டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி! – முனைவர் கடவூர் மணிமாறன்

2024 கவிதைகள் ஜுலை 16-31

டாக்டர் முத்து லட்சுமி அவர்கள்
ஊக்க மருந்தென ஒளிர்ந்தார்! போற்றும்
முதற்பெண் மருத்துவர் இவரே! பெண்கள்
பதவிகள் பெறவே போர்க்கொடி உயர்த்திய
மாதர் குலத்தின் மணிவிளக் காவார்!
ஜாதி மறுப்பு மணமும் புரிந்தவர்;
சென்னை மருத்துவக் கல்லூ ரியிலே
பன்னரும் அறுவைப் பண்டுவ முறையில்
பயின்ற முதற்பெண் மாணவி இவரே!
அயரா வினைஞர்; ஆன்றோர் வியக்கச்
சீர்மிகு மாநிலச் சட்ட மன்றில்
தேர்வு பெற்றவர் முதற்பெண் மணியாய்!
உதவும் குணத்தர்; உயரிய மனத்தர்;
பதறிடச் செய்த தேவ தாசி
முறையை ஒழித்ததில் முதன்மைப் பங்கினர்!
நிறைகுடம் போன்றவர்; அவ்வை இல்லம்
சிறப்புற அமைத்தவர் அடையா றினிலே;
உரத்த சிந்தனை உலைக்களம் ஆனவர்;
மகளிர் வாழ்வில் மாண்பெலாம் சேர்த்த
தகைசால் சமூகப் புரட்சி யாளர்!
குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம்
வழக்கில் அந்நாள் இருந்த கோவிலில்
தேவ தாசிகள் ஒழிப்புச் சட்டம்
மேவுசீர்ப் பெண்கள் சொத்தின் உரிமைச்
சட்டம் கொணர்ந்திட முயன்று வென்றவர்!
பெட்புறு குழந்தைப் பாலியல் கேடுகள்
முற்றும் தகர்த்தவர் முத்து லட்சுமி!
வெற்றி மங்கை விழுப்புகழ் என்றும்
வரலாற் றேட்டில் மணக்கும்; திராவிடப்
பரப்புரை வெல்லும்; பாரிதைச் சொல்லுமே!