நூல் குறிப்பு :
நூல் பெயர் : அருந்ததியர் இயக்க வரலாறு
எழுத்து : எழில். இளங்கோவன்
பதிப்பகம் : கருஞ்சட்டைப் பதிப்பகம்
பக்கங்கள் : 152
வகை : வரலாறு
விலை : ₹120
தொடர்புக்கு : 81229 46408
உலகெங்கிலும் மனிதன் நிர்வாணமாகத்தான் பிறக்கிறான். இந்தியாவில் மட்டுமே உயர் ஜாதியாய், தாழ்ந்த ஜாதியாய்ப் பிறக்கிறான். இந்திய ஜாதிய ஏற்றத்தாழ்வு இருள் நிறைந்த திசையற்ற பாதைக்கு இந்நாட்டை இட்டுச் செல்கிறது. காலநிலையில் கூட மாற்றம் ஏற்படுகிறது. ஜாதி அடுக்குகளில் ஈராயிரம் ஆண்டுகளாக எந்த மாற்றமும் நிகழாமல் நீடிக்கிறது.
இனத்தூய்மை காப்பதுதான் ஜாதியின் குறிக்கோள் என்று இனவாதம் பேசுபவர்கள் கருதுகின்றார்கள். ஆனால் ஜாதி, அதே இனத்தைச் சார்ந்தவர்களை, ஒரு சாராரைத் தூய்மையற்றவர்களாக மாற்றி வைத்த கொடுமையும் இங்கு நீடிக்கிறது.
சமமற்ற சமூகத்தைக் கட்டமைப்பதில் ஜாதி முக்கியப் பங்காற்றுகிறது. சமமற்ற சமூகத்தை, சமூகநீதிச் சமூகமாக மாற்றப் போராடிய அருந்ததியர் இயக்க வரலாறே இந்நூல். அருந்ததியர்கள் தமிழர்களே அல்லர் என்றும், வந்தேறிகள் என்றும் வாய்கூசாமல் பொய் பேசுகிறார்கள் வீணர்கள். கூகுள், விக்கிபீடியா கூட அருந்ததியர்கள் அந்நியர்கள் என்றே விவரிக்கின்றன. அவ்வெறுப்புக் கருத்துகளைத் தக்க ஆதாரங்களைக் கொண்டு தகர்த்தெறிகிறார் ஆசிரியர் எழில் இளங்கோவன்.
1920ஆம் ஆண்டு தொடங்கி அருந்ததியர் இயக்கத்தின் செயல்பாடுகளை இந்நூல் விவரிக்கிறது. அருந்ததியர் மகாஜன சபை, சென்னை அருந்ததியர் சங்கம் முதன்முதலில் தொடங்கப்பட்டது, கல்வி உரிமை, வாழ்வாதாரம், சமூகநீதியைக் கொள்கையாகக் கொண்டே அருந்ததியர்கள் இயக்கம் செயல்பட்டது, அருந்ததிய மக்களிடையே மண்டிக் கிடந்த தாழ்வுமனப்பான்மையை நீக்கி பகுத்தறிவுச் சிந்தனையையும் வளர்த்தது எனப் பல செய்திகளை இந்நூலில் காணலாம்.
எல்.சி. குருசாமி அருந்ததியர் சங்கத் தலைவராக மட்டும் இல்லாமல் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கான சமூக நீதியை நிலைநாட்ட எல்.சி.குருசாமியின் பேச்சு நீதிக்கட்சிக்குத் துணைநின்றது.
கவுதம புத்தரின் இனமாகிய சாக்கியர் என்பதே பின்னாளில் சக்கிலியர் ஆனது என்கிற எல்.சி. குருசாமியின் வரலாற்று ஆய்வுப் பார்வை அம்பேத்கரை நினைவுபடுத்துகிறது.
கடல் கடந்த இலங்கையிலும் அருந்ததியர் இயக்கம் இயங்கியது. பெ.கா.இளஞ்செழியன், பெரு. எழிலழகன் (இந்நூல் ஆசிரியரின் தந்தை) பெரியாரின் சுயமரியாதை இயக்கக் கருத்தியலை இலங்கையில் எப்படி நடைமுறைப்படுத்தினார் என்பது பற்றியும், இலங்கைப் பொதுவுடைமை இயக்கத்தின் போராட்டமும் அதற்கு அருந்ததியர் இயக்கத்தின் ஒத்துழைப்பு பற்றியும். அகில இலங்கை அருந்ததியர் சங்கச் செயல்பாடும் அதன் தலைவராக இருந்த மூ.வேலாயுதம் அவர்களின் பணிகள் பற்றியும் குறிப்பிட்டுள்ள செய்திகள் ஆச்சரியமூட்டுகின்றன.
இலங்கையிலும் இந்தியாவில், தமிழ்நாடு அளவிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரிடமும் வேலாயுதம் அவர்களுக்கு நல்ல அறிமுகம் இருந்திருக்கிறது. அதை அருந்ததியர் சமூக மக்களின் வறுமையை விரட்டவும் உரிமையை மீட்கவும் பயன்படுத்தி இருக்கிறார்.
அருந்ததியர் இயக்கச் செயல்பாடுகள் சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுக்க விரிவடைகின்றன. தூத்துக்குடி, மதுரை, நாமக்கல், சேலம், கோவை ஆகிய இடங்களிலும் வீரியமாகச் செயல்படுகிறது. 1950க்குப் பிறகு ஒதுக்கப்பட்ட சமூகத்தில் புதிய புதிய போராளிகளும் உருவாகிறார்கள்.
இவை அனைத்துமே திராவிட சமூகநீதிக் கருத்தியலையும் பெரியாரிய, அம்பேத்கரியச் சிந்தனையையும் அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கின்றன.
பாபாசாகேப் அம்பேத்கருக்குத் தமிழ்நாட்டில் முதன்முதலில் சிலை அமைத்ததும் அருந்ததியர் இயக்கமே!
1938இல் ராஜாஜி ஆட்சியில் 2500க்கு மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. ஏற்கனவே சமூக, பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல் கல்வியிலும் பின்தங்கியிருந்த அருந்ததியர் தங்களுக்கென முதல் பள்ளிக்கூடம் அமைத்தது 1953ஆம் ஆண்டு. தூத்துக்குடி நகர சுத்தித் தொழிலாளர் சங்கம் உழைப்பின் உரிமையைக் கேட்டுப் போராடியது. சமூக, சமஉரிமைப் போராட்டமாக 1959இல் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கக்கனுக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. அதையொட்டி காமராஜர் ஆட்சியில் ஆட்சி அதிகாரத்தில் பொறுப்பில் அருந்ததியர்கள் பங்கு பெற்றார்கள். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அருந்ததியருக்குத் தனி உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அருந்ததியர் சங்கம் சார்பாக சேலம், ராசிபுரம் பகுதிகளில் நடந்த மாநாடுகள், தேசிய தாழ்த்தப்பட்டோர் இயக்கம் நடத்திய சென்னிமலை, கோவை மாநாடுகள், டாஸ்க்கோ அமைப்பு நடத்திய ஈரோடு மாநாடு, தமிழ்நாடு அருந்ததியர் முன்னணி நடத்திய தீவுத்திடல் மாநாடு…. இப்படி ஏராளமான அருந்ததியர் இயக்க மாநாடுகள் வரலாற்றில் மைல் கற்களாக இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஏதுமற்ற சமூகம் என்று ஊடகங்களாலும், வெகுமக்களாலும் புறக்கணிக்கப்பட்ட சமூகத்தின் அரசியல் பயண வரலாறாக இந்நூல் இருக்கிறது. இந்நூலைத் தொகுப்பதற்காக எழில். இளங்கோவன் பல ஆண்டுகள் பயணம் செய்து முனைப்புடன் செயலாற்றி, ஆதாரங்களைத் திரட்டி, வாக்கு மூலங்களைச் சேகரித்து, புத்தகமாக நமக்குக் கொடுத்துள்ளார்.
எளியநடையில் ஆதாரங்களையும் அனுமானத் தையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக இந்நூல் பேசுகிறது.
அருந்ததியர்களின் எண்ணங்களையும் எதிர்பார்ப்பையும் வெகு மக்களிடம் கொண்டு சேர்க்க இந்தப் புத்தகம் நிச்சயம் துணை
நிற்கும்.