நீங்களும் கூட பார்த்திருப்பீர்கள் – சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பெண் பிள்ளை கோபமாகப் பேசிய அந்தக் காணொளியை! “இவர்கள் யார், எனது வாழ்க்கையில் குறுக்கிட? நான் யாரைக் காதலிக்க வேண்டும், யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கு இவர்கள் யார்? எனது பெற்றோர்களும் சம்மதித்துவிட்ட பிறகு இவர்கள் ஏன் தடுக்க வேண்டும்? என்று வயது வந்த (Major) அந்தப் பெண் பிள்ளை எழுப்பிய கேள்விகள் மிகவும் நியாயமானவை.
ஆனால், ரத்த உறவையும் தாண்டி அப்பெண்ணின் வாழ்வினுள் தலையிடும் உரிமையை அந்த மனிதர்களுக்கு வழங்கியது ஜாதி! ஆம். இந்த அதிகப் பிரசங்கித்தனத்தை, அராஜகத்தைச் செய்வதற்கான உணர்வை அவர்களுக்கு வழங்குவது ஜாதியும் அதன் பின்னுள்ள மத நம்பிக்கையும் தான்! வயது வந்த ஆணும் பெண்ணும் காதலிக்கின்றனர். அதனை அவர்களது பெற்றோரும் ஏற்றுச் சம்மதிக்கின்றனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்கின்றனர். ஆனால் அதை அவர்கள் குடியிருக்கும் தெருவில் உள்ள இளைஞர்கள் எதிர்க்கின்றனர். ‘நீ தாழ்த்தப்பட்ட இளைஞனைத் திருமணம் செய்யக்கூடாது. ஒரு காலனிக்காரப் பையனை நம்ம ஏரியாவுக்கு அழைத்து வரப் போகிறாயா?’ என்று மறுப்புச் சொல்கின்றனர். அதனைத் தொடர்ந்து சாலையில் நடக்கும்போது அப்பெண்ணைக் கேலி செய்கின்றனர். மேலும் சாலையோரம் கடை போட்டு வியாபாரம் செய்யும் அப்பெண்ணின் பெற்றோருக்கு கடை போடாதே என்று இடையூறு செய்கின்றனர்.
அப்பெண் பிள்ளை தைரியமானவர் என்பதால் இந்தக் கொடுமையை எதிர்த்துப் பொதுவெளிக்கு இப்பிரச்சனையைக் கொண்டுவந்து ”இவர்கள் யார் எனது வாழ்க்கையில் தலையிட?” என்று. குரல் எழுப்புகிறார். பாதிக்கப்பட்ட இளம் பெண்ணே சொல்வது போன்ற இந்நிகழ்வு, எங்கோவொரு குக்கிராமத்தில் அல்ல. தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையின் மய்யப் பகுதியில் நடைபெறுகிறது. இதனைச் சாதாரணமான ஒரு நிகழ்வாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது; கூடாது. இதுவொரு ஆணவக் கொலைக்கான தொடக்கப் புள்ளி. இப்படித் தான் தொடங்குவார்கள். என்னவொரு வேறுபாடு என்றால், பெண்ணின் பெற்றோரையும் மீறி தெரு இளைஞர்கள் காதலுக்கு எதிராகப் பிரச்சனை செய்கின்றனர். பெண்ணைப் பெற்றவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு செய்கின்றனர். நாளை நெருக்கடி பொறுக்க முடியாமல் பெற்றோரும் தம் மகளின் காதலை எதிர்க்க நேரிடலாம்.
இந்தத் தெரு இளைஞர்களைப் போன்றவர்களை நாம் ஒவ்வொருவரும் அன்றாடம் வெவ்வேறு வயதில், வெவ்வேறு தோற்றத்தில் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். அடுத்தவர் வாழ்க்கையினுள் தாராளமாக எவ்விதக் கூச்சமும் இன்றி மூக்கை நுழைப்பவர்களைத் தினமும் சந்தித்துக் கொண்டும் அவர்களது அருவருக்கத்தக்க அறிவுரைகளைக் கேட்டுக் கொண்டும்தான் இருக்கிறோம். இவ்வாறு, கூச்சமற்ற ஆதிக்க மனப் போக்கை எது இவர்களுக்கு வழங்குகிறது என்று சிந்தித்தால் அது இந்த
ஜாதியச் சமூகம் கட்டமைத்து வைத்துள்ள வாழ்க்கைமுறை எனும் பார்ப்பனியப் பண்பாடு தான் சரியானது எனும் ஆணித்தரமான அவர்களது எண்ணமே வழங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத முட்டாள்களாக இருப்பார்கள். ஆனால், இந்தப் பண்பாட்டைக் காக்கும் விசயத்தில் நம்மை மிக எளிதாக ஆதிக்கம் செய்வார்கள், அதிகாரத் தொனியோடு மிகத் திமிராக ஒரு முட்டாளைப் பார்ப்பது போல நம்மை மிக இழிவாகப் பார்த்து நமக்கு அறிவுரை சொல்வார்கள். இந்தத் திமிர், ஆணவம் இவைதான் பார்ப்பனியம் கட்டமைத்துள்ள உளவியல் ஆகும். இந்தப் பார்ப்பனியப் பண்பாட்டுக் காவலர்கள் கிராமப்புறங்களில் மட்டுமல்ல இச்சமூகத்தின் பல்வேறு துறையிலும் ஊடுருவியுள்ளனர்.
மனித நேயத்தையும், சமூக முன்னேற்றத்தையும் அறிவியலையும் நம்பும் – விரும்பும் நாம் இந்தப் பத்தாம்பசலி முட்டாள்களின் ஆதிக்கத்தினைச் சமாளிக்க முடியாமல் தடுமாற வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. ஆம், இவர்கள் பல்வேறு வடிவில் நம் முன் வந்து நிற்பார்கள். நமது பெற்றோர், உடன்பிறந்தோர் இதுபோல நம்மை ஆதிக்கம் செய்தால் அவர்களிடம் நாம் கடுமையான எதிர்ப்பிரச்சாரத்தை, போராட்டத்தை நடத்தி வெற்றிபெற்று விடுகிறோம்.
ஆனால் மாமனார், மாமியார், சம்பந்தி, மனைவியின் சகோதரர்கள், சகோதரிகள் இவர்கள் மிகவும் உரிமையோடு முட்டாள்தனத்தையும், மூடத்தனத்தையும் கொண்டு வந்து நம் மீது திணிப்பார்கள். அந்த உறவு கெடாமல் அவர்களின் ஜாதி, மத, மூடப் பண்பாட்டுத் திணிப்பை மறுக்க வேண்டிய நெருக்கடி நமக்கு ஏற்படும். நமது மறுப்பைத் தங்களுக்கு நேர்ந்துவிட்ட அவமானமாகக் கருதி நம்மைப் பகைத்துக் கொள்ளவும் செய்வர். பகுத்தறிவாளர்களான நாம் காலமெல்லாம் கடைப்பிடித்து வரும் நாகரிகத்தை அவர்கள் நம்மிடம் ஒரு போதும் கடைப்பிடிப்பதில்லை.
நாம் பிறருடைய நம்பிக்கைகளில் தலையிட்டுத் தடுத்து நிறுத்துவதில்லை. பிறருடைய நெற்றிக் குறிகளை அழிப்பதுமில்லை. ஆனால், அவர்கள் தாராளமாக நமது நெற்றியில் உரிமையோடு குறியிடுவார்கள். நாமும் மனித நாகரிகம் கருதி கையைத் தட்டிவிடுவதில்லை. நாம் பொதுவான பிரச்சாரத்தில் மட்டுமே ஈடுபடுகிறோம். எந்தவொரு தனிமனிதரின் வாழ்விலும் உட்புகுந்து அவர்களது பழக்க வழக்கத்தைக் குலைப்பதோ, தடுத்து நிறுத்தும் அநாகரிகச் செயலில் ஈடுபடுவதோ இல்லை. இந்த நமது நாகரிகமே பழைமைவாதிகளுக்கு வாய்ப்பாக ஆகிவிடுகிறது.
ஆம், பகுத்தறிவு என்பது நாகரிகத்துடனும் ஜாதி, மதப்பண்பாடு என்பது அநாகரிகத்
துடனும் பிணைந்துள்ளது. அதனால்தான் காதலர் தினத்தன்று ஜாதி மதவெறியர்கள் தங்கள் கண்ணில் படும் இளம் ஜோடி
களுக்கு வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து வைக்கின்றனர் அல்லது தாக்குதல் தொடுக்கின்றனர். அதேபோல ஜனவரி முதல்நாள் இரவு புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் புகுந்து வன்முறையில் ஈடுபடுகின்றனர். பஃப்களில் புகுந்து வன்தாக்குதல் தொடுக்கின்றனர். இந்தக் கலாச்சாரக் குண்டர்கள் தான் பெற்ற மகளையே ஆணவக் கொலை செய்யப் பெற்றோருக்குத் தூண்டு கோலாகவும், பின்புலமாகவும் உள்ளனர்.
ஆக, ஜாதி மத நம்பிக்கை கொண்டவர்கள் அதனைத் தன்னளவில் மட்டும் வைத்துக் கொள்வதில்லை. தன்னைச் சுற்றியுள்ள பிற மனிதர்கள் மீதும் திணித்து, அவர்களது தனிமனித சுதந்திரத்தைப் பறித்துக் காலில் போட்டு மிதிப்பதன் மூலம் ஒட்டு மொத்த சமூக உறவுகளையும், சமூக நல்லிணக்கத்தையும், அமைதியையும் சீரழிக்கின்றனர். அதனால் தான் ஜாதியும் மதமும் ஒழிக்கப்பட வேண்டும் என்று பகுத்தறிவாளர்கள் கூறுகின்றார்கள்.