வரவேற்கப்பட வேண்டியவர்களே…… முனைவர் வா.நேரு …

2024 Uncategorized கட்டுரைகள் ஜுலை1-15-2024

இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்கும் இந்த நாளில் உலகின் மக்கள் தொகை 811 கோடி, இந்தியத் துணைக் கண்டத்தின் மக்கள் தொகை 144 கோடி. 1987ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் நாள் உலக மக்கள் தொகை 500 கோடியைத் தொட்டது. அய்யோ! உலக மக்கள் தொகை 500 கோடி வந்து விட்டது. நாடுகளே! அவரவர் நாடுகளில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள். இது உங்கள் நாட்டின் பிரச்சனை மட்டுமல்ல, உலகப் பிரச்சனை. உலகத்தில் ஒரு மனிதராகப் பிறக்கும் ஒவ்வொருவரின் சுயமரியாதைப் பிரச்சனை.எனவே, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள் என்று அய்க்கிய நாடுகள் சபை 1989இல் அன்புக் கட்டளை இட்டு ஜூலை 11ஆம் தேதியை உலக மக்கள்தொகை நாளாக அறிவித்தது. 1990 முதல் உலகின் பல நாடுகள் இந்த ஜூலை 11ஆம் நாளை, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் ஒரு விழிப்புணர்வு நாளாகக் கடைப்பிடிக்கின்றன.

உலகின் மக்கள் தொகை 1800ஆம் ஆண்டில் 100 கோடி. 1900ஆம் ஆண்டில் 160 கோடி. 1987ஆம் ஆண்டில் 500 கோடி. .இப்போது 2024இல் 811 கோடி. 2050ஆம் ஆண்டுக்குள் மக்கள்தொகை 1000 கோடியை எட்டும் என்று கணிப்புகள் கூறுகின்றன. 250 ஆண்டுகளில் 10 மடங்கு பெருக்கம் என்றால் எப்படி உலகம் தாங்கும்?.. இயற்கை வளங்கள் அதேதான், ஆனால் மக்கள் தொகை மட்டும் 10 மடங்கு அதிகரிப்பு என்றால் உலகம் தாங்காது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கடந்த பல நூற்றாண்டுகளாக நகரத்தைவிட கிராமத்தில்தான் மக்கள் அதிகமாக வாழ்ந்து வந்தனர். ஆனால், நகரில் கிடைக்கும் வாய்ப்பு,வசதிகளைக் கருதி மக்கள் நகரங்களை நோக்கி நகர ஆரம்பித்தனர். தந்தை பெரியார் அவர்கள், கிராமத்தில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கி ‘‘நகரத்தை நோக்கி நகருங்கள், இடம் பெயருங்கள், அப்போதுதான் ஜாதியக் கொடுமைகளிலிருந்து தப்பிக்க முடியும்” என்றார். அப்படித் தமிழ்நாட்டில் கிராமத்தைவிட்டு நகரத்தை நோக்கி நகர்ந்து கல்வியால் பலர் உயர்வு பெற்றனர். ஆனால், உலகம் முழுவதும் நகரத்தை நோக்கி நகரும் போக்கு அதிகரித்திருக்கிறது. 2007இல் முதன்முதலாக உலகில், கிராமத்தில் வாழும் மக்கள்தொகையை விட நகரத்தில் வாழும் மக்கள்தொகை சதவிகிதம் கூடுதலாக இருந்தது. நகரத்தில் வாழும் மக்களின் சதவிகிதம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 2050ஆம் ஆண்டில் உலகில், நகரத்தில் வாழும் மக்கள்தொகை 66 சதவிகிதத்தை எட்டும் எனக் குறிப்பிடுகின்றனர். நகரத்தில் மக்கள் தொகை அதிகரிக்கும்போது அவர்களுக்கான குடிநீர் தேவை, மற்ற பயன்பாட்டிற்கான நீரின் தேவை,குடியிருப்புகளின் தேவை இன்னும் பற்பல தேவைகள் அதிகரிக்கின்றன. அவற்றைக் கொடுக்க முடியாமல்  அரசுகள்திணறுகின்றன.  இந்தத்திணறல் இன்னும்  அதிகரிக்கும் .இதைத்தவிர்க்க பெருநகரங்களிலிருந்தும்,கிராமங்களிலிருந்தும் விடுபட்டு மக்கள் சிறிய நகரங்களில் வாழும் போக்கு அதிகரிக்கவேண்டும்.அவர்களுக்கு பெருநகரங்களில் கிடைக்கும் வசதிகள் கிடைக்க அரசுகள் வழிவகை செய்யவேண்டும். மக்களின் மனப்போக்கும் மாறவேண்டும்.

உலகின் மக்கள்தொகையில் பெண்கள் 49.7 சதவிகிதம் உள்ளனர். ஆனால் தனக்குக் குழந்தை வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யும் நிலையில் பெரும்பாலான பெண்கள் இல்லை. அவர்களின் கணவரோ, குடும்பமோதான் குழந்தை வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்கிறார்கள். ஆண்குழந்தை வேண்டும் என்று 3,4 பெண் குழந்தைகள் பிறந்த பின்பும் கூட ஓர்
ஆண்பிள்ளையைப் பெற்றுத்தர வற்புறுத்துகின்றனர். சமூகம் ஒரு பெண்ணைக் குழந்தை பெற்றுத்தரும் கருவியாக இருக்கத்தான் வலியுறுத்துகிறது.கர்ப்பம், பிரசவம் காரணமாக ஒவ்வொரு இரண்டு நிமிடத்திலும் ஒரு பெண் இறக்கிறாள் என்னும் புள்ளி விவரத்தை அய்.நா. மன்றம் தருகிறது.

பெண் இல்லை என்றால் இன்றுவரை குழந்தைப் பிறப்பு இல்லை. நாளை மாறலாம்.ஆனால், பிள்ளைகளைப் பெற்றுத்தரும் பெண்களுக்கு இந்த உலகத்தில் என்ன உரிமை இருக்கிறது.?

“தொத்து நோய்,ஏழ்மை,பணக்காரர் தொல்லை
தொடர்ந்தடிக்கும் சூறையிலே பிள்ளையோ பிள்ளை!
காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக்
கதவொன்று கண்டறிவோம். இதிலென்ன குற்றம்?
சாதலுக்கோ பிள்ளை? தவிப்பதற்கோ பிள்ளை?”

என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

“பெண்களே, பெண்ணடிமைத்தனம் அகல்வதற்குக் கருப்பையைக் கழட்டி எறியுங்கள்” என்றார் தந்தை பெரியார். அன்றைக்கு உலகம் திடுக்கிட்டது – கருப்பாதையைச் சாத்திக் காதலா? கருப்பையைக் கழட்டி எறிந்த பின்பு காதலா? என்று. ஆனால், அறிவியல் புதிய புதிய வழிகளைக் காட்டிக் கொண்டே இருக்கிறது.கருப்பையைப் பற்றிக் கவலைப்படாமல் காதல் செய்வதற்கான வழியைச் செயற்கை நுண்ணறிவு காட்டியிருக்கிறது

சீனாவின் மக்கள் தொகை கடந்த 9 ஆண்டுகளாகத் தொடர்ந்து குறைந்து வருகிறது. ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களுக்கு பல்வேறு விதமான தண்டனைகளைக் கொடுத்து, மக்கள் தொகையைக் குறைத்த சீன அரசாங்கம், இப்போது அந்த விதியைத் தளர்த்தி,மக்களைத் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறது. ஆனாலும் சீனாவில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் திருமணம் செய்துகொள்வதிலோ,குழந்தை பெற்றுக் கொள்வதிலோ ஆர்வம் காட்டவில்லை.

“விர்ச்சுவல்“ என்றாலே மெய்நிகர் என்பதை நாம் அறிவோம். அதாவது உண்மை போல இருக்கும்; ஆனால் உண்மையானது அல்ல. ‘விர்ச்சுவல்” பார்ட்னரை உருவாக்கிக் கொள்ளும் போக்கு தற்போது சீனப் பெண்களிடையே பிரபலமடைந்து வருகிறது என்று பி.பி.சி. தமிழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. “ஆண்கள் வேண்டாம்!’ செயற்கை நுண்ணறிவு’ காதலனுடன் சீன பெண்கள் டேட்டிங் – என்ன காரணம்” என்று ஜூன் 2,2024இல் ஒரு விரிவான கட்டுரையைப் பி.பி.சி. தமிழ் இணையதளம் வெளியிட்டுள்ளது. இதுவும் கூட ஒருவகையில் மக்கள் தொகையைக் குறைக்கும் வழிமுறைதான்.

“`செயற்கை நுண்ணறிவுக் காதலர்’ என்னும் போக்கு கடந்த சில ஆண்டுகளில் மிகவும் பிரபலமாகிவிட்டது, இதில் சீனாவின் குளோ (Glow) மற்றும் அமெரிக்காவின் பிரதி (Replika) போன்ற பயன்பாடுகளும் அடங்கும்.

பெண்களை மய்யமாகக் கொண்ட ஓட்டோமி போன்ற காதல் விளையாட்டுகளும் இங்கு மிகவும் பிரபலமாகிவிட்டன. அத்தகைய விளையாட்டுகளில், பெண் பயனர்கள் ஆண் கதாபாத்திரங்களை உருவாக்கி காதல் உறவுகள் கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சீனப் பெண்கள் இத்தகைய மெய்நிகர் உறவுகளை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். சீனாவில் டிஜிட்டல் காதல் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பேராசிரியர் லியு டிங்டிங், செயற்கை நுண்ணறிவு ஆண் நண்பர்களின் மீதான சீனப் பெண்களின் ஆர்வம் பாலின சமத்துவமின்மையால் அவர்களின் நிஜ வாழ்க்கையில் நிலவும் விரக்தியைப் பிரதிபலிக்கிறது என்கிறார். மேலும் அவர் “நிஜ வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தி, மோசமான ஆபாச நகைச்சுவைகளைச் சொல்லும் பல ஆதிக்க மற்றும் மிரட்டும் ஆண்களைப் பெண்கள் சந்திக்கின்றனர். ஆனால், செயற்கை நுண்ணறிவு உங்கள் உணர்வுகளை மதிக்கிறது.” என்கிறார்.” என்று பி.பி.சி.தமிழ் செய்தி கூறுகிறது.

இது சரியா?தவறா? என்பதைப் பற்றி உலக அளவில் ஒரு பட்டிமன்றம் நடந்து கொண்டுள்ளது. ஆனால், நம்மைப் பொறுத்த அளவில் சக மனுசியை மனுசியாகப் பார்க்காமல் வெறும் பிள்ளை பெற்றுத்தரும் இயந்திரமாகவும்,அடிமை வேலை செய்யும் ஒரு வேலைக்காரியாகவும் மட்டுமே பார்க்கும் இன்றைய உலகில், பெண்ணுரிமை நோக்கிலும்,மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவேண்டும் என்னும் நோக்கிலும் இது மாதிரியான செயற்கை நுண்ணறிவுக் காதலர்கள் வரவேற்கப்படவேண்டியவர்களே.

“சமூகம் ஒரு பெண்ணைக் குழந்தை பெற்றுத்தரும் கருவியாக இருக்கத்தான் வலியுறுத்துகிறது.கர்ப்பம், பிரசவம் காரணமாக ஒவ்வொரு இரண்டு நிமிடத்திலும் ஒரு பெண் இறக்கிறாள் என்னும் புள்ளி விவரத்தை அய்.நா. மன்றம் தருகிறது”.

பெண்களுக்கு செயற்கை நுண்ணறிவுக் காதலர்கள் மட்டுமல்ல, ஆண்களுக்கும் செயற்கை நுண்ணறிவுக் காதலிகளும் உலக அளவில் அறிவியல் மூலம் உருவாக்கப்படுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் இதனைப் பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர் .இன்னும் சில ஆண்களுக்கு பெண்களிடம் எப்படிக் காதல் மொழி பேசுவது, அவர்களிடம் எப்படி நடந்து கொள்வது போன்று காதல் பாடங்களைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களாகவும் செயல்படும் வகையில் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களும், பாலுறவுப் பொம்மைகளும் உருவாக்கப்படுகின்றன. பயன்படுத்தப்படுகின்றன. ஆண், பெண் உறவில் இது ஒரு மிகப்பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகின்றது.