அன்றுதான் நாமும் மனிதனாகலாம்!- வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

2024 Uncategorized கட்டுரைகள் ஜுன் 1-15 2024

தந்தை பெரியார் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் எந்தத் துறையில் மேலோங்கி இருந்தாலும் அதனை மாற்றி , அவை அனைத்தும் அனைவருக்குமான துறையாக மாற அனைத்து வகையிலான பிரச்சாரங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்தார். அந்த வகையில், பார்ப்பனர்கள் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ளவும், பார்ப்பனரல்லாத மக்களை மூடத்தனத்தில் மூழ்கச் செய்யவும், பார்ப்பனரல்லாத மக்களின் கவனத்தை தேவையற்ற நிகழ்வுகள் மூலம் திசை திருப்பவும், மத நம்பிக்கை என்ற பெயரிலும் பக்தி என்ற போர்வையிலும் பார்ப்பனர்களைத் தமிழர்கள் கடவுளாக நினைக்கும் வண்ணமும், அதனைப் பிரச்சாரம் செய்யும் கருவியாக பல பார்ப்பனப் பத்திரிகைகளை நடத்தி வந்தனர். பார்ப்பனப் பத்திரிகைகளில் பார்ப்பன மேலாதிக்கம் மட்டுமின்றி, திராவிட மக்களைக் கொச்சைப்படுத்தும் செய்திகளும் நிரம்ப இருந்தன. இதனைப் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத தந்தை பெரியார் பார்ப்பனரல்லாத மக்களிடம் பகுத்தறிவை ஊட்டவும், தனது சுயமரியாதைச் சிந்தனைகளைப் பரப்பவும் “குடிஅரசு” பத்திரிகையைத் தொடங்கினார்.

தந்தை பெரியாரால் 02.05.1925 அன்று தொடங்கப்பட்ட “குடிஅரசு” ஏட்டின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. “குடிஅரசு” என்ற பத்திரிகை சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றங்களையும், பத்திரிகை ஆசிரியராக பெரியார் செய்த பெரும் பணிகளையும் பட்டி தொட்டி எங்கும் பரப்ப வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கிறது. காரணம், “குடிஅரசு” வெற்று எழுத்துகளை மட்டும் தாங்கி நிற்கவில்லை; திராவிட சமூகத்தின், தமிழர்களின் சுயமரியாதை உணர்வையும், வாழ்வியல் நலனையும் தாங்கி நின்றது. தந்தை பெரியார் ‘குடிஅரசு’ ஏட்டினைத் தொடங்கியபோது , இங்கு எழுதப் படிக்கத் தெரிந்த பார்ப்பனரல்லாத மக்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம். படிப்பறிவில்லாத மக்களிடம் பத்திரிகை எப்படிச் சென்றடையும், எப்படி லாபம் வரும் என்பதை பெரியார் நினைக்கவில்லை. மாறாக, அப்பத்திரிகை சொல்லும் உண்மைச் செய்திகளால், ஆதிக்க எதிர்ப்பு உணர்வால், சமூகநீதிக் கருத்துகளால் சமூகம் எப்படிப்பட்ட மாற்றத்தைக் காண இருக்கிறது என்பதுதான் அவரின் முதன்மை நோக்கமாக இருந்தது. இச்சமூகத்தில் எங்கெல்லாம் சமூக அநீதி நிலவியதோ, எங்கெல்லாம் பார்ப்பனரல்லாத மக்கள் அடிமைப்படுத்தப்பட்டனரோ அந்தத் திசை எங்கும் பெரியாரின் பேனா சுழன்றது; அனைத்தையும் கண்டித்தது. அவரின் பகுத்தறிவுப் பார்வையில் எதுவுமே தப்பவில்லை. அதனைப் பெரியாரே விளக்குகிறார்:

“பொதுவாக நமது பிரசங்கத்தினாலும் நம் “குடிஅரசு”ஏட்டினாலும் நான் செய்து வந்த பிரச்சாரத்தில் அரசியல் இயக்கங்கள் என்பவற்றைக் கண்டித்தேன். அரசியல் தலைவர்கள் என்பவர்களைக் கண்டித்தேன். மதம் என்பதைக் கண்டித்தேன். மதத் தலைவர்கள் என்பவர்களைக் கண்டித்தேன். மதச்சடங்கு என்பவற்றைக் கண்டித்திருக்கின்றேன். குருக்கள் என்பவர்களைக் கண்டித்திருக்கின்றேன். கோயில் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். சாமி என்பதைக் கண்டித்திருக்கின்றேன். வேதம் என்று சொல்லுவதைக் கண்டித்திருக்கின்றேன். சாத்திரம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். புராணம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். பார்ப்பனியம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். ஜாதி என்பதைக் கண்டித்திருக்கின்றேன். அரசாங்கம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். உத்தியோகம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். நீதிஸ்தலம் என்பதைக் கண்டித்
திருக்கின்றேன். நியாயாதிபதி என்பவர்களைக் கண்டித்திருக்கின்றேன். நிர்வாக ஸ்தலங்கள் என்பவைகளைக் கண்டித்திருக்கின்றேன். ஜனப் பிரதிநிதித்துவம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். தேர்தல் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். கல்வி என்பதைக் கண்டித்திருக்கின்றேன். சுயராஜ்ஜியம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். சிறீமான்கள் கல்யாணசுந்தர முதலியார், வரதராஜுலு நாயுடு, இராஜகோபாலாச்சாரியார் முதலிய ஒரே துறையில் வேலைசெய்து வந்த நண்பர்களைக் கண்டித்திருக்கின்றேன். இன்னும் என்னென்னவற்றையோ – யார் யாரையோ கண்டித்திருக்கின்றேன்; கோபம் வரும்படி வைதும் இருக்கின்றேன் .

எதைக் கண்டித்திருக்கின்றேன் – எதைக் கண்டிக்கவில்லை என்பது எனக்கு ஞாபகத்திற்கு வரமாட்டேன் என்கின்றது. இன்னமும் ஏதாவது எழுதலாமென்று பேனாவை எடுத்தாலும், பேசலாமென்று வாயைத் திறந்தாலும் – கண்டிக்கவும் – வையவும் – துக்கப்படவுமான நிலைமை ஏற்படுகின்றதே ஒழிய, வேறில்லை. கண்டிக்கத் தகாத இயக்கமோ, திட்டமோ, அபிப்பிராயமோ என் கண்களுக்குப் படமாட்டேன் என்கிறது”. – (தந்தை பெரியார், ’குடிஅரசு’ 01.05.1927)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பெரியாரின் வரிகள் அவரின் மனிதநேயத்தையும், பார்ப்பனரல்லாத மக்களின் விடுதலை உணர்வில் அவர் கொண்ட அளவற்ற அக்கறையால், தனது பகுத்தறிவின் எல்லைக்குச் சென்று அனைத்து நிலைகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி, எதனையும் கண்டிக்கத் தவறவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

சுகபோகமான வாழ்வு, அவர் சொல்வதைச் செய்ய பெருங்கூட்டம், உயர்ந்த பதவிகள், செல்வம் கொழிக்கும் வணிகம் என அனைத்தையும் தக்க வைத்துக் கொள்ள அனைவரையும் அனுசரித்துப் போவதுதான் வழி என்றக் கட்டாயங்கள் அனைத்தையும் தகர்த்து, என் மக்களுக்காக நான் சிந்திப்பேன், சிந்தித்த கருத்துகளை எழுதுவேன், எழுதும் கருத்துகள் மக்களைச் சென்றடைய பத்திரிகை நடத்துவேன், அதனைப் பரப்புவேன் என்ற பெரியாரின் பரந்துபட்ட மானுடப் பார்வை வியப்பைத் தருகிறதல்லவா?


அதே வியப்புடன் மற்றொரு வியப்பிற்குரிய வரலாற்றைப் பார்ப்போம். ‘குடிஅரசு’ ஏட்டின் இன்றைய வடிவமான “விடுதலை” நாளிதழ் தனது 90ஆம் ஆண்டை 01.06.2024 அன்று கொண்டாட இருக்கிறது. இன்று வரை தமிழர்களின் கெடுதலை நீக்கும் போர் ஆயுதமாக வெளிவரும் ‘விடுதலை’ நாளிதழை நாம் தாங்கி நின்று, ‘விடுதலை’ நம் வாழ்வின் மேன்மையைத் தாங்கி நிற்க, அதன் வளர்ச்சியில் நம் பங்கு இருப்பது மிக அவசியம்.

“பார்ப்பனரல்லாத மக்களே! நீங்கள் இன்னமும் உணரவில்லையா? அல்லது அலட்சியமா! பயமா! சுயநலமா! எழுங்கள்! பார்ப்பனரல்லாத பத்திரிகைகளைப் பரப்புங்கள்! அஃதின்றி நாம் சுயமரியாதையோடு மனிதனாக வாழ முடியாது. ஒவ்வொரு நாளும் படுக்கையை விட்டு எழும்போது பத்திரிகையைப் பரப்ப இன்று என்ன செய்வது என்று யோசியுங்கள்! படுத்துறங்கும்போது இன்று என்ன செய்தோமென்று நினையுங்கள்! உங்களுக்கு ரோஷம், மானம் , வெட்கம் இல்லையா என்று உங்கள் மனச்சாட்சியைக் கேளுங்கள்! அன்றுதான் நாமும் மனிதனாகலாம்!” (தந்தை பெரியார், ‘குடிஅரசு’ – 11.07.1926) என்றார் பெரியார்.

2024ஆம் ஆண்டிலும் பார்ப்பனரல்லாத மக்கள் மீது வன்மத்துடனும், நமக்குக் கிடைக்கும் நன்மைகளை, நலத்திட்டங்களைக் கிண்டல் – கேலிக்கு உள்ளாக்கும் பார்ப்பனப் பத்திரிகைகளின் சூழ்ச்சியை முறியடிக்க, ‘விடுதலை’தான் நமக்கு இருக்கும் ஆயுதம். ‘விடுதலை’யைப் பரப்புவோம்; பார்ப்பனரால் ஏற்படும் கெடுதலையை விரட்டுவோம் ! 