திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சி
நிறுவனத்தின் பொன்விழா!
சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் பயிலகம் சார்பாக, தமிழ்நாடு தொழில் கல்வி பயிற்சி வகுப்பு தொடக்கவிழா 26.3.2005 அன்று காலை அன்னை மணியம்மையார் மன்றத்தில் நடந்தது. பயிற்சி வகுப்பை நாம் தொடங்கி வைத்து உரையாற்றினோம். அப்போது “ஒவ்வொரு மாணவர்களும் கடுமையாக உழைத்துப் படிக்க வேண்டும். நல்ல நேரம் கெட்ட நேரம் என்று பாராது எல்லா நேரங்களிலும் கல்விக்கு முன்னுரிமை தந்து உழைக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டோம்.
கோயம்புத்தூர் சுந்தராபுரம் வணிகரும் விடுதலை வாசகர் வட்டத் தலைவருமான கி.வெற்றிவேல் அவர்களின் மூத்த சகோதரர் கி.பாலசுப்பிரமணியம் அவர்களின் துணைவியார் பா. பர்வதம் அம்மையார் 18.3.2005ஆம் தேதியன்று மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். அவரது படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி 27.3.2005ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 11 மணியளவில் நடந்தது.
கோவை சுந்தராபுரத்தில் உள்ள பர்வதம் அம்மையார் இல்லத்திற்குச் சென்று அவரின் படத்தைத் திறந்து வைத்து மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். பின்னர் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறி விடை பெற்றோம்.
கோவை மாநகர் அருகிலுள்ள வெள்ளலூர் நகரில் தந்தை பெரியார் முழு உருவச்சிலை திறப்பும், மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும், பெரியார் நகர் பெயர்ப் பலகைத் திறப்பும் 27.3.2005 ஞாயிறன்று மாலையில் மிகச் சிறப்பாக நடந்தது. (இப்போது புது இடத்தில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.)
நிகழ்வில் திராவிடர் கழக நகரத் தலைவர் ஆறுச்சாமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நகரச் செயலாளர் மணி தலைமை வகித்தார். நகர அமைப்பாளர் சுந்தரராசு, கிளைத் தலைவர் பாலகிருட்டினன், பொதுக்குழு உறுப்பினர்கள் சாலைவேம்பு சுப்பையன், செல்வம், பழநிச்சாமி, க.ம. இராமசாமி, பி. கலைச்செல்வி, தா.கவிதா, இராசாமணி அம்மாள், கி. வெற்றிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் நாம் கலந்துகொண்டு தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றியபோது, “வெள்ளலூர் நகரில் தந்தை பெரியார் சிலை அமைய அரும்பாடுபட்ட கழகத் தோழர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், ஊர்ப் பிரமுகர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நிலையில் பாராட்டுகளைத் தெரிவித்தோம்.
வெள்ளலூரில் பெரியார் சிலை திறப்பு – மாலை அணிவிப்பு
உயர்ந்தவன் – தாழ்ந்தவன் என்று சமுதாய மக்களிடையே பேதம் இருக்கக்கூடாது எனவும் எல்லோரும் மனிதர்களாக மதிக்கப்பட வேண்டும், காப்பாற்றப்பட வேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்ட அந்த மாமேதைக்கு இங்கே சிலை எழுப்பியிருப்பது மிகவும் பொருத்தமானது, பாராட்டுக்குரியதாகும் என்று குறிப்பிட்டு, அடித்தட்டு மக்களுக்கு சுயமரியாதைச் சூரணம் தந்து மானமுள்ள மனிதர்களாக்கியவர் என்ற எண்ணம் இங்கே வருகின்ற மக்களின் கண்ணிலே பெரியார் சிலை படும்போது தோன்றும் என்றும்,
தந்தை பெரியார் ஆற்றிய உழைப்பால்தான் இந்தத் தமிழ்ச் சமுதாயத்தில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டன” என்றும் குறிப்பிட்டோம்.
தந்தை பெரியார் நகர் பெயர்ப்பலகை திறப்பு
கோவை மாநகரிலுள்ள குறிச்சி நகர்மன்ற தி.மு.க. தலைவரும் நகர தி.மு.க. செயலாளருமான இரா. நாகராசன் மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். 27.03.2005 அன்று ஞாயிற்றுக்கிழமை நாம் கோவை வந்தபோது சுந்தராபுரம் காந்தி நகர் பகுதியிலுள்ள அவரது இல்லத்திற்குச் சென்று அன்னாரது படத்திற்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செய்தோம். பின்னர் அவரது இணையர் நா. ருக்மணி அம்மையார், மகன் நா.பிரபாகரன் ஆகியோருக்கு ஆறுதல் கூறி விடை பெற்றோம்.
குறிச்சி நாகராசன் துணைவியாருக்கு
ஆறுதல் கூறுகிறார் ஆசிரியர்.
அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் டாக்டர்வா.செ.குழந்தைசாமி அவர்கள் எழுதிய ‘குலோத்துங்கன் கவிதைகள்’ ஒரு கண்ணோட்டம் என்னும் நூலினைப் பற்றி சென்னை துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பா.வீரமணி அவர்கள் ஆய்வு செய்து எழுதிய புலவர் திறனாய்வு நூல் வெளியீட்டு விழா சென்னை பெரியார் திடலில் 2.4.2005 அன்று இரவு 7.20 மணிக்கு நடந்தது. விழாவில் நாம் கலந்துகொண்டு நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினோம்.
கர்நாடக மாநிலத்தில் கழகக் கொள்கையைப் பரப்புவதில் – நிலைநாட்டுவதில் பெரும் தூணாய் விளங்கியவரும் பெங்களூர் – பெரியார் பெருந்தொண்டருமாகிய மானமிகு வி.சி.கிருட்டினன் அவர்கள் (வயது 78) 6.4.2005 அன்று மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். அவரின் பிரிவால் வருந்தும் அவரது துணைவியாருக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்து இரங்கல் செய்தி அனுப்பி வைத்தோம்.
தஞ்சை மருதப்பா அறக்கட்டளையும் தஞ்சை சங்கத் தமிழ்க் கழகமும் இணைந்து 14.4.2005 மற்றும் 15.4.2005 ஆம் தேதிகளில் தஞ்சை தமிழ் அரசி திருமண மண்டபத்தில் கலை இலக்கிய விழாவினை நடத்தின. 15.4.2005ஆம் தேதி நடந்த நிறைவு விழாவில் நாம் கலந்துகொண்டு செம்மொழிப் போராட்டப் போராளிகளுக்கு நூல்களை நினைவுப் பரிசாக வழங்கி வாழ்த்துரை வழங்கினோம். அப்போது, “சித்திரையைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவது சரியல்ல. ஏனென்றால், அந்த ஆண்டுகளில் ஒரு பெயர் கூட தமிழ்ப் பெயர் இல்லை. தமிழனுக்கு ‘தை’ முதல் நாள்தான் தமிழ்புத்தாண்டு” என விளக்கிப் பேசினோம்.
நீதியரசர் பரஞ்சோதி அவரகளின் தாயார் குணவதி அம்மாள்
படத்திற்கு மாலை யிட்டு மரியாதை
பின்னர் ‘புதிய பார்வை’ ஆசிரியர் ம.நடராசன் அவர்களுக்கு நாம் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினோம்.
இந்த விழாவில் 29ஆவது குரு மகா சன்னிதானம், தவத்திரு பாலபிரஜாபதி அடிகளார், இராஜ கண்ணப்பன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், கலைமாமணி விக்ரமன், கரந்தை ச.இராமநாதன், பேராசிரியர் பி.விருத்தாசலம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
நீதிபதி இரா.பரஞ்சோதி, இரா.விட்டல்ராம் (போபால்), இரா. கிருஷ்ணராஜ் (பெங்களூர்), இரா.சாந்தி,
இரா.அபி ஆகியோரின் அன்னையாரும் மறைந்த எம்.வி. இராஜபூஷணம் அவர்களின் துணைவியாருமான குணாவதி அம்மாள் அவர்கள் (வயது 74) 10.4.2005ஆம் தேதி மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். சென்னை சைதாப்பேட்டை வர்த்தக சங்க மன்றத்தில் 17.4.2005 அன்று ஞாயிறு காலை 10.00 மணிக்கு குணாவதி அம்மையாரின் உருவப்படத் திறப்பு விழா நடந்தது.
அன்றைய கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை தாங்கினார். குடும்ப நண்பர் சண்முகம் வரவேற்றுப் பேசினார். திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை உரையாற்றிய பின், அம்மையாரின் உருவப்படத்தை நாம் திறந்து வைத்து உரையாற்றினோம். அப்போது தந்தை பெரியார் கொள்கைக்கும் பெரியார் திடலுக்கும் மறைந்த அம்மையாரின் குடும்பத்திற்கும் உள்ள தொடர்பை – கொள்கை உறவை எடுத்துக் கூறினோம். முடிவில் நீதிபதி இரா. பரஞ்சோதி நன்றி கூறினார்.
அகில இந்திய சார்ட்டட் அக்கவுண்டன்ட் சங்கத்தின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக் கப்பட்ட டி.என். மனோகரன், எத்திராஜ் மகளிர் கல்லூரி முதல்வராகப் பதவி உயர்வு பெற்ற பேராசிரியர் டாக்டர். மு.தவமணி, பவுத்தம் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற செ.கு. தமிழரசன், தந்தை பெரியாரியல் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற டாக்டர் சா.இராமு ஆகியோருக்கு பாராட்டு விழா மனித நேய நண்பர்கள் குழு சார்பில் சென்னை காஸ்மாபாலிட்டன் கிளப்பில் 17.4.2005 ஞாயிறு நண்பகல் 12 மணிக்கு நடந்தது.
மனித நேய நண்பர்கள் குழுவின் தலைவர் இரா.செழியன் தலைமை வகித்தார். செயலாளர் கா.ஜெகவீரபாண்டியன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விழாவில் நாம் கலந்துகொண்டு அவர்களைப் பாராட்டிப் பேசினோம்.
சேலத்தில் 18.4.2005 அன்று எமது தலைமையில் கழக இளைஞரணியினருடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் கிரிக்கெட் மோகத்தை ஒழிக்கும் வகையில் நாடெங்கும் ‘சடுகுடு’ போட்டிகள் நடத்துவது மற்றும் பெரியார் உடற்பயிற்சிக் கூடங்களை நிறுவி சிலம்பாட்டம் போன்ற தற்காப்புக்கலைகளையும், உடற்பயிற்சிகளையும் பயிற்றுவிப்பது உள்பட நான்கு முக்கியக் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ச.கருணாகரன் – சுமதி இணையரின் மகன் மன்னவன் சத்தியேந்திரன் மற்றும் கடலூர் அழகியநத்தம் டாக்டர் ந. தியாகராசன் – அபிதகுஜாம்பாள் இணையரின் மகள் வித்தியா ரத்தினம் ஆகியோரது இணையேற்பு நிகழ்வை கீழ்ப்பாக்கம், எம்.வி.ஜே. டவர்ஸ், ராஜலட்சுமி ஹாலில் 22.4.2005 அன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் நாம் நடத்தி வைத்தோம். மணவிழாவிற்கு உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி க. ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் தலைமை வகித்தார்.
உரத்தநாடு பூவத்தூரில் தந்தை பெரியார் படிப்பகம் மற்றும் எமது பெயரில் (கி. வீரமணி) அமைந்த நூலகம் திறப்பு விழாவும், தந்தை பெரியார் முழு உருவச்சிலை திறப்பு விழாவும் 24.4.2005ஆம் தேதி மாலை நடைபெற்றன. ஒன்றிய தி.க. அமைப்பாளர் பூவை. உ. முருகேசன் வரவேற்றுப் பேசினார்.
நூலகத்தை பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியின் மாநில துணைத் தலைவர் வழக்குரைஞர் குடந்தை கீதாலயன் திறந்து வைத்தார். விழாவில் நாம் கலந்துகொண்டு தந்தை பெரியார் படிப்பகம், மற்றும் பெரியார் முழு உருவச் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றினோம். அப்போது “தொழிற்கல்வி, மருத்துவம், சட்டம் என அனைத்து துறை சார்ந்த கல்வி பள்ளி, கல்லூரிகளில் கிடைக்கிறது. ஆனால், பகுத்தறிவினைப் பெறுவதற்கு தந்தை பெரியார் படிப்பகத்திற்குத்தான் செல்ல வேண்டும். தற்குறித்தனத்தை நீக்க, அறியாமையைப் போக்க, பகுத்தறிவை வளர்க்க எங்கே இருக்கிறது கல்விக்கூடம் என்ற கேள்விக்கு விடை தந்தை பெரியார் படிப்பகம்தான்” என்று உண்மை நிலையை எடுத்துக்கூறி பகுத்தறிவின் கட்டாயத் தேவையையும் எடுத்துரைத்தோம். முடிவில் வன்னிப்பட்டு செ. தமிழ்ச்செல்வன் நன்றி கூற விழா சிறப்பாக நிறைவுற்றது.
தஞ்சை ரோட்டரி சங்கங்களின் கூட்டுக் கூட்டம் தஞ்சாவூரில் 25.4.2005 அன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ரோட்டரி சங்க ஆண்டு விழா மலரை நாம் வெளியிட ரோட்டரி மாவட்ட மேனாள் ஆளுநர் டி. போஜபதி பெற்றுக்கொண்டார். மேலும் தஞ்சை மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் வழங்கிய 1000 போர்வைகளும் 150 பாய்களும் மருத்துவக் கல்லூரி முதல்வர் கலைச்செல்வியிடம் வழங்கப்பட்டது.
கூடுவாஞ்சேரி மகாலெட்சுமி நகர் விரிவு-4 இல் கட்டப்பட்டிருந்த கலை ஆதவன் இல்லத் திறப்பு விழா 26.4.2005 மாலையில் நடந்தது. நிகழ்ச்சியில் நாம் கலந்துகொண்டு புதிய இல்லத்தைத் திறந்து வைத்தோம். அதன்பின் கூடுவாஞ்சேரி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் பொதுக்கூட்ட மேடைக்குச் சென்றோம். காஞ்சி கதிரவனின் ‘மந்திரமா – தந்திரமா?’ நிகழ்ச்சி நடைபெற்றது.
தாம்பரம் மாவட்ட தி.க.செயலாளர் கூடுவாஞ்சேரி ராசு அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தாம்பரம் மாவட்ட தி.க. தலைவர் தி.இரா. இரத்தினசாமி தலைமை வகித்துப் பேசினார். நிறைவாக பெருமளவில் கூடியிருந்த மக்கள் மத்தியில் நாம் உரையாற்றினோம்.
தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் அவர்களது நூற்றாண்டு விழாவையொட்டி 28.4.2005 காலை 10.00 மணிக்கு சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையிலுள்ள ஆதித்தனார் சிலைக்கு தோழர்கள் புடைசூழ நாம் மாலையணிவித்தோம். கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை, அன்றைய கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், பேராசிரியர்கள் பு.இராசதுரை, நம்.சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அன்று இரவு 7.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் சி.பா.ஆதித்தனார் நூற்றாண்டு விழா நடைபெற்றது. கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்றுப் பேசினார். தாம்பரம் மாவட்ட தி.க. தலைவர் தி.இரா. இரத்தினசாமி, வடசென்னை மாவட்ட தி.க. தலைவர் ப.கவுதமன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் அறிமுக உரையாற்றினார். திராவிடர் கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை தலைமை தாங்கிப் பேசினார். அடுத்து தினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார் படத்தை நாம் திறந்து வைத்து சிறப்புரையாற்றினோம். அப்போது, பாட்டாளி மக்களும் அடித்தளத்து மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழில் பத்திரிகை தொடங்கி, தமிழனுக்கு இன உணர்வு ஊட்டி, பத்திரிகை உலகில் ஆதித்தனார் செய்த புரட்சியை நாம் எடுத்துரைத்தோம்.
தலைமைச் செயற்குழுவின் முடிவினை நிறைவேற்றும் வகையில் ஆறு கட்ட விழிப்புணர்வு விரைவுப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி பிரச்சாரக் குழுவினர் 3.3.2005 முதல் 30.4.2005 வரை தமிழ்நாடெங்கும் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்து விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதன் நிறைவு விழா 30.4.2005ஆம் தேதி காரைக்காலில் நடந்தது. அதில் நாம் கலந்துகொண்டு உரையாற்றினோம். அப்போது கடவுள், மதத்தின் பெயரால் நாட்டில் காவிகள் எப்படியெல்லாம் மக்களைச் சுரண்டி பிழைப்பு நடத்துகிறார்கள் என்பது குறித்தும் மூடநம்பிக்கை, தீண்டாமை, ஜாதி ஒழிப்பு, மனித உரிமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த திராவிடர் கழகம் முன்னெடுக்கும் செயல்பாடுகள் பற்றியும் எடுத்துரைத்தோம். இறுதியில் இராச. முருகையன் நன்றி கூறினார்.
திருநள்ளாறு புதுத்தெருவில் 30.4.2005 அன்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் சீ.பா.இராவணன் படத்தை நாம் திறந்து வைத்து மரியாதை செலுத்தினோம். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து நினைவுரையாற்றிய பின்னர் அவரது இல்லத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த நினைவுக் கல்வெட்டினைத் திறந்து வைத்தோம். நிகழ்வில் கழகத் தோழர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் கோ. அரங்கசாமியின் இணையர் திருமதி. தனம் அவர்கள் 24.4.2005 அன்று மறைவுற்ற செய்தி அறிந்து வருந்தினோம். 30.4.2005 சனிக்கிழமை அன்று இரவு 10 மணிக்கு மயிலாடுதுறை பட்டமங்கலம் காமராசர் தெருவிலுள்ள அவரது இல்லத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த தனம் அம்மையாரின் படத்தைத் திறந்து வைத்து மரியாதை செலுத்திய பின்னர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தோம்.
தந்தை பெரியாரால் திருச்சியில் 1955ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் 50ஆம் ஆண்டு பொன் விழாவும் அதில் பயின்று ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் மேனாள் மாணவர் கழகத்தின் விழாவும் 7.5.2005ஆம் தேதி சனிக்கிழமை காலை தொடங்கி இரவு வரை சிறப்பாக நடைபெற்றது.
7.5.2005ஆம் தேதி காலை 10.45 மணிக்கு திருச்சி- பெரியார் மாளிகை டி.டி. வீரப்பா அரங்கில் விழா எனது தலைமையில் தொடங்கியது. பயிற்சி நிறுவன முதல்வர் பேராசிரியர் ப. சுப்பிரமணியம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் மேனாள் மாணவர் கழக மாநிலத் தலைவர் திருவாரூர் ஈ.வெ.ரா. கழகத்தின் ஆண்டு அறிக்கையைப் படித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட உ.பி. மாநிலம் பகல்பூர் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பி.சி. பதஞ்சலிக்கு நாம் பொன்னாடை அணிவித்து, தந்தை பெரியார் உருவப்படம் பொறித்த நினைவுக் கேடயத்தை வழங்கினோம்.
ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உள்ள நூலகம், கணினி அறை, ஆய்வுக்கூடம், வகுப்பறைகளுக்கு பகுத்தறிவு பரப்பிய பகுத்தறிவுக் கல்வியாளர்களின் பெயரைச் சூட்டியதோடு, திருச்சி வை. பொன்னம்பலனார், உடையார்பாளையம் வேலாயுதம், கடலூர் திராவிடமணி, கதிராமங்கலம் புலவர் கோ. இமயவரம்பன், சின்னசேலம் பேராசிரியர் வெள்ளையன், ஜெயங்கொண்டம், கோ. கலியராஜுலு, வல்லம்படுகை சந்தானகிருட்டினன் ஆகியோரின் உருவப்படங்களை நாம் திறந்து வைத்தோம்.
திருச்சி குமுளூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ர. ஜமால் மொகிதீன் வாழ்த்துரையாற்றினார். சிறப்பு விருந்தினர் பகல்பூர் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பி.சி. பதஞ்சலி சிறப்புரையாற்றினார். இறுதியில் மேனாள் மாணவர் கழக மாநிலச் செயலாளர் க.அன்பழகன் நன்றி கூறினார்.
அடுத்து திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் அய்ம்பதாம் ஆண்டு பொன் விழா பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்திலுள்ள கலைவாணர் என்.எஸ்.கே. அரங்கில் மாலை 6.45 மணிக்கு மிகச் சிறப்பாகத் தொடங்கி நடைபெற்றது.
அன்று மாலை ஆந்திர மாநில ஆளுநர் மேதகு சுசில்குமார் ஷிண்டே திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்திற்கு வருகை தந்தார்.
பார்வையாளர் வரிசைகளில் அமர்ந்திருந்த மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், கழகத் தொண்டர்கள் கரவொலி எழுப்பி உற்சாகத்துடன் வரவேற்றனர். ஷிண்டே அவர்களுடன் மேனாள் மத்திய அமைச்சர் சந்திரஜித் யாதவ், துணைவேந்தர் பி.சி. பதஞ்சலி, போளூர் வரதன் ஆகியோரும் வந்திருந்தனர்.
முதலில் மொழி வாழ்த்துடன் பொன் விழா நிகழ்ச்சி தொடங்கியது. வழக்கறிஞர் கோ. சாமிதுரை அனைவரையும் வரவேற்று ஆங்கிலத்தில் உரையாற்றினார். ஆளுநர் சுசில்குமார் ஷிண்டே அவர்கட்கு நாம் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசினையும் மேனாள் மத்திய அமைச்சர் சந்திரஜித் யாதவுக்கு கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசையும், போளூர் வரதனுக்கு நாமும் சால்வையும் அணிவித்து சிறப்புச் செய்தோம்.
பள்ளி மாணவிகள் பதினோரு பேர் ஆளுநர் சுசில்குமார் ஷிண்டே, சந்திரஜித்யாதவ், மற்றும் எம்மை வரவேற்கும் பாடலுடன் கர்நாடக இசையில் ராகம், தாளத்துடன் நாட்டியம் ஆடிச் சிறப்பித்தார்கள்.
பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் சிறப்பினையும், சாதனைகளையும், ஆற்றிய தொண்டுகளையும் தெளிவாக விளக்கியும், பல்துறை அறிஞர்கள், தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டியும், நிறுவனத்தின் பெருமைகளை விளக்கியும் எழுதப்பட்ட பொன் விழா மலரை மேனாள் மத்திய அமைச்சர் சந்திரஜித் யாதவ் வெளியிட திருச்சி பிரபல தொழிலபரும், கல்வி வள்ளலுமான ’வீகேயென்’ கண்ணப்பன் பெற்றுக்கொண்டார். சந்திரஜித் யாதவ் சிறப்பாக உரையாற்றினார்.
பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த தமிழாசிரியர் தயாளசாமி, நெசவுப் பயிற்சி ஆசிரியர் சஞ்சீவி, ஓவிய ஆசிரியர் சாமி கங்காதரன் ஆகியோரைப் பாராட்டி ஆந்திர மாநில ஆளுநர் சுசில்குமார் ஷிண்டே சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார். அடுத்து நிறுவனத்தில் 25 ஆண்டுகளாக சிறப்பாகப் பணிபுரிந்த பணியாளர்களான அழகுமணி, தங்காத்தாள், மூர்த்தி, இராசு, ஆறுமுகம் ஆகியோரையும், முதல்வர் பேராசிரியர் ப. சுப்பிரமணியத்தையும் ஆந்திர மாநில ஆளுநர் சுசில்குமார் ஷிண்டே பாராட்டியதோடு சால்வையும் நினைவுப் பரிசும் வழங்கினார்.
இறுதியில் பயிற்சி நிறுவனத்தின் துணைமுதல்வர் பேராசிரியர் இரா.கலைச்செல்வன் நன்றி கூற விழா சிறப்பாக நிறைவுற்றது.
நினைவுகள் நீளும்…