தோற்றமும் குறிக்கோளும் -…- வை .கலையரசன் -…-
பார்ப்பனரல்லாத மக்களின் சமூக வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ‘குடிஅரசு’ இதழ் தோன்றி ஒரு நூற்றாண்டாகி விட்டது.
ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இந்த சமூகத்தில் இருந்த கொடுமைகளுக்கு எதிராக போராட உருவான ‘குடிஅரசு’ தொடங்கப்பட்ட காலம் பார்ப்பனரல்லாத மக்களுக்கு தங்கள் உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காலம்.
அச்சமயம் வெளிவந்த பத்திரிகைகள் யாவும் பார்ப்பனப் பத்திரிகையானாலும் பார்ப்பனர் அல்லாதார் நடத்திய பத்திரிகையானாலும் நடுநிலைமையின்றி ஒரு சார்பாகவே நடைபெற்று வந்தன. அவை எல்லாத்துறைகளிலும் பார்ப்பனரையே ஆதரித்து எழுதியதோடு பார்ப்பனரல்லாதாரின் கருத்துகள் பற்றிய உண்மைச் செய்திகளை இருட்டடிப்புச் செய்து வந்தன.
வைக்கம் போராட்டம் குறித்த சரியான தகவல்களை எந்த பத்திரிகையும் வெளியிடவில்லை. போராட்டம் முடிந்து தந்தை பெரியார் தமிழ்நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படக் காரணமாக குறிப்பிடப்பட்ட சென்னையில் பெரியார் பேசியது தொடர்பான வழக்கு பற்றிய செய்திகளை நடுநிலையோடு அவை வெளியிடவில்லை. பார்ப்பனரல்லாதாருடைய நன்மைகளுக்குப் பாடுபட ஒரு பத்திரிகை இல்லாத குறையையும் தற்போது அவசியத் தேவையாக இருப்பதையும் தந்தை பெரியார் உணர்ந்தார்.
நடத்தப் போவதாய் 19.01.1923 தேதியில்
சர்க்கா ரில் ரிஜிஸ்டர் செய்யப்ப ட்டது’’ என்று
அறிவிக்கிறார்.
நீதிக்கட்சியின் சார்பில் வெளிவந்த ‘ஜஸ்டிஸ்’, ‘திராவிடன்’ ஆகிய பத்திரிகைகளும் செல்வாக்கில்லாமல் இருந்தன.
அதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியிலிருந்த போது ஒரு போராட்டத்தில் 1922ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு
கோவை சிறையில் இருந்த பொழுது ஒரு பத்திரிகை உருவாக்க முடிவு செய்ததைப் பதிவு செய்திருந்தார். அது குறித்த செய்தியை பின் நாட்களில் ‘குடிஅரசு’ இதழின் மூன்றாம் ஆண்டு தொடக்கம் குறித்து எழுதிய 1927 மே 15 தேதியிட்ட
‘குடிஅரசு’ இதழில் தெரிவிக்கின்றார். “நமது நாட்டு மக்களுக்குள் சுயமரியாதையையும். சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உண்டாக்கிக் “குடிஅரசு” என்னும் ஒரு பத்திரிகையை ஆரம்பிக்க வேண்டும் என்பதாக முதன் முதல் நானும் எனது நண்பர் ஸ்ரீமான் தங்கபெருமாள் பிள்ளையும் 1922இல் கோயமுத்தூர் ஜெயிலில், சிறைவாசம் செய்யும் போதே நினைத்தோம்.
அதுபோலவே வெளியில் வந்த கொஞ்ச நாட்களுக்குள் “குடிஅரசு” என்று ஒருவாரப் பத்திரிகையும்
‘‘கொங்கு நாடு” என்று ஒரு மாதாந்திரமும் நடத்தப்போவதாய் 19.01.1923 தேதியில் சர்க்காரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது’’ என்று அறிவிக்கிறார்.
அதன்பின் இதுகுறித்து அவரது நெருங்கிய நண்பர்கள் ஆன திரு.வி.க. வரதராஜுலு நாயுடு, ராஜகோபாலாச்சாரியார் ஆகியோரிடம் தெரிவிக்கிறார். முதல் இருவரும் தந்தை பெரியாரின் முயற்சியைப் பாராட்டி வரவேற்கின்றனர் அதையும் அந்தத் தலையங்கத்தில் பதிவு செய்கிறார்.
திரு.வி.க. அவர்கள், “இப்படி ஒரு பத்திரிகை வேண்டியதுதான்; அதற்கு நீ தகுதியானவன்; நீ ஆரம்பித்தால் தமிழ்நாட்டிலேயே பதினாயிரக்கணக்கான சந்தாதாரர்கள் சேருவார்கள். ஆனால், அதிக நாள் நிலைக்காது. ஒரு கூட்டத்தார் எப்படியாவது அதை ஒழித்து விடுவார்கள். ஆனாலும் நடந்தவரை லாபம். நடத்துங்கள்” என்றார்.
வரதராஜுலு நாயுடு அவர்களும் அதனை வரவேற்று சீக்கிரத்தில் வெளிவர விரும்புவதாகவும் தாமதம் ஏற்பட்டால் தமது பத்திரிகையில் அக்கருத்தை எழுதி வரவேண்டும் என்று தெரிவிக்கிறார்.
மூன்றாவதாக ராஜகோபாலாச்சாரியாரிடம் இது குறித்து ஆலோசனை செய்த போது அவர் சொன்ன பதில், “இந்த சமயம் இப்படிப்பட்ட பத்திரிகை கூடாது. அல்லாமலும், மகாத்மா ஜெயிலில் இருக்கும் போது அதை விட்டுவிட்டு
நீ பத்திரிகை நடத்தப் போவது சரியல்ல. உன்னுடைய சேவை இது சமயம் மிகவும் அவசியமானது. அதனால் கண்டிப்பாகப் போக கூடாது” என்று சொல்லிவிட்டார்.
தந்தை பெரியாரும் ராஜாஜி ராஜகோபாலாச்சாரியாரின் சொல்லிற்கு மதிப்பளித்து பத்திரிகை நடத்துவதை ஒத்திவைத்து விட்டு, அந்த நேரத்தில் வைக்கத்திலிருந்து ஜார்ஜ் ஜோசப் அவர்கள் எழுதிய கடிதத்தால்
உடனடியாக வைக்கம் சென்றார். வைக்கத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவுடன் கைது செய்யப்பட்டார். விடுதலை ஆனவுடன் பத்திரிகையைத் தொடங்க முடிவு செய்தார் அந்த நேரத்தில்திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞான சிவாச்சாரியார் கோயம்புத்தூர் வந்திருந்ததை அறிந்து அவரை அழைத்து வந்து ‘குடிஅரசு’ பத்திரிகையைத் தொடங்கினார்.
2.5.1925 முதல் ‘குடிஅரசு’ வார இதழாக வெளிவரத் தொடங்கியது.
‘‘அநேக பத்திரிகைகள் நாட்டிலிருந்தாலும் அவை தங்களது மனசாட்சிக்கு உண்மை என்று பட்டதைத் தெரிவிக்க அஞ்சுகின்றன. அதனால் தான் இந்தப் பத்திரிகையை ஆரம்பிக்கிறேன். மற்ற பத்திரிகை போலல்லாமல் மனதில் பட்டதை தைரியமாக பொதுமக்களுக்கு உள்ளது உள்ளபடி தெரிவிக்க வேண்டும் என்பது எமது நோக்கம்’’ என்பதை இலக்காகக் கொண்டு வெளிவருவதாக அறிவித்துக்கொண்டு வெளியான ‘குடிஅரசு’.மேலும் அதன் கொள்கையாக கீழ்க்கண்டவற்றைப் பிரகடனப்படுத்தியது.மக்களிடையே சுயமரியாதையும் சமத்துவமும் சகோதரத்துவம் ஓங்கி வளர்தல் வேண்டும்.உயர்வு தாழ்வு என்கிற உணர்ச்சி ஒழிந்து அனைத்து உயிரும் ஒன்றும் உண்மையான அறிவு மக்களிடம் மலர வேண்டும்..சமயச் சண்டைகள் ஒழிய வேண்டும். இந்நோக்கங்கள் நிறைவேற உண்மை நெறி பற்றி இவர் எமக்கு இனியவர்; இவர் எமக்கு மாற்றார் என்கிற வெறுப்பு விருப்பு இன்றி நண்பரே ஆயினும் ஆகுக. அவர்தம் சொல்லும் செயலும் கேடு செய்வதாயின் அஞ்சாது கடிந்து ஒதுக்கப்படும்.
வந்திருந்த ஞானியார் சுவாமிகளும் வாங்கி வைத்த போது நமது நாட்டில் பல பத்திரிகைகள் இருந்தும் இப்பத்திரிகை போன்ற வேறு எதுவும் இல்லை. உயர்வு தாழ்வு என்கிற மனப்பான்மை மிகுந்திருக்கிறது சமத்துவம் என்ற உணர்ச்சி எங்கும் பரவ வேண்டும் என்னும் ‘குடிஅரசு’ கருத்தை வரவேற்று, சமயத்தில் இருக்கும் கேட்டை முதலில் ஒழிக்க வேண்டும். இவை ‘குடிஅரசின் முதல் கொள்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
‘குடிஅரசு’ மனுதர்மம், சாத்திரம், புராண இதிகாசங்கள் இவற்றின் புரட்டுகளை அம்பலப்படுத்தியது. பார்ப்பனர்களுடைய சூழ்ச்சியைப் படம்பிடித்துக் காட்டியது. கல்வி, தொழில், அரசியல் ஆகிய துறைகளில் வந்த பெரும்பான்மை மக்களுக்காக உரிமைக்குரல் எழுப்பிற்று.
முதலாம் ஆண்டில் பதிவான செய்திகளில் முக்கியமானவை
10 வயதுள்ள லீலாவதி என்னும் ஒரு குழந்தையை அனுராதா அவரது கணவன் ஜோகேந்திரநாத் கான் என்பவனுக்கு சட்டப்படி நீதிபதி பேஜ் என்பவரால் மரண தண்டனை அளிக்கப்பட்ட செய்தி, 07.06.1925 தேதியிட்ட ‘குடிஅரசி’ல் ‘இந்துக்களின் கொடிய வழக்கம்’ என்னும் தலைப்பில் வெளியானது.
‘‘இப்பெண்ணின் பெற்றோர் கல்கத்தாவிலுள்ள சங்கரிதோலா சந்தில் மிட்டாய்க் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இப்பெண்ணுக்கும் ஜோகேந்திரநாத் கானுக்கும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் மணம் நடந்தது. பெண், பெற்றோர் வீட்டிலேயே இருந்து வந்தாள். மனைவியைத் தன்னூருக்கு அழைத்துச் செல்லக் கணவன் சென்ற பிப்ரவரி 9ஆம் தேதி மாமனார் வீட்டுக்கு வந்தான். அடுத்த அய்ந்து நாட்களும் சுபதினமல்லவென்று கூறி சில நாட்கள் கழித்து மனைவியை அழைத்துச் செல்லும்படி பெண்ணின் பெற்றோர் விரும்பினார்கள். அதற்கிசைந்த அவன் மாமனார் வீட்டிலேயே தங்கியிருந்தான். முதல் இரண்டுநாள் இரவிலும் புருஷனும் மனைவியும் ஒரே அறையில் படுக்கை கொண்டனர். மூன்றாம் நாளாக புருஷனுடன் ஒரே அறையில் உறங்கப் பெண் மறுத்து தாயாருடன் படுக்கை கொண்டாள். பிப்ரவரி 12 இரவு வெற்றிலை பாக்கு வேண்டுமென ஜோகேந்திரன் கேட்க, அவைகளைக் கொடுத்து வரும்படி தாயார் மகளை அனுப்பினாள் பெண் அறைக்குள் சென்றதும் கணவன் அறையை தாளிட்டுக் கொண்டான்.
சற்று நேரம் பொறுத்து பெண்ணின் அழுகுரலையும். வரிசையாக அடிகள் விழும் சத்தத்தையும் பெண்ணின் தாயாரும், பக்கத்திலுள்ளவர்களும் கேட்டனர். தாயார் அறைக்குள் ஓடிப் பார்க்க இரத்த வெள்ளத்தில் தன்மகள் தரைமேல் முகம் கவிழ்ந்து கிடப்பதைக் கண்ணுற்றனள். இரத்தம் தோய்ந்த கல் குழவியொன்று பக்கத்தில் கிடந்தது. இக்குழவியால் மண்டை உடைக்கப்பட்டு மூளை தெறித்துக் கிடந்தது.’’
‘மாடர்ன் ரிவ்யூ’ மாத இதழில் வெளியான இந்தக் கொடூரக் கொலை பற்றிய செய்தியை வெளியிட்டு இதற்குக் காரணமான பாலிய மணம் என்னும் இந்து மதப் பழக்கத்தைக் கடுமையாக கண்டித்தது.
“பால் மணம் மாறாச் சிறுமியர்களைக் காமவிகாரத்தாற் கட்டுண்டு விலங்குகளைப் போல் திமிர் கொண்டலையும் இளம் வாலிபர்களுக்கு வதுவை செய்து அவர்பால் ஒப்புவிக்கும் கொடிய குற்றமான வழக்கமென்று நாம் திண்ணமாகக் கூறுவோம்.
இத்தகைய கொடிய, அக்கிரமமான வழக்கம் இந்து சமயத்தின் பேரால் நடைபெறுவது நமக்குப் பேரவமானம்” என்று மதத்தின் பேரால் நடைபெறும் கொடுமையைத் துணிச்சலாக எதிர்த்தது.
நீதிக்கட்சி முதலமைச்சர் கொண்டு வந்த இந்து தேவஸ்தான மசோதா சட்டமான பின், கனவில் சார் திருப்பதி தேவஸ்தான நிதியிலிருந்து சந்திரகிரியில் ஒரு பல்கலைக்கழகம் ஏற்படுத்தப் போவதாக அறிவித்ததையும், அதைக் கண்டித்து பார்ப்பனர்கள் பத்திரிகைகளில் அவருக்கு எதிராகச் சீறி எழுதியதையும் தெரிவித்து 12.7.1925 தேதியிட்ட ‘குடிஅரசு’ ஏட்டில் ஒவ்வொரு மாகாணத்திலும் தேவஸ்தான சட்டம் தேவை என்னும் தலைப்பில் ‘சித்திரபுத்திரன்’ என்னும் புனைப் பெயரில் ‘குடிஅரசு’ பதிலடி தந்தது.
‘சுதேசமித்திரன்’ ஏட்டில் மதுவிலக்கு தொடர்பாக “சென்னை பிஷப்பின் யோசனை” என்ற தலைப்பிட்டு எழுதிய குறிப்பு பற்றி 26.7.1925 ‘குடிஅரசு’ ஏட்டில் ஒரு தலையங்கம் வெளியானது. அதாவது கட்டாயப்படுத்தி கள் குடியைத் தடுக்க முடியாது என சென்னை பிஷப் ஒரு கூட்டத்தில் பேசியதை நையாண்டி செய்து ‘சுதேசமித்திரன்’ இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தது.
இது குறித்த “சுதேசமித்திரனின் மதுவிலக்குப் பிரச்சாரம்” என்ற தலைப்பிட்டு ‘குடிஅரசு’ அந்தத் தலையங்கத்தை எழுதியது.”அதே சுதேசமித்திரனின் இதழில் முதல் பக்கத்தில் கண்ணைப் பறிக்கும் பெரிய
எழுத்துகளில் ‘புட்டி’படத்துடன் ‘எக்ஸ்ஷாஷ்’ பிராண்டியைப் பற்றிப் புகழ் மிகுந்த விளம்பரம் செய்து பொருள் சம்பாதித்து வரும் சுதேசமித்திரன் மெய்மறந்து பாவம் எழுதிவிட்டான் என்றே நினைக்கிறோம். இத்தகைய விளம்பரங்களின் வாயிலாகத்தான் நமது சுதேசமித்திரன் மதுவிலக்குப் பிரச்சாரம் செய்து வருகின்றான் போலும்!
‘சுதேசமித்திரன்’ அகராதியில் மதுவிலக்கு என்பதற்கு மது அருந்த விளம்பரம் செய்தல் என்பதுதான் அர்த்தம் போலும்! பணத்திற்குமுன் அறிவு, தேசாபிமானம், சுய உணர்வு எல்லாம் பறந்துவிடுவது சகஜமே பணமென்றால் பிணமும் வாய் திறக்குமல்லவா? சொல்வதொன்று செய்வதொன்று என்பது தான் எமது கொள்கை என்று சுதேசமித்திரன் பெரிய விளம்பரம் செய்துவிடுவானாகில் நமக்குக் கவலையே இல்லை. “கட்டாயத்தினால் குடியை
வெருட்டினா லொழிய கல்வி அறிவைக் கொண்டு அது ஓடுமென்று நினைக்க உலகில் அனுபோகம் இடங்கொடுக்க
வில்லை” என்று வெகு சமத்காரமாகச் சுதேசமித்திரன் செய்த முடிவை நாமும் ஆமோதிக்கிறோம்” என்று தெரிவித்திருந்தது. காங்கிரசில் இருந்த பார்ப்பனர்கள் செய்த கொடுமைகளை 18.10.1925 தேதியிட்ட ‘குடிஅரசு’ இதழ் “அம்பலத்து அதிசயம்” என்று தலைப்பிட்டு தலையங்கமாக எழுதியுள்ளது.
(தொடரும்)