சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள்…

2024 Uncategorized அய்யாவின் அடிச்சுவட்டில் ஜுன் 1-15 2024

நாகை அரசு பொது மருத்துவமனைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை
வழங்குகிறார் ஆசிரியர்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவை 1.3.2005 அன்று தலைமைச் செயலகத்தில் நாம் நேரில் சந்தித்து தந்தை பெரியாரின் இறுதி விருப்பமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழங்கும் நிலையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பத்தை அளித்தோம்.

அவ்வமயம், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிக்க ரூ.3,05,000/- தொகையை பொதுமக்களிடமிருந்தும் நம் பெரியார் நிறுவனங்களில் பணியாற்றுவோரிடமிருந்தும் மாணவர்களிடமிருந்தும் மற்றும் பிற பெரியோர்களிடமிருந்தும் நன்கொடையாகப் பெற்று அதற்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினோம்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகள் அளித்திடும் மிக முக்கிய பணியாக நாம் 5.3.2005 அன்று காலை 9:15 மணிக்கு வல்லத்திலிருந்து புறப்பட்டு திருவாரூர் சென்றடைந்தோம். கோட்டப் பிரச்சாரக்குழுத் தலைவர் எஸ்.எஸ். மணியம் தலைமையில் திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன் முன்னிலையில் கழகப் பொறுப்பாளர்கள் வரவேற்றனர்.

பின்னர் நாகையிலுள்ள மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனையில், அமெரிக்காவிலுள்ள சாண்டியாகோ மாநில பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் முயற்சியால் அமெரிக்க நிறுவனமான “ப்யூர் ஓ டெக்”, வல்லம் பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரியும் இணைந்து நிறுவிய ரூ.1 கோடி மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் வெங்கடாசலம் முன்னிலையில் நாம் மருத்துவமனைக்கு வழங்கினோம்.

பின்னர் பெங்களூர் வழக்குரைஞர்கள் சமூக நீதி அமைப்புக் குழுத் தலைவரும் கர்நாடக உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞருமான பேராசிரியர் ரவிவர்மகுமார் தலைமையில் வழக்குரைஞர்கள் என்.கே. ரமேஷ், ஆர். சோமதரா, ரமேஷ் சேதுராமன், திருமதி வீனாபாய், பீபுல்ல சேடா, அபிமண்டேலா ஆகியோர் கொண்ட குழுவினருடன் இணைந்து ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புதிய இரும்புக் கட்டில், மெத்தை, தலையணைகளை நம்மிடம் அளித்திருந்தனர். நாம் அவற்றை மருத்துவமனைக்கு அன்பளிப்பாக வழங்கினோம்.

மேலும், பெங்களூர் மாண்டியா பகுதி விவசாயிகள் இலவசமாக வழங்கிய 14 டன் அரிசியை அக்கரைப்பேட்டை கிராம மக்களுக்கும் கல்லாறு கிராம மக்களுக்கும் பெங்களூர் வழக்குரைஞர் பேராசிரியர் ரவிவர்மகுமார் அவர்களுடன் இணைந்து வழங்கினோம்.

தஞ்சாவூர் பழம்பெரும் காங்கிரஸ் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் எம்மிடம் நீங்கா நட்புக் கொண்டவருமான வழக்குரைஞர் தஞ்சை அ.இராமமூர்த்தி – சரசுவதி ஆகியோரின் மகள் வழக்குரைஞர் அம்முவுக்கும் சென்னை வழக்குரைஞர் கி. பிரசன்ன வெங்கடேஷ்க்கும் 6.3.2005 ஞாயிறன்று காலை 9 மணியளவில் தஞ்சாவூர் சீனிவாசபுரம் காமராசர் தெரு சிவசிதம்பர (பிள்ளை) திருமண மண்டபத்தில் இணையேற்பு விழா நடந்தது. மத்திய வர்த்தக தொழில்துறை இணையமைச்சர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் தலைமை தாங்கினார்். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் முன்னிலை வகித்தார். துளசி அய்யா வாண்டையார் மணவிழாவை நடத்தி வைத்தார். இறுதியாக நாம் வாழ்த்துரை வழங்கினோம்.

மதுரையில் உள்ள யாதவர் கல்லூரியின் நிறுவனர்களில் முன்னணி செயல்வீரர் நாகேந்திரனார் சிறப்பு அறக்கட்டளை’ சொற்பொழிவு 7.3.2005 அன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது. கல்லூரியில் உள்ள நாகேந்திரனார் கலையரங்கில் நடந்த இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வர் டாக்டர்
க.திருவாசகம் தலைமை தாங்கினார். இவ்விழாவில் நாம் கலந்துகொண்டு “தொலை நோக்காளர் பெரியார்” எனும் தலைப்பில் ஒரு மணி நேரம் கருத்துரையாற்றினோம்.

மதுரை யாதவர் கல்லூரி விழாவில் உரையாற்றுகிறார் ஆசிரியர்

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த் துறையின் சார்பில் சிறப்புச் சொற்பொழிவுக் கூட்டம் இதே நாளில் மாலை 4 மணியளவில் நடைபெற்றது. மதுரை அமெரிக்கன் கல்லூரி விழா அரங்கில் நடந்த இந்தக் கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் முனைவர் டி.சாமுவேல் சுதானந்தா தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். தமிழ்த் துறைப் பேராசிரியர் முனைவர் ஆர்.கே.அழகேசன் வரவேற்றுப் பேசினார். விழாவில் நாம் கலந்து கொண்டு “மக்கள் பேச்சாளர் பெரியார்” எனும் தலைப்பில் ஒரு மணி நேரம் திறனாய்வுரை நிகழ்த்தினோம்.

சென்னை கோடம்பாக்கம் ரெங்கராஜபுரத்தில் ஆடிட்டர் ஆர். ராமச்சந்திரன் அவர்கள் புதிதாகத் திறந்துள்ள அலுவலகத்திற்கு 8.3.2005 அன்று நாம் நேரில் சென்று வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டோம். அப்போது அவரது
அலுவலகம் சார்பில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2,000/- நன்கொடையை எம்மிடம் வழங்கினார்.

ஆடிட்டர் ஆர்.ராமச்சந்திரன் அலுவலகத்தில் ஆசிரியர்

புதுடெல்லி ஜசோலாவில் அமைந்துள்ள பெரியார் மய்யத்தில் கட்டடம் எழுப்புவதற்கு அங்கு தோண்டப்படும் மண்ணையே சிமெண்டுடன் கலந்து கற்கள் தயாரிக்கும் இயந்திரத்தை அன்னை மணியம்மையார் அவர்களின் 89ஆம் ஆண்டு பிறந்த நாளன்று (10.3.2005) காலை 10 மணியளவில் நாம் திறந்து வைத்தோம். நவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த இயந்திரத்தின் மதிப்பு ரூ.4 லட்சமாகும். இந்த இயந்திரத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 2000 கற்களைத் தயாரிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர் ஏ.ராசசேகரன் அவர்களின் தாயார் அ.ஜெயலட்சுமி அம்மாள் படத்தைத் திறந்து வைக்கும் ஆசிரியர்

அன்று (10.3.2005) மாலை 6 மணியளவில் புதுடெல்லி நாடாளுமன்றக் கட்டடம் அறை எண் 63இல் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களான திரு. இ.எம்.சுதர்சன நாச்சியப்பன், டாக்டர் பி.சி.அலெக்சாண்டர், ராம்ஜெத் மலானி, டாக்டர் ராதாகாந்த் நாயக், சைலேந்திர குமார், மேனாள் தலைமை நீதிபதி அனுமந்தப்பா,எஸ்.கே.கார்வேந்தன், ஏ.கே.மூர்த்தி, திருமதி.பவானி இராசேந்திரன் ஆகியோரிடம் திராவிடர் கழகத்தின் சார்பில் இடஒதுக்கீடு மசோதா பற்றிய கருத்துகளை அச்சிட்டு வழங்கி நேரிடையாக நாம் எடுத்துக் கூறினோம்.

பிரபல மருத்துவரும் தேசிய மருத்துவ தேர்வாணைக்குழுத் தலைவருமான ஏ. ராசசேகரன் அவர்களின் தாயார் திருமதி.அ.ஜெயலட்சுமி அம்மாள் மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். அன்னாரின் படத்தை 12.3.2005 அன்று நாம் திறந்து வைத்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தோம். ஜெயலட்சுமி அம்மாள் நினைவு மலரை மேனாள் மத்திய அமைச்சர் மாண்புமிகு ஆர்.வேலு வெளியிட்டார்.

தலைமைச் செயற்குழுவின் முடிவின்படி, மூன்று கட்ட விழிப்புணர்வு விரைவு பிரச்சாரப் பயணத்தின் முதல் குழுவினர், 3.3.2005ஆம் தேதியன்று தேனி மாவட்டம் கூடலூரிலிருந்து (கம்பம்) தொடங்கினர்.

அக்குழுவினர் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், போடி, தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, விக்கிரமங்கலம், சோழவந்தான், கருப்பட்டி, சின்னாளப்பட்டி, ஒட்டன்சத்திரம், மூலக்கடை, கம்பளியம்பட்டி, மூலனூர், புதுப்பை, வெள்ளக்கோவில், காங்கேயம், சென்னிமலை, பெருந்துறை, ஈரோடு, பள்ளிப்பாளையம்
ப. குமாரபாளையம், திருச்செங்கோடு, பொத்தனூர், குமாரபாளையம், நாமக்கல் என 28 ஊர்களில் நடத்திவிட்டு மார்ச் 12ஆம் தேதி சனிக்கிழமை அன்று சேலம் மாநகர் வந்தடைந்தனர். இப்பயணக் குழு சுமார் 950 கிலோமீட்டர் தூரம் வரையில் பிரச்சாரத்தை மேற்கொண்டது.

பயண நிறைவு விழாப் பொதுக்கூட்டம் 12.3.2005 அன்று மாலை சேலம் போஸ் மைதானத்தில் மாநகர் மாவட்ட தலைவர் கடவுள் இல்லை சிவக்குமார் தலைமையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழநி. புள்ளையண்ணன், கே. ஜவகர் ஆகியோர் முன்னிலையில், மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். முனுசாமி வரவேற்புரையுடன் தொடங்கியது.

முதல் கட்ட விழிப்புணர்வு விரைவுப் பயணப் பிரச்சாரக் குழுவின் தலைமைக் கழகப் பேச்சாளர்கள் துரை. சந்திரசேகரன், சீனி. விடுதலை அரசு,எஸ்.பி. பாஸ்கர், ஒருங்கிணைப்பாளர் விருத்தாச்சலம் பா. கதிரவன், திருச்சி பாலசுப்பிரமணியம், இராசபாளையம் இல.திருப்பதி, தஞ்சை சி.திராவிடமணி, உரத்தநாடு சோ, அண்ணாதுரை, நெய்வேலி பிரதீபன், சின்னாளப்பட்டி மணி, ம.மகாதேவன், புவனகிரி அறிவொளி மாறன், ஓட்டுநர்கள் மாணிக்கவாசகம், செந்தில்குமார், ரபீக் ஆகியோரைப் பாராட்டி சால்வை அணிவித்தோம்.

சேலம், செவ்வாய்ப்பேட்டையில் கழகத்திற்குச் சொந்தமான சுயமரியாதைச் சங்கத்தின் கட்டடம் சம்பந்தமான நீதிமன்ற வழக்கில் வெற்றி பெற்றதற்கு உறுதுணையாகச் செயல்பட்ட 92 வயது பழம்பெரும் பெரியார் பெருந்தொண்டர் நடேசனாரையும் சிறப்பாக வாதாடிய வழக்குரைஞர் சேலம் அ.அருள்மொழி மற்றும் மகாலிங்கம், சண்முகம், எஸ்.ஆர். பெருமாள் ஆகியோரையும் பாராட்டி சால்வை அணிவித்தோம்.

மணவழகர் மன்ற முத்த மிழ் விழாவில் உரையா ற்றுகிறா ர் ஆசிரியர்

நிறைவாக பயணத்தின் நோக்கமும், கழகத்தின் சார்பில் பல ஆண்டுகளாக வைக்கப்பட்டுவரும் கொள்கை கோரிக்கையான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டிய உரிமை விளக்கத்தினையும், சாமியார்கள் மற்றும் சங்கராச்சாரியார்களின் மோசடி பித்தலாட்டங்களையும் ஆதாரத்தோடு எடுத்துக்காட்டி ஒரு மணி நேரம் கருத்தாழமிக்க உரையை நிகழ்த்தினோம்.

தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு 2002 ஆம் ஆண்டுக்கான 38ஆவது ஞானபீட விருது அளிக்கப்பட்டது. அறிஞரும் எழுத்தாளரும் சட்ட வல்லுநரும் ஆன எல்.எம்.சிங்வி தலைமையில் விருதுக்கான தேர்வுக் குழு கூடி முடிவு எடுத்த பின்பு, மார்ச்19இல் விருது அறிவிக்கப்பட்டது. ஜெயகாந்தன் அவர்களுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டதற்காக 20.3.2005 அன்று காலை 9 மணியளவில் அவருக்கு தொலைபேசி மூலம் நாம் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டோம்.
சென்னை மணவழகர் மன்றத்தின் 49ஆம் ஆண்டு முத்தமிழ் விழா 21.3.2005 அன்று சென்னை பிராட்வே ராஜா அண்ணாமலை மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. மணவழகர் மன்ற செயலாளர் கே.கன்னியப்பன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

அடுத்து தி.மு.க.வின் அன்றைய துணைப்பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் தொடக்கவுரையாற்றினார். குஜராத் மாநில மேனாள் தலைமை நீதிபதி பு.ரா. கோகுலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் கோபண்ணா முன்னிலை வகித்து உரையாற்றினார். “திரு.வி.க. காட்டிய அறவழி” என்ற தலைப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஆர். நல்லகண்ணு உரையாற்றினார். “பகுத்தறிவுப் பாசறையும் திரு.வி.க.வின் எண்ணங்களும்” என்ற தலைப்பில் நாம் உரையாற்றினோம். இறுதியாக தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் நிறைவுரையாற்றினார். முடிவில் மன்ற துணைத் தலைவர் பரமசிவம் நன்றி கூறினார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாநில விவசாய அணிச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான துரை.கோவிந்தராஜனின் இணையர் மீனாட்சி அம்மாள் 10.3.2005 அன்று மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். 24.3.2005 அன்று காலை 11.00 மணிக்கு உரத்தநாடு அருகில் வடக்கூர் கிராமத்தில் உள்ள. துரை. கோவிந்தராஜனின் இல்லத்திற்கு நாம் சென்று மறைந்த கோ. மீனாட்சி அம்மாள் படத்திற்கு மாலை வைத்து மரியாதை செய்தோம். பின்னர் அவரின் குடும்பத்தினரிடம் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறி விடை பெற்றோம்.

தஞ்சாவூர் பழம்பெரும் திராவிடர் கழகத் தோழர் வரகூர் நடராசன் அவர்களின் துணைவியார் என். புஷ்பவள்ளி அம்மாள் அவர்கள் 20.3.2005 அன்று மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம்.

24.3.2005 அன்று வியாழன் மதியம் 1.45 மணிக்கு தஞ்சாவூர் வண்டிக்காரத் தெருவிலுள்ள அவரது இல்லம் சென்று புஷ்பவள்ளி அம்மாள் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தோம். பின்னர் வரகூர் நடராசன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து விடைபெற்றோம். செயலவைத் தலைவர் இராசகிரி கோ.தங்கராசு, கழக துணைப் பொதுச்செயலாளர் இரா. குணசேகரன், தஞ்சை மாவட்டத் தலைவர் கு.வடுகநாதன், மு. அய்யனார், மு. சாம்பசிவம் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

உரத்தநாடு பழம்பெரும் சுயமரியாதை இயக்க வீரரும் பெரியார் பெருந்தொண்டருமான ஆர்.பி. சாமியின் துணைவியார் ஆர்.பி.எஸ். பட்டம்மாள் 14.3.2005 ஆம் தேதியன்று இயற்கை எய்திய செய்தியறிந்து வருந்தினோம். 24.3.2005ஆம் தேதியன்று வியாழன் மதியம் 12 மணிக்கு உரத்தநாடு புதூரில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று மறைந்த ஆர்.பி.எஸ். பட்டம்மாள் அவர்களின் படத்தை நாம் திறந்து வைத்து நினைவுரையாற்றினோம்.

நினைவுகள் நீளும்….