நெருப்பின் மேல் நின்று செய்த வேலை !-வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி

2024 கட்டுரைகள் ஜுலை 16-31

பொதுவாக சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் நம்மைச் சமாதானப்படுத்துபவர்கள் அல்லது பிரச்சனைகள் வராமல் தடுக்க நினைப்பவர்கள் பயன்படுத்தும் சொற்கள் என்பது “ஊரோடு ஒத்து வாழ்”, “ஊரோடு சேர்ந்து வாழ்” என்பதாகவே இருக்கும்.

சாதாரண செயலில்கூட பெரியவர்களின் அறிவுரையில் முதல் இடம் பிடிக்கும் அறிவுரையும் இதுவாகத்தான் இருக்கும். வாழ்க்கை நிலை உயரவும் இலட்சியங்களை அடையவும், பிறருடன் சேர்ந்து அவ்வறிவுரைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழும் பழக்கத்தினை, குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை கடைப்பிடிக்கப் பழக்குவோம். அதுதான் சரியான பாதை என்று நாமும் நம்பி, மற்றவர்களையும் நம்ப வைப்போம். ஆனால், ஒரு மனிதர் இந்தப் பார்வையிலிருந்து மாறுபடுகிறார். எவற்றை எல்லாம் இந்தச் சமூகம் புனிதம் என்றும், இதைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இப்படி இருந்தால் தான் மரியாதை என்றும், இவை தான் நமது பழக்க வழக்கங்கள் என்றும் பல நெடுங்காலமாக விளம்பரப்படுத்தி வந்ததோ அவை அனைத்தையும் எதிர்த்து தனது கேள்விகளால் துளைத்து எடுத்தார் அந்தத் தலைவர்.

ஊருடன் ஒத்து வாழும் அளவிற்கு இங்கே சமூகச் சூழல் இருந்ததா? அனைவரும் ஒன்றுபட்டு வாழத் தடையாக இருந்த-இருந்து வருகின்ற ஜாதியை வெகு பத்திரமாக வைத்துக்கொண்டு மனிதருக்குள் ஒற்றுமை வாழ்வு சாத்தியமா? என்று நம்மைச் சிந்திக்க வைத்தார் அந்தத் தத்துவத் தலைவர். அனைவரும் செல்லும் திசையில் செல்வது சுலபம். ஆனால், சரியான திசையில் செல்வதுதான் கடினம் என்பதை உணர்த்தினார் அந்தத் தலைவர். உணர்த்தியது மட்டுமின்றி, சரியான திசையில் செல்வதற்குரிய பாதையையும் அமைத்துத் தந்தார், தந்தை பெரியார்.

இச்சமூகம் கட்டமைத்த அனைத்திற்கும் எதிராக நின்றார். அனைத்தையும் எதிர்க்க வேண்டும் என்ற நோக்கு மட்டுமே இல்லை அவரிடம்; மாறாக மானுட சமத்துவத்திற்கு எதிராக நின்ற எதுவாயினும் அதனை எதிர்த்தார்.

“சுற்றுச் சார்புதான் (Association and Surrounding) ஒரு மனிதனின் வாழ்க்கை, லட்சியம், கொள்கை ஆகியவைகளுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அனுபவத்தில் பெரிதும் அப்படித்தான் இருந்தும் வருகிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒரு துறையிலாவது சுற்றுச்சார்பு, என்னை அடிமைப்படுத்தியதாகச் சொல்வதற்கு இடமே கிடைக்கவில்லை. நான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஒவ்வொரு தன்மையிலும் என்னைச் சுற்றி இருந்த சுற்றுச்சார்பு, சகவாசம் ஆகியவைகளுக்கு மாறாகவே இருந்து வந்திருக்கிறேன் ” என்கிறார்.

மேற்சொன்ன வரிகளை ஊன்றிப் படித்தால், பெரியாரின் அசாத்திய துணிச்சல் நம்மை வியப்படையச் செய்யாமல் இல்லை. பெரிய அளவில் அறிவியல் வளர்ச்சி இல்லாத, தொழில்நுட்ப வளர்ச்சி தொடங்காத காலகட்டத்தில் சுற்றி நின்ற யாரையும் சார்ந்து நிற்காமல், கொண்ட கொள்கையை மட்டுமே முன்னிறுத்தி தனித்து இயங்க அவர் துணிந்தார். அவரைச் சுற்றி ஜாதி, மதம், வர்ணாஸ்ரமம், பார்ப்பனர், புராண இதிகாசங்கள், மூடநம்பிக்கைகள், கடவுளர் கதைகள் என்று நிரம்பியிருந்த அனைத்தையும் தீரத்துடன் எதிர்த்து நின்றார். தனக்குப் பின் வருபவர்களுக்கு இவற்றையெல்லாம் கண்டு மிரட்சி ஒருபோதும் வரக்கூடாது என்பதால் அனைத்தையும் எதிர்ப்பதற்கான அடிப்படைக் காரணங்களை, அவற்றின் அடி வேர் வரை சென்று ஆராய்ந்து, அதனைப் பரப்பி, “பகுத்தறிவு” மட்டுமே பெரிது என்று நாம் சிந்திக்கும் நிலையை உருவாக்கினார்.

பார்ப்பனரல்லாத மக்களின் உயர்வுக்காக யார் எதைச் செய்தாலும் அதனை ஆதரிக்க பெரியார் தவறியதே இல்லை. தான் இருக்கும் இடத்தில் மட்டுமல்ல, தான் சார்ந்துள்ள இயக்கம் அல்லது கட்சிக்கு எதிர் நிலையில் இருக்கும் ஒருவர் பார்ப்பனரல்லாத மக்களின் நலனுக்காகச் செயல்படுத்தும் எந்த ஒரு செயலுக்கும் பெரியார் தனது ஆதரவுக் குரலினை எழுப்பாமல் இருந்ததில்லை. திராவிட இயக்கப் பொற்கால முதலமைச்சர் எனப் போற்றப்படும் “பானகல் அரசர்” அவர்களின் செயல்பாட்டை பெரியார் ஆதரித்த பாங்கு தான் அதற்குச் சிறந்த சான்று. அன்றைக்கு காங்கிரசின் கொள்கைகளை எதிர்த்தது நீதிக்கட்சி. பார்ப்பனரல்லாதவர்களின் நலனுக்காக, காங்கிரசின் செயல்பாடுகளை எதிர்த்து வெளியே வந்த தலைவர்கள் ஒன்று கூடி ஆரம்பித்த நீதிக்கட்சியின் நீண்ட ஆண்டுகள் முதலமைச்சர் என்ற பெருமைக்குரியவர் “பானகல் அரசர்”. 1921 ஆம் ஆண்டு பானகல் அரசர் பொறுப்பேற்ற நேரத்தில் தந்தை பெரியார் காங்கிரசில் இருந்தார். பார்ப்பனரல்லாதவர்களின் மேம்பாட்டிற்கு மட்டுமின்றி நம்மை அடிமைப்படுத்திய பார்ப்பனியத்தின் ஆதிக்கத் திமிரினை அடக்கும் வகையிலும் சட்டங்களை மிகத் துணிச்சலுடன் கொண்டு வந்தார்.

அப்படியான ஒரு துணிச்சல்மிகு செயல்தான், பானகல் அரசர் அவர்களால் கொண்டுவரப்பட்ட “ஹிந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம்”. பார்ப்பனர்கள் சர்வ உரிமையுடன் கொள்ளையடிக்கும் இடமாக இருந்தது ‘கோவில்’ தான். அக்கோவிலை கொள்ளை பெருச்சாளிகளின் கையில் இருந்து மீட்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அனைத்து எதிர்ப்புகளையும் சவால்களையும் கடந்து, இந்தியாவிலேயே முதன்முறையாக இந்து அறநிலையத்துறை பாதுகாப்புச் சட்டத்தினை கொண்டு வந்தார். இது ஒரு சட்டம் என்பதைக் கடந்து பார்ப்பனரல்லாத மக்களை அதுகாறும் அடிமைப்படுத்த பார்ப்பனர்கள் பயன்படுத்திய ஆயுதத்தின் மீதான நேரடித் தாக்குதலாக நாம் கருத வேண்டும். அத்தகைய அரும் செயலுக்கு காங்கிரசில் இருந்தபோதும் கூட பெரியார் ஆதரவளித்தார். பானகல் அரசரின் தீரமிகு செயலைப் பாராட்டினார். எல்லா காலகட்டத்திலும் நம் நன்மைக்காகச் சிந்தித்த அவர், அந்தச் சிந்தனைகளைச் சட்டங்களாக்கிச் செயல் வடிவம் கொடுத்தவர்களைப் பெரிதும் மதித்தார். அந்த வரிசையில் முதன்மை இடத்தில் இருந்தவர் பானகல் அரசர். பானகல் அரசரின் மறைவின் போது 1928ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி ‘குடிஅரசு’ இதழில் தந்தை பெரியார் எழுதிய இரங்கல் செய்தியே அதற்குச் சாட்சி. ஏழு பக்கங்கள் கொண்ட அந்த இரங்கல் அறிக்கையில்,
“இந்தியாவில் ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற அரசியல் இயக்கத்திற்கு விரோதி, ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற சமூகத்திற்கு விரோதி, ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற பத்திரிகைகளுக்கு விரோதி, ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற பிரச்சாரக் கூலிகளுக்கு விரோதி. இவ்வளவுமல்லாமல் மதிக்கத்தக்க பிரதிநிதித்துவம் என்று சொல்லும்படியான பாமர மக்களுக்கும் விரோதி என்று சொல்லும்படியான நிலையில், நெருப்பின் மேல் நின்று கொண்டு வேலை செய்வது போல் வெகு கஷ்டமான துறையில் வேலை செய்தவர். இந்த வேலையில் ஈடுபடுபவர்களுக்கு என்னென்ன குணங்கள் வேண்டும் என்பதற்கு ஓர் இலக்கணமாகவும், இலக்கியமாகவும் விளங்கினார் நமது தலைவர் பானகல் அரசர் என்று சொல்லுவது ஒரு சிறிதும் மிகையாகாது என்றே எண்ணுகின்றோம்” என்று எழுதினார், பெரியார்.

சுற்றுச் சார்பாக இருந்த அரசியல், சமூகம், அதிலும் குறிப்பாக அதிக பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருந்த பார்ப்பனச் சமூகம், அவர்களின் பத்திரிகைகள், யாருக்காகச் செயல்படுகிறோமோ அந்த மக்களே எதிர்த்து நிற்கும் நிலை என்று அனைத்தையும் கடந்து வேலை செய்வது எவ்வளவு கடினம் என்பதை ‘நெருப்பின் மேல் நின்று வேலை செய்தார் பானகல் அரசர்’ என்ற ஒற்றை வரியில் பெரியார் படம்பிடித்து காட்டுகிறார். பெரியாரின் அந்தச் சொற்கள் அப்படியே அவரின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பொருந்தும். ஆம், சாகின்ற வரை நெருப்பின் மேல் நின்று போர் தொடுத்தார், பெரியார். எல்லா நேரத்திலும் தனது சுற்றுச் சார்புக்கு மாறாகவே இருந்து வந்திருக்கிறேன் என்று சொன்ன பெரியாரின் அதே நிலைப்பாட்டுடன் பானகல் அரசர் இருந்ததால்தான் துணிச்சல்மிகு சட்டங்களை அவரால் கொண்டுவர முடிந்தது என்பதை நாம் பொருத்திப் பார்க்க வேண்டும்.

மானுட சமத்துவத்திற்கு எதிராக எது இருப்பினும் அதனை எதிர்த்து நிற்கும் துணிச்சல் வேண்டும்; அதுவே பெரியாரிடம் நாம் கற்கும் முதன்மைப் பாடம்! 