவதாஸ், சிங்காரவேலு, சேகரன், கவிஞர் செ.வை.ரெ.சிகாமணி, பொறியாளர் ஜெயம் ஆகியோர் அன்புடன் வரவேற்றனர்.

பாரீஸ் புறப்பட்டுச் செல்லும் ஆசிரியரை வழியனுப்பும் கழகத் தோழர்கள்…

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 5, 6, 7.7.2005 ஆகிய மூன்று நாட்கள் உலகப் புகழ் வாய்ந்த யுனெஸ்கோ தலைமை அலுவலக மாநாட்டு அரங்கில், பன்னாட்டு மனிதநேய, ஒழுக்க நெறி பரப்பும் பகுத்தறிவாளர் அமைப்பு (International Humanist and Ethical Union) சார்பில் உலக மனித நேயப் பகுத்தறிவு மாநாடு நடந்தது. இதில் பல்வேறு உலக நாடுகளின் பேராளர்கள் பங்கேற்றனர்.

செல்வநாயகம்

தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் கழகத்தின் மனிதநேய, பகுத்தறிவுப் பணிகளைப் பாராட்டி எம்மைப் பங்கு கொள்ளுமாறு, அதன் தலைவரும் மாநாட்டுச் செயற்குழுவும் விடுத்த அன்பழைப்பினை ஏற்று நான் கலந்துகொண்டேன்.

ஏற்கெனவே நமக்கு அறிமுகமாகிய பலரும், புதிய அறிமுகமாகக் கிடைத்த மனிதநேய நண்பர்களும் அதில் பங்கேற்றுச் சிறந்த கருத்துகளைக் கூறினர்.

பி.பி.சி. (தமிழ் )
தமிழோசை எஸ். சங்கரமூர்த்தி

அய்ரோப்பிய நாடுகள் அனைத்திலிருந்தும் மற்றும் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்பிரிக்காவின் நைஜீரியா, ரஷ்யா, பாகிஸ்தான், நேபாளம், கனடா, தென் அமெரிக்கா நாடுகள் சிலவற்றிலிருந்தும், இருபால் பேராளர்களும் திரண்டு பங்கேற்றனர். சுமார் 300 பேர்களுக்குமேல் மாநாட்டு மண்டபத்தில் கூடியிருந்தனர். முதல்நாள் பொது அரங்காக நடைபெற்றது.

இரண்டாம் நாள் மாநாட்டு மண்டபத்தில் பல்வேறு அறைகளில் தனித்தனியாக பல்வேறு தலைப்புகளில் மிகச் சிறப்பாக, தனித்தனி பட்டறைகளில் (Workshops) கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடந்தன.

அதில் திராவிடர் கழகத்தின் சார்பில் (எனக்கு) மாலை 3.45 மணிமுதல் 4 மணிவரை பேச வாய்ப்புக் கிடைத்தது. எல்லோருக்கும் 10 மணித்துளிகள்தான் ஒதுக்கப்பட்டது. நிகழ்வுகள் எல்லாம் திட்டமிடப்பட்டபடி குறித்த நேரத்தில் குறித்தபடி நடந்தன.

இதுபோன்ற மாநாட்டில் தலைவர், முக்கியமானவர் உட்பட யாரும் 5 அல்லது 10 மணித்துளிகளில் உரையாடி முடிப்பதே அவர்களது வாடிக்கையும், வழமையான நடைமுறையுமாகும்.

இதை நான் அறிந்தபடியால், “பண்பாடு, ஒழுக்கநெறி, மதம்” என்ற தலைப்பில் அமைந்த பட்டறையில் ஆற்ற வேண்டிய உரையை தந்தை பெரியார் அவர்களும், சுயமரியாதை இயக்கமும் பண்பாட்டுப் படையெடுப்பான, ஜாதி, தீண்டாமை, கடவுள், மதம் இவற்றை எதிர்த்து தமிழ்ச் சமூகத்தில் பகுத்தறிவு என்ற அறிவாயுதம் கொண்டு எப்படியெல்லாம் இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட 80 ஆண்டு காலத்தில் மாற்றி ஒரு புதிய சுயமரியாதை வாழ்வை – ‘கடவுளை மற, மனிதனை நினை’ என்கிற நெறியோடு துளி ரத்தம் கூடச் சிந்தாமல், அறிவுப் புரட்சியை அமைதிப் புரட்சியாக அதிசயச் சாதனையைச் செய்த இயக்கம் என்பதை விளக்கியும், அதனை இந்தியாவிலும், உலக நாடுகள் சிலவும் ஏற்றுச் செயல்பட்ட நிலையை நேரில் காணக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டதையும், குறிப்பிட்டு விளக்கும் ஒரு சிறு நூலாகவே ஆங்கிலத்தில் உரையை அச்சிட்டு எடுத்துச் சென்று கலந்துகொண்ட அத்தனைப் பேருக்கும் முதல் நாள் அன்றே வழங்கினேன்.

எனக்குப் பேச வாய்ப்புக் கிடைத்தபோது, உரையைப் படிக்காமல் இயல்பாகவே (Extempore) ஆங்கிலத்தில் உரையாற்றினேன்.

35 மணித்துளிகள் உரையை 15 மணித்துளிகளில் கேட்போர் புரிந்துகொள்ளும் வகையில் நிகழ்த்தினேன். (ஆங்கில உரை)

ஜாதி, தீண்டாமையை ஒழிக்க அறப்போராட்டம் முறையை அய்யா கைக்கொண்டு வெற்றி பெற்றது – பண்பாட்டின் ஒரு முக்கிய பகுதியான திருமண முறையை பெரியார் அவர்கள் எப்படி மதச் சார்பற்ற முறையாக (Secularization of marriage system by self respect marriage) புகுத்தி வெற்றி பெற்று சட்ட சம்மதம் அண்ணா ஆட்சியில் பெற்றதை அவரே கண்டு மகிழ்ந்தது இவை உலக வரலாற்றில் நிகழ்ந்த அற்புதம் என்பதையும், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்திற்கு இந்தியாவில் முன்னோடி பெரியார் அவர்கள் என்பதையும், இன்று அரசுகளே இதனைச் செயல் திட்டங்களாக்கிவிட்டன என்பதையும்,

பண்பாட்டுத் தளத்தில் மொழி முக்கியமானதால் அம்மொழி மக்களிடையே எளிதில் பரவ, தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தினை 1935 முதல் புகுத்தி வெற்றி பெற்று, தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசிய அரசுகள் செயல்படுத்தி வருவதையும், பகுத்தறிவாளர்கள் பிரிட்டனில், ஸ்காட்லாந்தில் 2005இல் தான் முதல் முறையாக சட்ட சம்மதத்துடன் மதச் சடங்குகளற்ற மனிதநேய முறையில் திருமணம் நடத்தியுள்ளனர் என்பதையும், ஆனால், நம் தலைவரும், நமது இயக்கமும் 1928இல் தொடங்கி, நடத்தி 1967இல் அவருடைய சீடர்கள் ஆட்சியிலேயே சட்டமாக்கிட்ட சரித்திரச் சாதனை ஒப்புவமையற்றது என்பதையும் எல்லாம் விளக்கினேன்.

வர்ணாசிரமத்தில் ஆழ்ந்த நம்பிக்கையாளராக காந்தியார் இருந்தது; பிறகு அவரே இறுதிக் காலத்தில் மாறிய நிலையில், எப்படி மதவெறிச் சக்திகள் அவரைச் சுட்டுக்கொன்றன என்பதையும் விளக்கியபோது, வந்திருந்தோர் இந்தியாவின் மதவெறி இயக்கமான ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., போன்றவை பற்றி மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டது.

பார்பரா ஸ்மோக்கர்

எமக்கு எடைக்கு எடை தங்கம் கொடுத்தபோது சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாட்டிற்கு வந்து கலந்துகொண்ட இங்கிலாந்து நாட்டு நேஷனல் செக்யூலர் சொசைட்டியின் (National Secular Society) மேனாள் தலைவரான 84 வயது மூதாட்டி பார்பரா ஸ்மோக்கர் (Barbara Smoker) அவர்களும், ஜெர்மனி நாத்திகர் மீயூல அவர்களும் மற்ற அறிமுகமில்லாத பலரும் அளவளாவினர்.

7ஆம் தேதி பாரீசில் உள்ள புகழ்பெற்ற சோர்போன் பல்கலைக்கழகத்தின் ‘ரிச்சலியூ’ அரங்கில் பகுத்தறிவாளர்களுக்கும், மனித நேயர்களுக்கும் பாடப் புத்தகம் போன்ற “மனிதநேயம்” (Humanism) என்ற நூலை அளித்தார்கள்.

அதில், திராவிடர் கழகம் பல லட்சக் கணக்கானவர்களின் ஆதரவு பெற்ற மற்றும் அங்கு அரசியலை நிர்ணயிக்கும் ஒரு செல்வாக்குள்ள மனிதநேயப் பகுத்தறிவாளர் அமைப்பு என்பதாகக் குறிப்பிட்டுள்ளது இயக்க வரலாற்றின் பொன் வரிகள் அல்லவா!

8ஆம் தேதியன்று பாரீசில் பிரபலமான மற்றும் அய்ரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் ஒளிபரப்பாகும்
டி.டி.என்., தொலைக்காட்சியில் அரை மணி நேரம் செவ்வி (பேட்டி) ஒன்றினை நடத்தி அதில் இயக்கம், அய்யாவின் அருந்தொண்டு, ஈழத் தமிழர்கள் மூட நம்பிக்கையிலிருந்து முற்றாக வெளிவரவேண்டிய அவசியம், ஜாதியைத் தூக்கி வந்து புலம் பெயர்ந்த நாடுகளிலும் கொள்ளும் நிலை, வரதட்சணை வாங்கும் நிலை பற்றிக் கண்டித்தும் பேசினேன். புகழ் பெயர்ந்த தமிழர்களால் தமிழுக்கு, தமிழ் இன உணர்வுக்கு ஏற்பட்ட ஏற்றம் பற்றி எல்லாம் விளக்கினேன்.

9ஆம் தேதி, புகழ்பெற்ற சோர்போன் பல்கலைக் கழகத்தின் ‘ரிச்சிலியூ’ அரங்கில் பாரீசில் சிறப்பாக இயங்கும் உலகத் தமிழ் கவிஞர் பேரவை சார்பாக நடந்த பொது வரவேற்பு விழாவில், பாரீஸ்வாழ் (புதுவை) தமிழ்நாட்டுத் தமிழர்களும், ஈழத் தமிழர்களும், குடும்பம் குடும்பமாகப் பங்கேற்றனர். பகல் 3.30 மணிக்குத் தொடங்கிய இந்த விழாவில் தந்தை பெரியார் பற்றிய கருத்தரங்கம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் நாம் சிறப்புரையாற்றினோம். அப்போது ‘புலம் பெயர்ந்த மக்களுக்குத் தந்தை பெரியாரின் இரும்பொத்த கொள்கைகள் இனிமேல்தான் தேவை என்பதை வலியுறுத்தியதோடு புலம்பெயர்ந்த நாட்டில் வேகமாகப் பரவி வரும் இந்து ஆலயங்களையும் அவற்றோடு கட்டிக் காக்கப்படும் ஜாதி சமய கட்டமைப்பு வேலைகளையும் தெளிவாக எடுத்துக் கூறி அவற்றிலிருந்து விடுபட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினோம்.

அந்த அரங்கில் தந்தை பெரியார்தம் சிந்தனைச் சோலையில் உருவான உயர் எண்ணங்கள், தொலைநோக்குத் தொகுப்பான ‘இனிவரும் உலகம்’, ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற இரண்டு மிக அருமையான பிரெஞ்சு மொழியாக்க நூல்களை, திருமதி மோகனா வீரமணி வெளியிட, திருமதி சுசீலா எத்துவால், ரஞ்சித் ஆகியோர் பெற்றனர்.
இந்த நூல்களும், ஏனைய பகுத்தறிவு நூல்களும் அங்கே முழுவதும் மக்களால் விரும்பி வாங்கப் பெற்றதோடு, மேலும் கேட்டனர்.

இந்தப் பிரெஞ்சு மொழியாக்கம் வர, கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, புதுவை பெரியார் தொண்டர் வ.சு. சம்பந்தம், அருமையாக மொழிபெயர்ப்புச் செய்த ‘தாகூர்’ கலைக்கல்லூரியின் பிரெஞ்சு மொழித்துறை பேராசிரியர் திரு.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பெரிதும் காரணமானவர்கள்.

அய்யாவின் கொள்கைகள் அகிலம் முழுவதும் சென்றடையும் என்பதற்கு இந்த மாநாடு அருமையான தொடக்கம்.

டாக்டர் வி. டேவிட்

மலேசிய மக்கள் தொண்டர் – எதிர்க்கட்சி முக்கியத் தலைவர் டாக்டர் வி. டேவிட் அவர்கள் கோலாலம்
பூரில் 10.7.2005 அன்று மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். மலேசிய மண்ணில் தமிழர்களுக்காகத் தொடர்ந்து உழைத்தவர். ஈழத்தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். தந்தை பெரியார் மீதும் எம்மீதும் அளவற்ற
அன்பு கொண்டவர். அவரின் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும் மலேசியத் தமிழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆறுதல் தெரிவித்து 12.07.2005 ‘விடுதலை’ இதழில் இரங்கல் செய்தி வெளியிட்டோம்.

சுபா.ஏ.சுந்தரம்

பிரபல போட்டோகிராபர் சுபா.ஏ.சுந்தரம் (வயது 65). அவர்கள் தந்தை பெரியாரிடம் பேரன்பு கொண்டவர். அவரை அணுஅணுவாகப் புகைப்படங்கள் எடுத்துக் குவித்தவர். என்னிடத்திலும் பெருமதிப்புக் கொண்டவர். அண்ணா, காமராஜர் போன்ற தலைவர்களால் நெருக்கமாக அறியப்பட்டவர்.

இத்தகைய புகழ்பெற்ற தமிழர் சுபா.சுந்தரம் அவர்கள் 16.7.2005 அன்று மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். வீ.அன்புராஜ் மற்றும் ‘விடுதலை’ குழும நண்பர்கள் சுபா.சுந்தரம் உடலுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நாம் அவ்வமயம் வெளிநாட்டில் இருந்ததால் மறைந்த சுபா.சுந்தரம் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து இரங்கல் செய்தி அனுப்பி வைத்தோம்.

நினைவுகள் நீளும்..