“அதை ஏன் கேக்குற? அது பெரிய ராமாயணக் கதை…” “எங்காவது போய் என் வனவாசத்தைத் தொலைச்சிட்டு வரேன்...” இந்த உரையாடல்கள் எல்லாம் அறிந்தும் அறியாத என் பிள்ளைப் பருவத்தில் எங்கள் கிராமங்களில் எல்லா மக்களிடமும் இயல்பாகப் புழங்கும் சொற்களாக என் காது படக் கேட்டவை. ஒரு கதை என்பது சமூகத்தில் இத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதால் தான் எந்தக் கலை வடிவமும் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமுதாயத்தின் மீது எத்தகைய சிந்தனைகளைத் தூண்டி அதன் போக்கை மாற்றிவிடும் என்பதை நுணுகி ஆராய்தல் நன்று.
தென்காசியில் ஒரு வழக்கு. ஒரு பெண்ணின் படத்தை மார்ஃபிங் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதால் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருக்கும் நபருக்கு ஜாமீன் மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், இச்செயல் அப்பெண்ணுக்கு மட்டும் எதிரான குற்றமன்று; இச்செயல் சமூகத்தின் மீதும் தாக்கம் ஏற்படுத்தும் என்பதால் இதைச் சமூகக் குற்றமாகப் பார்க்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது நாம் மிகவும் கவனிக்கத்தக்கது.
ஆக, கற்பியல் என்ற புனையொழுக்கத்தை பெண்களின் மீது திணித்து சமூகத்தையும் நம்ப வைக்க அன்றே விதையைத் தூவிய வேலையை இக்கதைகள் செய்திருக்கின்றன என்பது கண்கூடு.
உலக வரைபடத்தில் பெரும் எண்ணிக்கையிலான பகுதிகளைக் கைப்பற்றி தன் புறவாழ்வு முழுவதும் போர்க்களமாக்கிக் கொண்ட மங்கோலியப் பேரரசன் செங்கிஸ்கானின் அக வாழ்விலே, தன் மனைவியிடம் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதும், மனிதனாக வைத்து, பின்பு மன்னனாக்கி, அதன்பின் கடவுளாக்கி வைத்த கதாபாத்திர ராமன் தன் மனைவி சீதையிடம் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதையும் சுவைபட எடுத்துக்காட்டும் தோழர் அறம் மதி அவர்களின் Mrs. செங்கிஸ்கான் Mrs. ராமன் (ஓர் உரையாடல் )என்ற நூலாய்வு நிகழ்வு வழக்கம் போல் அல்லாமல் மூவர் அறிமுகம் செய்யும் சுவையான நிகழ்வாகவும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் 98ஆவது நூலாய்வு நிகழ்வாகவும் சற்று புதுமையாக நடைபெற்றது.
“மங்கோலிய குலவழக்கப்படி மணமகன் மணமகள் வீட்டில் அவர்கள் பெற்றோரிடம் உறுதி செய்து கொண்டு அவர்கள் சம்மதத்துடன் சிறிது காலம் தங்கியிருந்து வேலை பார்க்க வேண்டும். அப்படியாக செங்கிஸ்கானுக்குப் பெண் பார்க்கச் செல்லும் பொழுது செல்ல வேண்டிய ஊர் இன்னும் தூரத்தில் இருப்பதால் ஓரிடத்திலே தங்குகிறார்கள். அங்கே வேறொரு இனக் குழுவினர் வசிக்கிறார்கள். அவர்கள் செங்கிஸ்கானின் தந்தைக்கு நண்பர்கள்; வரவேற்று உபசரித்து, ‘இந்தச் சிறுவனுக்கா கல்யாணம்? ஏன் எங்கள் குழுவிலே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாதா’ என்றெல்லாம் கேலி பேசுகிறார்கள். அங்கேதான் செங்கிஸ்கான் என்ற இளைஞனைப் பார்த்து ஒரு பெண் கேட்கின்றாள், “என்னைத் திருமணம் செய்து கொள்வாயா?” என்று… அவள் தான் பின்னர் அம்மன்னனின் மனைவியான போர்டே.
ஒரு பெண் காதலை வெளிப்படுத்தலாம் என்பது தமிழ் மரபில் உண்டு. மங்கோலிய மரபிலும் அது நடந்தது.
ஆனால், ராமாயணத்திலே சூர்ப்பனகை ராமனிடம் தன் காதலை வெளிப்படுத்தும் போதோ அவளை அடித்துத் துரத்தி மார்பகங்களை வெட்டி மூக்கை அறுத்துத் துன்புறுத்தினர்.
வரலாற்றிலே உண்மையாக நடந்த கதையிலே பெண்ணுக்கான சுதந்திரம் எப்படி இருந்தது என்பதையும் புனையப்பட்ட கதையிலே பெண்ணுக்கான சுதந்திரம் எப்படி இருக்கிறது என்பதையும் மிக அழகாக இந்த நூல் உரையாடல் வடிவிலும் ஒப்பிட்டுப் பேசுகிறது.”
பேரரசன் செங்கிஸ்கானின் கற்பு!
“இனக்குழுக்கள் சண்டை அடிக்கடி அங்கே நடக்கும். செங்கிஸ்கானின் தந்தை ஒருமுறை தாக்குதல் நடத்தி அந்தக் குழுவின் தலைவியைக் கவர்ந்து கொண்டு வந்து மணந்து கொள்கிறார். அந்தப் பெண்ணுக்கும் அவருக்கும் பிறந்தவர்தான் செங்கிஸ்கான். தங்கள் இனக்குழுவில் ஒரு பெண் கடத்தப்பட்டதால் அதற்குப் பழிவாங்கும் நோக்கிலே அப்பெண்ணின் இனக்குழுவினர் படையெடுத்து வந்து செங்கிஸ்கானின் மனைவியான போர்டேவைக் கடத்திச் செல்கிறார்கள். மணம் புரிந்த சில நாட்களிலேயே மனைவியைப் பிரிந்த செங்கிஸ்கான் படைகளைத் திரட்டிப் போரிட்டு மனைவியை மீட்கின்றான். நான் வந்துவிட்டேன் ஒன்றும் கவலைப்படாதே என்று சொல்கின்றான்… கண்களெல்லாம் கண்ணீருடன் அவள் எழுந்து நிற்கிறாள்… ஒரு எட்டு மாத இடைவெளியில் அவள் வயிறு பெருத்திருக்கிறது. இங்கே மீட்டு கொண்டு வரப்பட்ட பொழுது அவள் கருவுற்றிருந்தாள். நமது மன்னர் என்ன செய்வார் என்று எல்லோருக்கும் அதிர்ச்சி. ‘போர்டே தான் என் மனைவி. அவள் வயிற்றில் வளர்கின்ற குழந்தைக்கு நான்தான் தந்தை. ஆணாகப் பிறந்தால் எனக்குப் பிறகு மன்னன். இதை ஏற்காதவர்கள் என் பகைவர்கள்’ என அறிவித்துதான் போர்டே ஓர் ஆண் மகவைப் பெற்றாள். அவனைச் சீராட்டி வளர்த்து ராஜ்ஜியத்தை நான்கு பங்காகப் பிரித்து அதில் ஒரு பங்கை மகனுக்கும் செங்கிஸ்கான் கொடுக்கிறான். தனது தந்தை செய்த தவறால் தனது மனைவி கடத்திச் செல்லப்பட்டு அவளின் ஒப்புதலின்றி வன்புணர்வு செய்யப்பட்டுக் கருவுற்ற போதிலும் தனது மனைவியாக ஏற்றுக் கொள்கின்ற பக்குவமும் அக்குழந்தையைத் தன் குழந்தையாக ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் செங்கிஸ்கானிடம் இருந்தது.”
சீதையை மீட்டது சீதைக்காகவா?
கற்பிழந்த கதாபாத்திர ராமன்!
இலங்கைக்குச் சென்று ராவணனுடன் போரிட்டு சீதையை மீட்டு வந்த பிறகு, கணவனைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறாள். ராமன் சற்றும் கலங்காதவனாக, ஆறுதலாகப் பேசாமல் சந்தேகச் சொற்களைப் பேசுகிறான். போரை விட கொடுமையானவை அவை. “வகையாகப் சாப்பிட்டு உறங்கியிருக்கிறாய்… ஒழுக்கம் கெட்டுப் போயும் உயிரோடு வந்திருக்கிறாய். எப்படி நீ இங்கே பயமில்லாமல் வந்தாய்? நீ என்ன நினைக்கிறாய்? உன்னை நான் விரும்புவேனென்று நினைக்கிறாயோ? நான் ஏன் இத்தனை பெரிய போரைச் செய்தேன்? எனது பெயருக்கும் புகழுக்கும் ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்கும் பொருட்டே நான் இலங்கைக்கு வந்தேன்’ என்கிறான். சீதை தன் ஒழுக்கத்தை நிரூபிக்கத் தீயில் இறங்கி வெளியே வருகிறாள்… ஏனெனில் அது கதையல்லவா? பின்பு 12 ஆண்டுகள் சேர்ந்து வாழ்கிறார்கள்…சீதை கருவுறுகிறாள்…
தன் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் சீதை இருக்கிறாள் என விலக்கி வைக்கிறான் அவதார ராமன்.
கற்பு என்பது பெண்களின் மீது திட்டமிட்டு விரித்த மாயவலை மட்டுமல்ல; மிகப்பெரிய மோசவலை ஆகும்.
அதனால் தான் கற்பு என்ற சொல்லிருந்தால் அதை இருபாலருக்கும் பொதுவாக வைக்கச் சொன்னார் பெரியார். இங்கும் அது பாலியல் ஒழுக்கமாக அல்லாமல், தான் சார்ந்திருக்கும் கணவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதாகத்தான் இருக்கிறது என்று நூலாசிரியர் சொல்கிறார். ஆக, அது உடல் ரீதியானது என்பது கற்பனையே! கற்பெனப்படுவது சொல் திறம்பாமை’ என்பது போல ஆணுக்கு இங்கே கற்பாக தன் மனைவி மீது வைத்த அன்பின் திரியாமை என்று நாம் வகுத்தால், என் கணவன் எனக்காகத் தான் போர் செய்து வந்தார் என்று போர்டே சொல்வது போல…
தன்னை விரும்பித் தன்னுடன் வாழ வந்தவளின் உணர்வுகளை மதித்து அன்புடன் நடத்திய கற்புடை அரசன் இங்கே மன்னன் செங்கிஸ்கானே!
அந்த வகையில் நெடிய கதை முழுவதும் ராமன் கற்பிழந்தே நிற்கிறான்!
இப்போதும் தேர்தல் ராமன்கள் அவதரித்துக் கொண்டே இருந்தாலும் மக்கள் தெளிவு பெறத் தொடங்கி விட்டார்கள் எனும் நம்பிக்கை 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் மூலம் நன்கு புலப்படுகிறது.