‘கோவேறு கழுதைகள்’ நாவல் மூலம் சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் இமையம் அவர்கள். சமூக அக்கறை கொண்ட ஒவ்வொரு மனிதனும் கொண்டாடும் மகத்தான ஓர் எழுத்தாளராக இயங்கிக் கொண்டிருப்பவர். அனுபவமும் புனைவுகளும் பிரித்துப் பார்க்க இயலாத அளவிற்கு ஒன்றோடொன்று கரைந்து போயிருக்கும் அவரது எழுத்துகள் எதார்த்த வாழ்வை அப்படியே கண்முன் நிறுத்தும் காந்த சக்தி படைத்தவை. ஒன்பது நாவல்கள், எட்டு சிறுகதைகளை குறைந்த கால இடைவெளியில் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
அவர் எழுதிய சிறுகதைகளில் ‘அணையும் நெருப்பு’, ‘அய்யா’, ‘ஆகாசத்தின் உத்தரவு’, ‘தாலிமேல சத்தியம்’ ஆகிய நான்கு கதைகளை ‘இமையம் கதைகளோடு ஒரு மாலைப் பொழுது’ என்கிற பெயரில் ப்ரஸன்னா ராமஸ்வாமி நாடகமாக இயக்கித் தயாரித்து கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ‘மேடை’ அரங்கில் அரங்கேற்றியிருந்தார்.
கீதா கைலாசம், ரோஷன், சுகுமார், நிகிலா கேசவன், திவாகர் ரவி என ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்திருந்தனர். வாழ்க்கைத் துணைவரை இழந்த நடுத்தர வயதுப் பெண்மணி சந்தோஷம், தன் மீது தவறான எண்ணம் கொண்டு அணுக முயற்சிக்கும் இளைஞனிடம் தன் வாழ்க்கை அனுபவங்களைச் சொல்லிக் கூறும் அறிவுரை தான் ‘அணையும் நெருப்பு’. சந்தோஷம் என்கிற கேரக்டரில் கீதா கைலாசம் அற்புதமாக நடித்து அசத்தியிருந்தார்.
‘அய்யா’ சிறுகதையில் அரசு அலுவலகத்தில் கடைநிலை சிப்பந்தியாக (பியூன்) வேலை பார்க்கும் ஊழியன் ஒருவன் அலுவலகப் பணிச்சுமையை தன் மனைவியிடம் பகிர்ந்து கொள்வதாக எழுதியிருப்பார்.
‘தாலி மேல சத்தியம்’ சிறுகதையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட ஒரு வேட்பாளர், தேர்தலில் தோல்வி அடைந்ததும் ஓட்டுக்குத் தான் கொடுத்த பணத்தை வீடு வீடாகச் சென்று திருப்பிக் கேட்பதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். தலைவிரித்தாடும் ஜாதி அரசியலை அதில் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார் இமையம்.
“பெரம்பலூர் மாவட்டத்துல ‘புகார்’ என்று ஒரு ஊர் இருக்கு. ரிசர்வுலயே பொம்பளைக்குன்னு ஒதுக்குன பஞ்சாயத்து. இரண்டு பொம்பள நின்னு இருக்கு. அதுல ஒரு பொம்பளைய முதலியார் ஜாதியில் உள்ள ஒரு ஆளு வச்சிருப்பான் போல! குழந்தையும் இருக்கும் போல இருக்கு! அந்த பொம்பள தான் ஜெயிச்சிருக்கு!”
“யாரோ ஜெயிச்சுட்டு போறாங்க எனக்கு எதுக்கு ஊர் கதையெல்லாம்?”
“எப்படி ஜெயிச்சான்னு கேளு! ஊர்ல என் பொண்டாட்டிங்கிற பேர்லதான் அவ இருக்கா. ஜெயிச்சா அவ பஞ்சாயத்து ஆபீசுக்கு வரமாட்டா. நான் தான் வந்து உட்காருவேன். இன்னொருத்திக்குப் போட்டா அவ தான் வந்து நம்ம தெருவுல இருக்கிற ஆபீஸ்ல உட்காருவா. நான் உட்காரனுமா காலனிக்காரி உட்காரனுமான்னு முடிவு பண்ணிக்கோங்கன்னு வீடு வீடா போய் சொல்லி இருக்கான். அந்த ஊர்ல மெஜாரிட்டி முதலியார் தான். இதுல ஜோக்கு என்னன்னா முன்னாடி பறச்சிய வச்சிருக்கான்னு சொல்லித் திட்டுனவங்க, அசிங்கப்படுத்தினவங்கதான் இப்ப அதே காரணத்துக்காக ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சிருக்காங்க – அதுவும் 800 ஓட்டு வித்தியாசத்துல!”
இப்படி ஜாதி அரசியல் அசிங்கங்களை அள்ளிப்போட்டு அம்பலப்படுத்தியிருக்கிறார் அந்தச் சிறுகதையில்.
மற்றொரு கதை ‘ஆகாசத்தின் உத்தரவு’. திருவிழாவில் திருடப் போகும் திருடன், குலசாமியான ஆகாச வீரனுக்குப் படையல் போட்டு அனுமதி கேட்கும் கதை. அடித்தட்டு மக்கள் தன் குலதெய்வத்திடம் சக மனிதனிடம் பேசுவதுபோல் உரிமையோடு உரையாடுவதை அப்படியே தன் எழுத்தில் வடித்திருப்பார்.
“குவாட்டர் பாட்டில், சிகரெட், எலுமிச்சங்கா, பூ, பழமுன்னு உனக்கு வேண்டிய எல்லாத்தையும் கொண்டாந்து படையல் போட்டுட்டேன். எல்லா கருமாதியும் செஞ்ச பின்னாலயும் எனக்கு ஏன் உத்தரவு கொடுக்க மாட்டேங்குற? கை நிறைய பொருள் கிடைச்சாலும் கிடைக்கிறதுல பாதிய கொண்டாந்து உனக்கு சூலம், மணி, அங்க வஸ்திரம், கோழி காவு, குவாட்டர் பாட்டில், கல்லு, கருமாந்திரம் படைக்கிறனே? அப்புறம் என்ன? எனக்கு ஏன் உத்தரவு கொடுக்காமல் லேட் ஆக்குற?”
“அன்னைக்கு வாங்கின அடிய நெனச்சா இப்பவும் வலிக்குது. கூட்டத்திலிருந்து என்னக் காப்பாற்றி விட உன்னால முடியல. என் காலுக்கு
ஓடறதுக்குத் தெம்ப கொடுக்க உன்னால முடியல.
ஒன்னும் செய்யாததுக்கு நீ எதுக்கு குலசாமின்னு இருக்க? ஆகாச வீரன்னு உனக்கு எந்த மயிராண்டி பேர் வச்சான்?”
“எனக்குச் சோதனை வைக்கிறியா? இத்தனை வருஷமா இல்லாம இன்னைக்கு ஏன் எனக்கு உத்தரவு கொடுக்க மாட்டேங்குற? உன்னோட உத்தரவு இல்லாம என்னைக்காச்சும் திருடப் போயிருக்கனா? நீ திருட்டுக்குப்
பேர் போன சாமி தானே? திருடனுங்
களுக்குத் தானே நீ குலசாமியா
இருக்க? திடுதிப்புன்னு நீ திருந்தி புட்டா நான் என்ன செய்யறது? கருமாதி எனக்கு வேற தொழிலும் தெரியாது. உன்கிட்ட நான் என்ன கேட்கிறேன்? என்னை எம்.எல்.ஏ.
ஆக்கு! எம்.பி.யாக்கு! மந்திரி ஆக்கு! பணக்கார
னாக்கு ன்னா நான் கேட்கிறேன்? திருடப் போற இடத்துல மாட்டக்கூடாது என்று தானே கேட்கிறேன்? அது ஒரு பெரிய குத்தமா?
“உத்தரவு கொடு! முடியாதுன்னா உடு! இங்க நிக்கிற சூலத்தை எல்லாம் புடுங்கிட்டுப் போயி பழைய இரும்புக் கடையில் போட்டுட்டு அரிசி பருப்பு வாங்கிடுவேன். குலசாமி ஆச்சி மயிறு மாச்சின்னு போற ஆளு நானு தெரியுமில்ல? போதைய போட்டுட்டன்னு வை! அப்புறம் குலசாமின்னு பாக்குற ஆள் இல்ல நானு தெரியுமா?” என்று அந்தக் கதை முழுதும் நறுக்கு தெரிக்கும் எழுத்துகள் நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.
“எங்கம்மா ஒன்னோட பேரத்தான் எனக்கு ‘ஆகாசம்’னு வச்சா. பேரச் சொன்னா ஊருல மட்டுமில்ல.போலீஸ் ஸ்டேஷன்ல, கோர்ட்ல எல்லாம் சிரிக்கிறாங்க. ஆனா உன்னப் பத்தி நான் எல்லார்கிட்டயும் பெருமையாதான் சொல்றேன். குத்தம் சொன்னனா? அதுக்கும் மேல என் பெரிய மகனுக்கு உன் பேர தான் ‘ஆகாஷ்’னு வச்சிருக்கேன். பிரமாதமான பேருன்னு சொல்றாங்க!”
– என வடமொழியில் பெயர் வைப்பதை, போகிற போக்கில் மிக லாவகமாகக் கிண்டலடித் திருப்பார்.
அரங்கேறிய சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒரு ரகம். சிறந்த இயக்கம்.நேர்த்தியான ஒளி அமைப்பு. அந்த மாலைப்பொழுதில் மனம் இமையம் கதைகளில் கரைந்து போனது. மகிழ்ச்சி!!