இராமாயணம் மக்களுக்கு முட்டாள் தனத்தையும் மூடநம்பிக்கையையும் சூழ்ச்சித் தன்மையையும்தான் கற்பிக்கக் கூடுமே தவிர அதில் மனிதப் பண்பு, நேர்மை, நீதி, ஒழுக்கம் ஆகியவைகள் கற்க முடியாது.
இராமாயண காவியம் என்பது ஆரியப் புரட்டு என்னும் மாலையில் ஒரு மணியாகும். அதுவும் மிகச் சமீப காலத்தில் கற்பனை செய்த நூலாகும். இந்த இராமாயாணம் என்பது ஒன்றல்ல, பலவாகும். அவற்றுள் ஒன்றுக்கொன்று பல முக்கியமான முரண்பாடுகளும் விரிவும் சுருக்கமும் உடையவையாகும்.
இவை ஜெயின இராமாயணம், பவுத்த இராமாயணம், ஆனந்த இராமாயணம், நித்யாத்மீக இராமாயணம், ஆந்திர இராமாயணம், துளசிதாஸ் இராமாயணம், வால்மீகி இராமாயணம், கம்ப இராமாயணம் முதலிய பல இராமாயணங்கள் இருக்கின்றன. இவற்றுள் தென்னாட்டில் பிரபல ஆதார நூலாய் இருப்பது வால்மீகி இராமாயணம். இதுவும் வால்மீகி இராமாயணம் என்னும் ஒரு பதிப்பிலேயே முன்னுக்குப் பின் முரணாகப் பல இடங்கள் காணப்படுகின்றன. இவையெல்லாம் எப்படியோ இருந்தாலும்;
புத்தருக்குப் பிந்தியதே இராமாயணம்
இந்த இராமாயண காவிய உற்பத்தியானது சமீப காலத்தில் அதாவது, ஒரு இரண்டாயிரத்து அய்ந்நூறு ஆண்டுக்குள் அதுவும் பாரத காவியத்திற்குப் பின் ஏற்பட்டதாகத்தான் கொள்ளவேண்டி இருக்கிறது. பாரத காவியம் மக்களால் வெறுக்கப்படத் தொடங்கிய பின், அதிலுள்ள ஆபாசங்களையும், காட்டுமிராண்டித் தன்மைகளையும் மறைக்கும் தன்மையில், சிறிது நாகரிக முறையில் திருத்தப்பாடுகளுடன் உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் காவியமாக்கப்பட்டதென்றே சொல்லலாம்.
மற்றும், இந்த வால்மீகி இராமாயணம் என்பது பவுத்தன், பவுத்த தர்மம் தோன்றிய பின்பே எழுதப்பட்டது என்று இராமாயண ஆதாரப்படியே கூறலாம். இராமாயணத்தில் பல இடங்களில் பவுத்தன், பவுத்த தர்மம், பவுத்த சன்யாசி, பவுத்த மடம் என்பவையான சொற்கள் பல வலியுறுத்தப்பட்டு காணப்படுகின்றன. இராமாயணம் அயோத்தியா காண்டம், 109ஆவது சருக்கத்தில் சி.ஆர். சீனிவாசய்யங்கார் அவர்கள் பதிப்பித்த முதல் பதிப்பு, 412ஆம் பக்கம், 4ஆம் வரி முதல் பவுத்த தர்மம் பலமான கண்டன வசவு வாக்கியங்களால் கண்டிக்கப்பட்டு இருக்கிறது. பிறகு, கிஷ்கிந்தா காண்டத்தில் பவுத்த சன்யாசி தர்மம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சுந்தர காண்டத்தில், 5ஆம் சருக்கம் பக்கம் 72இல், 2ஆம் வாக்கியத் தொடர் முதல் வரியில், “புத்தர் ஆலயம் போன்ற, “கட்டட உப்பரிகையில்” சீதையை அனுமான் கண்டான் என்பதான வாக்கியம் இருக்கிறது. இராவணனது குணம், நாடு, மக்கள் நிலை ஆகியவற்றைப் பற்றிய தன்மைகளும், மதுரை, கோசலம், அயோத்தி, இலங்கை முதலிய நாடுகளும் அவற்றின் வருணனைகளும் நவநாகரிகத்தை ஒத்தே காணப்படுகிறபடியால், பொதுவில் வேத சாஸ்திர காலமே 3000-4000 ஆண்டுகளுக்கு உட்பட்டது என்று முடிவு செய்யப்பட்டிருந்தாலும், இந்த இதிகாசங்கள் மிக மிகச் சமீப காலத்து அதாவது, புத்தருக்குப் பிந்தியது என்று உறுதியாகக் கூறலாம்.
ஆரியத்தை காப்பாற்ற எழுதப்பட்டவை
மற்றும், இந்த சாஸ்திர, புராண, இதிகாசக் காவியங்கள் எல்லாமுமே ஆரியக் கோட்பாடுகளை வகுக்கவும், அவைகளுக்கு வந்த எதிர்ப்புகளைச் சமாளிக்கவே செய்யப்பட்டனவே ஒழிய, மற்றபடி அதற்கு நாட்டில் மனித சமுதாயத்திற்குத் தேவை என்ன இருந்தது? என்ன ஏற்பட்டது? என்று பார்த்தோமேயானால் இதன் தத்துவம் நமக்கு நன்றாய் விளங்கும். இராமாயணத் தோற்றத்திற்குக் காரணம் என்ன என்று பார்க்க முயன்றால், அதில் இராமன் பிறப்பதற்கு முன்பே விஷ்ணுவாக இருந்துகொண்டே தேவர்களுக்கு வாக்குறுதி தருகின்றான்.
“நான் இராவணனை புத்திரமித்திர பந்து பரிவாரங்களுடன் கொன்று உங்களை இரட்சிக்கவே- இராவண சம்மாரத்திற்கு என்றே இராமனாகப் பிறக்கப்போகிறேன். நீங்கள் கவலைப்படவேண்டாம்” என்று சொல்லுகிறார்.
இந்தக் கருத்துள்ள வாக்கியம் அதே இராமாயணம் சீனிவாசய்யங்கார் மொழிபெயர்ப்பு பாலகாண்டம் 15ஆவது சருக்கம் 51ஆம் பக்கத்தில் இருக்கிறது. இராவணன் யாகத்திற்கு விரோதமாகவும், மனுதர்மத்திற்கு விரோதமாகவும் ஆட்சி புரிந்தவன் என்கின்ற காரணத்தினால்தான் தேவர்களுக்கு- ஆரியர்களுக்கு விரோதியானான்.
இதுபோலவேதான், இதே காரணத்திற்குத்தான் கந்தபுராண சூரபத்மனும் ஆரியர்களுக்கு விரோதி
யானான். இவை மாத்திரமல்ல; “கடவுள்களின் அவதாரங்கள்” முழுவதும் வேதம், சாஸ்திரம், தேவர்கள் ஆகியவற்றிற்கு விரோதமான கருத்துடன் ஆட்சி செய்யும் அரசர்களை ஒழிக்கவும் அழிக்கவும் என்பதற்கல்லாமல் வேறு எதற்குத் தோற்றுவிக்கப்பட்டனவாகும்?
கந்தபுராணத்தைக் காப்பி அடித்த கதை
ஆரியர்கள் சிந்து நதிக்கு இப்புறம் கடந்து ஆதிக்கம் பெற்ற காலமே சுமார் கி.மு. 1000 அதாவது, இன்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்புதான். உலக சரித்திராசிரியர்கள் எல்லோருமே அதிலும் தென்னாட்டு சரித்திர ஆசிரியர்கள் பார்ப்பனர்கள் உட்பட எல்லோருமே கூறிவிட்டார்கள். இவர்களது கூற்றே இன்று பள்ளிப் பாடமாகவும் சரித்திர ஆதாரமாகவும் விளங்குகின்றன.
மற்றும், இராமாயணம் மிக மிகப் பிந்திய இதிகாசம் என்பதற்கு ஆதாரம் அது கந்த புராணக் கதை தத்துவத்தை- செய்கையை- நடப்பை ஒன்று விடாமல் பொறுக்கி எடுத்து பாத்திரங்களுக்கும் செய்கைகளுக்கும் வேறு பெயர் கொடுத்து சித்தரிக்கப்பட்டு இருக்கிறது என்பதுடன், அதில் வரும் பெயர்கள் பலவற்றைப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருப்பதையும் காண்கிறோம்.
இரண்டிற்குமுள்ள வித்தியாசம் என்னவென்றால் கந்தனும் வள்ளியும் சாகவில்லை; கந்தபுராணம் எழுதியவன் இவர்களை (கந்தனை- வள்ளியை) சாகடிக்கவில்லை. இராமாயணம் எழுதினவன் இராமனையும் இலட்சுமணனையும் சீதையையும் கொன்றுவிட்டான். ஆற்றிலும் குழியிலும் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்கள் என்றே எழுதி சாகடித்துவிட்டான். அதாவது டிராஜிடி (TRAGEDYயில் முடித்தான்.
மற்றும் கந்தபுராணத்தில் கந்தனுக்கோ வள்ளிக்கோ ஒழுக்கக்கேடு – இழிவு சுமத்தவில்லை. ஆனால் இராமாயணத்தில் இராமனுக்கும், சீதைக்கும் பெரும் ஒழுக்கக் கேடுகளையும், இழி தன்மைகளையும் வண்டி
வண்டியாய்ச் சுமத்திவிட்டான். இராமாயண ஆசிரியன் சுமத்தினதோடு அல்லாமல், அதை நீதி என்றும் யோக்கியமென்றும் ஆக்கிவிட்டார்கள் பார்ப்பனர்கள்.
நீதியும் ஒழுக்கமுமற்ற சாத்திரங்கள்
இதன் கருத்து என்னவென்றால், கந்த புராண காலத்து ஆரியர்களைவிட இராமாயண காலத்து ஆரியரின்
ஒழுக்கம் அவ்வளவு கீழ் நிலைக்குப் போய்விட்டது.
அதாவது இன்றைய நிலைக்கு – அதாவது ஒரு ஆரியன் தனது வாழ்வில் எப்படி நடந்தாவது என்ன காரியம் செய்தாவது தங்கள் வாழ்வைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டதே காரணமாகும். அதோடு கூடவே ஆரியரல்லாத மக்கள் அவர்களை படிப்படியாய் அந்த நிலைக்குக் கொண்டு வந்து வைத்துவிட்டார்கள் என்றே சொல்லலாம்.
அதோடு மாத்திரமல்லாமல் மற்ற மக்களும் அதைப் பின்பற்ற வேண்டிய நிலைக்கு வரவேண்டியவர்
களாகிவிட்டார்கள்.
ஆரியர்களால் உண்டாக்கப்பட்ட ஒரு கடவுளிடமாவது சாத்திரங்களிலாவது, நீதி ஒழுக்கம் நாணயம், ஜீவகாருண்யம், தயவு, கருணை, தாட்சண்யம் ஆகிய மனிதக் குணங்கள் இருக்கவே இருக்காது; கண்டிப்பாக இருக்கவே இருக்காது.
அவர்களால் உண்டாக்கப்பட்ட வேத சாத்திர நீதிகளில் ஒரு கடுகளவாவது நீதி, நேர்மை, சமத்துவம்,
ஒழுக்கம், நாணயம், தயவு, தாட்சண்யம் இருக்குமா என்று தேடினால் கண்டிப்பாக இருக்கவே முடியாது. ஏன் எனில், நமக்கு அறிவும் மனித உணர்ச்சியும் ஏற்பட ஏற்பட அவர்கள் – ஆரியர்கள் அயோக்கிய சீலர்களாக ஆகவேண்டியதாக ஆகிவிட்டது. அவர்கள் எழுதி வைத்துக்கொண்ட வேதசாத்திர புராணப்படியும் நடந்துவருகிற நடவடிக்கைப்படியும், அதைப் பின்பற்றுகிற பழகுகிற அவர்கள் சாத்திரப்படியும் அதுபோலவே ஆகித்தீரவேண்டியவர்களாக ஆகிவிடுகிறார்கள்.
(நூல் ஆதாரம்: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடான ‘நவமணிகள்’ எனும் நூல்)